உடனடிச்செய்திகள்
Showing posts with label கி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு!. Show all posts
Showing posts with label கி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு!. Show all posts

Tuesday, October 29, 2019

யோகா கல்வி என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


யோகா கல்வி என்ற பெயரால்
பள்ளிகளை ஆரியமயமாக்குவதை
தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் “தேசியக் கல்விக் கொள்கை”யின் பரிந்துரை களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது.

ஐந்தாம் வகுப்பு - எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில கிலோ மீட்டர்கள் தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளிகளை இணைப்பது என அடுத்தடுத்து கல்வி உரிமையின் மீதான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்பு, எளிய மக்களின் கல்வி உரிமை பறிப்பு, தேர்வு முறையை தண்டனை முறையாக இறுக்குவது என பிற்போக்கு திசையில் இந்திய அரசின் ஆணையை கூச்சமின்றி செயல்படுத்துகிறது.

இந்த வரிசையில், “யோகா மற்றும் ஒழுக்கக் கல்வி” என்ற பெயரால் ஆரியத்துவ ஆதிக்கத்திற்கு கதவு திறந்து விட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 25.10.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் செயல்பட்டு வரும் “கைவல்ய தம்மா யோகா ஆய்வு நிலையம்” என்ற நிறுவனத்தோடு “புரிந்துணர்வு” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இந்த “கைவல்ய தம்மா யோகா நிலையம்” மும்பை அருகிலுள்ள லோனாவாலா குன்றில், தலைமையிடம் அமைத்து செயல்பட்டு வருகிறது. சுவாமி குவலயா நந்தா என்பவர் 1924இல் நிறுவி விரிவாக்கிய இந்த யோகா நிறுவனம், இப்போது ஓ.பி. திவாரி என்பவர் தலைமையில் நடந்து வருகிறது.

யோகம், மூச்சுப் பயிற்சி ஆகியவை மனித உடல் நலத்திற்கு எவ்வாறு துணை புரிகின்றன என்பதை ஆய்வுக் கூட ஆராய்ச்சியின் வழியாக மெய்ப்பித்து இந்த யோகக் கலையை இந்நிறுவனம் கற்பித்து வந்தாலும், இது வெறும் உடல் பயிற்சியாக நடப்பதில்லை. இப்பயிற்சிகள் அனைத்தையும் வேதங்கள், உபநிசத்துகள், சங்கரரின் மாயாவாதம் ஆகியவற்றோடு இணைத்தே வழங்கு கிறார்கள். அதையே ஒழுக்கக் கல்வி என்பதாக, செங்கோட்டையனும் மெச்சிக் கொள்கிறார்.

தமிழிசைப் பண்கள் “இராகங்கள்” எனப் பெயர் மாற்றப்பட்டு, கர்நாடக சங்கீதம் என ஆரியமயமானதைப் போல், நுணுக்கமும் விரிவும் உயர்வும் உள்ள சிற்பக் கலையின் செயல்பாடு தமிழர்களின் தனித்தன்மை யானதாக எங்கும் பரவி இருந்தாலும், “சிற்ப சாத்திரம்” என்பது வடமொழியில் இருப்பதைப் போல, தமிழர் களின் சதிராட்டம் “பரத நாட்டியம்” என்ற பெயரால் ஆரியமயமானதைப் போல - பண்டைத் தமிழர்களின் ஓகம்தான் ஆரியத்தால் களவாடப்பட்டு “யோகம்” என்ற பெயரால் மீண்டும் வருகிறது. என்பதை அறிஞர்கள் பலரும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி, ஔவையார் என்று அடுத்தடுத்த சான்றோர்களால் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்கப்பட்ட ஓகக்கலையும், அதனூடான மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்ட உடலுக்கும் உள்ளத்திற்குமான பயிற்சிகள் அறிவியல் வழிப்பட்டவை.

“அண்டமே பிண்டம்” என்ற திருமூலரின் திருமந்திரம் கூறும் அறிவியல், நவீன அறிவியலாளர்களாலும் வியந்து பார்க்கக்கூடிய ஒன்றாகும். தமிழர்களின் ஐம்பூதக் கோட்பாடு, இயற்கையின் இயக்கத்திலும் உடலின் இயக்கத்திலும் கிட்டத்தட்ட ஒரே தன்மையில் செயல் படுவதை வேறு எந்த அறிவியலும் சொன்னதில்லை!

சூழலியல் சிக்கல்களும், அது சார்ந்த நோய்களும், பெருகி வரும் இக்காலத்தில் தமிழர்களின் பண்டை அறிவியல் உலக அறிஞர்களின் மீள் பார்வைக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஔவையாரின் “விநாயகர் அகவல்” குண்டலினி ஓகம் என்ற ஓகக்கலைக்கு விளக்க நூலாகவே கொள்ளப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார், ஓகம், மூச்சுப் பயிற்சி, உணவுப்பழக்கம் உள்ளிட்ட பல அறிவியல் நடவடிக்கைகளை பரந்துபட்ட மக்களிடம் பரப்பியிருக்கிறார்.

தமிழர்களின் மரபான ஓகக்கலை இயற்கையோடு இயைந்து வாழ்கிற மக்கள் அறிவியலையும், உயிர்மநேயம் என்ற அறவொழுக்கத்தையும் ஒன்றிணைத்துக் கூறுகிறது.

மனித சமத்துவத்தோடும் உயிர்ம நேயத்தோடும், அதற்கு அடிப்படையான தமிழ் மொழியோடும் அது வளர்த்த தமிழ் மரபோடும் வளர்ந்திருக்கிற தமிழர் ஓகக் கலையைத்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். இப்போது, “கைவல்ய தம்மா யோகா” நிறுவனத்தோடு தமிழ்நாடு அரசு செய்திருக்கிற ஒப்பந்தம், பள்ளிச் சிறார்களை ஆரியமயமாக்குவதற்கும், அரசு செலவில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் களங்களை உருவாக்கு வதற்கு மட்டுமே பயன்படும்.

ஏற்கெனவே, பெரியவர்களாலும் அரசியல் கட்சி களாலும் சாதி முகாம்களாக பிரிந்து வரும் பள்ளி மாணவர்களை சமத்துவ நோக்கில் திருப்புவதற்கு மாறாக, யோகா - ஒழுக்கக் கல்வி என்ற பெயரால் இப்போது கொண்டு வரும் ஆரியக்கல்வி நிரந்தரமாக சாதி முகாம்களாக பிரித்துவிடும். தமிழ் மரபு அறுந்த ஆரிய அடிமைகளாக நிலைப்படுத்தும்.

எனவே, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை “கைவல்ய தம்மா யோகா ஆய்வு” நிலையத்தோடு செய்து கொண்டிருக்கிற ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் யோகா - மூச்சப்பயிற்சி மற்றும் ஒழுக்கக் கல்விக்கு தமிழ் மரபு வல்லுநர்களையும், சான்றோர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, September 13, 2019

நடராசர் ஆலயத்தை தனியார் திருமண மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும்! கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


நடராசர் ஆலயத்தை தனியார் திருமண
மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக்
கைது செய்ய வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப்
பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

“கோயில் என்றால் தில்லை நடராசர் ஆலயம்தான்” என்று உலகம் முழுவதும் பரவி வாழும் சைவப் பெருமக்கள் போற்றும் சிதம்பரம் ஆலயத்தை, பொது தீட்சிதர்கள் மிகத் தவறாக வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தி தனியார் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று (12.03.2019) அளித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.


கோயிலை வழிபாட்டு இடமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது ஆன்மிக நெறி மட்டுமின்றி, ஆகம விதியும் இந்திய சட்ட முறைமையும் ஆகும்.


இவை அனைத்தையும் துச்சமாக மதித்து தில்லை நடராசர் ஆலய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆகம விதிகளுக்குப் புறம்பாக ஆயிரம்கால் மண்டபத்தில் ஆடம்பரத் திருமணம் நிகழ்த்த தனியாருக்கு காசுக்காக வழங்கியிருப்பது ஆன்மிக அன்பர்களுக்கும் சிவனடியார்களுக்கும் வரலாற்று உணர்வாளர் களுக்கும் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டதாக அமைகிறது.


பக்தர்கள் மற்றும் பொது மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி, மக்களிடையே அமைதிக் குலைவை ஏற்படுத்தியக் குற்றத்திற்காக சிதம்பரம் நடராசர் ஆலய பொது தீட்சிதர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


ஏற்கெனவே தில்லைக் கோயில் தீட்சிதர்கள் நடராசர் ஆலய வளாகத்திற்குள் சாராயம் குடிப்பது, சூதாட்டம் நடத்துவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் வணிக வளாகம் கட்ட தீட்சிதர்கள் முயன்றதை அண்மையில்தான் பக்தர்கள் தலையிட்டுத் தடுத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டிய பெரும் குற்றச் செயலில் தீட்சிதர்கள் இப்போது ஈடுபட்டு உள்ளார்கள்.


தொடர்ந்து தில்லை நடராசர் ஆலயம் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தால் அது அனைவருக்கும் பொதுவான ஆன்மிகத் தளமாக இல்லாமல் தனியார் மண்டபம் போல் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தீட்சிதர்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தீட்சிதர்களின் தனி உடைமை அக்கோயில் எனச் சொல்வதாகாது!


எனவே, வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆன்மிகர்களின் நெஞ்சில் நிறைந்த சிதம்பரம் நடராசர் ஆலயத்தை புனிதமான வழிபாட்டிடமாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உடனடியாக சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT