உடனடிச்செய்திகள்
Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, September 14, 2019

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழத்தில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலை உடனே நிறுத்த வேண்டும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்த வேண்டும், வடக்கு - கிழக்கில் சிங்கள இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து - தமிழீழத் தாயகத்தில் வரும் 2019 செப்டம்பர் 16 அன்று “எழுக தமிழ்” பேரணி நடைபெறவுள்ளது. அதேநாளில், வட அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும் “எழுக தமிழ்” பேரணிக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையொட்டி, வரும் திங்களன்று (16.09.2019) காலை 10 மணியளவில் சென்னை - வள்ளுவர் கோட்டத்தில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை” ஒருங்கிணைப்பில், பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாவலர் முழுநிலவன் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும் ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, June 23, 2019

சென்னையில் இன்று மாலை.. கவியரசர் கண்ணதாசன் விழா..!

சென்னையில் இன்று மாலை.. கவியரசர் கண்ணதாசன் விழா..!
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியரும், தமிழ் மொழி ஆளுமையில் தடம் பதித்த பாவலருமான கவியரசர் கண்ணதாசன் அவர்களது 92ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் சென்னையில் விழா எடுக்கப்படுகின்றது.

இன்று ஞாயிறு (23.06.2019) மாலை 5 மணியளவில், சென்னை வடபழனி கமலா திரையரங்கம் பக்கத்திலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெறும் இவ்விழாவிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவரும், திரைப்படப் பாடலாசிரியருமான பாவலர் கவிபாஸ்கர் தலைமை தாங்குகிறார். த.க.இ.பே. பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன் வரவேற்கிறார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள், 
“இன்னிசை வாணி” திருமதி. வாணி ஜெயராம், “இறையிசையரசி” திரு. எல்.ஆர். ஈஸ்வரி, கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர்க்கு “தமிழ்க் கலைச்சுடர்” விருது வழங்கப் பாராட்டுரை நிகழ்த்துகிறார்.

பாவலர் கவிபாஸ்கர் எழுதிய “காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்” நூலின் புதிய பதிப்பை, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்டு உரையாற்றுகிறார்.

சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் துணைத் தலைவருமான நடிகர் சேது. கருணாஸ், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் இசையமைப்பாளர் தினா, “மதுரா” பயண ஏற்பாட்டக நிறுவனர் “கலைமாமணி” திரு. மதுரா வி.கே.டி. பாலன், சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்த்திரு. ஆர்.ஆர். தமிழ்ச்செல்வன், அனு ஈவென்ட் நிறுவனர் தமிழ்த்திரு. கே. இராமச்சந்திரன், தாரை பயணம் தமிழ்த்திரு. தாரை கு. திருஞானசம்பந்தம் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொள்கின்றனர்.

திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம், கவிஞர் ஜான்தன்ராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

நிறைவாக, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு. செந்தமிழன் சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் ஆகியோர் நிறைவுரையாற்றுகின்றனர். பாவலர் ஆரல்கதிர்மருகன் நன்றி கூறுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

பேச: 9841604017, 9677229494
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
இணையம்: www.kannottam.com

Monday, July 16, 2018

1991இல் பேசியதற்காக தோழர் பெ. மணியரசன் மீது இப்பொழுது பிடி வாரண்ட்! சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை!

1991இல் பேசியதற்காக தோழர் பெ. மணியரசன் மீது இப்பொழுது பிடி வாரண்ட்! சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை!
1991ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதற்காக பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது வழக்கும், அதையொட்டி இப்போது பிடிவாரண்ட்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கில் முன்பிணை பெற்று, இன்று சைதாப்பேட்டை பதினோராவது நீதிமன்றத்தில் தோழர் பெ.ம. நேர் நின்றார்.

தமிழீழ விடுதலைக்காக சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாப் போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த விடுதலைப்புலிப் போராளி திலீபனின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 29.10.1991 அன்று, சென்னை தியாகராயர் நகர் வெங்கடேசுவரா திருமண அரங்கில், தோழர் தியாகு தலைமையிலான “திலீபன் மன்றம்” சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், தோழர் பெ. மணியரசன் அவர்கள் “தேசிய இனப் போராட்டங்களும், ஈழ விடுதலையும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பேசிய தோழர் பெ. மணியரசன் அவர்கள், தமிழீழ விடுதலையை வலியுறுத்தியும், தமிழர்க்குத் தனி நாடு வேண்டுமென்றும் பேசி பிரிவினையைத் தூண்டியதாக, அக்கூட்டம் நடைபெற்ற நான்காண்டுகள் கழித்து 1994இல் 28.04.1994 அன்று, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-இன் பிரிவு 13இன்கீழ் சென்னை நடுவண் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பல்லாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு, மிகத் தாமதமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவ்வழக்கு குறித்த தகவலையும் தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு முறைப்படி தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தனர்.

தொடர்ந்து பல போராட்டங்கள், பொது நிகழ்வுகள் மட்டுமின்றி, அவ்வப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட, தோழர் பெ. மணியரசன் அவர்களிடம், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இவ்வழக்கில் நேர் நிற்க வேண்டுமென்ற அழைப்பாணை எதையும் தோழர் பெ.ம. அவர்களிடம் காவல்துறையினர் வழங்கவில்லை. இந்நிலையில், திடீரென இவ்வழக்கில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 22.06.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு இவ்வழக்கில் முன் பிணை வழங்கியது. தொடர்ந்து ஏழு நாளைக்கு, சைதை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் நிபந்தனை விதித்து ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (16.07.2018) காலை தோழர் பெ. மணியரசன் இவ்வழக்கில் நேர் நின்று பிணை பெற்றார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, May 28, 2018

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும் காவல்துறையினர் அவரை நடத்திய விதமும் கடுங்கண்டனத்திற்குரியவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லவும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவும் வந்தவரை 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்து, இரவோடிரவாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கொண்டு சென்று 26.05.2018 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தி, அங்கிருந்து சென்னை புழல் சிறையில் கொண்டுபோய் அடைத்துள்ளார்கள்.

திரு. வேல்முருகன் கைதைக் கண்டித்து, நாளை (29.05.2018) மாலை 3 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும், தோழர்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
வாருங்கள் தமிழர்களே!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, May 25, 2018

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப்  பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டையைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பதவி விலக வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.05.2018) மாலை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.




தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும் தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சென்னை அண்ணா சிலை அருகிலிருந்து திரண்ட தோழர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை - பறக்கும் தொடர்வண்டி பாலம் அருகில் காவல்துறையினர் வழிமறித்துத் கைது செய்தனர்.





தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், திரு. ஆளூர் சானவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள்), திரு. பெ. ஜான்பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), தோழர் பிரவீன் (மே பதினேழு இயக்கம்), வழக்கறிஞர் இரசினிகாந்த் (மக்கள் அரசுக் கட்சி), முனைவர் சுப. உதயகுமார் (பச்சைத் தமிழகம்), திரு. பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாயிகள் சங்கம்), தோழர் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), தோழர் செந்தமிழ்க்குமரன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), தோழர் பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் (தமிழர் முன்னணி) உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இயக்குநர்கள் வெ. சேகர், அமீர், இராம், கோபி நயினார் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர்.








கட்சிக் கொடி அடையாளங்களின்றி இப்போராட்டத்தில் தமிழ்தேசியப் பேரியக்கம் பங்கேற்றது. பேரியக்கம் சார்பில் பங்கேற்ற, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர்கள் மா.வே. சுகுமார், மணி, முத்துக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.





தமிழ்நாடு அரசே!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

கொலைகாரக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

எடப்பாடியே பதவி விலகு!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Wednesday, May 9, 2018

தமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9) சென்னையில் கூட்டங்கள்!

தமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9) சென்னையில் கூட்டங்கள்!
காவிரி, நீட், ஐட்ரோகார்பன் திட்டங்கள் என தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து - நாசகரத் திட்டங்களைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து, சென்னையில் இன்று (09.05.2018) நடைபெறும் கண்டனக் கூட்டங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது. 

எம்.ஜி.ஆர். நகர்

சென்னை எம்.ஜி.ஆர். நகர் - நல்லதம்பி தெரு சந்திப்பில் இன்று மாலை - தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் - காவிரி உரிமைப் பறிப்பு - தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டத்தில், த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உரையாற்றுகின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி பங்கேற்று உரையாற்றுகிறார். 

பாடி - இடைத்தெரு

பாடியில், சரவணா ஸ்டோர்ஸ் அருகிலுள்ள இடைத் தெருவில், தமிழர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைக்கும் கண்டனக் கூட்டத்தில், த.வி.க. தலைவர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிகழ்வுகளில், தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Friday, May 4, 2018

காவிரி உரிமை - கருத்தரங்கம்!

காவிரி உரிமை - கருத்தரங்கம்!
“காவரி உரிமை - சிக்கலும் புரிதலும்” என்ற தலைப்பில், நாளை (04.05.2018) சென்னையில் காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எழும்பூர் இக்சா அரங்கில், நாளை (மே 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. செ. பூரணச்சந்திரன் தலைமை தாங்குகிறார். திரு. த. பிரபு வரவேற்கிறார்.
காவிரி குறித்த ஓவியக் கண்காட்சியை, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. கோட்ட மேலாளர் திரு. தே. தலக்கையா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி திரு. இரா. மூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Tuesday, May 1, 2018

மே நாள் கொடியேற்றம்!

மே நாள் கொடியேற்றம்

சென்னை கலைஞர் கருணாநிதி நகர் தலைமை அலுவலகம் அருகில் 01.05.2018, காலை 09.30 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க கொடியேற்ற விழா சிறப்புற நடைபெற்றது.
மே நாள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தியும், தமிழ்த் தேச விடுதலைக்கு சூளுரைத்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி அம்மா அவர்கள் கொடியேற்றி ”மே நாள்” சிறப்புரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் தோழர்கள் இளங்குமரன், வெற்றித்தமிழன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் வடச் சென்னை செயலாளர் தோழர் செந்தில்குமார், தென் சென்னை செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட திரளான தோழர்களும் கலந்துக்கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 


Thursday, April 19, 2018

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!
உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான நீட் தேர்வு நிரந்தர விலக்க மாநாடு, இன்று (19.04.2018) சென்னையில் நடைபெறுகின்றது. 

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்கள் பங்கேற்று வெவ்வேறு அமர்வுகளில் நீட் தேர்வு குறித்த கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டை, இயக்குநர் வ. கௌதமன் ஒருங்கிணைக்கிறார். 

நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, March 5, 2018

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!
நீட் - “தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு” (NEET) முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என, சென்னையில் இன்று (05.03.2018) காலை “உலகத் தமிழ் அமைப்பு” நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
“இந்திய அரசால் திணிக்கப்படும் "நீட்" தேர்வானது வருங்காலத் தமிழர் தலைமுறையினருக்கு மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும். எனவே, தமிழ்நாட்டுச் சட்டமன்றம் பிப்ரவரி, 01 2017- அன்று ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டச் சட்டமுன்வரைவுகளைச் சட்டமாக்க ஆவனச் செய்ய வேண்டும்” என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்புக்கு, உலகத் தமிழ் அமைப்பு (வட அமெரிக்கா) தலைவர் முனைவர் வை.க. தேவ் அவர்கள் தலைமை தாங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் ஜி. ஆர். இரவீந்திரநாத், திராவிடர் கழக வழக்குரைஞர் அருள்மொழி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி, தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தன்னாட்சித் தமிழகம் நெறியாளர் திரு. ஆழி செந்தில்நாதன், தமிழர் பன்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. இராச்குமார் பழனிசாமி, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் தோழர் ஆளூர் சானவாசு, ம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் திரு. அந்தரிதாஸ், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வினோத் களிகை, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தோழர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திரைப்பட இயக்குநர் திரு. வ. கவுதமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
#TNagainstNEET 
#ApproveTNBillToExemptNEET 
#NoNEETforTamilNadu

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, February 17, 2018

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.



இன்று (17.02.2018), சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன், அகில உலக வள்ளலார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு. அண்ணாதுரை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, மாணவர்கள் இலயோலா மணி, பார்வைதாசன், செம்பியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Saturday, January 6, 2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!
 


 
#TamilnaduJobsforTamils
 
”தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில் வரும் 2018 பிப்ரவரி 3 அன்று, சென்னையில் சிறப்பு மாநாட்டை நடத்துகிறது - தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
சென்னை சேப்பாகம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. செயலுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
 
கண்காட்சி

காலை 9.30 மணிக்கு பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் - எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும் மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறந்து வைக்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றுகிறார்.
 
கருத்தரங்கம் - 1

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்கிறார்.
 
“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
சட்ட வரைவு

மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளையும், பிற்பகல் 2 மணியளவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
 
ஆய்வறிக்கை வெளியீடு

பிற்பகல் 3 மணியளவில், “மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிடுகிறார். புலவர் இரத்தினவேலவன், திருவாளர்கள் ச. யோகநாதன், வெ. சேனாபதி, பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், சோயல் பாண்டியன், அர. மகேசுகுமார், நா. நெடுஞ்செழியன், இரா. இரஜினிகாந்த், ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் அறிக்கையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 
பாவரங்கம்

பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் எந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.
 
கருத்தரங்கம் - 2

பிற்பகல் 4 மணிக்கு, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
 
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றுகின்றனர்.
 
தீர்மானங்கள்

இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிக்கின்றனர்.
 
வாழ்த்தரங்கம்

நிறைவாக நடைபெறும் வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறுகிறார். பாவலர் நா. இராசாரகுநாதன், ப. சிவவடிவேலு, இரா. இளங்குமரன், இரா. வேல்சாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
 
தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?
 
சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!
 
#TamilnaduJobsforTamils
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, December 30, 2017

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!

#TamilnaduJobsforTamils

கல்வி கற்று வேலையில்லாமல் அலைவோரின் விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். வேலை தேடி தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மாநில அரசின் 4ஆம் பிரிவுப் பணிகளுக்கு 9,351 பேர் தேவை என்றும், அதற்கான தேர்வு 11.02.2018 அன்று நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. அத்தேர்வு எழுதிப் பணியில் சேர்வதற்குப் பல இலட்சம் பேர் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்குத் தேர்வுப் பயிற்சி கொடுக்க தமிழ்நாடெங்கும் ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் (Coaching Centres) செயல்பட்டுவருகின்றன. பயிற்சிக்கான கட்டணமோ அதிகம்!

ஆனால், தமிழ்நாட்டு அரசின் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களையும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள அகதிகளையும் இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் தமிழ்நாடு அரசு அழைத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள தமிழ்நாட்டு ஆண், பெண் இளையோர்க்கு இந்த பன்னாட்டுப் போட்டியில் எத்தனை இடம் கிடைக்கப் போகிறது?

கர்நாடகம், குசராத், மராட்டியம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுப் பணிகள், நடுவண் அரசுப் பணிகள், தனியார் துறைப் பணிகள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலக் குடிமக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு என்ற அளவுகளில் ஒதுக்கீடு வழங்கி மாநில அரசுகள் விதிமுறைகள் இயற்றியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட விதிமுறைகள் இயற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் போடுவோர், தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று 2013 வரை இருந்த விதியையும், தமிழ்நாடு அரசு நீக்கிவிட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு அளவிற்கு வெளி மாநிலத்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள். தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் முதலியவற்றில், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள். அவர்களை அண்டித் தொழில் செய்யும் நிலையிலேயே தமிழர்கள் இருக்கிறார்கள்! இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்கள் மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் வாழ்வரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது!

தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?

கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் - செயலுக்கான தீர்மானங்கள்!

சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!

#TamilnaduJobsforTamils

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Friday, October 20, 2017

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்து, இன்று (20.10.2017) மாலை 5 மணிக்கு சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்கின்றனர். 
 
தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் இதில் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 
வாருங்கள் தமிழர்களே! 
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Tuesday, October 3, 2017

சிறையிலுள்ள சூழலியல் போராளி தோழர் முகிலனை விடுதலை செய்க! சென்னையில் கண்டனக் கூட்டம்!

சிறையிலுள்ள சூழலியல் போராளி தோழர் முகிலனை விடுதலை செய்க! சென்னையில் கண்டனக் கூட்டம்!
காவிரி ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க அறவழிப்போராட்டங்களையும், சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்த - காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்களை பொய்க் குற்றச்சாட்டுகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெறுகின்றது.

சென்னை நிருபர்கள் சங்கத்தில் (Chennai Reporters Guild) நாளை (04.10.2017) மாலை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றுப் பேசுகிறார்.

கூட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT