பெண் ஊடகத்தாரின் தன்மானத்தைத் தாக்கிய எஸ்.வி. சேகரை இன்னும் ஏன் கைதுசெய்யவில்லை? சனநாயக வெளிப்பாடாக ஆர்ப்பாட்டம் செய்த ஊடகத்தார் மீது போட்ட வழக்கைக் கைவிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நிர்மலாதேவி என்ற கல்லூரிப் பேராசிரியர் மீது பாலியல் தரகராகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிந்து சிறைப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது அவ்வழக்கு தொடர்பான ஐயப்பாடுகள் பேசப்பட்டன. அதற்காக அவசரம் அவசரமாக ஆளுநர் புரோகித் செய்தியாளர் கூட்டம் நடத்தித் தன்னிலை விளக்கம் தந்தார்.
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் செய்தியாளர் கேள்வி கேட்டபோது, அச்செய்தியாளரின் கன்னத்தைத் தடவிப் பேசினார் புரோகித்! “எனது அனுமதியில்லாமல் என்னைத் தொட்டது, அருவருப்பைத் தந்தது!” என்று அப்பெண் செய்தியாளர் சுட்டுரையில் கண்டனம் வெளியிட்டார். உடனே ஆளுநர் புரோகித் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டார்.
இந்நிலையில், பா.ச.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் செய்தியாளர்கள் பாலியல் பரிமாற்றம் செய்துதான் பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று தமது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊடகத்துறையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் எஸ்.வி. சேகர் வீட்டின் முன் 20.04.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பொழுது ஒரு சிலர் வீட்டின் மீது கல்லெறிருந்திருக்கிறார்கள். இந்த கல்லெறி நிகழ்வை நாம் ஆதரிக்கவில்லை!
ஆனால், அந்த ஒரு செயலைப் பயன்படுத்திக் கொண்டு காவல்துறை அவர்கள் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டுதல், தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என கற்பனையாகக் குற்றச்சாட்டுகளைப் புனைந்து ஐந்து பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளார்கள். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வெளியேற்ற வேண்டும் என்ற அரசியல் நெருக்குதலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாகவே, பா.ச.க.வினர் ஊடகங்களைக் கட்டுப்படுத்த ஒளிவு மறைவின்றி செயல்படுகிறார்கள். தாலி தேவையா என்ற விவாதம் நடந்தபோது, “புதிய தலைமுறை” தொலைக்காட்சி நிலையத்தின் மீது “டிபன்பாக்ஸ்” வெடிகுண்டு வீசினார்கள். ஆரியத்துவா மதவெறி பற்றி தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்தால், பா.ச.க. அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அத்தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
பா.ச.க.வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் ஒரு தீவிரமான ஆரியத்துவாவாதி! ஆண் – பெண் சமத்துவத்திற்கும், சாதி ஆதிக்கமற்ற சமூக சமத்துவத்திற்கும் எதிரானவர். அவர் ஊடகத்தில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதற்கு எதிராகக் காவல்துறை தானே முன் வந்து வழக்குப் பதிவு செய்யவில்லை! அவர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்த ஊடகத்துறையினரைக் கைது செய்து, வழக்குப் போட்ட பின், “எஸ்.வி. சேகர் மீது ஏன் வழக்குப் போடவில்லை” என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. அதன்பிறகுதான், எஸ்.வி. சேகர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவரை உடனடியாகத் தளைப்படுத்த காவல்துறை முனையவில்லை!
அவர் முன் பிணை கேட்டார். சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை கொடுக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், இவ்வறிக்கை வெளியிடும் இத்தருணம் வரை எஸ்.வி. சேகர் கைது செய்யப்படவில்லை. இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் பாதுகாப்பில் அவர் கைதாகாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
பெண்களை பாலியல் அடிப்படையில் இழிவுபடுத்தி, முகநூலில் செய்தி வெளியிட்ட எஸ்.வி. சேகர் மீது பா.ச.க. நடவடிக்கை எடுக்குமென்று அதன் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சௌந்திரராசன் சொன்னாதே, அது என்னாயிற்று? பா.ச.க.விற்கு அரசியல் ஒழுக்கமும் இல்லை, ஆன்மிக ஒழுக்கமும் இல்லை.
தமிழ்நாடு அரசு, உடனடியாக எஸ்.வி. சேகரைக் கைது செய்ய வேண்டும். அதேவேளை, சனநாயக வெளிப்பாடாக - தன்மானம் காக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகத்துறையினர் மீது போட்டுள்ள வழக்கைக் கைவிட்டு ஊடகத்துறையினருடன் இணக்கப் போக்கைக் கடைபிடிக்க முன் வர வேண்டுமென்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com