உடனடிச்செய்திகள்

Sunday, December 22, 2013

“தமிழின அமைப்புகள் தமிழ்நாடு விடுதலையைத் தங்கள் கொள்கைப் பட்டயமாக வெளியிட வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!

“தமிழின அமைப்புகள் தமிழ்நாடு விடுதலையைத்
தங்கள் கொள்கைப் பட்டயமாக வெளியிட வேண்டும்”
தாமரை அம்மா – இறைக்குருவனார் நினைவேந்தலில்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

‘தென்மொழி அம்மா’ தாமைரைப் பெருஞ்சித்தித்திரனார் மற்றும் ‘திருக்குறள் மணி’ புலவர் இறைக்குருவனார் ஆகியோரது நினைவு மேடைகள் திறப்பு மற்றும் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(22.12.2013) காலை, சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் நடைபெற்றது.

தென்மொழி அம்மா மேடையை பேராசிரியர் இரா.இளவரசு அவர்களும், புலவர் இறைக்குருவனார் மேடையை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவர்களும் திறந்து வைத்தனர். பேராசிரியர் ப.அருளியார் தலைமையேற்றார். தென்மொழி அவையம் திரு. மா.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினர். புலவர் கி.த.பச்சையப்பன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், பேராசிரியர் அரசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஆனூர் செகதீசன் உள்ளிட்ட தமிழறிஞர்களும், தலைவர்களும் உரையாற்றினர். திருவாட்டி இறை.பொற்கொடி, புலவர் கோ.இளவழகன், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள், கட்சி – இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

“பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் திருவாட்டி தாமரைப் பெருஞ்சித்திரனார் மற்றும் ‘திருக்குறள் மணி’ அய்யா புலவர் இறைக்குருவனார் ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இங்கு நடைபெறுகின்றது. அய்யா இறைக்குருவனார் அவர்கள், தஞ்சையில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான் அவரை சென்று பார்ப்பதற்குள் அவர் முடிவெய்தினார். அடுத்த சில நாட்களில், தாமரை அம்மா அவர்கள் இறந்தார்கள்.

சாவுக்குப் பின்னும் சான்றோர்களுக்கு வாழ்வுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், அய்யா இறைக்குருவனார் அவர்களும், தாமரை அம்மா அவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டுள்ளனர். உயிரோடு இருக்கும் போது வாழ்கின்ற வாழ்வைப் பொறுத்தே, இறப்புக்குப் பின்னான வாழ்வு அமைகிறது. இங்கு அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவிடத்திற்கு அருகில் எழுப்பப்பட்டுள்ள பாவாணர் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆகியோரின் சிமெண்ட் சிலைகளை, வெண்கலச் சிலைகளாக மாற்ற வேண்டும். தமிழுணர்வாளர்கள் அனைவரது பங்களிப்போடு, அதை செய்ய முடியும். நாங்களும், அதற்கு எங்களால் இயன்றப் பங்களிப்பைச் செய்கிறோம். தமிழ் இனத்தின் பெருமிதத்திற்குரிய அடையாளமாகத் திகழுகின்ற அவர்களை நாம் போற்றுகின்ற வகையில் இதைச் செய்ய வேண்டும்.

அய்யா இறைக்குருவனார் அவர்கள், பாலவரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது தளபதியாக செயல்பட்டவர். பெருஞ்சித்திரனாரின் தென்மொழிக் குடும்பம், புதிய ஊழிக்குரிய புதிய சிந்தனைப் பள்ளியாக வளர்ந்து வருகின்றது. அறிவார்ந்த தளத்தில் மட்டுமின்றி, அரசியல் தளத்தில் மட்டுமின்றி, தமிழர்களின் வாழ்வியல் தளத்திலும் அவர்கள் செயல்படுகின்றனர். தமிழர் வாழ்வியலின் முன்னெடுத்துக் காட்டாக அவர்களது குடும்பம் திகழ்கின்றது.

தமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகு தான் நான் சாதியை மறுப்பேன் எனச் சொல்லாமல், வாழும் போதே சாதியை மறுத்து வாழ்வது, தமிழில் பெயரிடுவது, தனித்தமிழில் பேசுவது, தமிழ்வழியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என தமிழ்த் தேசிய ஆக்கத் திட்டங்களை நடைமுறை வாழ்வில் நாம் செயல்படுத்த வேண்டும். அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவிடம் அமைந்துள்ள இம்மண்ணில் அதற்கான உறுதிமொழி நாம் எடுக்க வேண்டும்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆனூர் செகதீசன் அவர்கள் இங்கே பேசினார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டுமெனப் பேசினார். நாம் வரவேற்க வேண்டியக் கருத்து அது. ஆனால் எந்தக் கொள்கையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுபடுவது என வரையறுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நம் அனைவருக்கும் பொதுவான ஓர் இலக்கு, பொதுவான ஓர் இலட்சியம் இருக்க வேண்டும். அந்த இலட்சியம், தமிழ்நாடு விடுதலையே! இதை ஏற்று ஒவ்வொரு அமைப்பும் தங்களுடைய இலட்சியமாக தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து, தங்களது அமைப்புக் கொள்கைப் பட்டயத்தை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் தமிழின அமைப்புகளிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன. அதைக் கண்டிக்கிறோம். கண்டிக்கப்பட வேண்டியது தான். ஆனால், அதை மட்டும் தான் நாங்கள் பேசுவோம், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அயலார் குடியேற்றங்களை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என சொல்வதுச் சரியல்ல. தமிழ்நாட்டில் குடியேறுகின்ற அயலினத்தார், தமிழகத்தை கலப்பினத் தாயகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அந்த அநீதியை நம்மில் எத்தனைப் பேர் கண்டிக்கின்றனர்? இன்றுள்ளநிலை தொடர்ந்தால், இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் தமிழ்நாடு கலப்பினங்களின் தாயகமாக மாறிவிடும்.

முதலாளியவாதிகள் ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சியை முன்னிறுத்தி ஐரோப்பிய மையவாதம் - Euro Centric வாதம் என்பார்கள். கம்யூனிஸ்டுகள், இரசியா, சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை மையப்படுத்திப் பேசுவார்கள். அதாவது முதலாளியவாதிகள் ஐரோப்பிய மையவாதம் பேசுவார்கள். கம்யூனிஸ்டுகள் இரசிய மையவாதம், சீன மைய வாதம் பேசினார்கள். இவர்கள் தமிழக மையவாதம் பேசவில்லை. ஆனால், தமிழகத்தில் ஈழவிடுதலையை மையப்படுத்தி ஈழ மையவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒரே இனம்தான். ஆனால், அவர்களுடைய நாடு வேறு நம்முடைய நாடு வேறு. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, தமிழ்நாடு விடுதலையே தமிழ்த்தேசியம். ஈழத்தமிழர்களுக்கு, தமிழீழ விடுதலையே தமிழ்த்தேசியம் ஆகும்.

தமிழ்நாடெங்கும் வெளியார் ஆக்கிரமிக்கப்புகள் நடக்கின்றன. அதைப்பற்றிப் பேசாமல், ஈழத்தில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களை மட்டும் பேசுவார்கள்.

1956ஆம் ஆண்டு, இலங்கையில் தனிச்சிங்களம் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வரலாற்றைப் படிக்க வேண்டும். அது தவறில்லை. ஆனால், அதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் 1938இல், 1948இல், 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப் போராட்டங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதில்லை.

சிலர் நின்று கொண்டிருக்கும் தேரை இழுக்க உழைக்க வேண்டுமெ என்றெண்ணி, ஓடுகின்றத் தேருக்கு வடம் பிடிப்பார்கள். அதைப் போல, ஈழத்தின் பக்கம் தான் இப்போது ஈர்ப்பு உள்ளது என்பதால், ஈழத்துக்காக மட்டும் பேசுவது, தமிழ்நாட்டுத் தமிழர் சிக்கல்களுக்குப் பேசுவதில்லை என்று சொன்னால், அது போலித்தனம் இல்லையா? எனவே, தமிழ்நாடு விடுதலை என்ற இலக்கின் கீழ் நாம் ஒன்றுபடுவோம். தமிழக விடுதலைக்காக அருந்தொண்டாற்றிய அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள இவ்விடத்தில் அதற்கான உறுதிமொழியை ஏற்போம்!

தனிநாடு கேட்டதற்காக, ஏழாண்டுகள் சிறையில் போட்டால் இருப்போம். பத்துப்பேர் நாம் சிறைக்குப் போனால் புதிதாக 100 பேர் உருவாவார்கள். அமைப்பைத் தடை செய்தால், புதிய அமைப்புகள் தனிநாடு கோரி உருவாகும்.

கருப்பின மக்களின் விடுதலைக்காகப் பாடாற்றிய நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகளாகச் சிறையில் வாடினார் எனப் பேசுகிறோம், எழுதுகிறோம். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகப் படைகட்டிப் போராடியது மட்டுமின்றி, தன் குடும்பத்தையே களத்தில் நிறுத்தினார் எனப் பேசுகிறோம், எழுதுகிறோம். ஆனால், இவர்களைப் பின்பற்றி தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராட மாட்டோம், ஈகம் செய்ய முன்வரமாட்டோம் என்றால் என்ன பொருள்?

அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள் 1965இல் DIR என்ற கொடுஞ்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபட்டார். பிரிவினைவாதத் தடைச் சட்டத்தில் சிறைபட்டார். ஆனால், எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு விடுதலையை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. அது போல், அடக்குமுறைகளுக்கும், ஆள்தூக்கிச் சட்டங்களுக்கும் நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஒடுக்கும் ஆளும் வர்க்கம் விடுதலையை எப்பொழும் தங்கத்தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள். விலை கொடுத்துத் தான் வாங்கியாக வேண்டும்.

தேர்தல் மேனாமினுக்கி அரசியலுக்குள் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, தமிழக விடுதலையை நாம் கொண்டு செல்ல முடியாது. போர்க்குணமிக்கப் போராட்டங்களின் வழியே தமிழக மக்களை நாம் திரட்ட முடியும். தமிழக மக்கள் அதை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கின்றனர். இந்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழ் இனத்தை அந்தளவிற்கு பாதித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு விடுதலைக்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம் என நாம் இங்கிருந்து உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்!”


இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். நிறைவில், திரு. அழ.இளமுருகன் நன்றி கூறினார். தென்மொழி குடும்பம் சார்பில் ஏற்பாடான இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.






(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா) 

Wednesday, December 18, 2013

அட்டப்பாடி பழங்குடியினரின் நில உரிமை காப்போம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை

அட்டப்பாடி பழங்குடியினரின் நில உரிமை காப்போம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை

அட்டப்பாடி சிக்கல் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் அருகிலுள்ள அட்டப்பாடியில் பழங்குடியினர் நிலமீட்பு என்ற பெயரில் கேரள அரசு தமிழர்களை வெளியேற்றுகிறது என்ற அச்சம் வெளியிடப் பட்டது.

இது குறித்து உண்மை நிலையை அறிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை செயலாளர் தோழர் இராசேந்திரன், கோவை மாவட்ட சிறுதொழில் அமைப்பான “கோப்மா” அமைப்பின் தலைவர் திரு.கருப்பசாமி, சூழலியலாளர் திரு. இராசபாண்டியன் உள்ளிட்ட குழுவினர் 17.12.2013 அன்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இச்சிக்கலின் அடிப்படை உண்மைகள் தெளிவானது.

சிலர் கருதுவது போல் இது கேரள மலையாள அரசு வழக்கமாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றல்ல.

இச்சிக்கல் அடிப்படையில் அட்டப்பாடியின் மண்ணின் மக்களான இருளர் பழங்குடியி னரின் நில உரிமைச் சிக்கலாகும். இருளர் பழங்குடியினர் அட்டப்பாடியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழ்ப்பேசும் பழங்குடி மக்கள் ஆவர்.

இன்றுள்ள கோவை மாநகர் காடும் விளை நிலமுமாக இருந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தவர்கள் இருளர் ஆவர். விஜயநகரப் பேரரசு படையெடுப்பின் போதும், அதன் பின்னாளில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போதும் தோற்கடிக்கப்பட்டு பெருந்தொகையில் புலம் பெயர்ந்து, அட்டப்பாடி வனங்களில் குவிந்த மக்கள் ஆவர். இன்றும் கோவை கோணியம்மன் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை இருளர்களுக்கே இருப்பதிலிருந்தே அவர்களது இந்த வரலாற்றுத் தடம் தெளிவாகும்.

இம்மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த அட்டப்பாடியில்  பொள்ளாச்சியி லிருந்தும், கோவையிலிருந்தும் சென்ற தமிழர்களும் பாலக்காடுக்கு அப்பால் உள்ள மலையாளிகளும் இருளர் மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பெருமளவு நிலங்களை  சிறு தொகைக் கொடுத்துக் கையகப்படுத்தினர்.

1970 களில் இம்மக்களை அமைப்பாக்கிய உள்ளூர் அமைப்பினரும் தொண்டு நிறுவனத்தினரும், தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் வாயிலாக, 1976 ஆம் ஆண்டு கேரள அரசு பழங்குடி மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நில மீட்பு சட்டம் ஒன்றை இயற்றியது.

அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்தே 1986 இல் இதற்கான விதி முறைகள் வரையப்பட்டு செயலுக்கு வந்தன. இதனைக் கேரள அரசு சரி வர அமல்படுத்த வில்லை என்ற வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று அதனடிப்படையில் இதை செயல்படுத்துமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இதற்கு இணங்க கேரள அரசு நிலமீட்பு ஆணைப்பிறப்பித்தது. இதன்படி பழங்குடியி னரிடம் நிலம் வாங்கிய புதிய உரிமையாளர்களின் 5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலமே கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்வரம்பின் படி ஏற்கெனவே பலர் மிகுதியுள்ள தங்கள் நிலத்தை ஒப்படைத்துவிட்டனர். மீதமுள்ள 77 பேருக்கு கேரள அரசு அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது. இவர்களில் 19 பேர் மட்டுமே தமிழர்கள். மீதமுள்ள 58 பேர் மலையாளிகள் ஆவர்.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கியுள்ள சிலருக்கு மாற்று இடம் தருவதற்கும் கேரள அரசு இணங்கியுள்ளது.

இச்சிக்கலில் பெருமளவு நிலமிழந்த இருளர்கள் தமிழ் பழங்குடியினர் (ஆதிவாசிகள்) ஆவர். அவர்களது நில உரிமையை மீட்பது நல்லெண்ணம் கொண்டோர் அனைவரது கடமையுமாகும். ஒரு வேளை இச்சட்டத்தின் கீழ் மீண்டும் நிலம் பெருவோர் மலையாள மொழி பேசும் பழங்குடி மக்களாக இருந்தாலும் அவர்களது நில உரிமையை சமவெளித் தமிழர்களின் பெயரால் மறுப்பதை ஏற்க முடியாது.

பஞ்சமி நில உரிமைப் போலவே, பழங்குடியினரின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.

இருளர் உள்ளிட்ட அட்டப்பாடி பழங்குடி மக்களின் நில மீட்பு உரிமையை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரிக்கிறது.

இருளர்களிடமிருந்தும், சமவெளி மக்கள் உள்ளிட்டு வேறு மக்களிடமிருந்தும் சுஸ்லான் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு வடநாட்டு நிறுவனங்கள், அரசியல் பெரும் புள்ளிகள் ஆகியோர் பல நூறு ஏக்கர் நிலங்களை அட்டப்பாடி பகுதியில் வளைத்துப் போட்டுள்ளனர். அவர்களையும் வெளியேற்றி உரிய மக்களுக்கு நிலம் மீட்டுத்தர கேரள அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கி.வெங்கட்ராமன்
இடம்:சென்னை
 
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Monday, December 9, 2013

ஆவடியில் குவிந்த வட இந்தியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! த.தே.பொ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது!

ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்ககளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தோழர்கள் 30 மேற்பட்டோர் கைதுசெய்யபட்டுள்ளனர்.

சென்னை ஆவடியில் இந்திய அரசு பாதுகாப்புத்துறை நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது. இதில் தையல் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு இன்று நடைபெற்றது.
வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராஷ்ட்டிராவை சேர்ந்த வடஇந்தியர்கள்.

தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனத்தில் தமிழர்களைப் புறக்கணித்து மறைமுகமாக ஆயிரக்கணக்கான வடநாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் இந்திய அரசின் இந் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்க கோரியும் இன்று (08.12.203 ) காலை 10.30 மணிக்கு சென்னை ஆவடியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆவடி அண்ணாசிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதை கமுக்கமாக அறிந்த காவல்துறையினர் நூற்றுக்கணக்கான காவல்துறையினரை அங்கு குவித்தனர்.
கடைகள், சாலையோரம் என நின்றிருந்தவர்களை அச்சுருத்தும் விதமாக விசாரித்து ஆர்ப்பாட்டத்தை நடைபெறவிடாமல் தடுக்க காவல்துறையினர் கடும் நெருக்கடியளித்தனர்.
முன்னதாக வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணி தோழர்களை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னரே வலுக்கட்டாயமாக கைது செய்து வண்டியில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்க்குழு உறுப்பினர் தோழர்.க.அருணபாரதி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திரு இராச .முருகன், நாம் தமிழர் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் திரு நா.முகிலன் ம.தி.மு.க நகர செயலாளர் திரு இணையதுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆதவன், தி.க மாவட்டத் தலைவர் முருகன், தமிழர் தன்மானப் பாசறை அமைப்பாளர் திரு, திருநாவுக்கரசு, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் காவல்துறையினரால் வலுக்க்கட்டாயமாக கைது செய்துசெய்யப்பட்டனர்.

அப்போது காவல்துறையினருக்கும் தோழர்களுக்குமிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “வெளியேற்று வெளியேற்று, இந்திக்காரர்களை வெளியேற்று,! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடு” என்று அப்போது முழக்கங்கள் எழுபப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க சார்பில் சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் இளங்குமரன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி கிளை செயலாளர் தோழர்.வி.கோவேந்தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள இராஜா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலை 06.00 மணியளவில் விடுதலை செய்தனர்.

960092_499801306800625_2128856155_n
1426513_499799620134127_726610020_n
1459749_499811753466247_1408311422_n
1459850_499811710132918_726979559_n
1461234_499800136800742_1512321176_n
1463949_499804780133611_671394000_n
1465196_499794763467946_1870592226_n (1)
1465196_499794763467946_1870592226_n
1468564_499804613466961_391541235_n
1471403_499804536800302_2124728176_n
1472887_499801263467296_90284318_n
1479288_499794720134617_1517472878_n
20131209r_013101006 copy
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Friday, December 6, 2013

தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம்!


தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம்!

சமத்துவம், மனித உரிமை காக்கும் போராட்டங்களின் உலக தழுவியக் குறியீடாக வாழ்ந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95 ஆவது வயதில் நேற்று (05.12.2013) இரவு காலமானார் என்ற செய்தியை தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் சுமா அறிவித்த போது, தமிழர்கள் உள்ளிட்ட மனித நேய உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.

மாமனிதர் - தலைசிறந்த மகத்துவப் போராளி மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.

கற்பனையிலும் கருதிப்பார்க்க முடியாத நிறவெறி ஒடுக்குமுறையின் கீழ், தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்கள் சிக்கி நசுக்குண்டு இருந்த போது, இளம் வயதிலேயே மண்டேலா நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார்.

வால்டர் சிசிலு, ஆலிவர் டேம்போ ஆகியோரோடு இணைந்து, ஆப்ரிக்க தேசியக் காங்கிரசின் இளைஞரணியின் தலைமைக்குழுவுக்கு வந்ததிலிருந்து, அவரது போராட்ட வாழ்வு தீவிரம் பெற்றது.

வெள்ளை நிறவெறிக்கு எதிரான, கருப்பின மக்களின் சம உரிமைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்தி வந்த மண்டேலா, வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறைகள், கண்மண் தெரியாத கைதுகள், சித்திரவதைகள் ஆகியவற்றை எதிர் கொண்டு, ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டது.

1961இல், ”தேசத்தின் ஈட்டிஎன்ற பெயரில் மண்டேலா தலைமையிலான தோழர்கள், சிசுலு, தென்னாப்பிரிக்கக் கம்யுனிஸ்ட் கட்சித் தோழர் ஜோஸ் லோவா ஆகியோர் உருவாக்கிய விடுதலைப்படை வீரஞ்செறிந்த கருப்பின மக்களின் போராட்டத்தை வழிநடத்தியது.

இன சமத்துவத்திற்கானப் போராட்டத்தில், தொழிலாளிகளை ஈடுபடுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை வழிநடத்தியதால், 1961-இல் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, சிறையிலிருந்தபடியே 1963இல் ரிவோனியா சதி வழக்கில் விசாரிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

அச்சதி வழக்கு விசாரணையையே கருப்பின மக்களின் சமத்துவத்திற்கான விவாதக் களமாக மண்டேலா மாற்றினார். ஜவனர்பெர்த் நீதிமன்றத்தில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை, தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் தணிக்கைக் கெடுபிடியைத் தாண்டி தென்னாப்பிரிக்கா எங்கும் பரவியது. உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் அவருடைய உரை இடம்பெற்றது. அது, மேற்குலகம் உள்ளிட்ட உலக நாடுகள் எங்குமுள்ள மனித நேயர்களை வீதிக்கு அழைத்தது. ”மண்டெலாவை விடுதலை செய்! நிறவெறி அரசு ஒழிக!” என்ற முழக்கம் உலக நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

ரோபன் தீவு தனிமைச் சிறையில் கொடுமையான சூழலில் அடைபட்டிருந்த போதும், கருப்பின மக்களின் விடியலுக்கானப் போராட்டத்திற்கு சிறையிலிருந்தபடியே தலைமை தாங்கினார் மண்டேலா.

நெடிய போராட்டத்தின் விளைவாகவும், உலகம் முழுவதும் அப்போராட்டத்திற்கு ஏற்பட்ட வலுவான ஆதரவினாலும் 1993 - இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க கருப்பின மக்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றத் தேர்தலில், ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. 1994 தொடங்கி 1999 வரை, நெல்சன் மண்டெலா தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகச் செயல்பட்டார்.

மிக நீண்ட காலம் ஒடுக்குண்டு இருந்த  கருப்பின மக்களிடம் பொங்கி வந்த பழிவாங்கும் உணர்ச்சி, தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்கு எதிராக திரும்பி விடாமல் பாதுகாக்கும் அரணாகவும் மண்டேலா திகழ்ந்தார். நிறவெறி ஆட்சியில் கொடுங்கோன்மை புரிந்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை தண்டித்து, அதே நேரம் வெள்ளையின மக்களுடன் கருப்பின மக்களுக்கு நல்லிணக்கம் ஏற்படுத்திய செயலிலும் மண்டேலா வெற்றி பெற்றார்.

1999க்குப் பிறகு, அரசு மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகி, எய்ட்ஸ் ஒழிப்புப் பணியி்ல் முழுக்கவனம் செலுத்தினார்.

அமைதிக்கான நோபல் பரிசு, ஆர்தர் ஆப் லெனின், பாரத ரத்னா உள்ளிட்ட 205க்கும் மேற்பட்ட உயர் விருதுகளை மண்டேலா பெற்றார்.

கடந்த ஓராண்டாக மூச்சுத் திணறல் நோயில் பாதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, 05.12.2013 இரவு தனது கடைசி மூச்சை நிறுத்தினார்.

உலகில் எங்கு இன சமத்துவத்திற்கு, ஒடுக்குண்ட இனங்களின் விடுதலைக்கு போராட்டங்கள் நடைபெற்றாலும், அவற்றுக்கு ஒரு மாபெரும் உந்து விசையாக நெல்சன் மண்டேலா திகழ்வார்.

தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது. அவருடைய பிரிவால் துயரமடைந்திருக்கும், ஆப்ரிக்க மக்களோடும், உலகெங்குமுள்ள ஒடுக்குண்ட மக்களோடும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

இங்ஙனம்,
                                      கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.


இடம் : சென்னை

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT