உடனடிச்செய்திகள்
Showing posts with label தோழர் பெ. மணியரசன். Show all posts
Showing posts with label தோழர் பெ. மணியரசன். Show all posts

Saturday, December 29, 2018

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” தோழர் பெ. மணியரசன் கேள்வி!

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” நாகை தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
“கசா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், இன்று (29.12.2018) காலை முதல் மாலை வரை, நாகையில் தொடர் முழுக்கக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது, திரு. அன்புத் தென்னரசன் உள்ளிட்ட நா.த.க. பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம். செரீப், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் திரு. வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் திரு. ஆ.கி. ஜோசப் கென்னடி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், வேதாரண்யம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி..வி. இராசன், செயலாளர் திரு. தா. ஒளிச்சந்திரன், நடிகர் மன்சூர் அலிகான், மருது மக்கள் இயக்கத் தலைவர் தோழர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

தலைமையுரை ஆற்றிய ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம்:

“கசா புயல் துயர் துடைப்பில் உடனடியாக ஈடுபடாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அன்பிற்குரிய தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மிக எழுச்சியோடு - ஒரு மாநாடு போல் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், “கசா” புயல் ஏற்படுத்திய பேரழிவின் போது சரிவரி துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடாத இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியாவது அவர்கள் துயர் துடைப்புப் பணிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடக்கிறது.

புயல் வருவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, முன்கூட்டியே மின் இணைப்பைத் துண்டித்து சரியாகவே செயல்பட்டார்கள். ஆனால், அதன்பிறகு, நடந்த புயல் துயர் துடைப்புப் பணிகள் – செப்பனிடும் பணிகள் மிக மிக மோசமாக உள்ளன.

சில இடங்களில் இன்னும்கூட மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு, வீடுகளின் மீதுள்ள கூரைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு அரசு சார்பில் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? தனியாக சில நண்பர்கள் தன்னார்வ முயற்சியில் அதற்குரிய கருவிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஒரு தோப்பே வீழ்ந்து கிடக்கும்போது, அந்த நில உரிமையாளர் தனியாக அவற்றை அகற்றிட முடியுமா? இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்கிறது?

புயல் நடந்த போது, நான் வட அமெரிக்காவில் இருந்தேன். தொலைக்காட்சி வழியாக அதன் பாதிப்புகளைப் பார்த்தேன். நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு இடங்களில் துயர் துடைப்புப் பணிகளில் இறங்கியதைப் பார்த்தேன். நான் சார்ந்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் பல பகுதிகளில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்திய – தமிழ்நாடு அரசுகள் என்ன செய்தன?

எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் பெருமளவில் உதவிகளைச் செய்தார்கள். தமிழ்ச்சமூகம் இன்றைக்கு முன்பைவிட அதிகளவில் விழிப்புணர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது. எனவேதான், அரசை நம்பாமல் - அரசை சார்ந்திருக்காமல், தாங்களாகவே உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் களத்தில் இறங்கி அக்கறையுடன் பணி செய்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் நம்மைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாகள். வடஅமெரிக்காவில் நான் இருந்தபோது, அங்கிருந்த தமிழ் இளைஞர்கள், நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் துடிப்போடு செயல்பட்டு, துயர் துடைப்புப் பணிகளுக்காக நிதி சேகரித்து அனுப்பி வைத்தார்கள். நம் தமிழ்ச்சமூகம் சர்வதேசமயமாகி வருவதன் வெளிப்பாடு இது! நம் சமூகம் புதிய மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதன் அடையாளம் இது!

அயல் நாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்தந்த நாடுகளில் அந்தந்த இனத்தின் பெருமைகளை – சாதனைகளைப் பேசுவதைக் கேட்கிறார்கள். அவற்றையெல்லாம் பார்க்கும் நம் சொந்தங்களுக்கு, தமிழ் இனத்தில் பெருமைகளும், சாதனைகளும், சிறப்புகளும் நெஞ்சில் தைக்கிறது! எனவே, அதிக ஆர்வத்தோடு தமிழ்நாட்டை உற்று நோக்குகிறார்கள்.

பழைய காலம் போல் இன்றைக்கு பெயர் பெற்ற தலைவர்கள் - பூதந்தாங்கி பட்டங்களைச் சுமந்த அரசியல் தலைவர்கள் சொன்னால்தான் - வழிகாட்டினால்தான் நடக்கும் என்ற நிலைமை இப்போது இல்லை! ஏதோ தேர்தலின்போது, அவர்களுக்கு வாக்குப் போடுவதோடு இருக்கிறார்கள். அந்த நிலையிலும் மாற்றம் வரும்; வர வேண்டும்!

துயர் துடைப்புப் பணிகளில் உதவியதோடு மட்டுமல்ல, தன்னெழுச்சி நம் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. இதோ, இப்போது வேளாண் விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து, கொங்கு மண்டலத்தில் உழவர் பெருமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டுவழிச் சாலைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் பெற்ற அரசியல் கட்சிகளுக்குக் காத்திராமல், தாங்களே களம் காணும் புதிய அத்தியாயத்தை தமிழ் மக்கள் திறந்துவிட்டுள்ளார்கள்!

இந்த நிலையிலும்கூட ஆடாமல் அசையாமல் சரியாகப் பணி செய்யாமல் இருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு!

நரேந்திர மோடி அரசு, தமிழ் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு அறிக்கைக் கூட விடவில்லை! ஏன்? தமிழர்கள் மீது – தமிழ் மக்கள் மீது அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி - பாகுபாட்டு உணர்ச்சி இருக்கிறது. அதுதான், அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுகிறது!

இந்த புயல் துயரத்தை நரேந்திர மோடி ஏன் வந்து நேரில் பார்க்கவில்லை? நமக்கும் சேர்த்துதான் அவர் தலைமை அமைச்சராக இருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மோடியின் அடிமனம் தமிழர்களை அவர்களில் ஒருவராக ஏற்கவில்லை. எனவே, அலட்சியப்படுத்துகிறார்கள்!

நரேந்திர மோடியிடம் புயல் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 15,000 கோடி ரூபாய் கேட்டார். ஆனால், இப்போது வரை வெறும் 353 கோடி ரூபாயைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நடுவண் வேளாண் அமைச்சகம் 173 கோடி ஒதுக்கியுள்ளது. “ஏன் எங்களை வஞ்சிக்கிறீர்கள்? ஏன் எங்களுக்கு நிதி வழங்க மறுக்கிறீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஏன் கேட்கவில்லை?

மோடியைக் கேட்டால், அவரது முகம் உரிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார் எடப்பாடி! எட்டுக் கோடி மக்களுக்கு முதல்வராக நீடிக்க உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் முதலமைச்சர் மோடியை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நிதி பெற்றாரே.. அவரை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அழைத்து வந்தாரே.. எடப்பாடி அவர்கள், இதுபோல் முயற்சி எடுத்தாரா?

இப்போது, “கசா” புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சாதாரணமானது அல்ல! நாங்கள் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்றபோது, அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டோம். 1957க்குப் பிறகு, இப்போது ஏற்பட்டுள்ள புயல்தான் மிக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். இதைவிடப் பெரிய அழிவு வேறென்ன வேண்டும்? இது பேரிடர் அல்ல பேரழிவு என்கிறோம்!

இந்த புயல் பாதிப்பை, ஏன் “தேசியப் பேரிடராக” இந்திய அரசு அறிவிக்கவில்லை? உங்கள் இந்தியத்தேசியத்தில் தமிழ்நாடு வராதா?

நரேந்திர மோடியை இப்படி வஞ்சிக்கிறார். இன்னொருபுறத்தில், அடுத்த தலைமையமைச்சர் என காங்கிரசுத் தலைவர் இராகுலை அழைக்கின்றார்களே! அவர் தமிழ்நாட்டிற்கு வந்து புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டாரா? அகில இந்திய காங்கிரசுத் தலைவர்கள் யாராவது வந்தார்களா? ஏன் வரவில்லை?

இந்த இலட்சணத்தில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தி அம்மையாரை “இந்தியாவின் திருமகளே வருக! நல்லாட்சி தருக!” என்றாரே, அதைப்போல் இப்போது “இராகுலே வருக! நல்லாட்சித் தருக!” என அழைக்கின்றார். தமிழ்நாட்டுக்குக் காங்கிரசும், அதன் தலைவர்களும் என்ன செய்தார்கள்? இவர்கள்தான் மாற்று என்பது ஏமாற்றில்லையா?

தி.மு.க. வேண்டுமானால் கசா புயல் பாதிப்புக்காக சில உதவிகளை – நிதியை அளித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் 15,000 கோடி ரூபாய் கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்தாரே! அந்தத் தொகையைத் தாருங்கள் என்று இந்திய அரசுக்கு – நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் என்ன அழுத்தம் கொடுத்தார்? என்ன போராட்டம் நடத்தினார்? என்ன குரல் கொடுத்தார்?

எனவே, நீங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றீர்கள்! செல்லா நாணயத்தின் இருபக்கங்களாக தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் இருக்கின்றன! நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு, தில்லியை தப்பிக்க விடுகின்றீர்கள்!

காங்கிரசும் பா.ச.க.வும் ஒன்றே! காங்கிரசுக்கு இன்னொரு பெயர்தான் - பா.ச.க.! இந்தியத்தேசியத்தின் இன்னொரு பெயர்தான் இந்துத்துவம்! அதுபோல், தில்லியின் கங்காணிதான் திராவிடம்!

இம்மூவரும் நம்மை – தமிழ் மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். எனவேதான், நாம் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது. நாங்கள் தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம்!

எனக்கு முன்னால் பேசிய அன்புத்தோழர் சீமான், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, சிலரது வீடுகளில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருப்பதை அவர்களது தோழர்கள் சுட்டிக்காட்டியதைச் சென்னார். “அதனால் என்ன தம்பி? அவர்களும் நம் தமிழர்கள்தானே!” என்றார். இவ்வாறு நாம் தமிழர்களைக் கட்சி கடந்து நேசிக்கிறோம் அல்லவா? இதுதான் இங்கு தேவை!

இவ்வளவு பெரிய பேரிடர் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏன் இந்திய அரசு உடனடியாக மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்கவில்லை? இராணுவம் வந்திருந்தால், ஒரு வாரத்தில் மின் கம்பங்களை மீட்டு, மின் விநியோகத்தை சீரமைத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இன்னும்கூட, பல பகுதிகளில் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லை! வயல் காடுகளில் பயிர்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும் இராணுவ மண்டலமாக்கி, தொழிற்சாலைகளை ஆங்காங்கு வைத்து, தமிழர்களைக் கண்காணிப்பில் வைக்கத் திட்டமிடுகின்ற இந்திய அரசு, மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்க சிந்திக்கவில்லையே ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை? மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தைக் கேட்டு கோரிக்கை வைத்தால், தன் வீட்டிற்கு ரெய்டு வரும், வழக்கு வரும், சிறைக்குச் செல்லவும் நேரிடலாம் என்று எடப்பாடியார் அச்சப்படுகிறாரா?

இவ்வளவு நடந்தபிறகும், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் துயர் துடைப்புத் தொகையும் முழுமையானதாக இல்லை. நெற்பயிர் சேதத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். எட்டுவழிச் சாலையைக் கொண்டு வரும்போது, ஒரு தென்னை மரத்திற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலை பேசினீர்களே! இப்போது, வெறும் 1,100 ரூபாயைக் கொடுத்தால் என்ன ஞாயம்? தென்னையை வெட்டி எடுக்கவே 1000 ரூபாய் வரைத் தேவைப்படுகிறது. எனவே, ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, கடன் தள்ளுபடியின் போது தமிழ்நாடு அரசு ஐந்து ஏக்கர் வரம்பு விதித்தது. அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் நீக்கியபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, ஐந்து ஏக்கர் வரம்பை உறுதிப்படுத்தியது தமிழ்நாடு அரசு! அவ்வாறெல்லாம் இல்லாமல், இப்போது அனைவருக்கும் வரம்பின்றி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெரிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதற்கேற்ப பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டு பெருமுதலாளிகளுக்கும் வாராக் கடன் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கின்றீர்களே, ஏன் உழவர்களுக்கு இந்த துயரமான நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது?

உழவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி என்பது சலுகையோ, பிச்சையோ அல்ல! தங்களது நெல்லுக்கும், பருத்திக்கும், சர்க்கரைக்கும் வழங்கப்பட வேண்டிய உண்மையான விலையைக் குறைத்து, அவர்களது அடிவயிற்றில் அடித்து குறைந்த விலைக்கு வாங்குகிறீர்களே! அதனுடன் கொடுக்கப்படாத விலையின் ஒருபகுதியைத்தான் (Deffered Price) அவர்கள் கடன் தள்ளுபடியாகக் கேட்கிறார்கள். எனவே, உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

உழவுத் தொழிலாளின் வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு இப்போது உழவு வேலையும் இல்லை. எனவே, அவர்களது குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது இழப்புத் தொகை அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் என்ன துயர் துடைப்புப் பணி இருக்கிறது? எனவே, தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்! இந்திய அரசிடம் அதற்குரிய நிதியைக் கேட்க வேண்டும்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர்கள் க. விடுதலைச்சுடர், தை. செயபால், பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோர் பி. தென்னவன், மகளிர் ஆயம் தோழர் செம்மலர், தஞ்சை மாவட்டச் செயற்குழு” தோழர்கள் இரெ. கருணாநிதி, க. காமராசு, இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். திரளான தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, August 7, 2018

பன்முக ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர் கலைஞர்! தோழர் பெ. மணியரசன் இரங்கல் செய்தி!

பன்முக ஆற்றல் கொண்ட அரசியல் தலைவர் கலைஞர்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் செய்தி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று (07.08.2018) மாலை 6.10 மணிக்கு, சென்னை காவேரி மருத்துவமனையில் காலமான செய்தி துயரமிக்கது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், கலைஞர் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர். அரசியல் வழியில் அவர் மீது விமர்சனம் கொண்டுள்ளவர்கள் கூட, அவரது தமிழ் ஆற்றலில் ஈர்ப்புக் கொண்டிருப்பர். அவ்வாறு அவருக்குத் தமிழ் வேர் உண்டு!

தமிழில் பன்முக ஆற்றல் கொண்டவர் அவர்! திரைக்கதை - வசனம், சிறுகதை, புதினம், கவிதை, திரைப்பாடல்கள், நாடகம், தொலைக்காட்சித் தொடர், சங்க இலக்கியம் சார்ந்த படைப்புகள், திருவள்ளுவப் பெருந்தகை மீது பற்றும் திருக்குறள் ஆற்றலும் என பன்முக ஆற்றல் கொண்டவர் கலைஞர்! இவற்றில் காலத்திற்கேற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டவர்.

அரசியல் போராட்டங்கள், கூட்டுப் போராட்டங்கள், உட்கட்சி சிக்கல்கள் என கடுமையான அன்றாடப் பணிகளுக்கிடையே மேற்கண்ட கலை இலக்கியச் சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். அரசியலில் அவரின் நினைவாற்றல் வியக்கத்தக்கது!

வர்ணசாதி ஆதிக்கங்கள் நிறைந்திருந்த தமிழ்நாட்டு அரசியலில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் வந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் மக்களின் செல்வாக்கு பெற்ற பெரும் தலைவராக நிலைத்தது பெரும் சாதனையாகும்!

அவருடைய இந்த சாதனைக்கு அவருடைய உழைப்பே மூலதனம்! இளம் தலைமுறையினர் அவரிடமிருந்து உழைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வப்போது அவர் எழுப்பி வந்த சமூக நீதிக் குரல் என்றும் நினைவில் நிற்கும்!

கலைஞரை இழந்து துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது; அவருடைய மறைவுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Sunday, July 17, 2016

பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது தடுப்பணையல்ல – நீர்த்தேக்கம்! தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்!” வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ. மணியரசன் பேச்சு!




பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது
தடுப்பணையல்ல – நீர்த்தேக்கம்!
தமிழ்நாடு அரசு உடனடியாக 
உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்!”

வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் பேச்சு!


“பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது தடுப்பணையல்ல – அது ஒரு நீர்த்தேக்கம்! எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்” என்று, வாணியம்பாடியில் பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.

வேலூர், காஞ்சி, சென்னை மாவட்டங்களின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் வேட்டு வைக்கும் ஆந்திராவின் சட்ட விரோதத் பாலாற்றுப் புல்லூர் தடுப்பணையை அகற்று, தமிழர்களின் கனக நாச்சியம்மன் திருக்கோவிலை ஆந்திரா ஆக்கிரமிக்க அனுமதிக்காதே ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, வாணியம்பாடியில் “பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.07.2016) காலை எழுச்சியோடு நடைபெற்றது.

வாணியம்பாடி கனரா வங்கி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் திரு. மு. சுரேசு தலைமை தாங்கினார். தெக்குப்பட்டு திரு. ம. பாபு, வடக்குப்பட்டு திரு. ப. பிரபு, புல்லூர் திரு. க. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு. செம்பரிதி, கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுச்சியுரையாற்றினார். அவர் பேசியதாவது:

"வெள்ளைக்காரனுக்கு நாம் அடிமையாக இருந்தபோதுகூட, தமிழ்நாட்டிற்கு ஆற்று நீர் உரிமைகள் இருந்தன. ஆனால், தில்லிக் கொள்ளையர்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் சென்றபிறகு, நம் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டுள்ளது.

1892ஆம் ஆண்டு மைசூர் – சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றனர். தமிழன் அழியட்டும் எனக் கருதுகின்ற இந்திய அரசு, இதை கண்டு கொள்வதே இல்லை

நேற்று (14.07.2016) ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணையைப் பார்வையிட நாங்கள் குழுவாகச் சென்றோம். அங்கு சென்ற பிறகே, அது வெறும் தடுப்பணை அல்ல, அதுவோரு நீர்த்தேக்கம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

எல்லோரும் அந்த தடுப்பணை 5 அடியிலிருந்து 12 அடி வரை உயர்த்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! அங்கு, மிகப் பலமாக அஸ்திவாரம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கத்தையே உருவாக்கியுள்ளனர்.

ஆந்திரப் பொதுப்பணித்துறையினர் அவ்வாறு செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

இப்போதுகூட, துப்பாக்கி ஏந்திய ஆந்திரக் காவல்துறையினர் – அதிரடிப்படையினர் நமது கனகநாச்சியம்மன் கோவிலில் இருந்த தமிழரான அர்ச்சகரை விரட்டிவிட்டு, அங்கு கடும் பாதுகாப்பைப் போட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு காவல்துறையினர் இதுவரை அங்கு வரவில்லை.

வெறும் கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் செயலலிதா கருதுகின்றார். அந்தக் கடிதம் எழுதுதல் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே!

எனவே, உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று இந்தியத் தலைமை அமைச்சரிடம் சந்தித்து, இந்த அணை சட்ட விரோதமான அணை என்று உண்மைகளைக் கூறி முறையிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். நம் பொதுப்பணித்துறையினரையும் தமிழ்நாடு காவல்துறையினரையும் இங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும். கனகநாச்சியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினரை இருக்கும்படிச் செய்ய உத்தரவு பெற வேண்டும்”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு. ஜமுனா தியாகராஜன், பாலாறு பாதுகாப்பு இயக்கம் திரு. ஆ.த. ஜமீன் சவுந்தர்ராஜன், மக்கள் சட்ட உரிமைகள் கழகச் செயலாளர் திரு. திருநாவுக்கரசு, தமிழ்த் தேச மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன், எக்லாஸ்புரம் ஊராட்சித் தலைவர் திரு. தேவ. சோழன், சமூக ஆர்வலர் திரு. அகஸ்டின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புல்லூர் திரு. அ. ஆஞ்சி நன்றி கூறினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் தருமபுரி விசயன், தோழர் பழ.நல். ஆறுமுகம், ஒசூர் செயலாளர் தோழர் முருகேசன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், காஞ்சிபுரம் பொறுப்பாளர் தோழர் சி. நடராசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
நிறைவில், காஞ்சிபுரம் தோழர் உலக ஒளி பாடல் ஒன்றைப் பாடி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, 14.07.2016 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், புல்லூரில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையை நேரில் சென்று பார்வையிட்டார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT