உடனடிச்செய்திகள்

Monday, August 29, 2011

PRESS NEWS-URGENT[29.08.2011] அதிகாரமில்லை என தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல - பெ.மணியரசன் அறிக்கை!

மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்க

தமக்கு அதிகாரமில்லையென தமிழக அரசு கூறுவது சட்டப்படி சரியல்ல!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
சென்னை, 29.08.2011

 

அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் அவர்களின் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது சரியல்ல.

 

அரசமைப்புச் சட்ட விதி 161 மற்றும் 72 உட்பிரிவு (3) ஆகியவை குடியரசுத் தலைவர் நிராகரித்த கருணை மனுக்களை மாநில ஆளுநர் ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை தெளிவுபட உறுதி செய்கின்றன. விதி 72 குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் வழங்குகிறது. அதே விதியின் உள் பிரிவு(3) குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும் மாநில ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் தமக்குள்ள அதிகாரப்படி தனித்த முடிவை எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளது.

 

இந்த உரிமையை உச்சநீதிமன்றம் தயாசிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கிலும், திரிவேணிசெல் எதிர் குஜராத் மாநில அரசு என்ற வழக்கிலும் உறுதி செய்துள்ளது. இவை குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், குடியுரிமை அமைப்புகளும், சட்ட வல்லுநர்களும், தெளிவாக எடுத்துக் கூறி வந்துள்ளார்கள். பி.யூ.சி.எல். அமைப்பு முதலமைச்சருக்கு தேவையான சட்ட சான்று களுடனும், தீர்ப்புகளுடனும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்துள்ளது.

 

மேலே சொல்லப்பட்ட விவரங்கள் குறித்து உரியவாறு மறுப்பு விளக்கம் எதுவுமில்லாமல் குடியரசுத் தலைவர் நிராகரித்தப்பின் நிராகரித்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லையென்று கூறியுள்ளார். அத்துடன் அரசமைப்புச் சட்ட விதி 257 யும் அதன் உட்பிரிவு(2)யும் காரணம் காட்டி நடுவண் அரசு முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்று கூறியுள்ளார்.

 

விதி 257 நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 57-ன் உட்பிரிவு(2) நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை, தொடர்வண்டிப்பாதை, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றில் 257-யும் அதன் உட்பிரிவு(2)யும் இந்திய அரசின் அதிகாரம் மாநில அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

 

 

 

இதற்கு மேலே மாநில அரசுக்கென்று உள்ள அதிகாரங்களையோ, மரண தண்டனையை நீக்கி கருணை மனுவை ஏற்கும் ஆளுநரின் அதிகாரத்தையோ, கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசுக்கு விதி 257-ம் அதன் உட்பிரிவுகளும் வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் 1981ஆம் ஆண்டு மாரூர்ராம் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் கருணை மனுவை ஏற்பதில் ஆளுநரின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அது தனித்து செயல் படக்கூடிய அதிகாரம் என்று கூறியுள்ளார் நீதிபதி வீ.ஆர் கிருஷ்ண அய்யர். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தப் பின் தமிழக அரசுக்கு (ஆளுநருக்கு) கருணை மனுவை ஏற்க அதிகாரமில்லை என்று முதலமைச்சர் செல்வி செயலலிதா கூறியிருப்பது திரிபுவாதமாகும்.

 

கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின் முதலமைச்சராக இருந்த  இ.எம். எஸ் நம்பூதிரிபாடுஅவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றியாவது பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம். அதை விடுத்து மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென்று மொட்டையாகக் கூறி ஒதுங்கிக்கொள்வது அவருக்கு இந்த சிக்கலில் உள்ள அக்கறையைக் காட்டது.

 

15 நாட்களுக்கு முன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்று 3-பேர் தூக்குத் தண்டனை நீக்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை பேரவை தலைவரிடம் கொடுத்திருந்தார். அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பிடிவாதமாக மறுத்துவிட்டது தமிழக அரசு. இதிலும் முதலமைச்சரின் அணுகுமுறை சரியானதல்ல.

 

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அறிவிப்பை முதலமைச்சர் செல்வி செயலலிதா இன்று(29.8.2011) சட்டப்பேரவையில் விதி 110-கீழ் வெளியீட்டுள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதிக்கக் கூடாது என்று தடுக்கும் விதியின் கீழ் இந்த அறிவிப்பை செய்துள்ளார். இதுவும் மூன்று தமிழர் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் கையாளப்பட்ட உத்தியல்ல.

 

ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்கள் மற்றும் பன்னாட்டுத் தமிழர்களின் கோரிக்கையாக மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நீக்கம் உருவாகியுள்ளதை கவனத்தில் கொண்டும், குற்றமிழைக்காத அப்பாவித் தமிழர்களின் உயிரைக் காப்பதில் அக்கறை காட்டியும் தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் தூக்குத் தண்டனையை நீக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
 பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 

தழல் ஈகி செங்கொடிக்கு வீரவணக்கம்!

மூன்று தமிழர் உயிர் காக்க 

தன்னுயிரைத் தீக்கிரையாக்கியத்

தழல் ஈகி செங்கொடிக்கு வீரவணக்கம்!

இந்திய இனவெறியை இன எழுச்சியால் முறியடிப்போம்!

இவண்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Saturday, August 27, 2011

திருச்சியில் நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்!

திருச்சியில் நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்!


21 ஆண்டுகளாக கொடுஞ்சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, மக்கள் உரிமைப் பேரவை சார்பில் திருச்சியில், நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. நாளை மாலை 4 மணியளவில், திருச்சி புத்தூர் நான்கு சாலையில் அமைந்துள்ள சண்முகா திருமண மண்டபத்தில் இக்கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

 

கருத்தரங்கத்திற்கு, மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமை தாங்குகிறார். மதுரை வழக்கறிஞர் சு.அருணாச்சலம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், தி.லஜபதிராய், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரைசன் நிறைவுரையாற்றுகிறார். திருச்சி நகரைச் சுற்றியுள்ள உணர்வாளர்களும், பொது மக்களும் இக்கருத்தரங்கில் திரளாக பங்குபெற வேண்டுமென மக்கள் உரிமைப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு 

Tuesday, August 23, 2011

மூன்று தமிழர் உயிர் காப்போம் பொதுக்கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் அவர்களது உரையின் காணொளி

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் மூன்று தமிழர் உயிர் காப்போம் என்ற தலைப்பில், 22-8-2011 அன்று நடைபெற்ற, அனைத்துக் கட்சிகள் - இயக்கங்கள் கலந்து கொண்ட மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது உரையின் காணொளி வடிவம்..! இடம்: எம்.ஜி.ஆர்.நகர், சென்னை நாள் : 22.08.2011

Monday, August 22, 2011

பிரிட்டன் தமிழ் விளையாட்டு விழாவிற்கு பெ.மணியரசன் அவர்கள் வழங்கிய காணொளி வாழ்த்துச் செய்தி.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் தமிழ் விளையாட்டு விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் வழங்கிய காணொளி வாழ்த்துச் செய்தி..! பதிவேற்றம்: Aug 21, 2011

Friday, August 19, 2011

PRESS NEWS[19.08.2011] மூவர் மரண தண்டனையை நீக்கக் கோரி சிதம்பரத்தில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் [With Photos]

பேரறிவாளன், முருகன், சாந்தன்

"மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு மனநிலையின் அடையாளம்"

சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் கி.வெங்கட்ராமன் பேச்சு
 
சிதம்பரம். 18.08.2011

 


"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் அளிக்ப்ப்பட்டுள்ள தூக்குத் தண்டனை இந்திய அரசுக்குத் தொடர்ந்து இருந்து வரும் தமிழின எதிர்ப்பின் அடையாளமே ஆகும்" என சிதம்பரத்தில் நேற்று(18.08.2011) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.

 

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.  

 

மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க் கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென ஓசூர், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது.

 

அதன் ஒரு பகுதியாக, சிதம்பரத்தில் நேற்று(18.08.2011) மாலை ஆர்ப்பாட்டம் நடந்த்து. மேல மாசி வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் பேசிய போது,

 

"இந்திய அரசின தொடர்ந்து வரும் தமிழின எதிர்ப்பு மனநிலையின் ஒரு வெளிப்பாடு தான் இந்த்த் தீர்ப்பு. இப்புரு சுதாகர் எதிர் ஆந்திர அரசு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், ஒருவர் மரண தண்டனையை நீக்க்க் கோரும் கருணை மனு 3 ஆண்டுகளுக்கு மேலாக பரிசீலனையில் இருந்தாலே, அந்த மரண தண்டனையை இரத்து செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

 

ஆனால், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் ராசீவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மூன்று நீதிபதிகளும் கூறியுள்ள நிலையில், இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது சுயமுரண்பாடானது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமது இளமைப் பருவம் முழுவதையும் சிறையில் கழித்துவிட்ட நிலையில், இத்தோழர்களுக்கு இன்னுமொரு கொடிய தண்டனை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இது நீதி முடிவல்ல. இந்திய அரசின் இன அரசியல் முடிவு.

 

இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி என் 161ன்படி தமிழக ஆளுநருக்கு மரண தண்டனையை இரத்து செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசு இம்மூவரையும் மீட்க வேண்டும்" என்று பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணியின் தமிழகத் துணைத் தலைவர் பா.பிரபாகரன், நகரச் செயலாளர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன், த.தே.பொ.க. மூத்த தோழர்கள் முருகவேள், சவுந்திரராசன், தேவராசன  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

திரளான மாணவர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம், சிதம்பரம் நகரில் மூவர் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் மனநிலையை மேலும் கூர்மைப்படுத்தியது.

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு

Thursday, August 18, 2011

சென்னையில் நேற்று(17.08.2011) மூவர மரண தண்டனை நீக்க த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் - பெ.மணியரசன் பேச்சு!

பேரறிவாளன், முருகன், சாந்தன்

மூவர் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருள் 

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு

சென்னை. 18.08.2011 

"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருளாகும்என்று சென்னையில் நேற்று(17.08.2011) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

 

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார். 

 

மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க் கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்துது.

 

"இரத்து செய் இரத்து செய் மரண தண்டனையை இரத்து செய்! தமிழக அரசே தமிழக அரசே ஆளுநர் மூலம் இரத்து செய்! இலட்சணக்கில் தமிழரை கொன்ற இந்திய அரசே இன்னும் உன் வெறி அடங்கவில்லையா?"என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முழக்கங்கள் எழுப்ப்பட்டன.

 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார். அவர் பேசும் போது, "தமிழினத்தின் அடையாளமாக சிறையில் உள்ள இம்மூவரும் இன்றுள்ளனர். செய்யாத குற்றத்திற்காக அவர்கள் ஏற்கெனவே 21 ஆண்டுகள் அநியாயமாக சிறை வைக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அநீதியாகும். செய்யாத குற்றத்திற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தருவது எந்த வித்த்திலும் நியாமல்ல.

 

இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த இந்தியாவின் வெறி இன்னும் அடங்கவில்லை. அதன் தொடர்ச்சியாகத் தான் இம்மூவரையும் காவு கொள்ள இந்தியத் துடிக்கிறது. உலகெங்கும் போர்க் குற்றவாளி அரசாக நிற்கும் இலங்கையை காப்பாற்றத் துடிக்கும்

 

 

இந்தியா, அந்நாட்டுக்கு செய்த இராணுவ உதவிகளை மறைக்கவும், திசைத்திருப்பவும் தான் இந்த மூன்று இளைஞர்களை தூக்குக் கொட்ட்டிக்கு அனுப்பியிருக்கிறது.

 

இந்திய அரசமைப்புச் சட்ட விதி என் 161ன்படி தமிழக ஆளுநருக்கு மரண தண்டனையை இரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் பயன்படுத்த, தமிழக அரசு அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கைஎன்று கூறினார்.

 

ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு. தங்கர் பச்சான், தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், எழுகதிர் ஆசிரியர் முனைவர் அருகோ, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், புலவர் இராமச்சந்திரன் உள்ளிட்டேர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு


Tuesday, August 16, 2011

மூன்று தமிழர் உயிர் காக்க சென்னையில் நாளை(17.08.2011) த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை

தமிழக அரசு ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டும்!

 

சென்னையில் நாளை(17.08.2011) ஆர்ப்பாட்டம்

 


இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.   

 

மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க் கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 

நாளை(17.08.2011) மாலை 5 மணியாளவில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் திரு. தங்கர் பச்சான், திரு புகழேந்தி தங்கராஜ், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் புலவர் அரணமுறுவல், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்ட பல்வேறு தமிழன ஆதரவாளர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.

 

இவ்வார்ப்பாட்டத்தில், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் தமிழ்த் தேசியர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்  கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவுSaturday, August 13, 2011

மூவர் மரண தண்டனையை ரத்து செய்க! - ஓசூரில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

மூவர் மரண தண்டனையை இரத்து செய்க
ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

ஓசூர், 13.08.2011.
 
இராசீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாயமாக சிறையிலருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தமிழக அரசு, ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஓசூரில் இன்று(13.08.2011) ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்திருந்த காவல்துறையினர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின் அனுமதியளித்தனர். இதையடுத்து ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். தமிழக இளைளுனர் ஒருங்கிணைப்பு இயக்க தோழர் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செந்தமிழ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக விசுவநாதன் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
 
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து பேசினார். அவர் பேசும் பொது, இராசீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள இன்றும் பல விடயங்கள் மர்மமாக, விசாரக்கப்படாத நிலையில் இருக்கும் போது இப்படி அவசர அவசரமாக மரண தண்டனைக்கு உத்தரவிடுவது சரியல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். ஆர்ப்பாட்டாத்தில், பொது மக்களையும், தமிழின உணர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
 
செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

மூவர் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. போராட்டம்!

மூன்று தமிழர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே
மூவரின் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும்
சென்னையில் 17.08.2011 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
 
சென்னை, 17.08.2011.
 
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும அப்பாவித் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார். 

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. காவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட ஒப்பதல் வாக்குமூலம் வழக்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் செல்லாது. தடாச் சட்டம் பொருந்தாது என்றபின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் தான் உச்சநீதிமன்றம் பின்பற்றியிருக்க வேண்டும்.   

இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி அதற்காகத் தண்டனையும் பெற்றவராவார்.

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியவர். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில ஆளுநரிடம் எழுத்தாளர் மகா சுவேதா தேவி முறையிட்டார். ஆந்திர மாநில ஆளுநரிடம் கருணை மனு நிலுவையில் உள்ளது என்பதைக் காரணம் காட்டி, ஆளுநரின் முடிவு வரும் வரையில் மேற்படி இளைஞர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடையாணையும் வாங்கினார். 

1950களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின், கேரளத்தில் ஈ.எம்.எஸ். அரசு ஆளுநர் மூலம் அவரது மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது.

எனவே, இந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
 
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
 
ஓசூர்
ஓசூரில் த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் இன்று(13.08.2011) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.
 
மதுரை
இன்று(12.08.2011) மாலை த.தே.பொ.க. தோழமை அமைப்பான மக்கள் உரிமைப் பேரவை சார்பில் 5 மணிக்கு மீனாட்சி பசார் அருகில், தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மக்கள் உரிமைப் பேரவை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ச.அருணாச்சலம் தலைமையில் இதே கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில், நாம் தமிழர், த.தே.வி.இ., உள்ளிட்ட  பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்கின்றன.
 
தஞ்சை
தஞ்சையில், 16.08.2011 செவ்வாய் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இராசு. முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னனணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
 
சென்னை
17.08.2011 அன்று மாலை 5 மணிக்கு சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மையார் உட்பட பல தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
 
சிதம்பரம்
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகில், 16.08.2011 அன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றுகிறார்.
 
கோவை
கோவையில் த.தே.பொ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மாநகரக் காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். இது தொடர்பாக த.தே.பொ.க. நிர்வாகிகள் மாநகரக் காவல்துறையிடம் மீண்டும் முறையீடு செய்துள்ளது. விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடம், நாள் அறிவிக்கப்படும். 
 
இந்த ஆர்ப்பாட்டங்களில், திரளான தமிழர்களும், மனித  நேயர்களும் கலந்து கொண்டு இக்கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
 

Friday, August 12, 2011

மூவர் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் - பெ.மணியரசன் அறிக்கை!

மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை இரத்து செய்க!

தமிழக அரசு ஆளுநர் மூலம் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
 
சென்னை, 12.08.2011 

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களின் கருணை மனுவை நடுவண் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியவுடனேயே, அவசர அவசரமாக கருணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்.

 

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது மிகப்பெரும் முரண்பாடாகும்.

 

இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சித்து அதற்காக தண்டனையும் பெற்றவராவார்.

 

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அதனை நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்தார். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி  உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

 

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

 

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில அரசிடம் எழுத்தாளர் சுவேதாதேவி முறையிட்தன் பேரில், மாநில ஆளுநர் தலையிட்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி யிருக்கின்றனர்.

 

 

1960களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலன் என்பவருக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டப் பிறகும், கேரள அரசு தமது ஆளுநரின் மூலம் அவரது தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்திருக்கிறது.

 

எனவே, இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், பேரறிவாள், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்குகின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 17.08.2011 அன்று சைதை பனகல் மாளிகை முன்பு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உணர்வாளர்களும், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் இவ்வார்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி

 

Tuesday, August 2, 2011

பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - பெ.மணியரசன்

பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்! 


ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்தியா நடத்தி வருகின்றது. 2009 மே மாதம் குவியல் குவியலாக ஈழத்தமிழ் பொது மக்களை கொன்றழித்த இராசபக்சேயை திரும்பத் திரும்ப தில்லிக்கு அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, சிறப்பித்து வருகிறது இந்தியா.

 

இப்பொழுது, இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவரையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அழைத்து சிறப்பித்திருக்கிறது.

 

01.08.2011 அன்று மக்களவையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., தமிழக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கண்டனக் குரல் எழுப்பினார்கள். அதனை மக்களைவைத் தலைவர் திருமதி.  மீரா குமாரி கண்டித்துள்ளார். அத்துடன் இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீராகுமாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

 

தமிழினத்தை அழித்த சிங்கள இனவெறி நாட்டின் நாடாளுமன்றக் குழுவை சிறப்பு விருந்தினர்களாக மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அழைத்ததற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், மக்களவைத் தலைவர் மீராக் குமாரியும் தமிழக மக்களிடம் தான் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

 

தமிழினத்தை அழித்தது போல, ஏதாவது ஒரு வெளிநாட்டில் இந்திக்காரர்களையோ, மலையாளிகளையோ அல்லது மற்ற இனத்தவரையோ, ஓர் அரசு அழித்திருந்தால் அந்த அரசின் பிரதிநிதிகளை மக்களவைக்கு அழைத்து கௌரவிப்பார்களா?

 

சிங்கள இனவெறி அரசு தமிழினத்தை பகை இனமாகக் கருதுவதைப் போலவே இந்திய அரசும் தமிழினத்தை பகையினமாகக் கருதுகின்றது என்பது மேலும் மேலும் உறுதியாகின்றது.

 

இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போருக்கு ஆயுத உதவி, நிதி உதவி, அரசியல் உதவி என அனைத்து உதவிகளையும் செய்து அப்போரில் பங்கு கொண்ட இந்தியா, தமிழினத்தை அழித்த தனது சகோதரர்களான சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து இந்திய அரசு பாராட்டுகிறது. இச்செயல் தமிழர்களை தனது சகோதரர்களாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

 

2009 இன அழிப்புப் போரில் இலங்கை அரசு அப்பாவி தமிழ் பொதுமக்களைக் கொன்று போர் குற்றம் புரிந்ததை கண்டித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை அரசின் போர் குற்றங்களை கடுமையாக சாடி பேசினர். அந்நாட்டு பிரதமர் கேமரூன், இலங்கை அரசின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார். அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கை அரசின் போர் குற்றங்களைக் கண்டிக்கும் வகையில் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது.

 

இவ்வாறு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் செய்ததை உலகின் பலநாடுகள் கண்டிக்கும் இவ்வேளையில், இந்திய நாடாளுமன்றம் இலங்கை அரசுப் பிரதிநிதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பாராட்டு செய்ததற்கு இந்தியப்ட பிரதமர் மன்மோகன் சிஙற் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

 

இலங்கை பிரதிநிதிகளைக் கண்டித்து தமிழக நாடா உறுப்பினர்கள் குரல் கொடுத்த போது, அதற்கு ஆதரவாக இதர மாநிலங்களின் உறுப்பினர்கள் ஒருவர் கூட குரல் எழுப்பாதது, இந்தியத் தேசியம் எங்கிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

தமிழர்கள் தங்கள் இனத்தை சூழ்ந்துள்ள பேராபத்தை முறியடிக்க ஈழத்தமிழ் இனத்தைக் காப்பாற்ற தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இது தவிர இப்பொழுது இந்தியாவில் தமிழ் இனத் தற்காப்புக்கு வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

தோழமையுடன், 

பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சென்னை

நாள்: 02.08.2011

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT