உடனடிச்செய்திகள்
Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

Friday, August 3, 2018

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
 
மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அமர்வு நேற்று (02.08.2018) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது காவல்துறை போட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளை ஒரே வழக்கில் கொண்டு வருமாறு ஆணையிட்டது. அப்போது, நீதிபதி சி.டி. செல்வம் வெளியிட்ட “கண்டனங்கள்” பெரும் ஆறுதலாக உள்ளன.
 
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் காவல்துறையை தனிப்பட்ட பழிவாங்கும் செயல்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். சாதாரணப் பொதுக் கூட்டம் நடத்திட, ஊர்வலம் நடத்திட, சேலம் – திருவண்ணாமலைப் பகுதிகளில் மக்களைச் சந்தித்திட என எதையும் அனுமதிக்காமல் உடனே வழக்குப்போடுவதும் சிறையில் அடைப்பதுமாக இருக்கிறார்கள்.
 
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று நடந்த 100ஆவது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப்போராட்டத்தில், 15 பேரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். சற்றொப்ப 80 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் இரும்புத் தடி தாக்குதலில் எலும்புகள் முறிந்தும், படுகாயமுற்றும் பாதிக்கப்பட்டனர்.
 
ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் விருப்பப்படி மூடிவிட்டதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட – ஈடுபடாத வெகுமக்கள் மீது ஏராளமான வழக்குகள் போட்டு கைது செய்து வருகிறது தமிழ்நாடு அரசு! ஒருவர் மீது 80 வழக்கு – 100 வழக்கு என்று போடுகின்றனர். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே கோரிக்கைக்காக நடந்த அறப்போராட்டத்தில், தனித்தனி வழக்குகளாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.
 
இச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சான் வின்சென்ட் மற்றும் வழக்கறிஞர் டி. பொன்பாண்டி ஆகியோர் போட்ட பொது நல வழக்கில் நேற்று (02.08.2018) நீதிபதி செல்வம், காவல்துறையின் அத்துமீறலுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சாட்டை அடி கொடுத்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :
 
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் துயரத்தில் உள்ள மக்களுக்குக் கருணை காட்டுவதற்கு மாறாகக் காவல்துறையின் கட்டாந்தடியைக் காட்ட வேண்டுமா?
 
ஒரு நபர் மீது 100 வழக்குகள் – 80 வழக்குகள்! எதற்காக? ஒரு வழக்கில் பிணை பெற்றால் இன்னொரு வழக்கில் உள்ளேயே இரு என்று சொல்வதற்காகவா? இவ்வளவு ஆணவமும் இரக்கமின்மையும் அரசுக்கு எப்படி வந்தது? நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளின் கதவைத் தட்டி, மக்கள் மனத்தில் பீதியை உண்டாக்குவது எதற்காக? இது பற்றி அரசுக்குக் கவலை எதுவும் இல்லையா?
 
தங்களின் உயிருக்கு உயிரானவர்களைத் துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்த குடும்பத்தினர் தாங்களும் கைது செய்யப்படுவோமோ, தங்களின் நெருங்கிய உறவினர்களும் கைது செய்யப்படுவார்களோ என்று நிரந்தரமாக அச்சப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறதா? இதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.
நூறாவது போராட்ட நாளன்று (22.05.2018) போட்ட வழக்குகள் அனைத்தையும் - கல்லெறிந்த வழக்கு – கடும் சொற்கள் பேசியதற்கான வழக்கு – சமூக வலைத்தளங்களில் எழுதியதற்கான வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்கு ஆக்குங்கள் என்று காவல்துறைக்கு ஆணையிடுகிறோம்”.
 
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன் மீது 92 வழக்குகள்! அவை அனைத்திலும் பிணை பெற்ற நிலையில், அவர் மீது ஏவப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலை இரத்துச் செய்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உயர் நீதிமன்றத்துக்கு வரவழைத்தக் கண்டனம் தெரிவித்தது இதே சி.டி. செல்வம் – பசீர் அகமது அமர்வுதான்! அதற்கு முன்பு, சூலை 26 அன்று, ஸ்டெர்லைட் போராட்டக் குழு இளைஞர் மகேஷ் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புக் காவலை இரண்டே நாட்களில் திரும்பப் பெற ஆணையிட்டதும், இதே நீதிமன்ற அமர்வுதான்!
 
நீதித்துறை சட்டத்தையும் நீதியையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறையை உயர்த்திப் பிடித்துள்ளார்கள் நீதிபதி சி.டி. செல்வமும், பசீர் அகமதும்! தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக – கண்மூடித்தனமாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை மூடல் போராட்டத்திற்குத் துணை நின்ற தோழர்களை சிறையில் தள்ளியது எடப்பாடி அரசு! அந்த ஆணைகளைத் தூக்கி எறிந்து அனைவரையும் விடுதலை செய்தது மதுரை உயர் நீதிமன்றம்!
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 28.07.2018 அன்று திருச்சி உறையூரில் “சனநாயகம் காத்திட – தமிழர் ஒன்றுகூடல்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த முறைப்படி எல்லா ஏற்பாடுகளும் செய்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது காவல்துறை. அதே நாளில் மாலை அந்த பொதுக்கூட்டத் திடலுக்கு அருகில் பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் திரளாகக் கூடி கண்டன முழக்கம் எழுப்பினோம். ஒலிபெருக்கி இல்லாமல் நான் மட்டும் சிறிது நேரம் தடை விவரங்களைப் பற்றி பேசினேன். அப்போது நான் கூறியதிலிருந்து …
 
“துச்சாதனன் திரவுபதியின் துகிலை உரியும்போது கண்ணபிரான் ஆடை கொடுத்து காப்பாற்றினான். ஆட்சியாளர்கள் சனநாயகத்தின் துகிலை உரியும்போது, கண்ணபிரான் போல் காப்பாற்ற வேண்டியது நீதித்துறை! ஆனால் சில நேரங்களில் – நீதித்துறை ஆட்சியாளர்களின் சட்டவிரோதச் செயல்களை அங்கீகரிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்!”.
 
நீதிபடி சி.டி. செல்வம் அவர்கள் கண்ணபிரான் போல் செயல்பட்டுள்ளார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


Friday, May 25, 2018

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப்  பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டையைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பதவி விலக வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.05.2018) மாலை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.




தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும் தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சென்னை அண்ணா சிலை அருகிலிருந்து திரண்ட தோழர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை - பறக்கும் தொடர்வண்டி பாலம் அருகில் காவல்துறையினர் வழிமறித்துத் கைது செய்தனர்.





தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், திரு. ஆளூர் சானவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள்), திரு. பெ. ஜான்பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), தோழர் பிரவீன் (மே பதினேழு இயக்கம்), வழக்கறிஞர் இரசினிகாந்த் (மக்கள் அரசுக் கட்சி), முனைவர் சுப. உதயகுமார் (பச்சைத் தமிழகம்), திரு. பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாயிகள் சங்கம்), தோழர் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), தோழர் செந்தமிழ்க்குமரன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), தோழர் பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் (தமிழர் முன்னணி) உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இயக்குநர்கள் வெ. சேகர், அமீர், இராம், கோபி நயினார் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர்.








கட்சிக் கொடி அடையாளங்களின்றி இப்போராட்டத்தில் தமிழ்தேசியப் பேரியக்கம் பங்கேற்றது. பேரியக்கம் சார்பில் பங்கேற்ற, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர்கள் மா.வே. சுகுமார், மணி, முத்துக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.





தமிழ்நாடு அரசே!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

கொலைகாரக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

எடப்பாடியே பதவி விலகு!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? நேரில் சென்று வந்த . . . தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? நேரில் சென்று வந்த . . . தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டை நடத்திய மறுநாளே 23.05.2018 அன்று சென்றோம். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் இரெ. இராசு, ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் குரும்பூர் மு. தமிழ்மணி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மதுரை பே. மேரி, தோழர்கள் செரபினா, மனித உரிமை மற்றும் தமிழ் உரிமைப் போராளி வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் குரும்பூர் பகுதித் தோழர்கள் முதலியோரும் என்னுடன் வந்தார்கள்.

ஆள் நடமாட்டமில்லாத வீதிகள் – மூடிக்கிடக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் – முழு சோகத்தில் தூத்துக்குடி! இந்தியா – பாக்கித்தான் எல்லையோர நகரம் போர்க்காலத்தில் இறுக மூடிக் கிடக்கும் காட்சிபோல் இருந்தது.

எந்நேரமும் பாய்வதற்கு ஆயத்தமாய் ஆயுதங்களுடன் சுற்றிவரும் காவல் படைகள் ஒருபக்கம்; மறுபக்கம் தடையை மீறி ஊர்வலம் வந்ததாகத் தங்கள் மக்களை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்க்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குமுறும் நெஞ்சங்களுடன் மண்ணின் மக்கள்!

தூத்துக்குடி சின்ன சகாயபுரம் (மினி சகாயபுரம்) 17 அகவை மாணவி ஸ்நோலின் 22.05.2018 துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவர் வீட்டுக்குச் சென்றோம். ஸ்னோலின் தாயார், பெரியம்மா, சின்னம்மா, உறவினர் என அனைவரின் கதறலைப் பார்த்து நெஞ்சம் பதைத்தோம்! என்ன சொல்லி ஆறுதல் கூற முடியும்? அவர்களின் கதறல் ஓயவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களைப் பார்த்தோம். தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை செயசீலன் (அகவை 68) வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் முதுகு வழியாக வெளியேறியுள்ளன. அவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்தோம். அவரிடம் பேச முடியாத நிலை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டு பெரிய வார்டுகளில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும், இரும்புத்தடித் தாக்குதலிலும் படுகாயமுற்றவர்கள் சற்றொப்ப 65 பேர் இருந்தார்கள்; பெண்கள் வார்டில் துப்பாக்கிச் சூட்டில் தாக்குண்ட பெண்கள் இருந்தார்கள்.

ஒவ்வொருவரிடமும் விசாரித்து ஆறுதல் கூறினோம். அவர்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பி மாலை வரை போராட்டம் நடத்தப் போகிறோம் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருக்கிறார்கள். பகல் உணவும், குடிநீர் பாட்டிலும் கையோடு எடுத்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆட்சியாளர்கள் முன் கூட்டியே வேறு வகையாகத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். சுட்டுக் கொல்லும் தனிப்பிரிவு காவல்படையினரை வரவழைத்துத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியருடன் அந்தத் தனிப்பிரிவினர் மஞ்சள் சீருடையுடன் முன்கூட்டியே எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்குச் சிக்கல் எழுந்தால், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தால் – என்ன வகை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள - தொலைவில் குறி பார்த்து சுடும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளைக் காவல் துறையினர் பயன்படுத்தி சுட்டிருக்கிறார்கள்.

துப்பாக்கிச் சூடு இருவகையாக நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபரை சாகடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குறிபார்த்து இடுப்புக்குமேல் சுட்டத்தில்தான் தலை, முகம், மார்பு, வயிறு பாகங்களில் சுடப்பட்ட குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்கள். அடுத்த வகையாக கூட்டத்தைக் கலைப்பதற்காக இடுப்பிற்குக் கீழே பலரைச் சுட்டிருக்கிறார்கள். அவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் நேற்று (24.05.2018) இறந்துவிட்டார்.

நாங்கள் மருத்துவமனைக்குப் போகும்முன், நடுப்பகல் நேரத்தில் மருத்துவமனை முன் கூடியிருந்தோர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 அகவை இளைஞர் காளியப்பன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுவரை மொத்தம் 13 பேரைத் துப்பாக்கிகள் விழுங்கியுள்ள செய்தி தெரிந்துள்ளது.

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரில் 300க்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது. அப்போதுகூட பெண்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் பெண்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் சில பெண்கள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

பெண் காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியதைக் காயம்பட்டவர்கள் சொன்னார்கள். தாக்குதலில் கீழே விழுந்து கிடந்த ஒருவர் மார்பில், ஒரு பெண் காவலர் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதை பாதிக்கப்பட்டவரே எங்களிடம் சொன்னார். ஒரு காவலர் துப்பாக்கிக் கட்டையைத் திருப்பி, ஓர் இளம்பெண் வயிற்றில் ஓங்கி அடித்ததில் இரத்தப்போக்குடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மக்களிடம் நாங்கள் விசாரித்த இடங்களில் எல்லாம், “திட்டமிட்டு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்” என்ற கருத்து ஒரே குரலில் வந்தது. அடுத்து, “தூத்துக்குடியை விட்டு காவல்துறையை வெளியேறச் சொல்லுங்கள், நாங்கள் அமைதைியை நிலைநாட்டுகிறோம்” என்று கூறினார்கள்.

இன்று வரை (25.05.2018) தூத்துக்குடியில் நான்கு நாட்களாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கடைகள் மூடிக் கிடப்பதால், குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட வழியில்லை. உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளின் நிலை பற்றி கற்பனை செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் கடந்த அறுபதாண்டுகளில் - வரலாற்றில் இல்லாத அளவிற்கு, மக்கள் வெள்ளம் 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைக்கு இலட்சக்கணக்கில் பல்வேறு முனைகளில் இருந்து அணி அணியாக ஆண்கள், பெண்கள், மாணவர்கள் எனத் திரண்டு வந்தார்கள். அவர்களை அமைதியாக முற்றுகையிட அனுமதித்து, முழக்கமிட அனுமதித்து, முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் அங்கு வந்து, “ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்” என்று எழுத்து வடிவிலான அறிக்கையை – எந்த இரு பொருளும் இல்லாமல் திட்டவட்டமாக அறிவித்து, மக்களை வெற்றி முழக்கத்துடன் கலையச் செய்திருக்கலாம்.

ஆனால், ஆட்சியாளர்களின் திட்டம் வேறாக இருந்ததுபோல் தெரிகிறது.

காவிரிச் சமவெளியில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றிட – கனிம வேட்டையைத் தடுத்திட – நியூட்ரினோ ஆய்வகத்தைத் தடுத்திட - பல்வேறு இடங்களில் மணல் கொள்ளையைத் தடுத்திட – கோவை பகுதியில் விளை நிலங்களில் கெயில் குழாய்கள் பதிப்பதைத் தடுத்திட - இன்னும் பல்வேறு வாழ்வுரிமைகளுக்காகத் தன்னெழுச்சியாக மக்கள் நடத்திடும் போராட்டங்களைத் தடுத்திட இராணுவத்தை இறக்கிட – மோடி அரசும், எடப்பாடி அரசும் திட்டமிட்டு வருகின்றன. அதற்காக 29.04.2018 அன்று கும்பகோணத்திற்கு அதிவிரைவு இராணுவப்பிரிவு அதிகாரிகளையும், படையாட்களையும் அனுப்பி மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்ய வைத்தனர்.

தூத்துக்குடியில் சனநாயக வழியில் போராடும் மக்களை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொல்வதைப் பார்த்து, தமிழ்நாட்டில் எல்லாப் பகுதி மக்களும் பீதி அடைந்து, கோழைகளாகிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் தூத்துக்குடியில் இத்தனை துப்பாக்கிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் மேலும் ஆவேசத்துடன் வீரத்துடன் போராடும் உணர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை அனைவரும் பார்க்கிறோம். ஆட்சியாளர்களுக்கும் தெரியும்!

இனியாவது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும்; மக்கள் மீது போர் தொடுக்கும் தங்கள் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

உடனடியாகச் செய்ய வேண்டியவை

1. தூத்துக்குடியில் சமயம், சமூகம் சார்ந்த தலைவர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர்கள் – கல்வித்துறை சேர்ந்தவர்கள் – மாணவப் பிரதிநிதிகள் ஆகியோரைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்டு அமைதிப் பேச்சு நடத்த வேண்டும். அரசு சார்பில் ஓர் அமைச்சரும் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

அக்கூட்டத்தில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டோம்; சட்டச்சிக்கல்கள் வந்தால் சட்டரீதியாக முறியடித்து ஆலையைத் திறக்க விடமாட்டோம்” என்று முதலமைச்சர் கையொப்பமுடன் உள்ள உறுதிமொழியை எழுத்து வடிவில் மக்களுக்குத் தர வேண்டும்.

2. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காவல்துறையினரைத் தவிர வெளியிலிருந்து வர வழைக்கப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

3. இதுவரை கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விசாரணைக்கென்று பொதுமக்களை அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவற்றைச் செய்தால் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் பதற்றம் தணியும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Tuesday, May 22, 2018

போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்!

போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்! 

#BanSterlite

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி - தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை காவல்துறை வழிமறித்துத் தாக்கியதுடன், ஒரு பெண் உட்பட 13 பேரை இதுவரை துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் கொன்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த வன்முறைத் தாண்டவத்தைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாளை (23.05.2018) மாலை 4 மணிக்கு, சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தோழமை அமைப்புகளும், உழவர் இயக்கங்களும் பங்கேற்கின்றனர்.

அவசரமாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு, போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

#BanSterlite

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT