உடனடிச்செய்திகள்
Showing posts with label கி. வெங்கட்ராமன். Show all posts
Showing posts with label கி. வெங்கட்ராமன். Show all posts

Saturday, September 25, 2021

சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்,



சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நரேந்திர மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதமாகக் கூறிவிட்டது. 

மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில் 23.09.2021இல் இவ்வாறு கூறிய இந்திய அரசு, “இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதுமட்டுமின்றி, சாதியற்ற சமூகம் படைக்கும் இலட்சியத்திற்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியல் மாநில அரசுகளால் உருவாக்கப்படுவதாலும், கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புள்ள சாதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாலும், பட்டியல் சாதியினர் சிலர் மதம் மாறுவதால்  சமூகநிலை மாற்றங்கள் நிகழ்வதாலும் - இவ்வாறு கணக்கிடுவது சாத்தியமற்றது” என்று காரணம் கூறி இருக்கிறது. 

ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பது சாத்தியமானதுதான் என்பதற்கான விளக்கமளித்து இந்திய அரசின் “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே” கூட கடந்த 2021 சனவரியில் அறிக்கை அளித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தியது. 

வேடிக்கை என்னவென்றால், “இந்துத்துவ” பா.ச.க. மேற்கொண்ட இதே நிலைப்பாட்டைத்தான் “மதச்சார்பற்ற” காங்கிரசுக் ஆட்சியும் இதற்கு முன் மேற்கொண்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி, மன்மோகன் சிங் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரசுத் தலைவர்கள் பலர் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தினர். அப்போது, அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு சொல்லும் மாறாமல் பா.ச.க.வின் இதே மறுப்பைத்தான் நாடாளுமன்றததில் தெரிவித்தார். அது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய “சமூக - பொருளியல் - சாதிவாரிக் கணக்கெடுப்பு” (Socio - Econmic - Caste Census) மேற்கொள்ள முடிவானது. அதற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கி ஆய்வுக்குழுவை அமைத்தது. அதன் முடிவுகள் அரசிடம் முன்வைக்கப்பட்ட பின்பு, இந்திய ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது. 

நரேந்திர மோடி அரசு, இந்த ஆய்வறிக்கையில் சமூக, பொருளியல் விவரங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பகுதியை மீளாய்வு செய்ய அன்றைய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை நிறுவியது. அதன் ஆய்வுமுடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயினும், பங்காரியா குழுவின் ஆய்வறிக்கையை மேலாய்வு செய்த ஊரக மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016 ஆகத்து இறுதியில் மக்களவை தலைவரிடம் வழங்கியது. அதில், “சமூக, பொருளியல், சாதிவாரிக் கணக்கெடுப்பு 98.87 விழுக்காடு மிகச்சரியாக இருக்கிறது. காணப்படும் சிற்சில குறைபாடுகளை நாங்கள் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கி விடலாம்” என்று கூறியது. 

உண்மை இவ்வாறிருக்க, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல! ஒருவேளை, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் ஏற்கெனவே செய்ததுபோல் தனியாக ஆய்வுக்குழு அமர்த்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும்! 

ஆனால், 2010லிருந்தே பா.ச.க.வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் - சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல! பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. 

இன்னொருபுறம், தாராளமயப் பொருளியலின் சந்தை விதிகள் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற பொய்யும் அம்பலப்பட்டுவிடும் என்று தாராளமயவாதிகள் அஞ்சுகிறார்கள். 

மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுவதுமுள்ள சனநாயக ஆற்றல்களும் வலுவாக மறுக்க வேண்டும்! ஏற்கெனவே எடப்பாடி அரசு அறிவித்த தமிழ்நாடு அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க. அரசு விரைந்து முடிக்க வேண்டும்! இச்சிக்கலில் ஒத்த கருத்துள்ள பல்வேறு மாநில அரசுகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மோடி அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பா.ச.க. தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2021 அக்டோபர் இதழின் ஆசிரியவுரையாக எழுதியது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, August 19, 2021

"தாலிபான்கள் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து! மோடி விரும்பும் இசுலாமியக் குடியரசு!" - 'மசாலா விஷன்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"தாலிபான்கள் ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து! மோடி விரும்பும் இசுலாமியக் குடியரசு!"



'மசாலா விஷன்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன்  நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, August 10, 2021

"திமுகவின் வெள்ளை அறிக்கை இலாபமா? நஷ்டமா?" 'ழகரம்' ஊடகத்துக்கு..ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"திமுகவின் வெள்ளை அறிக்கை

 இலாபமா? நஷ்டமா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, August 9, 2021

"தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை: இனி என்ன செய்ய வேண்டும்?" ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை..!

"தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை:

இனி என்ன செய்ய வேண்டும்?"



தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை..!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, August 7, 2021

வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு சூறையாடாதே! ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!



வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு  சூறையாடாதே!

தமிழ்நாடு அரசுக்குத்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கேசவப்பிள்ளை பூங்கா (கே.பி. பார்க்) குடியிருப்பில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அடித்தட்டு மக்களை தமிழ்நாடு அரசு வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. இந்த கே.பி. பார்க் குடியிருப்பு என்பது, கேசவப்பிள்ளை என்ற நல்லெண்ணம் கொண்ட செல்வந்தர் அரசுக்குக் கொடையாக வழங்கிய மனையில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம், வீடற்ற மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்பாகும். இதில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் மிகப்பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கடந்த அ.தி.மு.க. அரசு, 2016 சூலையில் கே.பி. பார்க் மைதானத்தில் குடிசையமைத்துத் தங்கயிருந்த இம்மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப் போவதாகக் கூறி, அதிரடியாக காவல்துறையின் உதவியோடு அம்மக்களை காலி செய்தது. போராட்டம் நடத்திய மக்களிடம் 18 மாதங்களில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வழங்குவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னும் அவர்களுக்கு வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு 2021 பிப்ரவரியில் யார் யாருக்கு எந்தெந்த வீடு என டோக்கன் கொடுப்பதாக அறிவித்தார்கள். 

டோக்கன் வாங்க முயலும்போது தான், இது இந்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் என்றும், ஒவ்வொரு குடும்பத்தினரும் 1.5 இலட்சம் ரூபாய் பங்குத் தொகை செலுத்தினால்தான் வீடு ஒப்படைக்கப்படும் என்றும் திடீர் நிபந்தனை விதித்தனர். 

அந்த நிபந்தனையின் கீழ் குடியேறிய மக்கள் அரசு கூறிய பங்குத் தொகையை செலுத்த முடியாததால், அந்த ஒன்பது மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டுக்கான இணைப்பையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்தனர். ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கும் பல மாடிகளிலிருந்து கீழறங்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட மக்களில் பெரும்பாலோர், அந்தப் பகுதிகளிலேயே தகரக் கொட்டைகளிலோ, வாய்ப்புள்ள சிலர் வேறு இடங்களில் வாடகை வீடுகளிலோ குடியேறினர். இவ்வாறு 864 குடும்பங்கள் அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டு தத்தளிக் கின்றனர். 

இதுபோதாதென்று, இப்போது கடந்த வாரம் அரும்பாக்கத்திலிருந்து அகற்றப்பட்ட குடிசைப்பகுதி மக்கள் ஏறத்தாழ 100 குடும்பத்தினர் இதே கே.பி. பார்க் குடியிருப்புப் பகுதிக்கு விரட்டப் பட்டுள்ளனர்.  
“சிங்காரச்சென்னை” என்ற பெயராலும், “எழில்மிகு சென்னை” என்ற பெயராலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு நகரின் அழகைக் கெடுப்பதாகக் கருதும் ஆட்சியாளர்கள், இவர்களை மட்டுமே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஊரறிய உலகறிய சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டடங்களையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் கட்டியிருக்கிற பெரிய ஆக்கிரமிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் அந்த ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவதற்கு பல்வேறு விதித் தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். 

தாராளமய – உலகமயத்தின் இன்னொரு சூறையாடலாக இது நிகழ்ந்து வருகிறது. இதனை இனியும் அனுமதிக்க முடியாது! மார்வாடிகள், குசராத்திகள், பனியாக்கள் என தமிழ்நாட்டிற்கு வந்தவர்களெல்லாம் இதே சென்னையில் வளமாய் வாழ்ந்து கொண்டிருக்க, சொந்த மண்ணின் தமிழ் மக்களோ தமிழ்நாடு அரசாலேயே இப்படி அலைக்கழிக்கப்படுவது வேதனையானது!

எனவே, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே குடியிருப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள கே.பி. பார்க்கின் 864 குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இந்தியத் தலைமையமைச்சரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு மக்களிடமிருந்து தலா 1.5 இலட்சம் பங்குத் தொகை என்ற நிபந்தனையை இரத்து செய்ய வேண்டும். அதை வழங்கிய வேண்டிய சட்டநிலைமை இருந்தால், அந்தப் பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். துண்டிக்கப்பட்ட லிப்ட் மற்றும் குடி தண்ணீர் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை குடிசை மாற்று வாரியத் திட்டத்தோடு இணைக்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Friday, August 6, 2021

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! - ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!



உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை 
விடுதலை செய்ய வேண்டும்! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!


உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநில அரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிருக்கிறது.

“அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும் ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்பட கூறுகிறது. 

இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்து வடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம் ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம் காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாக செயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம் கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாக நீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும் மேற்கோள் காட்டுகிறார்கள்

அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்ற முருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்ச நீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமை எனத் தெளிவுப்படுத்துகிறார்கள்.

இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து புதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன் விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன் படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன் படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரே நேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபட கூறியிருக்கின்றன. 

எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாக கருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனை ஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்கு வலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுகொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"மேகத்தாட்டு அணை: துரைமுருகன் - அண்ணாமலை நாடகம்" 'மசாலா விசன்' ஊடகத்துக்கு.. -ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"மேகத்தாட்டு அணை: துரைமுருகன் - அண்ணாமலை நாடகம்"


'மசாலா விசன்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, July 19, 2021

"கர்நாடகத்துக்கு மின்சாரத்தை தடை பண்ணுங்க!" 'ஆதன் தமிழ்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"கர்நாடகத்துக்கு மின்சாரத்தை

 தடை பண்ணுங்க!"


'ஆதன் தமிழ்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை! ஐயா கி. வெங்கட்ராமன்!


புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் 
தமிழின ஒடுக்குமுறை!

தோழர் கி. வெங்கட்ராமன்,பொதுச்செயலாளர், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழின ஒதுக்கலின் முதன்மைக் களமாக இந்திய நாடாளுமன்றமே விளங்குகிறது. தமிழ்நாட்டை இந்தியப் பேரரசின் காலனியாக அரசமைப்புச் சட்டம் ஒடுக்கி வைத்திருக்கிறது.

கூட்டாட்சியை விரிவாக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும், தமிழின ஒதுக்கலை – காலனிய ஒடுக்குமுறையை நீக்கும் வகையில் திருத்தம் செய்ய முடியாதவாறு நாடாளுமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இப்போது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது செயலுக்கு வந்துவிட்டால், இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான நிலைக்குத் தமிழினப் புறக்கணிப்பு – ஒடுக்குமுறை தீவிரப்படும் ஆபத்திருக்கிறது! 

இதுகுறித்து, கவனம் கொள்ளாமலேயே கொரோனா புதிதாக பெரிய செலவில் நாடாளுமன்றக் கட்டடம், தலைமையமைச்சர் இல்லம் கட்டப்பட வேண்டுமா என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. ஊடகங்களோ, அக்கட்டட அமைப்புகளின் சிறப்புத் தன்மையைப் பற்றி விரிவாக விளக்கி வருகின்றன. ஆனால், தமிழின ஒடுக்குமுறை இதன் மூலம் தீவிரப்படப் போகின்றது என்ற உண்மை கவனத்திற்கு வராமலேயே போகிறது! 

இப்போது, நாடாளுமன்ற மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 543. இதனை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்க வேண்டுமென்று 2019லேயே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஒருமித்தக் கருத்தோடு நாடாளுமன்ற புதிய கட்டடம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதனடிப்படையில், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2020 திசம்பரில் நடைபெற்றது. 2022 ஆகத்து 15 அன்று இந்திய சுதந்திரத்திற்கு 75ஆவது ஆண்டு வருகிறது. அன்றைய நாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இக்கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கொரோனா காலத்திற்காவது இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தவருக்கு 1 இலட்சம் ரூபாய் தண்டத் தொகை விதித்து, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர் இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர் இருக்கைகளும் அமையும் வகையில் கட்டமைப்புகள் உருவாகின்றன. 

மறுபுறம், 2026இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 என உயர்த்துவதற்கு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் பெட்ரோலியத் துறை மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வளர்ச்சித்துறை அமைச்சர் அர்திப் சிங் புரி மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திப் பேசி வருகிறார். 

இந்த 848 இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றன என்பதில்தான் தமிழின ஒதுக்கலின் தீவிர சதித்திட்டம் இருக்கிறது. 

இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்கள் 39. புதுச்சேரிக்கு 1. ஆக மொத்தம் 40. மக்கள் தொகைக்கேற்ற பேராளர்கள் என்ற பெயரால், செயற்கையான முறையில் தமிழர்கள் நாடாளுமன்றத்தில் நிரந்தர சிறுபான்மையாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதனால், மக்களவையில் தி.மு.க. – அண்ணா தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதான வாய்ப்புகளில் ஒரே கருத்தில் பேசும்போது கூட நாடாளுமன்றம் அதைக் காதில்கூட போட்டுக் கொள்ளாத கொடுமையான புறக்கணிப்பைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, காவிரிச் சிக்கலிலும், சிறுவன் பாலச்சந்திரன் கொலைச் செய்தி வந்ததையொட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்த விவாதம் நடந்தபோதும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கண்டித்துப் பேசியபோதும்கூட மக்களவையில் ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. 

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனக்கொலையான கொடிய செய்தியைக்கூட காதுகொடுத்துக் கேட்பதற்கு முன்வராத காலி நாற்காலிகளைக் கொண்ட அவையாகத்தான் மக்களவை இருந்ததைப் பார்த்தோம். ஏனென்றால், மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543இல் தமிழ்நாட்டின் 39 என்பது மிகமிகச் சிறுபான்மை! 

தமிழ்மொழி, தமிழர் தாயகம், தமிழ்நாட்டு உரிமை ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதென்பது கனவிலும் நடக்க முடியாத செயல்! காரணம் – அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. 

இருக்கிற 543 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களான உத்திரப்பிரதேசம் (80), பீகார் (40), இராசஸ்தான் (25), மத்தியப்பிரதேசம் (29), ஜார்கண்ட் (14), அரியானா (10), தில்லி (7), உத்தரகண்ட் (5), சத்தீசுகர் (11), இமாச்சலப்பிரதேசம் (4) என மொத்தம் 225 உறுப்பினர்கள் இந்தி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எந்த சட்டத்தையும் இயற்றிக் கொள்ளக்கூடிய இயல்பான பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்கள் முயன்றால் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறுவது எளிது! இவ்வாறான வாய்ப்பு எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. 

மொழிவழி தேசிய இன மாநிலங்களாக 1956இல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாட்சியாக இந்தியக் குடியரசு மாற்றப்பட்டிருந்தால், ஓரளவிற்காவது தமிழ்நாட்டின் உரிமைக் குரலை எழுப்புவதற்கு சிறு வாய்ப்பாவது கிடைத்திருக்கும். 

அப்போதும் ஒட்டுமொத்தத்தில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாகத்தான் தமிழினம் இருக்கும் என்றாலும், சம எண்ணிக்கை என்று வரும்போது இந்திக்காரர்களுக்கும், தமிழர்களுக்குமான எண்ணிக்கை சமநிலையாவது உறுதி செய்யப்பட்டிருக்கும். தேசிய இனத் தாயகமே மாநிலம் என்பதை கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்ட மாநிலச் சீரமைப்புச் சட்டம், மாநிலங்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 

பல்வேறுபட்ட தேசிய இனத் தாயகங்களுக்கு சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பது, நாடாளுமன்ற சமநிலையை ஓரளவுக்காவது பாதுகாத்துத் தரும் என்ற கொள்கை நிலை, இந்திய ஒன்றியத்துக்கு இருக்கவில்லை. 

இன்றைக்கும் நாடாளுமன்ற மக்களவையை மாநிலங்களுக்கு இணக்கமாக சீரமைக்க விரும்பும் சிந்தனையாளர்கள் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதற்குப் பதிலாக, அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதாக வலியுறுத்துகிறார்கள். இந்தி மாநிலங்கள் அப்போதும் 10 இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம எண்ணிக்கை என்றாலும் தமிழ்நாட்டைவிட அவர்கள் மட்டும் 10 மடங்கு இடம் பெற்று விடுவார்கள் என்ற எளிய அடிப்படையையே அவர்கள் கருத மறுக்கிறார்கள். 

உண்மையில், இனச் சமநிலையுள்ள கூட்டாட்சியாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் ஒன்றியமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், எந்தவொரு சிறிய தேசிய இனமும் புறக்கணிக்கப்படாமல் எந்த அடிப்படை முடிவும் ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் (Consensus) நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு உறுதி செய்யப்படும்.

ஆனால், இந்தியா இதற்கு நேர் எதிர்த்திசையில் – மேலும் மேலும் இந்திய அரசி்டம் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளும் போக்கில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. பா.ச.க.வின் நரேந்திர மோடி ஆட்சியில் அது கண்மண் தெரியாத வேகத்தில் அன்றாடம் நடந்து வருகிறது. 

அவ்வாறு மாநில அதிகாரம் குறுக்கப்பட்ட அரசமைப்பில் கூட, மற்ற தேசிய இன மாநிலங்களைவிட தமிழ்நாடு சட்ட வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்ட இன ஒதுக்கலுக்கு உள்ளான தாயகமாக இருக்கிறது. 

காவிரி, மீனவர் சிக்கல் போன்ற அனைத்திலும் இருக்கிற சட்டத்தில் பிற தேசிய இனங்களுக்கு இருக்கிற உரிமை கூட தமிழினத்திற்கு மறுக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியே மறுதலிக்கப்படும் நிகழ்வுகளைப் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில், புதிய பெரிய நாடாளுமன்றக் கட்டடமும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பதும் முற்றிலும் தமிழினத்தை புறந்தள்ளி வைக்கக்கூடிய சதித்திட்டமாக உருவாகி வருகிறது. 

இந்திய ஆரியத்துவ ஆட்சியாளர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் மிலன் வைஷ்ணவ், ஜே. ஹிண்ட்ஸ்டன் ஆகிய ஆய்வாளர்கள் வைக்கும் முன்மொழிவு (Hindustan Times, 03.03.2019 மற்றும் பிற ஏடுகள்) அர்திப் சிங் பூரியின் கருத்திற்கு ஒத்திசைவதாக இருக்கிறது. இவர்கள் இரண்டுவிதமான முன்மொழிவுகளை விவாதத்திற்கு வைக்கிறார்கள். 

இப்போது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனை 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைப்பது என்று இவர்களது முதல் முன்மொழிவு கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு, அதில் கூறப்படும் மக்கள் தொகை பெருக்க விகிதத்திற்கேற்ப 2026இல் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள் (Projection). அதற்கேற்ப மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை முன்வைக்கப்படுகிறது. 

இதன்படி, தமிழ்நாடு இப்போதுள்ள 39 மக்களவை உறுப்பினர்களிலிருந்து 31 ஆகக் குறைத்துப் பெறும். ஆனால், உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 91 ஆக உயரும். பீகாரின் உறுப்பினர் எண்ணிக்கை 40லிருந்து 50 ஆக உயரும். (காண்க : படம் – 1). இவ்வாறு, தமிழ்நாடு – கேரளா எண்ணிக்கை குறைந்தும், இந்தி மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்தும் இருக்கும். இப்போதுள்ளதைவிட கொடிய இனச் சமநிலை சீர்குலைவு ஏற்படும். 

 

ஆயினும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை குறைவதை ஏற்க மாட்டார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையையும் உயர்த்தி இன்னொரு முன்மொழிவை இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். 

அதன்படி, மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந் 848 ஆக உயர்த்துகிறார்கள். (காண்க : படம் – 2). அதன்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39லிருந்து 49ஆக உயரும். அதேநேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும். மொத்தத்தில் 848 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கேரளாவுக்கு 20 என்பது அப்படியே நீடிக்கும். அவ்வளவுதான்!
 
அதாவது, தமிழ்நாடு, புதுவை மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டுக் கூட நாடாளுமன்றத்தில் எந்தவகை சட்டத்தையும் இந்திய ஆட்சியாளர்களால் கொண்டு வர முடியும். அரசமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இதே வகையான விகிதநிலை புதிதாக உருவாக்கப்படும் மாநிலங்களவையிலும் ஏற்படும். 

ஒவ்வொரு தேசிய இனத்தின் சமத்தகுநிலைக்கு மாற்றாக, மக்கள் தொகை எண்ணிக்கை என்பது புதிய நாடாளுமன்றத்திலும் தொடரும் சூழலில், மக்கள் தொகை வளர்ச்சி நிலை இன்னொரு பெரிய சிக்கலை தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்துகிறது. 

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் உலகம் முழுவதும் நடந்து வருவதைப் போல, வேகம் குறைந்து காணப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளாவை ஒப்பிட இந்தி மாநிலங்களின் மக்கள் பிறப்பு விகிதம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இதுகுறித்து, இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2018 – 2019 கூறுவது மிகப் பெரிய அபாய அறிவிப்பாக இருக்கிறது, (விரிவிற்குக் காண்க : Economic Survey 2018 – 2019, Volume 1 - Chapter 7). 

இதில் கூறப்படும் மக்கள் தொகைப் பெருக்கக் கணக்கீடு, இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்கள் தொகை சுருக்கத்தை (Decline in Population) சந்திக்கும் என்று கூறுகிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்வார் (15லிருந்து 45 வயதிற்குள்) என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இது முன்வைக்கப்படுகிறது. இதற்கு மொத்தக் கருத்தரிக்கும் திறன் என்று (Total Fertility Rate – TFR) கூறுகிறார்கள். அதன்படி, இந்தியாவின் சராசரி கருத்தரிப்பு விகிதம் 2016இல் 2.3 என இருந்தது. 2021இல் 1.8 ஆகக் குறையும் என்று கூறுகிறார்கள். 

இன்னொருபுறம், பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் சமநிலை ஏற்பட்டு, மக்கள் தொகை அதேநிலையில் தொடர வேண்டுமானால், ஒரு பெண்ணின் கருத்தரிப்பு விகிதம் 2 குழந்தைகள் என்பதாக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது பல்வேறு மாநிலங்களுக்கு மாறுபட்ட நிலையில் இருக்கிறது. 

உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற இந்தி மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு, மிக நீண்டகாலமாக மக்களிடையே செயலில் உள்ளதால் தமிழ்நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தைவிட பீகாரின் மக்கள் தொகை்ப பெருக்கம் 2 மடங்காக இருக்கிறது, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றின் நிலையும் இதுதான்! 

 

இந்த அட்டவணையைக் (படம் – 3) கவனித்தால், 2031க்குப் பிறகு தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுருக்கம் (De-growth) ஏற்படவுள்ளது என்ற புதிய சிக்கலைப் புரிந்து கொள்ளலாம். மக்கள் தொகை சுருக்கம் இந்தியாவின் இனச் சமநிலையை மிகக் கொடுமையாக பாதிக்கும். குறிப்பாக, தமிழினப் புறக்கணிப்புக்கு இன்னும் கூடுதலான வாய்ப்புகளைத் திறந்துவிடும். அதுமட்டுமின்றி, வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் குவிவதை விரைவுபடுத்தும். 

இதேபோன்ற சிக்கலை சந்தித்து வருவதால்தான், மிகக் கடுமையான குடும்பக் கட்டுப்பாடு செய்துவந்த சீனா மட்டுமின்றி, ஜப்பான், செர்மனி போன்ற வளர்ந்த நாடுகளும் கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கிவிட்டன. இதேபோன்ற தேவை தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம். 

அப்போதும் பொருளியல் வளர்ச்சி மையங்களாக தமிழ்நாடும் பிற தென் மாநிலங்களும் இருக்கும். அரசியல் ஆதிக்க மையமாக வடஇந்தியாவின் இந்தி மண்டலம் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மறுசீரமைப்பு இந்த அரசியல் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தத் துணை செய்யும்! 

தமிழ்த்தேசிய அரசியலின் தேவை அதிகரித்து வருகிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Saturday, July 17, 2021

"உப்பு - மின்சாரம் கர்நாடகாவுக்குப் போகக் கூடாது!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் நேர்காணல்!

"உப்பு - மின்சாரம் கர்நாடகாவுக்குப் 

போகக் கூடாது!"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின்  நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, June 25, 2021

"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!" தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!



"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!"

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


பெரும் ஆரவாரத்தோடு இந்திய நாடாளுமன்ற நடுமண்டபத்தில் 30.06.2017 அன்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டு 2017 சூலை 1 முதல் செயலுக்கு வந்த “சரக்கு மற்றும் சேவை வரி” (ஜி.எஸ்.டி.) என்ற புதிய வரிமுறை, எல்லா முனையிலும் தோல்வி அடைந்து விட்டது.

கூட்டுறவுக் கூட்டாட்சி முறைமைக்கு (Co-operative Federalism) மகத்தான எடுத்துக்காட்டு, ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்பதால் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை குறையும், சேவைகளின் கட்டணம் குறையும், சிறுதொழில் வளர்ச்சிக்குப் புதிய ஊக்கம் கிடைக்கும், வரி ஏய்ப்பு இருக்காது என்று ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கோபுரம் ஏறி கொக்கரித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்து இந்த ஐந்தாண்டுகளிலேயே அத்தனை முனைகளிலும் படுதோல்வி அடைந்திருப்பதை 15ஆவது நிதி ஆணையமும், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் கூட ஒத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. 

கடந்த 28.05.2021 அன்று நடைபெற்ற சரக்கு சேவை வரி மன்றத்தின் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) 43ஆவது கூட்டம், ஜி.எஸ்.டி. வரிமுறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று கூறியது. 

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு வணிகமுறை மரபுகள், வணிக வரலாறுகள் கொண்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் சரக்கு சேவை வரி என்பது, சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை ஊக்கப் படுத்துவதற்கோ, விலை ஏற்றத்தைத் தவிர்ப்பதற்கோ, வரி ஏய்ப்பைத் தடுப்பற்கோ பயன்படாது. மாறாக, தேசிய இன ஒடுக்குமுறைக்கான வலுவான கருவியாக மட்டுமே செயல்படும் என்று இந்த வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நாம் எச்சரித்தோம். (விரிவிற்குக் காண்க : “தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்”, கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).

ஐந்தாண்டு கடைசியில் கணக்குப் பார்த்தால், ஜி.எஸ்.டி. வரி வசூல் எதிர்பார்த்ததைவிட 4 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக வந்திருக்கிறது. “இந்த வரி முறைமையைப் பற்றி ஆழமாக மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பதினைந்தாவது நிதி ஆணையம் தனது இடைக்கால அறிக்கையில் எச்சரிக்கை செய்தது. 

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டு, மோடி ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு மாநில அரசுகளை வளைத்து கடைசியாக தமிழ்நாடும் அந்த வலையில் வீழ்ந்ததற்குப் பிறகு சரக்கு சேவை வரி கொண்டு வரப்பட்டது. 

கூட்டுறவு கூட்டாட்சி அல்ல ஒற்றையாட்சியே
 
இதற்கு முன் இருந்திராத வகையில் 122ஆவது திருத்தம் என்ற ஒற்றைத் திருத்தத்தின் வழியாக ஒரே அடியில் அரசமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய இன மாநிலங்களுக்கு இருந்த அரைகுறை நிதி அதிகாரங்களும், முற்றிலும் பறிக்கப்பட்டு ஒற்றையாட்சி நிறுவப்படும் நிகழ்வாக அது அமைந்தது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற மயக்கும் முழக்கத்தின் கீழும், அந்தந்த மாநிலத்தில் இதுவரை வசூலான மாநில வரியைவிட ஆண்டுக்கு ஆண்டு 14% கூடுதல் வரித் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியும் மாநில அரசுகள் இணங்க வைக்கப் பட்டன. 

ஐந்தாண்டு படிப்பினைகளைப் பார்த்தால், இது முற்றிலும் மோசடியான கண்கட்டு வித்தை என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற கோட்பாட்டுக்கு சரக்கு சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) அமைக்கப் பட்டிருப்பதே மிகப்பெரிய சான்று என மோடி அரசு தம்பட்டம் அடித்தது. 

அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றம் பற்றி விரிவாகக் கூறுகிறது. மேல் தோற்றத்தில் பார்த்தால், மாநிலங்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டதுபோல் தெரியும். ஆனால், சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள வாக்குகளின் மதிப்பளவு (Weightage) பிரிக்கப்பட்டிருப்பதிலும், இந்த மன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குத் தேவை யான குறைந்தபட்ச வாக்குகளின் மதிப்பளவும் வரையறுக்கப்பட்டதிலும்தான் நுட்பமான சூழ்ச்சி இருக்கிறது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசின் சார்பில் வாக்குரிமை உள்ள இரண்டு பேராளர்கள் இருப்பார்கள். அவர்களில் இந்திய நிதியமைச்சர் இந்த மன்றத்தின் தலைவராக இருப்பார். 28 மாநிலங்களின் பேராளர்களும், சட்டமன்றத்துடன் கூடிய மூன்று ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலிருந்து 3 பேராளர்களும் இருப்பார்கள். 

அதாவது, மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 2 பேர் மட்டும் ஒன்றிய அரசின் பேராளர்களாக இருப்பார்கள். மற்ற 31 பேர் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் பேராளர்களாக இருப்பார்கள். தோற்றத்தில் பார்த்தால், மாநிலப் பேராளர்களுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு இருப்பது போலத் தெரியும். ஆனால், வாக்குகளின் மதிப்பளவு பிரிக்கப்பட்டிருப்பதில்தான் சூழ்ச்சியே இருக்கிறது. 

ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு பேராளர்கள்தான் என்றாலும், ஒன்றிய அரசின் வாக்கு மதிப்பு 33.3 விழுக்காடு ஆகும். மீதமுள்ள 66.7 விழுக்காடு மதிப்பு  வாக்கு என்பது 28 மாநிலங்களுக்கும், மூன்று ஒன்றியப் பிரதேசங்களுக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது, ஆனால், இந்த மன்றத்தில் எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அதற்கு குறைந்தளவு 75 விழுக்காடு மதிப்பளவு வாக்குகள் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால், அத்தீர்மானம் நிறைவேறாது!

எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து 66.7 விழுக்காடு மதிப்பளவு. ஆனால், தீர்மானம் நிறைவேறுவதற்கோ 75 விழுக்காடு மதிப்பு தேவை! 

பல்வேறு கட்சிகள், கருத்தோட்டங்கள் உள்ள 31 மாநிலங்களும் ஒரே கருத்தில் உடன்படுவது அரிதிலும் அரிதானது. அப்படியே அனைத்து மாநிலங்களும் ஒரே ஒத்த கருத்தில் நிற்பதாக கற்பனையில் கருதிக் கொண்டாலும், அப்போதும் அவற்றின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 66.7 விழுக்காடு தான்! 

பெரும்பான்மை வாக்கு மதிப்பு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது போல தோற்றம் காட்டி, ஒன்றிய அரசு தனது கைகளில் இரத்து அதிகாரத்தை (VETO POWER) வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை நிலை! 

இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டிருக்கிற முறையே மாநிலங்களை செல்லாக் காசாக்குகிறது என இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பேராளர்கள் சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் அபாயக்குரல் எழுப்பினார்கள். 

“நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வருகிறேன்! இரண்டு பேரும் ஊதிஊதித் தின்னலாம்” என்றழைப்பதுபோல், வரி வருமானம் அதிகம் வழங்குகிற மாநிலமும், வரி வசூலில் எந்தத் திறமையுமற்று பின்தங்கியிருக்கிற மாநிலங்களும் சம வாக்கு மதிப்பு பெற்றிருப்பது வரித் திறனுள்ள மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டை தண்டிப்பதாக இருக்கிறது. இந்த நிலைமையைக் குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் இந்தக் கூட்டத்தில் தெளிவாக வாதம் செய்தார். 

சரக்கு சேவை வரி மன்றத்தின் கட்டமைப்பே இந்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வாய்ப்பளிக்கிறது. அத்துடன், அதிகம் ஜி.எஸ்.டி. திரட்டித் தரும் மாநிலங்கள் தண்டிக்கப்படுவதற்கும் வழி கோலுகிறது. இதுவே கூட்டுறவு கூட்டாட்சி முறைமை என்று இதற்கு சொன்ன பளபளப்பான பரப்புரையை வீழ்த்திவிட்டது. 

இதுபோதாதென்று ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழு (GST Implementation Committee) என்ற பெயரால் முற்றிலும் அதிகாரிகளைக் கொண்ட குழுவை இடையிலேயே ஏற்படுத்தினார்கள். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் செய்யப்படும் முடிவுகளை முறையாக செயல்படுத்துவதற்கான குழுதான் இது என முதலில் கூறப்பட்டது. 

ஆனால், நடைமுறையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மேலதிகாரம் படைத்ததாக இந்தக் குழு மாற்றப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி. மன்றத்தைத் தவிர்த்து விட்டு, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடியதாக இந்தக் குழு மாறியது. ஏனெனில், ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இந்திய நிதியமைச்சகம் தனித்தனி அறிவிப்புகளாக வெளியிடத் தொடங்கி விட்டது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் எல்லாம் இவ்வாறு தனித்தனியான அரசு அறிவிப்புகளாக வெளிவரத் தொடங்கியது. 

இதற்கு மேலும் இந்திய மறைமுக வரி வாரியமும், அதன் வரி ஆய்வு அமைப்பும் (Tax Research Unit) தன்னிச்சையான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் செயலுக்கு வந்தபிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஒப்புக்காக ஒப்புதலுக்கென்று வைக்கப்படுகிறது. 

இதனால்தான், “ஜி.எஸ்.டி. கவுன்சில் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பாக தாழ்த்தப்பட்டுவிட்டது” என தமிழ்நாடு நிதியமைச்சரும், பஞ்சாப் நிதியமைச்சரும் ஆவேசமாகக் குரலெழுப்பினார்கள். 

அரசமைப்புச் சட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றத்திற்கு மாநிலப் பேராளர்களிலிருந்து ஒருவர் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறுகிறது. ஆனால், ஐந்தாண்டு ஆகியும் மாநிலப் பேராளர்களிடமிருந்து இவ்வாறு ஒரு துணைத் தலைவர் தேர்வு செய்யப்படவே இல்லை! இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாட்டாண்மையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் நடப்பதற்கான நடைமுறை ஏற்பாடு இது! 

மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் 2015 - 2016ஆம் ஆண்டின் வரி வருவாயை விட 14 விழுக்காடு கூடுதலாக வரி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியின்போதுதான் பெரும்பாலான மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரி முறையை ஏற்றுக் கொண்டன. ஆனால், இந்த வரி விதிப்பு தொடங்கிய இரண்டாம் ஆண்டி லிருந்தே இழுபறி தொடங்கிவிட்டது. 

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இயல்பான வரிப் பங்கையும் (State GST) முழுமையாகத் தராமல் இந்த 14 விழுக்காடு இழப்பீட்டையும் தராமல் இந்திய அரசு இழுத்தடிக்கத் தொடங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட தொழில் வளர்ச்சியுள்ள பிற மாநில அரசுகளும் கொள்ளையாக வரியைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, இழப்பீட்டுத் தொகைக்காக கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலைமைக்கு வீழ்ந்தன. 

இதற்குமேல், சட்டப்படி வாக்குறுதி அளிக்கப்பட்ட 2021 - 2022 நிதி ஆண்டிற்கு இழப்பீட்டுத் தொகையோ, பங்குத் தொகையோ தர முடியாது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கைவிரித்தார். 

“கொரோனா பெருந்தொற்று கடவுளின் செயல். இதில் வந்த வரி வசூல் வீழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே, பங்குத் தொகையும் தர முடியாது” என்று ஆண்டவனைக் காட்டி ஆணவப் பேச்சுப் பேசினார் நிர்மலா சீத்தாராமன்! வேண்டுமானால், மாநிலங்கள் கடன எழுப்பிக் கொள்ளட்டும் என்று கைகழுவி விட்டார். 

கடந்த மே 28ஆம் நாள் (2021) நடைபெற்ற 43ஆவது மன்றக் கூட்டத்தில், பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியதற்குப் பிறகு 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசு கடன் எழுப்பி, அதனை மாநில அரசுகளுக்கு கடன் தொகையாக வழங்கும் என்றும், பின்னால் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கில் அது சரி செய்து கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். பங்குத் தொகை பறிபோனது போனதுதான். கடன் தொகைக்கு தான் ஒப்புதல் வந்திருக்கிறது. 

இந்தச் சூழலில், 2022-டோடு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிறுத்தக்கூடாது, குறைந்தது மேலும் ஐந்தாண்டுக்காவது நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்து கின்றன. இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கும் வாய்ப்பு தெரியவே இல்லை! 

ஏனெனில், ஏற்கெனவே மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையையோ, இழப்பீட்டுத் தொகையையோ தரவில்லை என்பது மட்டுமின்றி, மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்குத் தொகையை குறைப்பதற்காக சூதான வழிமுறைகளில் இந்திய அரசு இறங்கிவிட்டது. 

122ஆவது சட்டத் திருத்தப்படி சரக்கு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரித் தொகையில்தான் மாநிலங்களுக்குப் பங்கு பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டு விட்டது. இதைத் தவிர்ப்பதற்காக நேரடியாக சரக்கு மற்றும் சேவை ”வரி” (Tax) என்று அழைப்பதை மாற்றி, பல்வேறு சரக்கு சேவை வரிகளுக்கு தீர்வை (Cess) என்றும், மேல் வரி (Surcharge) என்றும் பெயர் மாற்றம் செய்து, இந்திய அரசு வசூலிக்கத் தொடங்கி விட்டது. 

இந்தத் தீர்வைக்கும், மேல் வரிக்கும் “வரி” (Tax) என்ற பெயர் இல்லாததால், அதில் மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டியதில்லை என்ற கொல்லைப்புற வழியை மோடி அரசு தேர்ந்தெடுத்தது, 

மோடி தலைமையமைச்சராகப் பதவி ஏற்றதற்குப் முன்னால், 2013 - 2014 நிதியாண்டில் இவ்வாறு பல சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு இருந்த தீர்வை மற்றும் மேல் வரி என்பது 6% ஆக இருந்தது. ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்ததற்குப் பிறகு, இப்போது 2020 - 2021ஆம் நிதியாண்டில் தீர்வை மற்றும் மேல் வரி 19.9 விழுக்காடாக தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகை 5 இலட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்! 

மறைமுக வரியான ஜி.எஸ்.டி.யில் மட்டுமின்றி, மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டிய நேர்முக வரியிலும் இதே வகையான சூதான நடைமுறையை இந்திய அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. 

கடந்த 14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரை குறித்து விளக்கமளித்த இப்போதைய 15ஆவது நிதி ஆணையம், தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெளிவுபடுத்தியது. 

14ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை வரலாறு காணாத அளவில், 42 விழுக்காடாக உயர்த்தி விட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களுக்குப் பங்கு தர தேவையில்லாத தீர்வை மற்றும் மேல் வரியைக் கழித்து விட்டால், ஒட்டுமொத்த வரி வசூலில் மாநிலங்களின் பங்காகக் கிடைத்தது வெறும் 32.4 விழுக்காடு தான் என 15ஆவது நிதி ஆணையம் விளக்கியது. 

இவ்வாறு வரிக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு விட்டதால் தமிழ்நாடு ஆண்டுதோறும் 88 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பங்கை இழந்து வருகிறது என்று சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறியிருப்பது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாகும். 

ஜி.எஸ்.டி. வரி வருமானமும், நேரடி வரி வருமானமும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும் முறையே தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் வகையில் அமைந் திருக்கிறது. சிறிய மாநிலங்களை மட்டுமல்ல, இந்தி மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான் ஆகிய இந்தி மாநிலங்கள் அளிக்கும் வரி வருவாய் இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 14.6 விழுக்காடு மட்டுமே ஆகும். ஆனால், அந்த மாநிலங்கள் பெறுகிற பங்குத் தொகையோ மொத்த வரி வருவாயில் 41.86 விழுக்காடு (2020 - 2021 ஒன்றிய பட்ஜெட் புள்ளி விவரங்கள்) ஆகும். அதேநேரம், தமிழ்நாடு பெறுகிற பங்குத் தொகை 4.189 விழுக்காடு மட்டுமே ஆகும். 

மக்கள் தொகை என்ற கணக்கின்படி பார்த்தாலும், மேற்சொன்ன இந்தி மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய நாட்டு மக்கள் தொகையில் 36.7 விழுக்காடு தான்! தமிழ்நாட்டு மக்கள் தொகையோ ஏறத்தாழ 6 விழுக்காடாகும். வரி வசூலில் முதல் வரிசை மாநிலம் தமிழ்நாடு என்பது சொல்லத் தேவையில்லை. 

வரி வசூலில் மிகப் பின்தங்கியிருக்கிற இந்தி மாநிலங்களுக்கு அவர்கள் வசூலிப்பதைவிட கிட்டத் தட்ட மூன்று மடங்கு வரிப் பங்கு அளிக்கப்படுகிற தென்றால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வர வேண்டிய தொகையைப் பிடுங்கி இந்தி மாநிலங்களைக் கொழுக்க வைக்கிறார்கள் என்பதுதானே பொருள்! 

இது ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு மட்டுமல்ல, கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் அநீதிதான்! ஆயினும், இவ்வளவு மிகைத் தொகை அம்மாநிலங் களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னும் அவற்றையெல்லாம் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் செலவு செய்து விட்டார்களே தவிர முன்னேறிய மாநிலங்கள் வரிசைக்கு வந்தபாடில்லை. 

வரி வசூலிலோ, தொழில் மற்றும் வேளாண்மை வளர்ச்சியிலோ எந்தப் பங்களிப்பும் செய்யாமல், உட்கார்ந்த இடத்தில் இவ்வளவு தொகை கிடைக்கும் போது, அவர்கள் ஏன் முன்னேற முயற்சி செய்யப் போகிறார்கள்? சாதிச் சண்டையிலும், மதச் சண்டை யிலும் குழந்தைகளை வல்லுறவு கொண்டுக் கொல்வ திலும் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். 

அதற்குத் தமிழ்நாடு பலியிடப்படுகிறது! 

இவை அனைத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பானது, ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டே செயல்படுகிறது. 

எல்லா நாடுகளிலும் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வரிப் பங்கீட்டில் முரண்பாடு கள் எழுவது இயல்பு. ஆயினும், பல்வேறு நாடுகளில் அச்சிக்கல்கள் ஏதோவொரு வகையில் இணக்கமாகத் தீர்க்கப்படுகிறது. இவ்வாறு ஜி.எஸ்.டி. ஓரளவுக்கு வெற்றிகரமாக செயல்படும் நாடுகளை உற்று நோக்கினால் அவை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள் அல்ல என்பது தெளிவாகும். 

இன்றைக்குள்ள நவீன பொருளியல் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு என்பது, “நடத்தைப் பொருளியல்” (The Behavioral Economics) என்ற புதிய போக்காகும். இந்த புதிய வகைப் பொருளியல் கோட்பாட்டிற்காக 2017ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலெ கூறுவது கவனிக்கத்தக்கது. 

“சந்தைப் பொருளியல் உறவில் பகுத்தறிவு வழிப் பட்ட முடிவுகளைவிட ஒரு தரப்பின் மீது இன்னொரு தரப்பு வைக்கிற நம்பிக்கையின் மீதுதான் (Trust) பொருளியல் உறவு கட்டப்படுகிறது” என பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் ரிச்சர்ட் தாலே விளக்கிக் கூறுகிறார். 

தனிநபர் ஊடாட்டமுள்ள சந்தையைவிட பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டுச் சந்தையில் இரு தரப்பினருக்கு இடையே இந்த நம்பிக்கை மிக முக்கியமானது. 

ஆனால், அறிவிக்கும்போதே ஒற்றைச் சந்தை என்ற எக்காளத்தோடுதான் ஜி.எஸ்.டி வரி முறையே அறிவிக்கப் பட்டிருக்கிறது. மிக நெளிவு சுளிவான முதிர்ச்சியான சனநாயகப் பண்புள்ள பல தேசிய இன நாடுகளில் கூட கூட்டாட்சி முறை தோல்வி அடைந்து விட்டதைப் பார்க்கிறோம். 

மெய்நிலை இவ்வாறு இருக்க, ஒன்றிய அரசு மேலாதிக்கம் செய்யும் ஜி.எஸ்.டி. வரிமுறை பல்தேசிய இன நாடான இந்தியாவிற்குப் பொருந்தவே பொருந்தாது. இதைத்தான் ஒன்றிய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கைக் குலைவு எடுத்துக்காட்டுகிறது. 

நடந்து முடிந்த 43ஆவது சரக்கு சேவை வரி மன்றக் கூட்டம், இந்த உண்மையை ஐயத்திற்கு இடமின்றி புலப்படுத்திவிட்டது! 

ஜி.எஸ்.டி.யின் கூட்டுறவுக் கூட்டாட்சி முறை என்ற அடிப்படையான நம்பிக்கையே தகர்ந்துவிட்ட பிறகு, ஜி.எஸ்.டி. வரிமுறை நீடிப்பது ஆபத்தானது. 

விலைவாசியும் குறையவில்லை
 
ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தும்போது, மோடி அரசு அளித்த இன்னொரு நம்பிக்கை “வரி மேல் வரி” என்ற பழைய முறையை நீக்கி, ஜி.எஸ்.டி. செயலுக்கு வரும்போது “விலைவாசி குறையும்” என்பதாகும். 

ஒரு பொருள் அல்லது சேவை உருவாகும் இடத்திலிருந்து பல கைகள் மாறி நுகர்வோரை அடையும்போது, இந்த சங்கிலித் தொடரில் முதலாமவர் செலுத்திய வரித்தொகை இரண்டாமவரிடம் கழித்துக் கொள்ளப்படும் என்ற முறை ஜி.எஸ்.டி.யில் உள்ளது. ஆயினும், நுகர்வோரை வந்தடையும்போது அதிகபட்ச சில்லறை விலையில் (MRP), அது பிரதிபலிக்கவில்லை. இதனை 15ஆவது நிதி ஆணையமே குற்றச்சாட்டாகக் குறிப்பிடுகிறது. “வரி மேல் வரி” இல்லை என்பதன் பலன், நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை. விலையேற்றம் தொடர்கிறது. 

இந்த வகையிலும் ஜி.எஸ்.டி. வரிமுறை தோல்வி அடைந்துவிட்டது! 

சிறுதொழில்களை அழித்த ஜி.எஸ்.டி.
 
ஜி.எஸ்.டி. வரி செயலுக்கு வந்தபிறகு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நொடித்து, மூடப்பட்டு வருவதை சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, மதுரை என்று திரும்பிய பக்கமெல்லாம் பார்க்கிறோம். 

பெரிய நிறுவனங்கள் பெரும் செலவு செய்து, விளம்பரங்கள் வழியே தங்களது  வணிக முத்திரையை (பிராண்ட்) மக்கள் மனங்களில் ஏற்றி விடுகின்றனர். மேலே குறிப்பிட்ட “நடத்தைப் பொருளியல்” விதிகளின்படி, விளம்பரங்களை நம்பும் நுகர்வோர் அந்தப் பொருட்களின் மீதும் - சேவைகளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். அது அந்த நிறுவனங்களின் வணிகத்தைப் பெருமளவு உயர்த்துகிறது. 

அதே தரத்தில், அதே பொருளை உற்பத்தி செய்யக்கூடிய சிறுதொழில் முனைவோர் இவ்வாறு தங்கள் தயாரிப்புகளை விளம்பரங்களின் மூலம் நிலைநிறுத்த முடிவதில்லை. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே சதவிகித ஜி.எஸ்.டி. தான்! இச்சூழலில், செலவு செய்து விளம்பரங்களின் மூலமாக சந்தையில் நிலைபெறும் பெரிய நிறுவனங்களிடம் தங்கள் சந்தையையும் விட்டுவிட்டு, சிறுதொழில் முனைவோர் வெளியேறும் சூழலே நிலவுகிறது. 

போராடி சந்தையில் நிற்க முனைகிற சிறுதொழில் முனைவோர் வேறு வழியில்லாமல் ஆள்குறைப்பு செய்கிறார்கள். முடிந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தொழிலை ஓட்டுகிறார்கள். அதில் முடியாதவர்கள் தங்கள் தொழில் உற்பத்திக் கருவிகளை “காயலாங்கடைக்கு” விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள். 

மதுரையிலும், ஈரோட்டிலும் இன்னும் பல நகரங்களிலும் விசைத்தறி உரிமையாளர்கள் இவ்வாறு தங்களது விசைத்தறிகளை வந்தவிலைக்கு “காயலாங் கடைக்கு” விற்றுவிட்டு தொழிலிலிருந்து வெளியேறி யதைத் தமிழ்நாடு கண்டது. 

ஜி.எஸ்.டி. வரிக்கான பலவிதமான படிவங்களை இணையவழியில் நிரப்பி அனுப்புவதற்கே தொழில் நுட்பப் பணியாளர்களை கூடுதல் ஊதியம் கொடுத்து சிறுதொழில் முனைவோர் அமர்த்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதிகாரிகளிடம் விளக்கம் சொல்வதற்கே காலம் விரையமாகிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வந்தபிறகு சிறுதொழில் முனை வோர் அன்றாடம் நெருப்பில் நடந்து செல்கிறார்கள். 

வரி ஏய்ப்பு தொடர்கிறது
 
ஜி.எஸ்.டி. வந்தவுடன் எல்லோரும் வரி வலையத் திற்குள் வந்துவிடுவார்கள், எல்லாம் தொழில்நுட்ப மயமாகி இருந்தால் வரி ஏய்ப்பும் இருக்காது - அதிகாரிகளின் ஊழலும் பெருமளவு குறையும் என்றார்கள். 

ஆனால், தயாரிப்பு மையங்களிலிருந்து, மொத்த வணிகத்திலிருந்து கீழ்நிலையில் வரையிலும் கணக்கில் வராத இணைப் பொருளாதாரம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை 2018 - 2019 ஆம் ஆண்டின் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (CAG Report) எடுத்துக்காட்டியது. ஜி.எஸ்.டி. வந்ததனால், வரி ஏய்ப்பு ஒன்றும் குறையவே இல்லை என்று அந்த அறிக்கை உறுதிபடக் கூறியது. 

ஊழல் அதிகாரிகளின் கடைக்கண் பார்வை இல்லாமல், இவ்வாறான கணக்கில் காட்டாத இணைப் பொருளா தாரம் நடக்கவே முடியாது. ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு வரி ஏய்ப்பும் குறையவில்லை; ஊழலும் குறையவில்லை! 

ஜி.எஸ்.டி.யைக் கைவிடுக!
 
எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்ட, தேசிய இனங்களை நசுக்கி ஒற்றை அதிகாரத்தை நிறுவுகிற ஜி.எஸ்.டி. வரிமுறையைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

2021 சூலை மாதம் நடைபெறவிருக்கிற சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியைக் கைவிடுவது, ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கலைப்பது என்பதுதான் அந்த மன்றம் இந்திய அரசுக்கு முன்வைக்க வேண்டிய பரிந்துரையாக இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Sunday, June 6, 2021

+2 தேர்வு கைவிடப்பட்டிருப்பது தவறான முடிவு! - தோழர் கி. வெங்கட்ராமன் கருத்து!



+2 தேர்வு கைவிடப்பட்டிருப்பது
 தவறான முடிவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் 
செயலாளர் கி. வெங்கட்ராமன் கருத்து


மேல்நிலை வகுப்பு – (+2) இறுதித் தேர்வு இந்த ஆண்டுக்கு கைவிடபட்டிருப்பது தவறான முடிவாகும். 

கொரோனா தொற்று இரண்டாம் அலை கடுமையாக இருக்கும் சூழலில் +2 தேர்வு உடனடியாக நடத்தமுடியாது என்ற முடிவு சரியே. ஆனால் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வினாக்களை எளிமையாகவும் குறைவான எண்ணிக்கையிலும் அமைத்து 1.30 மணி நேரத் தேர்வாக நடத்த முடிவெடுத்திருக்க வேண்டும்.

இறுதித் தேர்வு கைவிடப்பட்ட நிலையில் எவ்வாறு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய வல்லுநர் குழு அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும்  அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும்.

இன்னொரு புறம் இந்திய அரசு மருத்துவம் உள்ளிட்ட உயர் நிலை கல்விக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு அமர்ந்தவர்களில் கணிசமானவர்கள் இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்து கொண்ட பழைய மாணவர்களாகும்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியத் தலைமை அமைச்சர்க்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த வேண்டாம் என கேட்டுகொண்டிருப்பது. எந்த அளவிற்கு பயன்விளைக்கும் என்பது கேள்விக்குறியே.

இது போதாதென்று கல்லூரி கல்விக்கும், அனைத்திந்திய நுழைவு தேர்வுகள் அச்சுறுத்தி கொண்டிருக்கிறன. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டால்  இரண்டு மூன்று மாதங்கள் கழித்து +2 தேர்வை எளிமையான முறையில் நடத்துவதே சரி என்ற முடிவுக்கு வர முடியும்.

எனவே தமிழ்நாடு அரசு தமது முடிவை மறு ஆய்வு செய்து மூன்று மாதங்கள் கழித்து +2 இறுதித் தேர்வை உரிய பாதுகாப்புடன் நடத்த முன்வரவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, June 3, 2021

உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது! - தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!



உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர்
 தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!


துயரம், பெருந்துயரம்! தமிழக உழவர் முன்னணியின் பொதுச்செயலாளர் – தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தூருவாசனை கொரோனா கொள்ளை நோய் கொண்டுபோய்விட்டது! 

கோவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தோழர் தூருவாசன், முதலில் கிருஷ்ணகிரியில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பெருந் தொற்றோடு போராடினார். கடைசியில் இன்று (03.06.2021) காலை அந்தக் கொள்ளை நோய் அவரை மாய்த்துவிட்டது! 

தோழர் தூருவாசனுக்கு அகவை 39. அவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், பிரவீன் – கீதா என்ற இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் – இராயக்கோட்டை வட்டம் பிள்ளாரி அக்ரகாரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த தோழர் தூருவாசன், பழகுவதற்கு இனிமையான தோழர். அதேநேரம், அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடும் போர்க்குணத்தை இயல்பிலேயே பெற்றவர். அழுத்தமான அமைப்பாளர். இவரைப்போல், பன்முக ஆற்றல் பெற்ற மக்கள் செயல்பாட்டாளர் கிடைப்பது அரிது! 

தமிழக உழவர் முன்னணியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வலுவாக அமைத்து, தருமபுரி மாவட்டத்திலும் அதை விரிவாக்கியதில் முதன்மைப் பங்காற்றியவர் தோழர் தூருவாசன். அம்மாவட்டங்களில் முக்கியச் சிக்கலான கெயில் குழாய்ப் பதிப்பை எதிர்த்து, பெருந்திரள் உழவர்களைத் திரட்டி பலமுறை போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். களத்திற்கு நேரடியாகச் சென்று எந்தக் கிராமத்தில் கெயில் குழாய் விளைநிலத்தில் பதிக்க முன்வந்தாலோ – முயன்றாலோ அதை அங்கேயே தடுத்து நிறுத்தி, வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு உழவர்களின் நிலத்தைப் பாதுகாத்துத் தருவதில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 

அவ்வாறான போராட்டக் களங்களில்கூட உயர் அதிகாரிகளிடம் வாதாடும்போது அமைதியான – ஆழமான ஞாயங்களை முன்வைத்து உழவர்களின் வாழ்வுரிமையின் அடிப்படைத் தேவையை அவர்களே உணருமாறுச் செய்தவர். 
பல நூறு ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியையும், பல கிராமங்களுக்குக் குடி தண்ணீர் தேவையையும் நிறைவு செய்யும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை வலியுறுத்தி கிராமம் கிராமமாக உழவர்களைத் திரட்டி, இடைவிடாத போராட்டங்களை தமிழக உழவர் முன்னணி நடத்தியது. அப்போராட்டங்கள் அனைத்திலும் முதன்மைத் தளபதியாக தூருவாசன் திகழ்ந்தார். அந்த உழவர் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக முந்தைய அண்ணா தி.மு.க. அரசு, வேறு வழியின்றி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அத்திட்டச் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. 

கார்நாடக அரசின் மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 2015இல் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பெருந்திரள் முற்றுகைப் போராட்டத்தில், களப்பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியதில் தூருவாசன் முகாமையானப் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் வந்திருந்த உழவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்ததில் ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களோடு இணைந்து சிறப்பான பணியாற்றினார். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தூருவாசனின் பங்களிப்பு சிறப்பானது! இராயக்கோட்டை பகுதியிலிருந்து கடும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் உழவர்களையும், மக்களையும் திரட்டி, அவர்களிடத்திலேயே நிதியையும் திரட்டி பெரும் எண்ணிக்கையில் ஊர்திகளில் அழைத்து வந்து, அப்போராட்டங்களில் தனது பங்களிப்பைச் செய்ய தூருவாசன் தவறியதில்லை! 

“பிரவீன் கீதா” என்ற தனது முகநூல் பக்கத்தின் வழியாக, உழவர் சிக்கல்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கைப் பரப்புரையை முன்னெடுத்துச் செல்வதிலும் சிறப்பான பங்காற்றினார் தோழர் தூருவாசன். 

இயற்கையில் சிறுசிறு மாறுபாடுகள் கூட மலர் சாகுபடி செய்பவர்களுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கிவிடும். மலர் சாகுபடி உழவரான தோழர் தூருவாசன், இந்த சிக்கலான நிலைமையில் கூட தன்னலம் துறந்து மக்கள் பணியாற்றியது பெரிய – அரிய செயலாகும்! அவரது இறப்பு – தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும், தமிழக உழவர் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! 

மறைந்த தோழர் தூருவாசனுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும், தமிழக உழவர் முன்னணி சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அவரை இழந்து வாடும் அவரது மனைவி வள்ளியம்மாள், குழந்தைகள் பிரவீன் மற்றும் கீதா உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சொற்களே இல்லை! அவர்கள் குடும்பத்தாருக்கு நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT