உடனடிச்செய்திகள்
Showing posts with label கி.வெங்கட்ராமன். Show all posts
Showing posts with label கி.வெங்கட்ராமன். Show all posts

Friday, July 31, 2020

இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் தோல்வியையே வெற்றியாய்க் கூறும் குழப்பவாதம்! - கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!


இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் தோல்வியையே
வெற்றியாய்க் கூறும் குழப்பவாதம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!


“யாருக்கு வெற்றி என்று சேர்த்தே சொல்லிடுங்க ஜட்ஜய்யா..” என்ற கேலி வாசகம், இப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, “வெற்றி.. வெற்றி” என்று பா.ச.க.வும் கூச்சல் போடுகிறது. வழக்குத் தொடுத்த தி.மு.க. - அ.தி.மு.க.வும் முழக்கமெழுப்பு கிறார்கள்.

உண்மையில், இது தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு வெற்றியா என்று ஆய்ந்தால், உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசும் கிட்டத்தட்ட ஒரே குரலில் இந்த வழக்கில் வாதங்களை முன்வைத்தனர்.

பா.ச.க.வின் இந்திய அரசும், இந்திய மருத்துவக் கழகமும் மாநில அரசுகள் இந்திய அரசுக்கு வழங்கும் (Surrended) மருத்துவப் படிப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே வழங்க முடியாது என்றுதான் வாதிட்டன.

ஆயினும், இவ்வழக்கில் முக்கியமான வாதங்களை முன்வைத்த தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் முன்வைத்த வாதங்களும் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞர் விஜய நாராயணன் வாதமும் தமிழ்நாடு வழங்கும் மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டிலுள்ள விழுக்காட்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இந்திய அரசு நடத்தும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கப்படுவது போல் தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களி லிருந்து இந்திய அரசுக்கு வழங்கப்படும் 50 விழுக்காட்டு இடங்களிலும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடே செயல்பட வேண்டும் என்றுதான் வாதங்களை முன்வைத்தனர்.

எல்லோருமே 1993ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் வழங்குகிற விழுக்காட்டு அளவை மட்டுமே வலியுறுத்தினார்கள். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 50 விழுக்காட்டு இடங்கள் வழங்க வேண்டுமென்று யாரும் வாதிட வில்லை!

பாட்டாளி மக்கள் கட்சியோ, இந்த 50 விழுக் காட்டையும் கேட்காமல், 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டையே வலியுறுத்தியது. இவர்களும் தமிழ் நாட்டுப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமே தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வாதிட வில்லை.

இந்த நிலையில், கடந்த 27.07.2020 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ் பிரதாப் சாகி மற்றும் செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு எந்த விழுக்காட்டு அளவையும் வலியுறுத்தாமல், வேறொரு முடிவைச் சொன்னது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்லூரியில் மாநிலங்கள் சார்பாக வழங்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க சாதாரண சட்டத் தடையோ, அரசமைப்புச் சட்டத் தடையோ இல்லை என உறுதிபடக் கூறியது. ஆனால், “நீட்” தேர்வை ஆதார மாகக் கொண்டே தனது தீர்ப்புரைக்கான விளக்கங்களை முன்வைத்தது.

இறுதியில், இந்திய அரசின் நலவாழ்வுத்துறை, இந்திய மருத்துவக் கழகம், தமிழ்நாடு அரசின் நலவாழ்வுத் துறை ஆகிய மூன்றிலிருந்தும் பேராளர்களைக் கொண்ட ஒரு ஆய்வுக்குழுவை அமர்த்தி, இந்திய அரசு மூன்று மாதங் களுக்குள் அதன் பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதன் அடிப்படையில், எத்தனை விழுக்காட்டு இடங்கள் மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்து, தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்று கூறியது.

“நீட்” தேர்வின் முடிவில் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதால், கல்வித்தரம் குறைந்தவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைந்து விடுவார்கள் என்ற வாதம் அடிபடுகிறது என்றும் கூறியது.

வாதிட்டவர்களும் சரி, நீதிமன்றத் தீர்ப்பும் சரி, எவ்வளவு விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர, அந்த விழுக்காட்டு இடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தான் வர வேண்டும் என்று கூறவே இல்லை!

தீர்ப்பில் “நீட்” தேர்வின் அடிப்படையை வலியுறுத்து வதன் விளைவாக, அனைத்திந்திய அளவில் தர வரிசை யில் வருகிறவர்கள் அவர்கள் விரும்புகிற மாநிலத்தில், விரும்புகிற கல்லூரியில் சேர்ந்து கொள்ள முடியும் என்றாகிறது. எவ்வளவு விழுக்காடு இடங்கள் வழங்க வேண்டுமென்று தனிச்சட்டம் இயற்றுமாறு கூறுவதால், 0%-க்கும், 50%-க்கும் இடையில் ஏதோவொரு விழுக் காட்டை முடிவு செய்வதற்கான வழி ஏற்படுத்தப் படுகிறது.

இந்த விழுக்காட்டினரும் தமிழ்நாட்டு மாணவர்களாக இருப்பார்கள் என்ற உறுதியில்லை! ஏனென்றால், அனைத்திந்திய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான “நீட்”டின் மூலம் அவர்கள் வருகிறார்கள். இந்திக் காரர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் “இதர பிற்படுத்தப்பட்டோர்” என்ற விழுக்காட்டு அளவுக்குள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஏற்பாட்டைத்தான் இத்தீர்ப்பு செய்கிறது.

இதைத்தான் தி.மு.க. - அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழ் நாட்டுக் கட்சிகள் “வெற்றி.. வெற்றி..” என்று கூறு கிறார்கள்.

இத்தீர்ப்பை மோடி அரசு செயல்படுத்துமா என்பது ஐயம். அப்படியே செயல்படுத்தினாலும், அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காட்டு இடங்களையும் வெல்லவில்லை. குறைவான விழுக்காடு கிடைத்தாலும் அது தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்குமா என்பதிலும் உறுதியில்லை. இந்திக்காரர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும்தான் கிடைப்பதற்கான அதிக வாய்ப்பிருக்கிறது!

ஒரு வழக்கில் தோல்வி அடைவது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால், அதைத் தோல்வி என்று மக்கள் உணர முடியாமல், அதையே “வெற்றி” என்று கூச்சலிடுவது, இறுதியில் இழந்ததை மீட்பதற்கு விழிப்புணர்வு பெறாதவர்களாக மக்களை மழுங்கடிக்கும் செயலாகும்!

பல சிக்கல்களில் வெளிப்பட்டதுபோல், இந்த இட ஒதுக்கீட்டுச் சிக்கலிலும் தேர்தல் கட்சிகளின் வரம்புகள் தெரிந்துவிட்டன. இனி, மக்கள்தான் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு உரிமையை மீட்கக் களம் அமைக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, May 1, 2016

உலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் உழைப்போர் ஆளட்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் மேநாள் வாழ்த்து!


உலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் 
உழைப்போர் ஆளட்டும்!

தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர்
தோழர் கி. வெங்கட்ராமன் மேநாள் வாழ்த்து! 


உலகம் முழுவதும் 130ஆவது மே நாளை கொண்டாடும் பாட்டாளிகளோடு இணைந்து தமிழ்நாட்டிலும் இம் மே நாளை எழுச்சியோடு கொண்டாடும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி சார்பில், புரட்சிகரமான மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்து தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னோடியாக தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள்தான் ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் தலைமையில் மே நாளை 1923ஆம் ஆண்டு கொண்டாடினார்கள். இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதல் ஒழுங்கமைக்கப்பட்டத் தொழிற்சங்கம், ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. முன்முயற்சியில், வாடியா தலைமையில், உருவான ‘மதராஸ் லேபர் யூனியன்’ ஆகும்.

வருங்காலத்திலும் இந்த முன்னோடிப் பாத்திரத்தை வகிப்போம் என தமிழ்நாட்டு உழைப்பாளர்கள் இந்நாளில் உறுதியேற்போம்.

இன்று உழைப்புச் சுரண்டலின் கொடிய வளர்ச்சி நிலையாக உலகமயப் பொருளியல் கோலோச்சுகிறது. இந்த உலகமயம் இயற்கை வளத்தையும், கண்மண் தெரியாமல் சூறையாடுகிறது. ஒட்டுமொத்த மக்களும் உலகமய சந்தைத் தேவைக்காக சுழலும் எந்திரங்களாகவும் சந்தைக்கு உற்பத்தியாகும் பொருள்களை நுகரும் வாடிக்கையாளர்களாகவும் மாற்றப்பட்டுவிட்டார்கள். மண்ணும் நீரும் காற்றும் கேள்விமுறையற்று உறிஞ்சப்பட்டு அவற்றுள் கண்மண் தெரியாமல் நச்சுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

உலகமயம் தன் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு ஏற்ப உலக நாட்டு அரசியலை, ஆட்சி முறையை மாற்றியமைத்துவிட்டது. எல்லா நாட்டு அரசுகளும் உலகமய வேட்டைக்கு ஏற்றாற்போல் தகவமைக்கப்பட்டுவிட்டன. இந்திய அரசும் இதில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் நிற்க முயல்கிறது.

தொழிலாளி வர்க்கம் இதுவரை ஈகங்கள் பல செய்து பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. மே நாள் வீரர்கள் எட்டு மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கும் அரசியல் உரிமை ஆகிய முதன்மை நோக்கங்களுக்காக போராடியதன் அடையாளமாகத்தான் மேநாளைப் படைத்தார்கள். 

இன்று தமிழகத்தில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் எட்டு மணி நேர வேலை என்பது இல்லை. பத்து மணி நேரம் – பன்னிரெண்டு மணி நேரம் என்ற வரம்பற்ற உழைப்புச் சுரண்டல் பொது விதியாகிவிட்டது.

 நிரந்தர வேலை வாய்ப்பு என்பது மறைந்து வருகிறது. எல்லா இடத்திலும் வேலை வாய்ப்பு இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், குறைகூலிக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் மறைமுக வேலையின்மையே தொடர்கிறது.

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்திய அரசு அடுத்தடுத்து சட்டங்களைப் பிறப்பித்து வருகிறது. தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் அடிப்படை சனநாயக உரிமையேகூட, கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை பெற்றிருந்த தொழிற்சங்க உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்கே தொழிலாளர்கள் கடும் போராட்டங்களை நடத்தியாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

தொழிலாளர்களும் ஒட்டுமொத்த மக்களும் யாரோ சிலத் தலைவர்களை அண்டிப் பிழைக்கும் அநாதைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள். தங்கள் கைகளை எதிர்பார்க்கும் பயனாளிக் கூட்டமாக உழைக்கும் மக்கள் இருக்க வேண்டும் என்பதையே அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான தொழிற்சங்கத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்களாக மக்கள் வைக்கப்பட்டிருப்பதைப் போலவே தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர்கள் பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் பங்கேற்பு சனநாயகத்தை மீட்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

உலகமயப் பொருளியலை செயல்படுத்தும் எந்திரமாக இந்திய அரசு விளங்குகிறது. உலகமயத்தை வீழத்துவது என்பது உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க அரசை ஏற்படுத்துவது என்ற பொருள் அல்ல. மாறாக, உலகமயத்திலிருந்து விடுபட்டு உள்ளூர் வளத்தைப் பாதுகாப்பது என்பதாகும்.

உலகமயச் சந்தையிலிருந்து விடுபட்டு, அந்தந்த தேசிய இன சந்தையை, தேசியப் பொருளியலை மீட்டெடுப்பது என்பதே உலகமயத்தை வீழ்த்தும் செயல் முறையாகும். இந்த வரலாற்றுக் கடமையில் தொழிலாளர்கள் முகாமையானப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
தாங்கள் பணிபுரியும் இடங்களில் நிலவும் கான்ட்ராக்ட்மயம், தற்காலிகமயம், வெளிப்பணி முறை (அவுட்சோர்சிங்) ஆகியவற்றை எதிர்த்தும், எந்திரத்தோடு எந்திரமாக பிழியப்படும் நிலையிலிருந்து மீளவும், தொழிலாளர்களின் சனநாயக உரிமையை மீட்கவும் சமரசமற்ற போராட்டத்தை விடாப்பிடியாக நடத்த வேண்டும். வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அழுத்தமானப் போராட்டங்களாக அவை அமைய வேண்டும்.

தொழிற்சங்க இயக்கங்கள் தங்களது அன்றாட சொந்த சிக்கல்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், மேற்சொன்ன தற்காப்புப் போராட்டங்களைக்கூட வெற்றிகரமாக நடத்த முடியாது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும், தொழில் உற்பத்தி முறையும் வெறும் தொழிற்சங்கப் போராட்டங்கள் மட்டும் முழு வெற்றியை ஈட்டித் தராது என்பதைத் தெளிவாக்குகிறது.

தொழிலாளர்கள் தங்களைச் சுற்றி வாழும் மக்கள் சிக்கல்களிலும் கவனம் செலுத்தி அந்தந்த மண்ணின் தேவைக்கேற்ற இலட்சியங்களை முன்னிறுத்தி போராடினால்தான் தங்களுக்குரிய நட்பு ஆற்றல்களையே பெருக்கிக் கொள்ள முடியும். அதுதான் தொழிற்சங்கப் போராட்டத்திற்கே அரணாக அமையும்.

இவ்வாறு மண் உரிமை மீட்பு, மக்கள் உரிமை மீட்புப் போராட்டங்களோடு இணைந்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மறு வார்ப்பு செய்யப்பட வேண்டும். 
பதவி அரசியலின் தொங்கு சதையாகவோ, தொழிற்சங்கக் கிழார்களின் அடிப்பொடி அமைப்பாகவோ, திசை தெரியாமல் வெற்றுக் கூச்சல் எழுப்பும் கூடாரமாகவோ இன்று இருக்கும் நிலையிலிருந்து தொழிற்சங்க இயக்கம் மீட்கப்படுவது முன் தேவையாகிறது.

இந்த முன் தேவையை உடனடியாக நிறைவு செய்து தொழிற்சங்க உரிமையையும் தொழிலாளர் உரிமையையும் பாதுகாத்துக் கொள்வதோடு வரலாறு விதித்திருக்கிற தனது கடமையை செயல்படுத்தும் படை வரிசையாக தொழிலாளி வர்க்கம் எழ வேண்டும்.

இதுதான் இந்த மே நாளில் உழைக்கும் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.

உலகமயம் வீழ...
ஒடுக்குண்ட தேசங்கள் மீள...
உழைப்பாளர்கள் உலகை ஆள...
விழிப்புற்ற எழுவோம்! 
வீறு கொண்டு வெல்வோம்!



Wednesday, April 20, 2016

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!



அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ்

உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க!



தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!



பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பது இன்னொரு தமிழினப் பகை நடவடிக்கையாகும்.


இராசீவ் காந்தி வழக்கில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு செய்த முடிவு, ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வை ஏற்றுக் கொண்ட நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு பாரதிய சனதாக் கட்சி, காங்கிரசுக் கட்சி, பிற அனைத்திந்தியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருக்கின்றனர். அதற்கு முன்னர், தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்து அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு ஒருமனதான தீர்மானமும் நிறைவேறியிருக்கிறது.

இவ்வாறு ஒட்டு மொத்தத் தமிழர்களும், தமிழ்நாடு அரசும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என செய்துள்ள ஞாயமான முடிவை இந்திய அரசு ஏற்க மறுத்திருப்பது, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435 வழங்கும் அதிகாரத்தை, தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் இனப்பகைச் செயலாகும்.

இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ஆயத்தில் நிலுவையில் இருப்பதால்தான், இவ்வாறான முடிவெடுத்திருப்பதாக இந்திய அரசு கூறுவது பொய்யான சாக்குப் போக்கே ஆகும். 19.04.2016 நாளிட்ட அதே கடிதத்தில், தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என அறிவித்திருப்பதே இந்திய அரசின் உண்மையான உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த 2015 திசம்பர் 2 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு உள்ள ஒரே மாற்று வழியை எடுத்துக் காட்டுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ், தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் வழியாக பேரறி ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். உறுப்பு 161 மாநில அரசுக்கு வழங்கும் மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, நீதிமன்றத் தலையீட்டுக்கு அப்பாற்பட்டது என இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

விதி 435-இன் கீழ், இந்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட பிறகு, தமிழ்நாடு அரசுக்கு இருக்கிற ஓரே வழி அரசமைப்புச் சட்ட உறுப்ப 161 தான்.

இது தேர்தல் நடத்தை விதிகளால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அதிகாரமும் அல்ல. எனவே, உறுப்பு 161-இன்படியான ஏழு தமிழர் விடுதலை முடிவுக்கு, தேர்தல் நடத்தை விதி குறுக்கே வருமோ என தமிழ்நாடு அரசு தயங்க வேண்டியதில்லை. ஏழு தமிழரையும் உடனே விடுதலை செய்யலாம்.

இச்சிக்கலில் ஏற்கெனவே ஒரே கருத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளும், இந்தக் எகோதரிக்கையை வலியுறுத்தி, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கோரிக்கைதான் இது என்று மீண்டும் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏழு தமிழர் விடுதலை என்பது தேர்தல் போட்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒட்டு மொத்தத் தமிழினத்தின் இன மானச் சிக்கலாகும்.

இதற்கிடையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்டகால சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒரே முடிவில் நின்று மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
  

Saturday, April 9, 2016

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா? ”தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை !





மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?”

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை !

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஏப்பிரல் 1-15 இதழில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரை :
“தேசியம் குறித்த விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்ஷா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 - 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.

“தேசியம் குறித்த விவாதத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இது உண்மையென்பதும் புலப்படும்.

அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான இந்துத்துவம் என்றும் நாம் கூறுவது உறுதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்பதும் புலப்படும். மதச்சார் பற்ற இந்தியம் என்பதோ, முற்போக்கான இந்தியம் என்பதோ, பன்மைக்கு இடமளிக்கும் இந்தியம் என்பதோ எதுவும் இல்லை என நாம் கூறி வருவதும் உறுதிப்படுகிறது.

இப்போது, இந்த விவாதம் கடந்த 2016 பிப்ரவரி 8ஆம் நாள், தில்லி - சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையிலிருந்து மேலெழுந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பரிவாரங்களை கருத்தியல் களத்திலும் போராட்டக் களத்திலும் எதிர்கொண்டு வருபவர்கள் முதன்மையாக சி.பி.ஐ., சி.பி.ஐ.எம்., சி.பி.ஐ.எம்.எல். ஆகிய இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வியாளர்களுமே ஆவர்.

இப்போராட்டக் களத்தில், பாரதிய சனதா குண்டர்களையும் ஆட்சி நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் உறுதியாக அவர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.

பா.ச.க. ஆட்சியின் பாசிச அடக்கு முறை சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தோடு மட்டும் நிற்கவில்லை. அகமதாபாத் பல்கலைக் கழகம், புனே பெர்கூசன் கல்லூரி, மீண்டும் அடுத்த சுற்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் வரலாறு காணாத காவல்துறைத் தாக்குதல் என தொடர்கிறது. இங்கெல்லாம் மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

“இந்திய இராணுவம் காசுமீரிலும் வடகிழக்கு தேசிய இன மாநிலங்களிலும் ஆக்கிரமிப்புப் படையாக செயல் படுகிறது’’ என ஓர் கருத்தரங்கில் பேசியதற்காக புகழ்பெற்ற பேராசிரியர் நிவேதித்தா மேனன் தாக்கப்பட்டார். 

அந்த அம்மையார் மின்னஞ்சலுக்கும் கைப்பேசிக்கும் திட்டமிட்ட முறையில் அன்றாடம் நூற்றுக்கணக்கான ஆபாச வசவுகள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் அனுப்பப்படுகின்றன. ஜீ தொலைக் காட்சி உள்ளிட்ட வடநாட்டு ஊடகங்கள் சில அவரை இந்திய எதிரியாக தொடர்ந்து சித்தரிக் கின்றன. அவர் மீது பொய் வழக்கும் போடப்பட்டுள்ளது.

அதேபோல், உலகப்புகழ் பெற்ற வரலாற்றியலாளர் முனைவர் சமன் லால் மார்ச்சு 23 அன்று பகத்சிங் நினைவு நாளில், தில்லி பல்கலைக் கழகத்தில் பா.ச.க. வெறியாட்டத் தைக் கண்டித்துப் பேசியதற்காகத் தாக்கப்பட்டார்.
இந்தக் கல்வியாளர்கள் இத் தாக்குதல்களைக் கண்டு அஞ்சாமல் தங்கள் கருத்துகளை உறுதியாகப் பேசி வருகிறார்கள்.

ஆயினும், இந்த இடதுசாரி மாணவர்களும் பேராசிரியர்களும் இக்கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவாவிற்கு எதிராக பன்மைகளை ஏற்கும் இந்தியத் தேசியம், மதச்சார்பற்ற இந்தியத் தேசியம், உலகமயத்திற்கு எதிரான முற்போக்கு இந்தியத் தேசியம் என பேசும் போது தான் தோல்வியை மீண்டும் மீண்டும் சந்திக்கிறார்கள்.

ஏனெனில், இந்துத்துவத்திற்கு எதிராக இந்தியத் தேசியத்தை முன்வைப்பது உண்மையில் வெறும் நிழல் சண்டைதான்! ஆனால், இந்த நிழல் சண்டையை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தொடர்கிற போது, “முதல் சுற்று வெற்றி எங்களுக்கு’’ என அருண் ஜெட்லிகள் கொக்கரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த விவாதத்தின் போக்கில் இவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு தங்கள் விசுவாசத்தை சத்தியம் செய்து உறுதி செய்கிறார்கள்.

இவற்றின் காரணமாக பா.ச.க.வின் இந்துத்துவத் தேசியத்திற்கு எதிரான, மக்கள் சார்பான மாற்றுகளை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. நடைமுறை யில், ஒரே கருத்தியல் முகாமுக்குள் நடக்கிற சண்டை யாக இது தொடர்கிறது.

உயராய்வு நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங் களிலும் தங்கள் ஆட்களை உயர் பதவியில் அமர்த் துவது காங்கிரசு ஆட்சியிலும் நடந்ததுதான். ஆயினும், தகுதியுள் ளவர்களில் தங்களது ஆட்களைக் கொண்டு காங்கிரசு ஆட்சி இந்த இடங்களை நிரப்பியது.

 இதனால், தங்கள் தகுதி காரணமாக இடது சாரி அறிஞர்கள் இந்த ஆய்வு நிறுவனங்களில் முகாமையான இடங்களில் செயல்பட முடிந்தது.
ஆனால், பா.ச.க. ஆட்சி இதே வேலையை செய்யும் போது, ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும், அது பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் பரிவார ஆட்களைக் கொண்டு உயராய்வு நிறுவனங்களை நிரப்புவது பா.ச.க. ஆட்சியின் பொதுப் போக்காக உள்ளது.

புனே, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் தலைவராக அமர்த்தப்பட்ட கஜேந்திர சவுகான், இந்திய வரலாற்றுக் கழகத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட சுதர்சன ராவ், தேசிய புத்தக ஆணையத் தின் தலைவராக அமர்த்தப்பட்ட பாலதேவ் சர்மா, திரைப்படத் தலைமைத் தணிக்கையாளராக அமர்த்தப் பட்ட பாலாஜி நிகலானி போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உரிய தகுதி பெற்றவர்கள் அல்லர். 
ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் என்பது மட்டுமே அவர்களின் தகுதி!
இதுபோன்ற சிற்சில இடங்களில் இந்த இடது சாரிகள் சரியான மாற்றுகளை முன்வைத்துப் போராடினாலும், கருத்தியல் தளத்தில் மாற்றுகளை முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

இவர்கள் விசுவாசம் காட்டும் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியத் தேசியம் என்பதாக ஒன்றை சொல்லாவிட்டாலும், இந்த இடதுசாரிகள் பா.ச.க.வை விடவும் இந்தியத் தேசியம் குறித்து உரத்துப் பேசுகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம்“இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது.

ஆனால், இதே காலப்பகுதியில்தான் முஸ்லிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான் கேட்டில் அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டன.
 தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’ தொடர்பான அதிகாரங்களும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.
ஆயினும், சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து மதச்சார்பற்ற இந்தியா என்பது பேசப்பட்ட ஒன்றாக வே தொடர்ந்தது. மதச்சார்பின்மை கருத்தியலின் இந்தியத் தலைமகனாக கருதப்பட்ட சவகர்லால் நேரு கூற்றுகளிலிருந்தே, இந்தியத்திற்கும் மதச்சார்பின் மைக்கும் தொடர்பேதும் இருக்க முடியாது என்பது தெளிவாகும்.

நேரு எழுதிய புகழ்பெற்ற நூலான “தி டிஸ்கவரி ஆப் இந்தியா’’வில், “ஆரிய நாகரிகமும், பிராம ணிய கட்டமைப்பும் இணைந்த இந்துயிசத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தியத் தேசியம்” என பல இடங்களில் குறிப்பிடு கிறார். அவர் ஆற்றிய பல்வேறு சொற்பொழிவுகளிலும் இதே செய்தியை வெவ்வேறு சொற்களில் குறிப்பிடுகிறார்.

“மதத்தோடு மெய்யியலும் வரலாற்றோடு மரபும் பழக்க வழக்கங்களும் சமூகக் கட்டமைப் பும் கலந்த கலவைதான் இந்திய வாழ்வின் மிகப்பெரும்பாலான கூறுகளில் நிறைந்து காணப்படு கிறது.
 பிராமணியம் அல்லது இந்துயிசம் என்று கூறப்படும் இந்தப் பொதுத்தன்மைதான் இந்தியத் தேசியத்தின் குறியீடாக இருக்கிறது. இதுதான் தேசிய மதமாகவும் விளங்குகிறது’’ என்பதே சவகர்லால் நேருவின் இந்தியா குறித்த வரையறுப்பு.
இதற்குள் நின்றுகொண்டு, சில சகிப்புத்தன்மைகளை அவர் கூறுகிறார். 
இதைத்தான் மதச்சார் பின்மை என்பதாக தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஆரிய பிராமணிய இந்துத் தன்மைதான் இந்தியத் தின் அடிப்படை! இதில், மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் எனக் கூறுவதற்கு என்ன இடமிருக்கிறது?
ஏனெனில், எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் மெய்யியல், வரலாறு, மரபு, இனத் தொடர்ச்சி ஆகியவை அடிப்படையாக தேவைப்படுகிறது.
 இந்தியத் துணைக் கண்டத்தில், இதில் எந்தவொரு கூறிலும் ஒற்றைத் தன்மை இல்லை. ஒத்தத்தன்மையும் இல்லை. எனவே, ஏதாவதொரு சமூகத்தின் மேற்கண்ட கூறுகளைக் கொண்டு ஓர் தேசியத்தை புனைய வேண்டிய அவசியத்தில் இதிலுள்ள ஆதிக்க சக்திகள் உள்ளன. அவ்வாறான ஆதிக்கப் புனைவே இந்தியத் தேசியமாகும்.

இன்னொன்று, எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் வரலாற்றுத் தாயகமும், தேசிய மொழியும் இன்றிய மையாதக் கூறாகும்.
நேருவும், காந்தியடிகளும் அடிக்கடி கூறியது போல், பிரித்தானிய இந்திய ஆட்சிப் பகுதியே இவர்களது புனைவுக்கான தாயகமாக வாய்த் தது. 
இயற்கையில் ஆட்சிப் பகுதியும் (Territory) தேசியத் தாயகமும் வரலாற்றில் பல நேரங்களில் வெவ்வேறாக அமைந்து விடுகின் றன.
 தேசியத் தாயகமே ஆட்சிப் பகுதியாக மாறும்போது, அங்கு ஓர் தேச அரசு மலர்கிறது. அது விடுதலையின் அடையாளம்!

ஆனால், வரலாற்றில் தற்செய லாக ஆயுத வலிமை காரணமாக அமைந்துவிட்ட ஓர் ஆட்சிப் பகுதியை தேசியத் தாயகமாக மாற்ற முயலும்போது,அது ஆதிக்கப் புனைவாக அமைகிறது. 
அதற்குள் பல்வேறு தேசியத் தாயகங்கள் சிறைப்படுகின்றன. இந்தியாவில் அதுதான் நிகழ்ந்தது.

காந்தி, நேரு, அம்பேத்கர், பொதுவுடைமைத் தலைவர்கள், இந்து மகா சபையினர் ஆகிய வெவ்வேறு உலகப் பார்வை கொண்ட இந்தியத் தலைவர்கள் மேற்கண்ட ஆட்சிப் பகுதி தேசியத்தில் (Territorial Nationalism) ஒரே கருத்துடையவர்களாக இருந் தார்கள்.

இதன் தவிர்க்க முடியாத தருக்க முடிவாக அவர்களுக்கு ஓர் ஒற்றை தேசிய மொழி தேவைப் பட்டது. அதற்கு, இந்தி மொழியைத் தேர்ந்தெடுத் தார்கள். அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழி எனக் குறிப்பிட்டாலும், இவர்களது புனைவான இந்தியத் தேசியத்தின் தேசிய மொழியாகவே அதை நடைமுறையில் மாற்றினார்கள். “சமற்கிருத மயமாக்கப்பட்ட இந்தி’’ என்பதிலும் பெரிய வேறுபாடு இவர்களிடையே இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்திய நேருவின் ஆட்சியில் மிகத் தீவிரமான போராட்டத் திற்குப் பிறகே மொழிவழி மாநிலங்கள் அமைய முடிந்தது. இச்சிக்கலில் தீவிர இந்தியவாதியாக அம்பேத்கர் விளங்கினார். மொழிவழி மாநிலத்தையே எதிர்த்தார்.

தனி நாடாக விளங்கிய காசுமீரின் மீது படை யெடுத்து பாகிஸ்தானோடு பங்கு போட்டுக் கொண்டதிலோ, நாகாலாந்து - மிசோரம் - மணிப்பூர் போன்ற தனித்தன்மையான தேசங்களின் மீது படை நடத்தி அவற்றை இந்தியாவின் மாநிலங்களாக மாற்றிக் கொண்டதிலோ, தனி அரசோடு விளங்கிய சிக்கிம்மை இந்தியாவின் ஆட்சிப் பகுதியாக மாற்றிக் கொண்டதிலோ வலதுசாரி -- இடதுசாரி, மதவாத -- மதச்சார்பற்ற, முற்போக்கு - பிற்போக்கு இந்தியத் தேசியத் தலைவர்களிடையே ஒரு வேறுபாடும் இல்லை.

அங்கங்கே நடக்கும் சில மிகை அத்துமீறல்களைக் கண்டித்து அவ்வப்போது சிலர் முனகுவார்கள் என்பதைத் தவிர இந்த இந்தியத்திற்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியாது.

இதனால்தான் “காசுமீரைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை’’ என்று கண்ணையா குமாரிலிருந்து சீத்தாராம் யெச்சூரி வரை எல்லோரும் ஒரே‘தேசபக்தி’ கூக்குரல் எழுப்புகிறார்கள். 
தமிழீழ இனப் படுகொலையில் எல்லாத் தரப்பு வட இந்தியத் தலைவர்களும், ஒத்த கருத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம்! ஏழு தமிழர் விடுதலையில் அனைத்திந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசுவதன் அடிப்படையும் இதுதான்!

காவிரிச் சிக்கலிலோ, முல்லைப் பெரியாறு சிக்கலிலோ அனைத்திந்தியத் தலைவர்கள் பலரின் அழுத்தமான மவுனத்திற்குப் பின்னணியும் இதுதான்!
இந்திய அரசியலும், இந்திய அரசமைப்பும் இவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இந்திய நீதிமன்றமும் பெரும்பாலான நேரங்களில் இது போன்ற வழக்குகளில் இவர்களுக்கு ஒத்த குரலில் பேசுகின்றது.

நேரு, அம்பேத்கர், இந்து மகா சபையினர், இடதுசாரிகள் அனைவருமே வலுவான இந்தியா, வல்லரசு இந்தியா என்ற முழக்கத்தில் ஒரே குரலில் பேசுகின்றனர். இதன்வழியாக அதிகாரக் குவிப்பதற்கு துணையாகவோ, மவுன சாட்சியாகவோ நிற்கின்றனர்.

இப்போது, மாட்டுக்கறி சிக்கலை முன்வைத்து தனி மனிதரின் உணவுப் பழக்கத்தையும் இந்துத்துவ வெறியர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஞாயமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், இதற்கான அடிப்படை “மதச்சார்பற்ற” இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 48, பசுவிற்கு தனித்தப் பாதுகாப்பு வழங்குகிறது.
“மாநிலங்கள் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் நவீனமான அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 
பசு, அதன் கன்றுகள் மற்றும் பிற பால் வழங்கும் விலங்குகள், பண்ணை உழைப்பு விலங்குகள் ஆகியவற்றை கொல்வதைத் தடை செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என அரசமைப்பின் உறுப்பு 48கூறுகிறது.
மேல் தோற்றத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து கவலைப்படுவதைப் போல இதன் வாசகங்கள் தோன்றினாலும், இப்பிரிவின் உண்மை நோக்கம் அதுவல்ல!

இச்சட்டப்பிரிவு குறித்து அரசியல் நிர்ணய அவையில் நடந்த விவாதமும் அதை அடியொற்றி இதுகுறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையும் இதற்கு சான்று கூறும்.
அரசியல் நிர்ணய அவையில் பிரிவு 48-ஐ, (அன்றைக்கு 38கி) முன்மொழிந்து பேசிய தாக்கூர் பர்காவா மற்றும் சேத் கோவிந்த தாஸ் ஆகியோர் முதலில் பசுப்பாலின் மேன்மையையும், வேளாண் உழைப்புக் கால்நடைகளின் தேவையையும் அவற்றின் பற்றாக்குறையையும் பட்டியலிட்டு பேசினர். இவ்விலங்குகளை எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என வலியுறுத்தினர்.

சையது முகம்மது சாய்துல்லா என்ற உறுப்பினரும் வேறு சிலரும், இதனை மாற்றுப் புள்ளி விவரங்களோடு எதிர் கொண்டனர். பால் மறுத்துப் போன விலங்குகளையோ உழைக்கத் தகுதியற்ற விலங்கு களையோ தொடர்ந்து பராமரிப்பது உழவர்களுக்குப் பெரும் சுமையாக அமையும்,அவ்விலங்குகளுக்கும் பெரும் துயரமாக இருக்கும் என மறுப்புரைத்தனர்.

இதில், திக்குமுக்காடிய மேற்சொன்ன இந்துத்துவ வாதிகள் தங்களது உண்மை நோக்கத்தை வேறு வழியின்றி வெளிப்படையாகக் கூறினர்.
“எங்கள் மத வழிபாட்டுச் சின்னம், எங்கள் கடவுள் கிருஷ்ணருக்கு விருப்பமான விலங்கு! எனவே பசுவை கொல்வதை நாங்கள் ஏற்க முடியாது. பசுவின் உயிர் வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்” என வாதிட்டனர்.

வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கரின் பெரு முயற்சிக்குப் பிறகு இப்பிரிவை அடிப்படை உரிமை என்ற பகுதிக்குப் பதிலாக ‘வழிகாட்டும் நெறி’பகுதியில் சேர்க்க ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு இன்று மாட்டுக்கறி உணவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் எழுப்பும் கூக்குரலுக்கு அன்றைக்கே அரசமைப்புச் சட்ட ஏற்பு ஒருவகையில் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிகாட்டும் நெறியை ஏற்றுக் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பசு மற்றும் வேளாண் கால்நடைகளை இறைச்சிக்காகக் கொல்வதை தடை செய்து, சட்டங்கள் இயற்றின. இது குறித்து வழக்குகள் குவிந்தன. இதன் தொடர்ச்சியாக 2005இல் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இச்சிக்கல் குறித்து விவாதித்துத் தீர்ப்பு வழங்கியது.

அன்றையத் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி தலைமையிலான அரசமைப்பு ஆயம் வழங்கியத் தீர்ப்பு, இச்சட்டப்பிரிவின் உண்மையான நோக்கத்தை எடுத்துக் கூறியது.

“பால் கறக்காது போனாலும், பசுவை மட்டும் கொல்லக்கூடாது ஏனெனில் பசு இந்துக்களின் தெய்வம். காளை உள்ளிட்ட பிறவும் தெய்வம்தான் எனினும் அவை அடுத்த நிலையிலானவை. அவை பயன் பாடற்றுப் போனால் கொல்வதற்குத் தடையில்லை. அதன் இறைச்சியை உண்ணவும் தடையில்லை” என தீர்ப்புரைத்தது.

அதன்பிறகு, எந்த மாட்டிறைச்சி தின்றாலும் அது பசு மாட்டிறைச்சி இல்லை என மெய்ப்பிக்கும் சிக்கல் உண்பவரது தரப்பில் மாற்றப்பட்டது. அண்மையில், மகாராட்டிர மாநில அரசு பிறப்பித்துள்ள சட்டம், பசு மாட்டிறைச்சி வைத்திருந்தார் என மெய்ப்பிக் கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை என கூறுகிறது. இந்த சட்டமும் சரி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில்கூட இவ்விலங்குகள் பயனற்றவை என சான்று பெற்ற பிறகே உணவுக்காக கொல்லப்பட முடியும்.
இவ்வாறு உணவு பழக்க வழக்கம் தொடர்பாகவும், இந்துத்துவக் கோட்பாடு மதச்சார்பற்றதாகச் சொல்லப்படும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

எனவே, இடதுசாரித் தோழர்கள் நம்பச் சொல்வது போல் மதச்சார்பற்ற இந்தியத் தேசியமோ, வேற்றுமையில் ஒற்றுமை வழங்கும் பன்மைத் தன்மையான இந்தியத் தேசியமோ, தேசிய இனங்களின் வாழ்வுரிமையை ஏற்கும் சனநாயகமான இந்தியத் தேசியமோ இல்லை என்பது தெளிவாகும்.
இந்தியத் தேசியத்தை எவ்வளவு முற்போக்கு எண்ணத்தோடு உரத்து முழங்கினாலும், முதல் சுற்றில் மட்டுமல்ல இறுதிச்சுற்றிலும் வெல்வது இந்துத்துவமாகவே இருக்கும்!

ஏனெனில் இந்தியத் தேசியத்தின் இன அடிப்படை ஆரிய இனவாதம், மெய்யியல் அடிப்படை பிராமணிய வர்ணாசிரம வாதம்; மத அடிப்படை வேதமதவாதம்; பொருளியல் அடிப்படை கட்டற்ற முதலாளியம் ஆகும்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT