புலிகள் தாக்குதலில் இலங்கையில் இந்திய அதிகாரிகள் காயம்
இந்திய அரசின் படை உதவிக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதலில் கடந்த 09.09.08 அன்று இரவு வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் கூறுகிறது. சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாக்கூர் ஆகிய அவ்விருவரும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் பொறியாளர்கள் ஆவர்.
இந்திய அரசு தரும் படைவகை உதவியோடு, நேரடியான படையாட்கள் துணைக் கொண்;டு தான் சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துகிறது என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் சிறீலங்கா அரசு நடத்துவது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலைப் போராகும். சிங்களப் படை தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக புலம் பெயர்ந்து உணவும், மருந்தும் இன்றி மரத்தடி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட மனித நேய அமைப்புகள் பலவும் கண்டித்து வருகின்றன.
இந்த உள்நாட்டு போரில் தாம் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே இந்திய அரசு இலங்கைக்குப் போர்ப் படகுகளையும், ரேடார், எக்ஸ்ரே பைனாகுலர் உள்ளிட்ட கருவிகளையும் அளித்து வருகிறது. ஆயினும் நேரடி இராணுவத் தலையீடு செய்யவில்லை என்பதாகவே இந்திய பிரதமரும் உயர்மட்ட அதிகாரிகளும் கூறி வந்தனர்.
ஆனால் இது உண்மைக்கு மாறான தகவல் என்பதை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் காயம்பட்டுள்ள செய்தி தெளிவாக்குகிறது.
இந்தியாவின் இவ்வாறான படை வகை உதவிகளைக் கொண்டு தான் ஈழத் தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் அன்றாடம் சிங்களப் படை கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.