உடனடிச்செய்திகள்

Thursday, January 31, 2019

ஏழு தமிழர் விடுதலை - அற்புதம்மாளின் நடைபயணத்தில் இணைவோம்!

ஏழு தமிழர் விடுதலை - அற்புதம்மாளின் நடைபயணத்தில் இணைவோம்!
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி அற்புதம்மாள் முன்னெடுக்கும் பரப்புரைப் பயணம் வெல்லட்டும்!

#ஏழுதமிழர்விடுதலை

#28YearsEnoughGovernorதலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, January 28, 2019

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!
கடந்த 2008 - 2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டரசுகள் நடத்திய இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரி, சனவரி 29 – 2009 அன்று காலை, சென்னை நுங்கம்பாக்கம் இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முன்பு தன்னையே எரித்துத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி, தமிழீழ விடுதலைக்காக உயிர் ஈந்த ஈகியருக்கு ஆண்டுதோறும் சனவரி 29 அன்று வீரவணக்கம் செலுத்தப்படுகின்றது. ஈகியரின் பத்தாம் ஆண்டு (2009 – 2019) வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் இவ்வாண்டு எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்பியுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலைக்கு, நாளை (29.01.2019) காலை 10.30 மணிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மலர் மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். ஈகி முத்துக்குமார் சிலை அமைக்க தனது நிலத்தைக் கொடையாக வழங்கிய புலவர் இரத்தினவேலவர் அவர்களது ஏற்பாட்டில், நாளை பிற்பகல் முத்துக்குமார் சிலைக்கு வீரவணக்கம் செலுத்த வருவோர்க்கு, அங்கு மதிய உணவு அளிக்கப்படுகின்றது.

சென்னை

சென்னையில், தழல் ஈகி முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்தே அதே இடத்தில் “வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு” சார்பில், முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுத் தூண் எழுப்பப்பட்டு வருகின்றது. அத்தூணுக்கு பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்துகின்றனர். நாளை காலை 10 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள் அங்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

முருகன்குடி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் - முருகன்குடியில் மாலை 5 மணிக்கு, பேருந்து நிலையம் அருகில் தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியரின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.

அரியலூர் 

அரியலூர் மாவட்டம், மேலமைக்கேல்பட்டி மாரியம்மன் கோவில் அருகில், காலை 8 மணிக்கு, தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியரின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்நிகழ்வுகளில் தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Sunday, January 27, 2019

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 2019 சனவரி 22 முதல் வேலை நிறுத்தம் – மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுத்துறைத் தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்துத் பிரிவுத் தொழிலாளர்களும் 2004 முதல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் செயல்படுத்தி வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்கள்.

தமிழ்நாடு அரசு 20 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அக்கம்பக்கத்து பள்ளிகளில் சேர்த்துவிடுவது என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனை ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் எதிர்த்து வருகிறார்கள்.

இப்போது நடைபெற்று வரும் அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் ஒன்பது கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கைகள் இவை இரண்டும் ஆகும்!

தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் டி. செயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, பழைய பென்சன் திட்டத்திற்கு செல்ல முடியாது என்று அறிவித்திருக்கிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டமென்பது, உலக வங்கியின் ஆலோசனைப்படி அமர்த்தப்பட்ட பட்டாச்சார்யா குழுவின் பரிந்துரைப்படி அறிவிக்கப்பட்ட திட்டமாகும். ஊழியர்களின் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் 2004-இல் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றிலும் விலகிக் கொள்ளும் அறிவிப்பாக அமைந்தது.

ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் ஊதியத்திலிருந்து 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு நிகரான அளவு அரசும் பங்களிப்பு வழங்கி, ஓய்வூதிய நிதி உருவாக்கப்படும் என்றும், இந்த ஓய்வூதிய நிதி தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பங்குச்சந்தையில் சுழலவிடப்படும் என்று இப்புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுகிறது.

உலக வங்கியின் அறிவுரைப்படி இதே போன்ற ஓய்வூதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் உழைப்பாளர்களின் ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்தில் காணாமல் போய், தனியார் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் கைவிரித்த நிலையை உலகின் பல நாடுகள் கண்டன.

தமிழ்நாட்டில் செயல்படும் இத்திட்டத்தின்படி ஜப்பான், குவைத் போன்ற நாடுகளைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைக் கையாளுகின்றன. இந்நிறுவனங்கள் நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம், குறைந்தபட்ச இலாபம் என்ற பெயரால் ஒவ்வொரு ஊழியரின் ஓய்வூதிய நிதியிலிருந்து 50 விழுக்காடு வரையிலும் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இதற்கு மேலுமுள்ள ஓய்வூதிய நிதி பங்குச்சந்தையில் விடப்பட்டு அதில் இழப்பு ஏற்பட்டால், அதை முழுவதும் ஓய்வூதியதாரர்களே சுமக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் என்பது, உழைப்பாளர்களின் உழைப்புத் திறன் தேய்மானத்திற்காக (Labour power Depreciation) வழங்கப்படும் நிதியாகும். இது அவர்கள் ஊதியத்தின் ஒருபகுதிதான்! இந்தக் கோட்பாட்டைக் கைவிடுவதுதான் புதிய ஓய்வூதியத் திட்டம்!

அநீதியான இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று போராடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோருவது முற்றிலும் ஞாயமானது!

அடுத்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை அமர்த்தி, அவற்றை வலுப்படுத்த வேண்டிய அரசு அப்பொறுப்பிலிருந்து விலகுவதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைகிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மாறாக, அதன் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் சீர்குலைப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது. இதுபோதாதென்று, இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்படும் ஆங்கில வழி எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. வகுப்புகளுக்குப் புதிதாக ஆசிரியர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே அவை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தானே சீர்குலைத்துவிட்டு அதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூட முயல்வது தமிழ்நாடு அரசின் அப்பட்டமான கல்வி மறுப்பு நடவடிக்கையாகும். போராடும் ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை முற்றிலும் ஞாயமானது!

இதற்கு முன்னர் பல போராட்டங்ள் நடத்தியும், தமிழ்நாடு அரசு செவி சாய்க்காத நிலையில்தான் இப்போதைய போராட்டம் நடக்கிறது.

போராடும் ஆசிரியர் – அரசு ஊழியர்கள் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்துப் பேசித் தீர்க்கும் வழிமுறை காண்பதற்கு மாறாக, அவ்வமைப்புகளின் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், பணியிடை நீக்கம் செய்வதும் கொடும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதும் சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

தமிழ்நாடு அரசு, தனது அடக்குமுறைகளையும் பேச்சு வார்த்தை மறுப்புப் போக்கையும் கைவிட்டு, போராடும் கூட்டமைப்புகளுடன் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, January 25, 2019

தமிழகமெங்கும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழகமெங்கும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள்!
1938இலும் - 1965இலும் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது. அந்நாளை, மொழி – இனம் காக்க சூளுரைக்கும் நாளாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறது.

திருச்சி
திருச்சி மாவட்டம், தென்னூர் – உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகியர்கள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை ஏற்க முனைவர் கு. திருமாறன், “தென்மொழி” ஈகவரசன், ஆசிரியர் சவரிமுத்து, இதழாளர் தி.மா. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவரம்பூர் த.தே.பே. கிளைச்செயலாளர் தோழர் இலட்சுமணன், விராலிமலை செயலாளர் தோழர் வே.பூ. இராமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கரூர் புறவழிச்சாலையில் கம்பரசம்பேட்டை அருகே காவிரி கரையில் அமைந்துள்ள கீழப்பழுவூர் சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐயா பெ. மணியரசன், நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு, காங்கிரசின் இந்தித் திணிப்பு கொள்கையை தீவிரமாக நடைமுறைபடுத்தி வருவதையும், அவர்களை எதிர் கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் அரசியல் இல்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு நடுவண் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் பெருத்து விட்டதாகவும், தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தங்களை இழிவுபடுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை 
சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள மொழிப் போர் ஈகிகள் தாளமுத்து, நடராசன், தருமாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், வீரவணக்கம் செலுத்தும் வகையில், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து, மூலக்கொத்தளம் இடுகாடு வரை “தமிழுரிமைக் கூட்டமைப்பு” சார்பில் வீரவணக்கப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, கூட்டமைப்பின் தலைவர் புலவர் இரத்தினவேலவன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் காஞ்சி அமுதன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், இயக்குநர் வ. கௌதமன், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், ம.பெ.பொ.க. தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், பாவலர் முழுநிலவன், வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் மு. வடிவேலன், ஆவடி செழியன், பிரசாந்த், மு. பொன்மணிகண்டன், செந்தாமரை, வ. பிரபாகரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை

தஞ்சையில் மொழிப்போர் நாளையொட்டி, சனவரி 25 அன்று மாலை கீழவாசலில் நடைபெற்ற வீரவணக்க சிறப்புக் கூட்டத்திற்கு பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்களை எழுப்பினார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், மகளிர் ஆயம் தோழர் செம்மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை செல்லூர் தாகூர் நகரில் தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமையில், சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்தார். த.தே.பே. கிளைச்செயலாளர் தோழர் விடியல் சிவா, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், வீரத்தமிழர் முன்னணி கிழக்குத் தொகுதி இணைச் செயலாளர் வழக்கறிஞர் பாண்டியராசன், தோழர் இளவேனில் ஆகியோர் கலந்து கொண்டனர். த.தே.பே. மூத்த தோழர் கருப்பையா, தோழர்கள் கரிகாலன், புருசோத்தமன், தி. கருப்பையா, தியாகலிங்கம், அழகர்சாமி, தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம்
சிதம்பரத்தில், அண்ணாமலை நகரில் உள்ள மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மாலை அணிவித்தார். த.தே.பே. சிதம்பரம் செயலாளர் தோழர் எல்லாளன், த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தோழர்கள் பா. பிரபாகரன், வேந்தன் சுரேசு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர் அஜித்குமார் தமிழரின் வீரக்கலையான சுருள் சுழற்றலை நிகழ்த்திக் காட்டினார்.

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) முதன்மைச் சாலையில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ. கருணாநிதி, தோழர்கள் ஆ. தேவதாசு, மாணிக்கம், இளையராஜா, பாபுசா (எ) சண்முகம், இராமு, ச. செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரியில், இந்திய அரசுத் தொலைத்தொடர்பு அலுவலகம் அருகில் நடைபெற்ற மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் சத்தியநாதன், தோழர்கள் ஜெ. முருகேசன், முனி. ஆறுமுகம், திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முருகன்குடி

கடலூர் மாவட்டம் - திட்டக்குடி வட்டம் - முருகன்குடியில் பேருந்து நிலையம் அருகில் தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு தலைமையில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் அரா. கனகசபை, த.மா.மு. தோழர் மணிமாறன், மகளிர் ஆயம் தோழர்கள் வித்தியா, இந்துமதி, கனிமொழி, நாம் தமிழர் கட்சி திரு. கார்த்திகேயன், செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் தோழர் கண்ணதாசன், செல்வமணி, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, January 19, 2019

சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன்.


சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
முன்னேறிய வகுப்பில் பிறந்து, பொருளியல் வகையில் பின்தங்கியுள்ளோருக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நரேந்திர மோடி அரசு அவசர அவசரமாக இராகுல் காங்கிரசின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கும் நுட்பமான சதிவேலையே இந்தச் சட்டம்!


தற்போது, முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப, அவர்களுக்குக் கல்வி - வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்று மோடி அரசுக்கு யார் சொன்னது? அவர்களுக்கு இப்போது இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டிய அளவுக்கு, அப்படி என்ன அவசரமும், அவசியமும் ஏற்பட்டது?

ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடு களின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னேறிய வகுப்பினரின் இட ஒதுக்கீட்டுக்கு அப்படி ஏதேனும் ஆணையம் அமைத்து ஆய்வு செய்யப் பட்டதா? இல்லை!

ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள் ஏன் பின்தங்கிப் போனார்கள்?

ஆரிய வைதீக வர்ணாசிரம தர்மம் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, மக்களிடையே சாதிப் பிளவு களை உண்டாக்கியது. உழைக்கும் மக்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்தது. அவர்களது தொழில் நுட்ப அறிவையும், உழைப்பையும் சுரண்டியது. எனவேதான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர் களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.

ஏன் வந்தது இடஒதுக்கீடு?

முன்னேறிய வகுப்பினரே கல்வி - வேலை வாய்ப்புகளில் நிறைந்திருந்தனர். இதன் காரணமாகவே, மற்ற வகுப்பினர் முன்னேறி வருவதற்கான ஏற்பாடாக இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15 - 16களில் இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டு, சமூக வகையிலும், கல்வியிலும் பின் தங்கியவர்களை கை தூக்கி விடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இப்போது, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பாக பிராமணர்கள்தான் கோலோச்சுகின்றனர். தமிழ்நாட்டில் முன்னேறியோர் பட்டியலில் பிராமணர் அல்லாதவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலோர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குள் வந்துவிடுகின்றனர். மக்கள் தொகையில் பிராமணர்கள் 3 விழுக்காட்டினராக உள்ளனர். அவர் களில் பொருளியல் வகையில் பின்தங்கியவர்களுக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என சட்டம் இயற்றியுள்ளது எந்த வகையில் ஞாயம்? அவர்கள் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப கல்வியும், வேலை வாய்ப்பும் பெறவில்லை என்று இந்திய அரசு எதன் அடிப்படையில் கணக்கிட்டது?

இன்றைக்கு பிராமணரல்லாத உயர் வகுப்பினர்கூட பிராமணர்களின் அளவுக்கு பிரதிநிதித்துவம் பெறவில்லை. இந்த முன்னேறிய வகுப்பினர், எந்தக் காலத்திலாவது பிறப்பு அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்களா? கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா? பின்னர், இவர்களுக்கு ஏன் இந்த சிறப்புரிமை? இதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - இந்துத்துவா - பிராமணத்துவா!

பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தை காங்கிரசுக் கட்சி ஆதரித்து வாக்களித்தது. சி.பி.எம். - சி.பி.ஐ. கட்சிகளும் ஆதரித்துள்ளன. தேர்தலை மனத்தில் வைத்து பா.ச.க. இச்சட்டத்தைக் கொண்டு வருவதையும், அவசர அவசரமாகக் கொண்டு வருவதையும்தான் இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றனவே தவிர, இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை!

“பிராமணத்துவா” கட்சிகள்

காங்கிரசுக் கட்சி கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் எனத் தேர்தல் வாக்குறுதியே அளித்திருந்தது. அண்மையில் இராகுல்காந்தி, தன் பூணூலைக் காட்டி தான் தத்தாத்ரிய கோத்திர பிராமணன் என்று கூறி தன்னை உலகுக்கு அடையாளப் படுத்திக் கொண்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த 08.01.2019 அன்று அறிக்கை வெளியிட்ட சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு இந்தச் சட்டம் சமூகநீதிக்கு எதிரானது என்றெல்லாம் குரல் எழுப்பவில்லை. தங்கள் கட்சி முன்னேறிய வகுப்பாருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கு வதை ஆதரிக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அவசரமாக ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று மட்டும் கேட்கிறது.

நாடாளுமன்றத்தில் பேசிய சி.பி.எம். கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராசன், சி.பி.ஐ. கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோர், மாற்றுத் திட்டம் என்ற பெயரில், வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பு என்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக தனியார் துறையிலும் இதே இட ஒதுக்கீடு வேண்டுமென பேசியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் “நான் முன்னேறிய வகுப்பாருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தேன்” என்று டி.கே. ரங்கராசன் கூறினார்.

இவ்வாறு, பிராமணர்களுக்காக ஒரே அணிவகுப்பில் நின்று இக்கட்சிகள் குரல் கொடுப்பதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - அதன் இன்னெரு பெயர்தான் இந்துத்துவா - அதன் அசல் பெயர்தான் பிராமணத்துவா!

இச்சிக்கலில் மட்டுமின்றி, இந்தியத்தேசியத்திற்கு முன்னுரிமை தரும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் பல்வேறு அடிப்படைச் சிக்கல்களில் காங்கிரசு - பா.ச.க. நிலை பாட்டையே கொண்டுள்ளன. பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றே ஒன்று, இந்தியாவின் ஆட்சிமொழி இந்திதான் என்று சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் கொள்கை அறிக்கை கூறுகிறது.

முன்னேறிய வகுப்பில் பிறந்து பொருளியல் வகையில் பின்தங்கியவர்களைக் கணக்கிட, ‘ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள்’ என மோடி பிறப்பித்த இச்சட்டம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் என்றால், அவர்களது மாத ஊதியம் 66 ஆயிரம் ரூபாய்! ஒரு நாள் ஊதியம் 2,191 ரூபாய்! இந்த வருமானம் பெறுபவர்கள் பின்தங்கியவர்களா? அவர்களுக்கு ஏன் தனி இட ஒதுக்கீடு?

சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை?

இச்சட்டம் செயலுக்கு வந்த பின், தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் பிறந்தவர்கள் மதிப்பெண் அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பளித்த 31 விழுக்காட்டுப் பொதுப் பட்டியல் 21 விழுக்காடாக சுருங்கிவிட்டது!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் மொத்த மக்கள் தொகை விகிதத்திற்குச் சமமாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சற்றொப்ப 70 விழுக்காடு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடுதான் இட ஒதுக்கீடு உள்ளது.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகை 56 விழுக்காடு என மண்டல் குழு கணக்கிட் டுள்ளது. அந்த 56 விழுக்காட்டினருக்கு இந்திய அரசுப் பணிகளில் 27.5 விழுக்காடுதான் ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது அளிக்கப் பட்டுள்ள 10 விழுக்காட்டை, வெறும் 3 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட பிராமணர்கள் தான் மிகப்பெரும்பான்மையாக எடுத்துக் கொள்வார்கள். அதே பிராமணர்கள், மதிப்பெண் அடிப்படையில் பெறுவதற்கு 21 விழுக்காடு பொதுப்பட்டியலும் இருக்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரசு ஆட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாதி வாரியாகக் கணக்கிட்டார்கள். இப்போது வரை, அந்த சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியல் வெளியிடப்படவில்லை! காங்கிரசு ஆட்சியும் வெளியிடவில்லை; பின்னர் வந்த பா.ச.க. ஆட்சியும் அதை வெளியிட வில்லை. வெளியிட்டுவிட்டால், மக்கள் தொகையில் மிகவும் குறைவாக உள்ள பிராமணர்களின் எண்ணிக்கையும் - முன்னேறிய வகுப்பார் எண்ணிக்கையும் தெரிந்துவிடும், அதேபோல் மக்கள் தொகையில் மிகப்பெரும் பான்மையான வகுப்பினர், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை ஆகியோர் எண்ணிக்கை யும் தெரிந்துவிடும் என்று இக்கட்சிகள் அஞ்சுகின்றன. எனவே, இந்த இரட்டையர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத்தேசியம் அளிக்கும் சமூகநீதி பழைய “மனுநீதி”தான்!

திராவிடக் கட்சிகளின் நாடகங்கள்

தங்களை “சமூகநீதிக் காவலர்கள்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள், சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியலை வெளியிடச் சொல்லி ஏன் போராடவில்லை?

தி.மு.க., அதிமுக. கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. வரவேற்கிறோம்! ஆனால், வெறும் குரல் எழுப்பிவிட்டு அவர்கள் யாரோடு இருக் கின்றனர்? அச்சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ள காங்கிரசுடன் தி.மு.க. இருக்கிறது. இச் சட்டம் நிறைவேற பா.ச.க.வுக்கு உதவும் வகையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், தந்திரமாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து பா.ச.க.வுடன் நிற்கிறது.

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வு, வரி வசூல் உரிமையைப் பறிக்கும் ஜி.எஸ்.டி., உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வருவது, எட்டுவழிச் சாலை அமைப்பது, காவிரிப் படுகையை நாசமாக்கி வேதி மண்டலமாக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, ஏழு தமிழர் விடு தலையை எதிர்ப்பது முதலியவற்றில் எல்லா வகையிலும் எதிராக நிற்கும் காங்கிரசுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி சேர்ந்து நிற்கிறது? பதவிக்காக! பதவிக்காக தமிழரைக் காட்டிக் கொடுத்து, இனத்துரோகம் செய்ய இவர் களுக்குத் தயக்கமில்லை! காங்கிரசுக் கட்சியை வெளிப்படையாகக் கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்! செய்வார்களா?

அ.தி.மு.க.வோ, பா.ச.க.வின் எடுபிடியாக அவர்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிக் கொண்டுள்ளது.

ஆக, இக்கட்சிகள் வெறும் கணக்குக் காட்டத்தான் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கை சமூகநீதி எனக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள், இந்தச் சட்டத்தின் வழியே சமூகநீதிக் கோட்பாட்டையே காலி செய்துள்ள இந்தியத் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து குலாவிக் கொண்டுள்ளன.

இவற்றையெல்லாம் எதிர்க்க ஒரு மாற்று சிந்தனை - புதிய சிந்தனை தேவை! சிந்திக்கும் ஆற்றல், உண்மை களைக் கண்டறியக் கூடிய உளப்பாங்கு ஆகியவற்றோடு தமிழ் மக்கள் இதனை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான தத்துவமே “தமிழ்த்தேசியம்”! பிற்போக்குச் சட்டங்களை தூக்கி எரியும் ஆற்றல் நமக்கிருக்கிறது!

இந்திய அரசே! சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் இச்சட்டத் திருத்தத்தைக் கைவிடு! திரும்பப் பெறு என்று முழங்குவோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, January 17, 2019

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன் டப்ளினில் நேர்காணல் கூட்டம்..!

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன் டப்ளினில் நேர்காணல் கூட்டம்..!
இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், இன்று (17.01.2019) மாலை அயர்லாந்து தலைநகர் டப்ளினில், தமிழ் மக்களுடனான நேர்காணல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
 
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள இரோசியா அங்காடி அரங்கில் (Eurasia Supermarket,
Unit 1, Fonthill Retail Park, Fonthill Road, Dublin 22, Ireland) இன்று (17.01.2019) மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தை அயர்லாந்து வாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்நிகழ்வில், அயர்லாந்து தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
கூட்டம் குறித்த தொடர்புகளுக்கு
0892248931, 0899464774
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, January 8, 2019

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடையில்லை என இன்று (08.01.2019) உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

உயிர்க்கொல்லி ஆலையாக விளங்கி, தூத்துக்குடி மக்களின் உயிரைப் பறித்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே மாதம் நடைபெற்ற எழுச்சிமிக்கப் போராட்டத்தின்போது, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்து ஆணைப் பிறப்பித்தது. இத்தடையை நீக்கக் கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த 15.12.2018 அன்று ஆலையைத் தொடர்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையைத் திறக்க ஏற்பாடுகள் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பேராசிரியர் பாத்திமாபாபு தலைமையிலான ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, 2019 சனவரி 21 வரை ஆலையைத் திறக்கக் கூடாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இம்மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (08.01.2019) காலை தில்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க 2019 சனவரி 21 வரை தடை விதித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை நீக்கியும் ஆணையிட்டுள்ளது.

செம்பு தயாரிப்பதற்கு உயர் வெப்பத்தில் சால்க்கோசைட், சால்க்கோ பைரைட் போன்ற செம்புத் தாதுக்களை உருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து, சட்டம் இயற்றினால்தான் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்க நிரந்தரத் தடை விதிக்க முடியும்! இதற்கேற்ப, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து, ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் தொழில்நுட்பத்தையும் அபாயகரமானவை எனப் பட்டியலிட வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர – அவசியக் கடமையாகும்!

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நீக்கி ஆணையிட்ட போது, அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதன் விளைவாக, இந்திய அரசு தானே ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது.

அதுபோல், தற்போது தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென ஓரணியில் நின்று வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக கொள்கை முடிவெடுத்து, நடைபெற்றுக் கொண்டுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச்சட்டம் பிறப்பிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, January 7, 2019

புனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா? தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

புனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா? தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கடலூர் மாவட்டம் - திட்டக்குடியை அடுத்துள்ள இறையூரைச் சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் - ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் பரந்தாமன், தான் பணியாற்றி வந்த மகாராட்டிரா மாநிலம் - புனேயிலுள்ள விடுதி அறையில் கடந்த 04.01.2018 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, கந்துவட்டித் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளம்பெண் சிவானி என்பவரை காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில்தான் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமெனக் கூறி, சற்று நேரத்திற்கு முன்பு (07.01.2018) இறையூரில், சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பெண்ணாடம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி இளைஞர்களையும் அரசியல் இயக்கப் பொறுப்பாளர்களையும் கைது செய்துள்ளனர்.

தமிழ்த்தேசியப் பேசியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், சி.பி.எம். வட்டச்செயலாளர் தோழர் காமராஜ், ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் திரு. பத்மநாபன், “சே” தோழர்கள் திரு. சத்தியசீலன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோரும், 30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு பெண்ணாடம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பத்மநாபனும், சிவானியும் கடந்த 2018 ஏப்ரல் மாதம், ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையான வயது ஆவணங்களை அளித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சிவானிக்கு 18 அகவை முடியவில்லை எனக் கூறி, பரந்தாமன் மீது அவரது உறவினர்கள் 17.04.2018 அன்று மதுரை – சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர். இதனையடுத்து, பரந்தாமன், அவரது தந்தை சபாபதி மற்றும் நண்பர்களை பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போஸ்கோவில் வழக்குப் பதிவு செய்து 21.04.2018 அன்று மதுரை நடுவண் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். காப்பகத்திலிருந்த சிவானி பெற்றோரிடம் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற போது சிறையிலிருந்து நீதிமன்றத்தில் நேர்நிற்க வந்த பத்பநாபனை சிந்துப்பட்டி காவல் நிலையக் காவலர்கள் முன்பாகவே, சிவானியின் உறவினர்கள் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, இவ்வழக்கிலிருந்து கடந்த 25.12.2018 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலையான பரந்தாமன் சிந்துப்பட்டி காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட்டுள்ளார். அப்போதும், பத்மநாபனுக்கு சிவானியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். “எங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலித்துவிட்டு, எங்கள் ஊருக்கு வந்துவிட்டு உயிரோடு போக விட்டுவிடுவோமா? 15 நாளில் உன்னை காலி செய்து விடுவோம்” என்று கூறியுள்ளனர்.

கடைசியாக, கடந்த 03.01.2018 அன்று மாலை இவற்றையெல்லாம் தனது தந்தை சபாபதிக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த பரந்தாமன், சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் தன் மீது மேலும் வழக்குகள் போடவுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னை அவர்கள் வாழ விடமாட்டார்கள் என்றும் பேசியுள்ளார். அதற்கு அடுத்தநாள் (04.01.2018) சபாபதி தன் மகனை தொடர்பு கொண்ட போது, பரந்தாமனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அன்று (04.01.2018) பகல் 1 மணியளவில், தனது மகனின் கைப்பேசியிலிருந்து அழைத்து இந்தியில் பேசிய ஒருவர், தான் புனே காவல் துறையிலிருந்து பேசுவதாகவும், தனது மகன் பரந்தாமன் அங்குள்ள ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 05.01.2018 அன்று, இறையூரில் பரந்தாமனின் உறவினர்களும், பொது மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அதில் பங்கேற்றனர்.

தொடர்வண்டியிலோ, பேருந்திலோ புனேவுக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், ஒரே இரவில் பரந்தாமன் புனேவுக்குச் சென்றது எப்படி? காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டிய நிலையில், அவர் திடீரென புனே சென்றது ஏன்? பரந்தாமன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு எடுத்தப் புகைப்படங்களில் அவரது கால் தரையில் உள்ளது எப்படி? என அடுக்கடுக்காகப் பல வினாக்கள் எழுந்துள்ளன.

இவ்வினாக்களை தெளிவுபடுத்த, இவ்வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த பரந்தாமன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பரந்தாமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துதான் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அச்சாலை மறியல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று (07.01.2018) மாலை, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, இன்று (07.01.2019) காலை, அரசியல் இயக்கத்தினரும், பொது மக்களும் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை நெய்வேலியிலிருந்து வந்த அதிவிரைவுக் காவல்துறையினர் கடுமையாக அடித்துக் கைது செய்துள்ளனர்.

இளைஞர் பரந்தாமன் கொலையில் உள்ள மர்மங்களைக் களைந்து, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களை அடித்து விரட்ட நினைப்பது எவ்வகையில் ஞாயம்? எனவே, தமிழ்நாடு அரசு இவ்வழக்கு குறித்த முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! இளைஞர் பரந்தாமன் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, அவரது பெற்றோர் விரும்பும் மருத்துவக் குழு முன்னிலையில் முழுமையாக உடல் கூராய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT