உடனடிச்செய்திகள்
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, December 22, 2020

"தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்றால் சிறந்த நடிகர் என்று பொருள்! !" - ஐயா பெ. மணியரசன் சாட்டை!

"தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்றால் சிறந்த நடிகர் என்று பொருள்! !"


“தமிழ்நாட்டில் நிலவும் தற்கால அரசியல்
 சூழல் பற்றிய வினாக்களுக்கு விடை!”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் சாட்டை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, August 5, 2019

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!
இன்று (05.08.2019) சம்மு காசுமீர் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பை, முற்பகல் உள்துறை அமைச்சர் அமீத்சா மாநிலங்களவையில் வெளியிட்டார். அதில் சம்மு – காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமைகள் கொண்ட உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல, சம்மு – காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதிலும், லடாக் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது!

சம்மு காசுமீர் மக்களின் தேசிய இன உரிமைகளைப் பறித்து பா.ச.க. ஆட்சி நிகழ்த்தியுள்ள சனநாயகப் படுகொலையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆங்கிலேய ஆட்சியின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, சம்மு காசுமீர் மன்னராட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது. இந்திய விடுதலையின் போது, சம்மு காசுமீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள பாக்கித்தான் கேட்டது; இந்தியா தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கேட்டது. பாக்கித்தானிலிருந்து படையெடுத்து வந்த ஒரு பிரிவினர் – காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்தப் பகுதிதான் இப்போது பாக்கித்தானில் உள்ள “ஆசாத் காசுமீர்”. காசுமீரைக் கைப்பற்ற இந்தியப் படைகளும், பாக்கித்தான் படைகளும் மோதிக் கொண்டன.

அந்த நேரத்தில், காசுமீர் மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் அரிசிங் அந்த ஒப்பந்தத்தில் 26.10.1947 இல் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுண்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்துப் போட்டார். அதில் தனி நாடாக இருந்த சம்மு காசுமீரின் தன்னுரிமைக்கு – தன்னாட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.

அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் சவகர்லால் நேரு, “சம்மு காசுமீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காசுமீர் யாருடன் இருப்பது என்பதை காசுமீர் மக்களே முடிவு செய்யட்டும்” என்று உறுதி கூறினார். இந்த உறுதிமொழியை அன்றைய பாக்கித்தான் தலைமையமைச்சர் லியாகத் அலிகானுக்கு நேரு 31.10.1947 அன்று தந்தியாகக் கொடுத்தார். பின்னர், 1953ஆம் ஆண்டு ஆகத்து 20 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேருவும், பாக்கித்தான் தலைமையமைச்சர் முகமது அலி போக்ராவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் காசுமீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாக்கித்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி சம்மு காசுமீரிலும், ஆசாத் காசுமீரிலும் “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்து சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் கொடுத்த தனிச்சிறப்புரிமைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

சம்மு காசுமீர் சட்டப்பேரவை – அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும். சம்மு காசுமீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு. சம்மு காசுமீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்கத் தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் இருக்கின்றன.

இவற்றைவிடக் கூடுதல் உரிமைகள் சம்மு காசுமீருக்கு ஏற்கெனவே இருந்தன. 1952இல் சம்மு காசுமீர் முதலமைச்சர் தலைமையமைச்சர் (பிரதமர்) என்று அழைக்கப்பட்டார். அங்கு ஆளுநர் பதவி இல்லை!

இவற்றையும் இன்னபிற காசுமீர் அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சி பறித்துவிட்டது. இப்போது, இதர இந்திய மாநில அரசுக்குள்ள மிகக்குறைந்த அதிகாரங்களையும் பா.ச.க அரசு பறித்துவிட்டது.

சம்மு காசுமீரை இரண்டு மாநிலங்களாக்கி - யூனியன் பிரதேசமாக மாற்றியதை இப்போது நாம் கண்டிக்கிறோம். இனி, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களையும் இதேபோல் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியின் முன்னோட்டம் தான் சம்மு காசுமீர் பிரிவினையும் உரிமைப்பறிப்பும்!

சம்மு காசுமீரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் சனநாயகக் கட்சி போன்றவை தங்களின் பதவி வெறிக்காக காங்கிரசு, பா.ச.க. கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. இன்னொருபக்கம், மக்களுக்கு வெளியே வெடிகுண்டு விடுதலைப் போராளிகள் நடத்தும் தீவிரவாதச் செயல்கள், மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை தீவிரப்படுத்தத்தான் பயன்படுகின்றன.

காசுமீரின் அவ்விரு கட்சிகளைப் போன்றவைதான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். காசுமீருக்கு ஏற்பட்டது போன்ற ஆபத்துகள் தமிழ்நாட்டிற்கு வந்தால் இவ்விரு கழகங்களாலோ, இவைபோல் முதலமைச்சர் – அமைச்சர் அதிகாரத்துக்காக மூச்சை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளாலோ தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியாது!

பதவி ஆசையற்ற இலட்சியத் தமிழ்த்தேசியத்தின்பால் இலட்சோப இலட்சம் வெகுமக்கள் திரண்டு அறப்போராட்டம் - சனநாயகப் போராட்டம் நடத்தும் ஆற்றல் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளை காக்க முடியும் என்ற படிப்பிணையைத் தமிழர்கள் பெற வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, June 7, 2019

அரசியல் ஒருங்கிணைப்பு அவரசத் தேவை! தோழர் கி. வெங்கட்ராமன்.

அரசியல் ஒருங்கிணைப்பு அவரசத் தேவை! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மக்கள் இயக்கத்தவரும், சனநாயகத்தில் பற்றுள்ள பலரும் அதிர்ச்சியடையும் வகையில் முன்பைவிட அதிகப் பெரும்பான்மையில் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய சனதா கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைந்துள்ளது. விரைவில் மாநிலங் களவையிலும் பா.ச.க. பெரும்பான்மை பெற்றுவிடும்.

செல்லா நோட்டு அறிவிப்பு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.), சனநாயக உரிமைப் பறிப்பு போன்றவை நிகழ்ந்தாலும், அவற்றைவிட ஆரியத்துவ இந்தியத் தேசியத்தின் மீது மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டிருப்பதால், மோடிக்கு இந்த பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

வட மாநிலங்களைச் சேர்ந்த இந்தி தேசிய இன மக்கள், தங்களது இந்திப் பேரரசுக்கு வந்துள்ள ஆபத்திலிருந்து பாதுகாப்பதில் முரணற்ற உறுதியான தலைமையாக பா.ச.க.வின் மோடியை கருதிக்கொண்டார்கள். இந்த இந்தி மாநிலங்களும் வெவ்வேறு அளவுகளில் ஆரியமயமாகிப் போன - சமற்கிருத மேலாதிக்கத்திற்கு உள்ளான பிற மாநில மக்களில் கணிசமானோரும் இதே உளவியலுக்கு ஆட்பட்டிருந்தனர்.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை தொடரும் என்று பாரதிய சனதா அமைச்சர் நிதின் கட்கரி கொக்கரித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதுதான் ஐட்ரோகார்பன் திட்டங்கள் அடுத்தடுத்து நகர்த்தப் பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் பா.ச.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இருந்த நேரத்தில் தான், மதுரை தமிழன்னை சிலையை ஆரிய சமற்கிருத வடிவத்தில் பளிங்கும் பைபரும் கலந்த பொருளில் நிறுவவேண்டும் என்று பா.ச.க.வின் அடிமை எடப்பாடி அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

ஆரியத்துவ இனவாதத்திற்கும் தமிழ்நாட்டின் மீதான வளச்சுரண்டல் மற்றும் தமிழ்நாடு புறக்கணிப்பிற்கும் உள்ள இணைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழில் முதலாளியம், அதன் பிறப்பிலிருந்தே தன்னுடைய சந்தை வேட்டைக்கும் வளச் சுரண்டலுக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் இன உணர்வின் துணையோடு தான் இயங்கியது.

“பிறப்பிலிருந்தே முதலாளியமானது இனவாத முதலாளியமாகவே (Racial Capitalism) இருந்தது” என பிரடெரிக் ஜே. இராபின்சான் என்ற ஆய்வாளர் கூறுவது கவனிக்கத்தக்கது. (காண்க : Black Marxism).

தங்களது இந்திப் பேரரசைக் கட்டமைப்பதற்கான திட்டங்களாக கருதுவதால்தான், பெரும் எண்ணிக்கையிலான வடநாட்டு மக்கள் இந்திய அரசின் சுரண்டல் திட்டங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

“மனிதர்கள் மனத்தால் ஆனவர்கள்” என்றார் இத்தாலியப் பொதுவுடைமைத் தலைவர் கிராம்சி. இந்த உண்மையை பொதுவுடைமைவாதிகளும் புரிந்து கொள்ள வில்லை, மக்கள் இயக்கத்தவரும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், ஆதிக்கவாதிகள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோளாறு இருப்பதால்தான், மக்கள் உரிமைப் போராட்டத்தில் முதல் வரிசையில் இருக்கும் தமிழ்நாடு பேரெழுச்சி கொள்ள முடியாமல் தவிக்கிறது.

ஏற்கெனவே வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி.யின் ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு சூழலியல் தாக்க அறிக்கையை அணியப்படுத்துவது என்ற வகையில், செயல் திட்டங்கள் தொடங்கிவிட்டன. காங்கிரசு கட்சி ஆண்டபோது தொடங்கப்பட்ட சமற்கிருதத் திணிப்பு – இந்தித்திணிப்பு பா.ச.க. ஆட்சியில் தீவிரம் பெற்றுள்ளன.

தொடர்வண்டி நிலையங்களில் இனி ஆங்கிலம் இந்தியில் மட்டும்தான் அறிவிப்புகள் இருக்கும், தமிழில் இருக்காது என்ற செய்தி கசியவிடப்பட்டு விவாதத்தில் இருக்கிறது. மோடி கூடுதல் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ள இச்சூழலில் இவை இன்னும் வேகம் பெறும்.

தமிழ்நாட்டுக்குள் அனைத்துத் தொழில்களிலும் வேலைகளிலும் படையெடுத்து வரும் இந்திக்காரர்கள் மோடியின் வெற்றியால் கூடுதல் துணிச்சல் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அணுஉலை, ஐட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, நியூட்ரினோ, சாகர் மாலா போன்ற அனைத்துமே வெறும் நில வெளியேற்றம், தண்ணீர் மாசுபாடு, மண்வளக் கேடு, சுற்றுச்சூழல் அழிப்பு என மேலோட்டமாகப் புரிந்து கொண்டால், இவற்றை எதிர்கொள்வது மிகக்கடினமானது. இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இங்கு படையெடுத்து வருவதும், சுற்றுச்சூழல் அழிப்புத் திட்டங்களும் - அடிப்படையில் தமிழர் தாயகப் பறிப்புத் திட்டங்களாகும்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, தமிழர் தாயகப் பாதுகாப்புப் போராட்டமாக இதை முன்னெடுத்தால்தான் தனித்தனியான போராட்டங்களிடையே ஒருங்கிணைவு ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

அதேபோல், காவிரிச் சிக்கல் என்பது வெறும் தண்ணீர் பகிர்வு சிக்கலல்ல - அது ஓர் இனச்சிக்கல் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். வெறும் தண்ணீர் பகிர்வுச் சிக்கலாக இருந்தால் அவை அரசுகளின் பேச்சுவார்த்தை வழியாகவோ சட்டப் போராட்டத்தின் வழியாகவோ தீர்க்கப்பட்டிருக்கும்.

ஏழு தமிழர் விடுதலையிலும் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டிய ஆளுநர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் இழுபறி செய்து கொண்டிருப்பது - சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்குப் பலனளிக்குமானால், அது செயல்படாது என்பதையே காட்டுகிறது.

கேள்விமுறையற்று தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களப் படையால் வேட்டையாடப் படுவதும் குசராத் மீனவர்கள் பாக்கித்தான் நாட்டோடு சட்டத்தின் ஆட்சி தரும் பயன்களைப் பெறுவதும் இதே காரணத்தினால்தான்!

காவிரிச் சிச்கலாக இருந்தாலும், கடலோடி மக்களின் பிரச்சினையாக இருந்தாலும், சூழலியல் சிக்கலாக இருந்தாலும், சமற்கிருத - இந்தி மொழித் திணிப்பாக இருந்தாலும், வெளியார் சிக்கலாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ஆரியத்துவ இந்தியாவின் தமிழினப் பகைதான்!

மேற்சொன்ன சிக்கல்கள் அனைத்துமே தமிழின ஒதுக்கல் என்ற இந்திய அரசின் ஒட்டுமொத்த செயல் திட்டத்தின் வெவ்வேறு கூறுகளாகும். ஆரியத்துவ இந்தியா - வளர்ச்சி பெறுவதற்கும் வல்லரசு ஆகுவதற்கும் இவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற பரப்புரையை ஏற்பதால்தான் இந்திக்காரர்களுக்கு - வடஇந்தியர்களுக்கு இது இசைவானதாக அமைகிறது.

வெளியார் வேட்டையினால் பயன்பெறுவதில் இந்திக்காரர்களும் இருக்கிறார்கள். “பாரதப் பேரரசு என்பது எங்களது ஆரியத்துவ இந்திப் பேரின அரசு” எனப் பெருமிதம் கொள்வதால், வடஇந்திய பெரும் பரப்பில் வாழும் மக்கள் அதற்கு இசைவு தருகிறார்கள்; ஆதரவாக அணிதிரள்கிறார்கள். ஆனால், பாதிக்கப்படும் முனையில் உள்ள தமிழர்கள் இவற்றை தமிழினச் சிக்கல் என தெளிவு பெறாததால் ஒன்று திரள முடியாமல் தனித்தனிப் போராட்டங்களாக நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அரசியல் என்பது தமிழர் ஒன்றிணைவை தடுக்கிற இன்னொரு காரணியாகும். பெருங்குழுமங்களும் கட்சிகளும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்த ஒட்டுண்ணி முதலாளியம் (Crony Capitalism) வளர்ந்திருப்பதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலே இதற்கு அண்மையச் சான்று!

தேர்தல் சனநாயகம் என்பது பணநாயகமாக சீரழிந்து விட்டதை 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுதான் நிலை! இங்கு கட்சிகளிடையே தேர்வு என்பது “பெப்சி குடிப்பதா? கொக்ககோலா குடிப்பதா?” என்பதுதான்!

எனவே, நடக்கின்ற மக்கள் உரிமைப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியே நடக்கிறது. சனநாயகத்திற்கு தேர்தல் நடைபெறுவது அவசியமானது தான் என்றாலும், நடப்பிலுள்ள தேர்தல் அரசியலானது பதவி அரசியலாகவும், பண அரசியலாகவும் மாறிப் போயிருக்கிறது.

கம்பெனிகளின் பணத்தில் கட்சிகள் தேர்தலை சந்திப்பதும், அரசுப் பதவிக்கு வரும் கட்சிகள் மட்டு மின்றி எதிர்வரிசையில் அமரும் கட்சிகளும் இந்த கம்பெனிகளுக்குப் பணியாற்றுவதிலேயே தங்கள் பதவிக்கான கடமையாகக் கொண்டுள்ளார்கள்.

இந்தக் கம்பெனிகளின் காட்டாட்சி ஆரிய இன மேலாதிக்கத்தோடு இணைகிறது. இந்நிலையில் இயற்கை வளச்சுரண்டலுக்கு எதிரானப் போராட்டத்தை அனைத்திந்திய அளவில் ஒருங்கிணைப்பதோ தேர்தல் அரசியலின் வழியாக ஒருங்கிணைப்பதோ கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும்!

கட்சி அரசியலின் வரம்பை இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே உணர்ந்த காரணத்தினால் தான் காந்தியடிகள், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசுக் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று கூறினார். “கட்சியற்ற சனநாயகம்” (Partyless Democracy) என்பதை காந்தி கனவு கண்டார்.

காந்தியடிகளுக்கு முன்னால், இதனை எம்.என். இராய் சிந்தித்தார். கட்சியற்ற சனநாயகம் என்பதை முதன் முதலில் முன்மொழிந்தவர் எம்.என். ராய்தான்! இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூலவராக இருந்த எம்.என். ராய், பன்னாட்டு பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட எம்.என். ராய் பின்னாளில் மார்க்சியத்தைவிட்டு விலகி “புரட்சிகர மனிதநேயம்” (Radical Humanism) என்ற கோட்பாட்டை முன் வைத்தார்.

மார்க்சியம் கூறிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முற்றலும் மறுத்த எம்.என். ராய், நாடாளுமன்ற சனநாயகமும் வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தைத்தான் வழங்கும் என்று திறனாய்வு செய்தார். இவற்றிலிருந்து மீள்வதற்கான வழியாக கட்சியற்ற சனநாயகம் என்பதை முன்வைத்தார். அதற்கேற்ப, தான் தலைமை தாங்கி வழிநடத்திய “புரட்சிகர மனிதநேயக் கட்சி” என்பதை “புரட்சிகர மனிதநேய இயக்கம்” என்பதாக மாற்றினார்.

காந்தியடிகளும் சரி, எம்.என். ராயும் சரி அமைப்பு என்பதையே முற்றிலும் மறுத்துவிடவில்லை. ஆயினும், மிகவும் நெளிவு சுழிவான - தொளதொளப்பான அமைப்பை அவர்கள் முன்வைக்கிறார்கள். எம்.என். ராய் அறம் சார்ந்த தனி மனிதர்கள் ஒருங்கிணைவிற்கு கூடுதல் அழுத்தம் தருகிறார்.

எம்.என். ராயும், காந்தியும் தாங்கள் முன்வைத்த கிராமம் சார்ந்த வேர்மட்ட சனநாயகத்தை இதற்கு நேர் முரணான இந்தியத்தேசியத்துடன் இணைக்க முயன்றார்கள். காந்தி இந்தியத்தேசியத்தோடு, இந்தித் திணிப்பு - வர்ணாசிரம சனாதனம் - ஆரியப் பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்தினார். எனவே, இவர்களின் மாற்று சனநாயகக் கோட்பாடு, தன் முரண்பாட்டில் சிக்கிக் கொண்டு தன்னைத் தானே முறியடித்துக் கொள்கிறது. எனவே, அவைப் பின்பற்றத் தக்கவையாக அமையாமல் பின்தங்கிவிட்டன.

நமக்கு முன் உள்ள இந்த எடுத்துக்காட்டுகள், முன் முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய படிப்பினையை பெற்றுக் கொண்டு, உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

தேர்தல் அரசியல் அடிப்படையில் பதவி அரசியலாக - பண அரசியலாக மாறி நீண்டநாள் ஆகிவிட்டது. இதற்கு மேல் இந்தியக் கட்டமைப்பில் தேர்தல் அரசியலின் பங்களிப்பும் மிகமிக வரம்புக்குட்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தேர்தல் அரசியலில் பங்கு பெறாதவர்கள் அல்லது பதவி எதற்கும் போட்டியிடாமல் தேர்தலில் பங்கெடுப்பவர்கள் அல்லது தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆகிய அனைத்துத் தளங்களிலும் உள்ள உரிமைக்குப் போராடும் மக்கள் இயக்கங்கள் தேர்தலை முதன்மைப் படுத்தாமல், மக்கள் போராட்டங்களை முதன்மைப்படுத்தி முன்னேறுவது தான் ஒரே வழி என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், மண் காப்புப் போராட்டங்கள், மலைக் காப்புப் போராட்டங்கள், நீர் வள - கடல் வளப் பாதுகாப்புப் போராட்டங்கள், ஆற்று நீர் உரிமைப் போராட்டங்கள், மொழியுரிமைப் போராட்டங்கள், வழிபாட்டுரிமைப் போராட்டங்கள், கல்வி உரிமைப் போராட்டங்கள், சனநாயக உரிமைப் போராட்டங்கள், சாதி ஆதிக்கத்திற்கும் - வர்க்கச் சுரண்டலுக்கும் எதிரான சமத்துவப் போராட்டங்கள், பாலின சம உரிமைப் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களும் தங்கள் தங்கள் தனித்தன்மையையும் தனித்த அடையாளத்தையும் தனித்த தலைமையையும் தக்க வைத்துக் கொண்டு தொடர்கிற அதேநேரத்தில், ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத் தேவை எழுந்திருக்கிறது.

நிலவும் மக்கள் இயக்கப் பன்மையை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைவதற்கு மிக முகாமையான தேவை கருத்தியல் ஒருங்கிணைவுதான்! தங்கள் தங்கள் தளத்தில் மாற்றுத் திட்டங்களையும் மக்கள் போராட்டங்களையும் சிந்திக்கும்போது, இந்தக் கருத்தியல் தளத்தைக் கண்டறிய முடியும்!

ஐட்ரோகார்பன் திட்டத்தையும், அணு உலையையும் எதிர்ப்போர் இவற்றுக்கான மாற்றுத் தொழில் நுட்பங்களை முன்வைக்க வேண்டிய தேவை எழுகிறது. அந்த நிலையில், கதிரவன் மின்சாரம், காற்றாலை மின்சாரம், கடல் அலை மின்சாரம் போன்றவற்றை மாற்று வழிகளாக முன்வைக்கிறோம். கழிவுகளிலிருந்தும் எரிவளி எடுத்துக் கொள்வதும், மின்சார ஊர்திகளையும் பொதுப் போக்குவரத்தையும் மாற்றுத் திட்டங்களாக முன்வைக் கிறோம். அதேபோல், காவிரி உரிமையை வலியுறுத்தும் அதேநேரத்தில் உள்ளூர் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் திட்டங்களையும் முன்வைக்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் விதை ஆதிக்கத்தையும், வேதி வேளாண்மையையும் எதிர்க்கும்போது அவற்றிற்கு மாற்றாக மரபு விதைகளையும், மரபுத் தொழில்நுட்பத் தையும் முன்வைக்கிறோம்.

இந்தி - ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கும்போது, கல்வியிலும் ஆட்சியிலும் நீதி நிர்வாகத்திலும் தமிழே இருக்க வேண்டுமென மாற்றுகளை முன்வைக்கிறோம். சமற்கிருதத் திணிப்பை முறியடித்து தமிழில் வழி பாட்டையும், பன்முகப்பட்ட தமிழர் ஆன்மிகத்தையும் முன்வைக்கிறோம்.

பெருந்தொழில், பெரிய அணைக் கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு பதிலாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், சிறிய அணைக்கட்டுகள், சிறிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்கள் போன்வற்றை முன் மொழிகிறோம். வேளாண்மையையும், அது தொடர்பான தொழில்களையும் பாதுகாத்துக் கொண்டு சிறிய நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான நவீனத் தொழில் நுட்பங்களை ஏற்கச் சொல்கிறோம்.

மையப்படுத்தப்பட்ட அதிகாரக் கட்டமைப்பை எதிர்க்கும் நேரத்தில், அதற்கு மாற்றாக கிராம மட்டத்திலும், உள்ளூர் அளவிலும் அதிகாரம் பரவலா வதை தமிழ்நாடும், புதுவையுமே பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு இடையிலான கூட்டாட்சியாக தமிழ்நாடு நிலவ வேண்டுமென்றும் கூறுகிறோம்.

இவ்வாறு துறைதோறும் துறைதோறும் மண்ணுக்கும் மரபுக்கும் ஏற்ற மாற்றுகளை அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்கள் முன்வைத்தே வருகிறார்கள்.

இந்த மாற்றுத் திட்டங்கள் அனைத்துமே தமிழர் உரிமை - தமிழ் மொழி உரிமை - மக்களை அதிகாரப்படுத்துதல் - தமிழர் அறிவியல் - தமிழர் அறவியல் போன்றவற்றோடு இணைந்திருப்பதை கண்டுணர முடியும். இவை அனைத்திற்குமான கருத்தியல்தான் தமிழ்த்தேசியம் என்பதாகும்!

மண்ணுரிமையையும், மக்கள் உரிமையையும் பாதுகாக்க முனைவோரின் விழைவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல்!

கோட்பாட்டளவில் வலதுசாரிக் கருத்துடையோரும், இடதுசாரிக் கருத்துடையோரும் தமிழ்த்தேசியம் என்ற பொதுக்கருத்தியலில் செயல்பட வேண்டும் எனக் கோருகிறோமே தவிர, இன்றைய வளர்ச்சி நிலையில் தமிழ்த்தேசியம் என்பதே பிற்போக்குத்தனங்கள் அனைத்தையும் விட்டொழித்த முற்போக்கான இடதுசாரித் தன்மையுள்ள கருத்தியல் தான்!

ஆரிய இன ஆதிக்க எதிர்ப்பு, தமிழின உரிமை, பெரு முதலாளிய எதிர்ப்பு, பொதுத்துறை மற்றும் சிறு நடுத்தரத் தொழில்கள் ஊக்குவித்தல், இந்தி - ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், ஆட்சி - நீதி - கல்வி ஆகிய அனைத்தும் தமிழில் வழங்குதல், பிராமணிய வர்ணசாதி எதிர்ப்பு - தீண்டாமை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமத்துவ நோக்கிலான திட்டங்களை தவிர்க்க முடியாத கூறுகளாகக் கொண்டு வளர்ந்திருப்பதே தமிழ்த்தேசியம் ஆகும்!

சாதித் தமிழ்த்தேசியம், முதலாளியத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் அவதூறு பேசலாமே தவிர, உண்மையில் தமிழ்த்தேசியம் என்பது அனைத்து முற்போக்குக் கூறுகளும் ஒருங்கிணையும் தளமாகும்! ஏனெனில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தமிழர் அறம் தனக்குள் சமத்துவத்தைத் தவிர்க்க முடியாத கோட்பாடாகக் கொண்டிருக்கிறது.

சமத்துவ சமூகம் நீடிப்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரை யும், மறுவார்ப்பு செய்யும் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்ற கோட்பாடு தமிழர் அறத்தின் கூறாக இங்கு நிலவுகிறது. எனவே, தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலின் கீழ் அவரவர்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டே பொதுத்தளத்தில் மக்களுக்கான மாற்றுகளை முன்வைத்து ஒருங்கிணைய முடியும்!

ஆரியத்துவ இந்தியத்தேசியம் என்ற அடிப்படையில் இந்தி தேசிய இனமும், ஆரிய வர்த்தமும் ஒருங்கிணை வதை படிப்பினையாகக் கொண்டாவது, தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் தளத்தில் பன்மை அடையாளங்களோடு மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைவதுதான் தெளிவான எதிர்காலத் திட்டத்திற்கு இசைவான மாற்றாக இருக்கும். இதற்கேற்றாற்போல், மக்கள் இயக்கங்களுள் ஒருங்கிணையும் வடிவமும் அமைய வேண்டும்.

காந்தியடிகளும், எம்.என். ராயும் முன்மொழிந்த வற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, இப்போதைய மக்கள் இயக்கப் போராட்டங்களையும் படிப்பினைகளையும் கவனத்தில் கொண்டால், இப்போதைய தேவைக்கான ஒருங்கிணைப்பு வடிவத்தை கண்டறிய முடியும்!

அணுவின் உள்துகள்கள் ஒரே நேரத்தில் துகளாகவும், அலையாகவும் விளங்குகின்றன என கற்றை அறிவியல் கூறுகிறது. அதேயே சமூக அறிவியலுக்கும் பொருத்திக் கட்டமைக்க வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுப்பாடான அமைப்பும் (Organization) பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் இயக்கமும் (Movement) இயல்பாக ஒருங்கிணைந்த வடிவத்தை மேற்கொள்ள வேண்டியத் தேவை இருக்கிறது.

ஒரு மையத்தில் ஒருங்கிணைவதும், அதேநேரத்தில் அவரவர் தனித்தன்மையையும், தனித்தலைமையையும் தனி தனிநபர் தன்மையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பும் கலந்த ஒன்றாக இது அமைய வேண்டும்!

முடிவெடுக்கும் குழுவும் இருக்க வேண்டும். மிகப் பரவலான சனநாயகக் கருத்துப் பங்கேற்பும் இருக்க வேண்டும். இவற்றை ஒருங்கிணைப்பது தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலாக இருக்க வேண்டும். ஒற்றைத் தனிநபர் தலைமை அடையாளங்கள் வலியுறுத்தப்பட வேண்டிய தேவையில்லை.

புனைவான இந்தியத்தேசியம் என்பதில் அனைத்து ஆதிக்க ஆற்றல்களும் ஒருங்கிணைவதைப் போல உண்மையான கருத்தியலான தமிழ்த்தேசியம் என்பதில் அனைத்து விடுதலைக் கோட்பாட்டினரும் ஒருங்கிணைவதுதான் இன்றைய வரலாற்றுத் தேவை.

மோடி தலைமையிலான பா.ச.க.வின் இந்த வெற்றிக்குப் பிறகாவது தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்கள் இதை உணர்ந்து கொண்டு செயல்பட முன்வர வேண்டும். ஒருங்கிணைவதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், இந்திய ஆதிக்க அழிவுத் திட்டங்களில் தமிழ்நாடு சிக்கிச் சீரழியும் என்ற அவசர உணர்வு அனைவருக்கும் தேவை.

தெளிவாக முடிவெடுப்போம்! 
விரைந்து செயல்படுவோம்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2019 சூன் இதழில் வெளியான கட்டுரை).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, August 14, 2018

ஆரிய ஆதிக்கம் கார்ப்பரேட் கொள்ளைக்காக உயர் கல்வி ஆணையம். தோழர் கி. வெங்கட்ராமன்.


ஆரிய ஆதிக்கம் கார்ப்பரேட் கொள்ளைக்காக உயர் கல்வி ஆணையம். தோழர் கி. வெங்கட்ராமன் - பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

மோடி அரசு “வெள்ளை” என்று ஒரு பொருளைச் சொன்னால் அது “கருப்பு” என்று புரிந்து கொள்ள வேண்டும். “கூட்டுறவுக் கூட்டாட்சி” என்று சொன்னால் ஆதிக்க ஒற்றை ஆட்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த வரிசையில் இப்போது உயர்கல்வி நிர்வாகத்துக்கு “கூடுதல் தன்னாட்சி” என்ற முழக்கத் தோடு மாநில அரசுகளின் அதிகாரத்தையும், பல்கலைக் கழகங்களின் நிர்வாக உரிமையையும் பறிக்கும் உயர்கல்வி ஆணையத் தைத் திணிக்கிறது பா.ச.க. அரசு.

தமிழ்நாட்டு கல்வியாளர்கள், மாணவர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றின் முனைப்பான எதிர்ப்பால் மோடி அரசு தான் முன்வைத்த “புதிய கல்விக் கொள்கை” ஆவணத்தை வலியுறுத்தாமல் நிறுத்தி வைத்தது. வந்த ஆபத்து நீங்கியதாக பலரும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், இக்கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு அனுப்பியும் ஒப்புதல் பெறாமலேயே, அதன் வெவ்வேறு கூறுகளை செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.

அச்சதியின் ஒரு பகுதியாக இப்போது நடப்பில் உள்ள பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு அதற்கு பதிலாக “உயர்கல்வி ஆணையம்” (Higher Education Commission) என்ற ஒன்றை நிறுவ முயல்கிறது.

இதற்காக “இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம், 2018 (பல்கலைக் கழக நல்கைக் குழுச் சட்டம் - 1956 நீக்கம்)” (Higher Education Commission of India Act - 2018, Repeal of University Grants Commission Act -1956) என்ற பெயரில் புதிய சட்ட வரைவை நாடாளுமன்ற மக்கள வையில் முன்வைத்துள்ளது.

இச்சட்ட வரைவை முன்வைத்த இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவ்டேகர் “குறைந்த அளவு அரசின் குறுக்கீடு நிறைந்த அளவு நிர்வாகச் செயல்பாடு” (Less Government, More Gover nance) என்ற நோக்கத்தில் இச்சட்டம் கொண்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் இச்சட்டத்தின் கூறுகளைக் கூர்ந்து கவனித்தால் இந்திய அரசின் மிகக் கடுமையான சர்வாதிகாரப் பிடி உயர்கல்வித் துறையில் இறுகுவதற்கே இது கொண்டுவரப்படுகிறது என்பது புரியும்.

நடப்பில் உள்ள பல்கலைக் கழக நல்கைக் குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் கல்வித் தரத்தை மதிப்பிட்டு, புதிய படிப்புகள், கல்வித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குவதோடு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதி நல்கைகளை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி ஆணையம் நிதி வழங்குவது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ள முடியாது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை மட்டுமே செய்யலாம். அமைச்சரகம் தான் பல்கலைக் கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நிதி வழங்குவது குறித்து முடிவு செய்யும்.

யு.ஜி.சி. பெருமளவு தன்னாட்சி அதிகாரம் கொண்டது. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள உயர் கல்வி ஆணையம் முற்றிலும் இந்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிருவாகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. கூடுதல் தன்னாட்சி வழங்குவது என்று சொல்லிக் கொண்டே தனது அதிகாரப்பிடியை இந்திய அரசு இறுக்கியுள்ளது.

உயர்கல்வி ஆணையத்தை நிறுவும் முறையிலும், அந்த ஆணையத்தின் அன்றாட நிர்வாகத்திலும் இந்திய அரசின் கை மேலோங்கி இருக்கும் வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஆணையம் என்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பொம்மையாக மாற்றப்படுகிறது.

உயர்கல்வி ஆணையத்திற்கு ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், பன்னிரெண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களை அமர்த்துவதற்கு அமைச் சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு தேடுதல் மற்றும் அமர்த்துதல் குழு அமைக்கப்படும். இத்தேடுதல் குழுவில் உயர்கல்விச் செயலாளரும், மூன்று புகழ் வாய்ந்த கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது. (இச்சட்டத்தின் பிரிவு 3(6))

“புகழ்வாய்ந்த கல்வியாளர்கள்” என்ற பெயரில் ஆளுங் கட்சிக்கு நெருக்கமானவர்களே அமர்த்தப்படுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. இந்த வகையில் ஆணைய மானது முழுக்க முழுக்க இந்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் வகையில் இச்சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக சிறந்த கல்வியாளர் (Eminent Acadamician) அமர்த்தப்படுவார். அவர் இந்திய குடிமகன் - குடிமகளாகவோ அல்லது வெளி நாடு வாழ் இந்தியராகவோ இருக்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் என்ற வகையிலும் தனது ஆட்களைக் கொண்டுவர பா.ச.க. திட்டமிடுகிறது.

ஆளும் பா.ச.க.விற்கு வேண்டிய ஆர்.எஸ்.எஸ்.காரரே ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என்பது திண்ணம். ஏற்கெனவே உயர்கல்வி நிறுவனங்களிலும், உயர் ஆய்வு நிறுவனங்களிலும் தலைவராக ஆர்.எஸ்.எஸ். ஆட்களே நிரப்பப்படுவதை காண்கிறோம்.

ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 3 பேர் இந்திய அரசின் துறைச் செயலாளர்களாக இருப்பர். ஒருவர் உயர்கல்வித் துறைச் செயலாளர், இன்னொருவர் திறன் மேம்பாட்டு அமைச்சகச் செயலாளர், மற்றொருவர் அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் (AICTE) தலைவர், தேசிய ஆசிரியர்க் கல்விக் கழகத் (NCTE) தலைவர் ஆகியோரும் உறுப்பினர்களாக இருப்பர்.

யு.ஜி.சி.க்கு அடுத்து ஏ.ஐ.சி.டி.இ, என்.சி.டி.இ, ஆகியவை கலைக்கப்பட போகின்றன என்பதற்கான அறிகுறி இது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரி களின் தரங்களை மதிப்பிடும் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்திலிருந்து (NAAC) இருவர் ஆணைய உறுப்பினர்களாக இருப்பர்.

இதுவரை கல்வி நிறுவனங்கள் தாங்களாக விரும்பி தேசிய தர நிர்ணயக் குழுவிடம் மனு அளித்து தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறுவார்கள். பல தனியார் நிகர் நிலை பல்கலைக் கழங்களும், கல்லூரிகளும் கையூட்டு செலவு செய்து இந்த மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை.

ஆணையத்தின் உறுப்பினர்களாகவே தர மதிப்பீட்டுக் கழகத்தினர் ஆக்கப்பட்டிருப்பதும் 8(1), தர மதிப்பீட்டை தொடர் செயல்பாடாக மாற்றியிருப்பதும் 15(3)(மீ) உயர் கல்வியைக் கார்ப்பரேட்மயம் ஆக்குவதற்கான மோடி அரசின் திட்டமிட்ட சதியாகும்.

பெரிய தொழில் அதிபர் ஒருவர் (Doyen of Industry) ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார் என இச் சட்ட விதி 8 (1) கூறுகிறது. இதுவும் கல்வியை பெருங்குழு மங்களிடம் கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.

கல்வி நிர்வாகம் தொடர்பான இந்த உயர்கல்வி ஆணையத்தில் இரண்டு பேர் மட்டுமே பல்கலைக் கழக பேராசிரியர்களாக இருப்பார்கள் என இச்சட்ட விதி கூறுவதிலிருந்தே இந்த ஆணையத்தின் தரம் தெளிவாகும்.

வெறும் கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை அமைத்த பிறகும் பா.ச.க அரசின் அதிகாரப் பசி அடங்கவில்லை.

இந்த ஆணையத்திற்கு வழிகாட்டும் அமைப்பாக ஒரு மதியுரை மன்றம் (Advisory Council) இருக்கும் என்றும், இந்த மன்றம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் இயங்கும் என்றும், இம்மன்றத்தின் வழிகாட்டுதலின் படி தான் உயர்கல்வி ஆணையம் செயல்பட வேண்டும் என்றும் இச்சட்டவிதி 24 கூறுகிறது.

அது மட்டுமின்றி உயர்கல்வி தொடர்பான நடுவண் அரசின் கருத்துகளை ஆணையம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், எது வொன்று குறித்தும் நடுவண் அரசின் கருத்தே இறுதியான தென்றும் இச்சட்டம் கட்டளையிடுகிறது. (விதி 25)

உயர் கல்வியை ஆரியமயமாக்குவதற்கும், இந்திய மயமாக்குவதற்கும், மாநில அரசுகளின் அரைகுறை உரிமைகளை முற்றிலும் துடைத்து அழிப்பதற்கும் இந்த சட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த ஆணையத்தின் தர மதிப்பீட்டை பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கே நிதி வழங்குவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று ஆணையத்தின் பணிகளை வரை யறுக்கும் விதி 15 வலியுறுத்துகிறது. இதன் மூலமும் பெருங்குழும கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதி நல்கைக் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது.

இன்னும் தொடங்கப்படாத அம்பானியின் ஜியோ உயர்கல்வி நிறுவனத்திற்கு “உயர் தகுதி நிறுவனம்” (Institute of Excellence) என்ற தகு நிலை அளித்து 1,000 கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்த அரசுதான் மோடி அரசு என்பதைக் கவனத்தில் கொண்டால் உயர்கல்வி ஆணையச் சட்டம் எந்த நோக்கத்திற்காக பயன்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதற்கும் ஒரே வகை பாடத்திட்டம் இருக்க வேண்டும் என இச்சட்ட விதி 15 வரையறுக் கிறது. இதன் மூலம் பாடத்திட்ட வரையறுப்பிலிருந்து மாநில அரசுகள் முற்றிலும் வெளியே வைக்கப்படுகின்றன. பாடத்திட்டங்கள் மாநில மொழியிலோ, மாநிலத்தின் தனித் தன்மையைக் கருத்தில் கொண்டோ அமைய முடியாது என்று ஆக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் விதி 20 ஒழுங்குமுறை அதிகாரம் அனைத்தையும் உயர்கல்வி ஆணையத்திற்கு வழங்கு கிறது. இதன் மூலம் பல்கலைக்கழகங்களின் அரைகுறை தன்னாட்சியும் பறிக்கப்படுகிறது.

கல்வி என்பது அந்தந்த மாநிலத் தன்மையில் இருந்து பன்மையோடு விளங்குவதும், உயர்கல்வி நிறுவனங்கள் பல்வேறு கருத்துகளின் விவாதக் களமாக இருப்பதும் அவை கல்வி நிறுவனங்களாக இருப்பதற்கு அடிப்படைத் தேவையாகும். இச்சூழல் அமைந்தால் தான் சுதந்திர சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் முகிழ்த்து எழும் களமாக கல்வி நிறுவனங்கள் அமையும்.

யு.ஜி.சி.யின் அறிவிக்கப்பட்டக் கொள்கைக்கு ஏற்ப அந்த அமைப்பை சீர்திருத்தம் செய்தால் போதுமானது. அதன் குறைபாடுகளைக் காரணம் காட்டி அதனைக் கலைப்பது, நோயைக் காரணம் காட்டி நோயாளியைக் கொல்லும் செயலாகும். ஏனெனில் முன்மொழியப் பட்டுள்ளது. உயர் கல்வி ஆணையம் நோய் தீர்க்கும் மருந்தல்ல, நோயாளியைக் கொல்லும் நஞ்சு.

இந்த ஆணையச் சட்டம் செயலுக்கு வருமானால் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் நுட்பப் பணியாளர்களை உற்பத்தி செய்யும் தொழில் பட்டறையாக கல்வி நிறுவனங்கள் மாறிப்போய் விடும்.

ஆரியமயமான, ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னலின் தலைமைப் பொருளியல் அடியாள் மோடி விரும்புவது அதுதான்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகத்து 1 - 15, 2018)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, December 23, 2017

தொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்! தோழர் கி. வெங்கட்ராமன்.


தொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நரேந்திர மோடி தலைமையிலான “சங்கக் குழு” (சங் பரிவார்) ஆட்சி, சங்கங்கள் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்ற முயல்கிறது.

பிரித்தானிய ஆட்சி தொடங்கி, இன்று வரை இந்தியாவில் செயலில் உள்ள தொழிலாளர் தொடர்பான, ஏறத்தாழ 44 நடுவண் அரசு சட்டங்களை சுருக்கி 4 சட்டக் கோவையாக (Codes) முன் வைத்துள்ளது மோடி அரசு!

இது நடப்பிலுள்ள சட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொகுப்பாக்குவது என்ற பெயரில் சட்டங்கள் இல்லாத தொழில் உறவை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

ஊதியம் தொடர்பாக நடப்பிலுள்ள ‘ஊதிய வழங்கல் சட்டம்’ (The Payment of Wages – 1936), ‘குறைந்தபட்ச ஊதியச் சட்டம்’ (The Minimum Wages Act – 1948), ‘போனஸ் வழங்கல் சட்டம்’ (The Payment of Bonus Act, 1965) ஆகியவற்றை ஒன்றாக்கி, ‘ஊதிய சட்டக் கோவை’ (The Code on Wages Bill 2017) என்ற சட்ட முன்வடிவை இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முன் வைத்திருக்கிறார்கள்.

அதேபோல், தொழிற்சங்க சட்டம் (The Trade Union Act, 1926), நிலையாணைச் சட்டம் (Industrial Employment (Standing Orders) Act, 1946), தொழிற்தகராறு சட்டம் (The Industrial Disputes Act, 1947) ஆகியவற்றை ஒருங்கிணைத்து “தொழிலுறவு சட்டக் கோவை” (Code of Industrial Relations Bill - 2017) என்ற முன்வடிவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (Employees' Provident Funds & Miscellaneous Provisions Act, 1952), பணிக்கொடை சட்டம் (The Payment of Gratuity Act, 1972), ஈ.எஸ்.ஐ. சட்டம், பேறு கால உதவிச் சட்டம் (Maternity Benefits Act 1961), பீடித்தொழிலாளர்கள் – கட்டடத் தொழிலாளர்கள் போன்றோருக்கான தீர்வை சட்டம் போன்ற 16 சட்டங்களை ஒருங்கிணைத்து “தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டக் கோவை” (Labour Code on Social Security & Welfare Bill, 2017) என்ற சட்ட முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தொழிலகப் பாதுகாப்பு சட்டங்கள் பலவற்றைத் தொகுத்து “தொழிலகப் பாதுகாப்பு சட்டக்கோவை” (Code on Industrial Safety And Security Bill - 2017) என்ற முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையில் பா.ச.க. ஆட்சி வந்தவுடனேயே, தொழிற்சாலை சட்டத்திலும் (The Factories Act – 1948), தொழில் பழகுநர் சட்டத்திலும் (அப்ரண்டிஸ் சட்டம்), பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டக்கோவைகள், மேற்சொன்ன சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு அற்றவர்களாக மாற்றப்பட்டிருப்பது தெரியும்.

சங்கங்கள் அற்றவர்களாகத் தொழிலாளர்களை மாற்றுவது, கூட்டுபேரம் என்பதையே ஒழிப்பது, சமரசப் பேச்சுவார்த்தைப் பொறியமைவை தவிர்ப்பது (Avoid Adjudication), தீர்ப்பு அமைவைக் கட்டாயப்படுத்துவது (Force Arbitration) என்பதுதான் மோடி முன்வைத்துள்ள தொழிலுறவு வரைவுச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

தொழிலாளர் (Worker), வேலை வாங்குபவர் (Employer), ஊதியம் (Wage) ஆகிய தொழிலுறவின் அடிப்படையான கூறுகளுக்கு இச்சட்டத் தொகுப்புகள் முன்வைக்கும் வரையறுப்பை ஆய்ந்தால், சட்டத்தின் ஆட்சி அகற்றப்படுகிறது என்பது புரியும்.

ஒரு சட்டத்தில் சொல்லப்படும் வரையறுப்பு, இன்னொரு சட்டத்தில் வேறொன்றாக மாற்றப்படுகின்றது. வேலை வாங்குபவர் (Employer) என்ற வரையறுப்பு வேண்டுமென்றே குழப்பமாக முன்வைக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பாக முதன்மை நிர்வாகத்திற்கு உறவேதும் இல்லாத முறையில், வரையறுப்புகள் வைக்கப்படுகின்றன.

சிறுதொழில் - பெருந்தொழில், அரசுத்துறை – தனியார் துறை என்ற எந்த வேறுபாடும் இன்றி ஒப்பந்தத் தொழிலாளர் முறைதான் வளர்ந்து வரும் முறையாக இருக்கிறது. மிகப்பெரும் தொகையான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்கள் தொடர்பான எந்தப்பொறுப்பும் முதன்மை நிர்வாகத்திற்கு (Principle Employer) இல்லாமல் ஆக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக ஐம்பது தொழிலாளர்களுக்கு கீழுள்ள ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலான சட்டங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். அதாவது, ஐம்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள ஒப்பந்தங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (காண்டிராக்ட் தொழிலாளர்கள்) எந்தக் குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பும் அற்றவர்களாக வெளியில் வீசப்படுகிறார்கள்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள தொழிலுறவு சட்டம், முதன்மை நிர்வாகத்திற்கும் சட்டக் கடமையிலிருந்து விலக்கு அளிக்கிறது.

“ஊதியம்” என்பது குறித்த வரையறுப்பில், முன்வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டமும் வெவ்வேறு வகையாகப் பேசுகிறது. ஊதியம் வழங்குவதையும், அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதையும் உறுதி செய்வதற்காகவே ஊதிய வழங்கல் சட்டம் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலேயே வந்தது.

ஊதியத்தில் எந்தெந்த வகை பிடித்தங்கள் அனுமதிக்கப்படும் என்ற வரையறுப்பு அச்சட்டத்தில் இருந்தது. இப்போதைய முன் மொழிவில் தொழிலக நிர்வாகம் ஒரு தொழிலாளியின் பணியில் குறை இருப்பதாகக் கருதினால், அக்குறையினால் ஏற்பட்ட இழப்பு இன்னது என்று தானே முடிவு செய்து, அதனை தொழிலாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்ற வரம்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

தொழிலாளர்கள் எளிதில் சங்கம் அமைத்து செயல்படமுடியாதபடி, கெடுபிடியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழு தொழிலாளர்கள் முடிவு செய்தால், ஒரு தொழிலகத்தில் சங்கம் அமைத்துப் பதிவு செய்யலாம் என்ற நிலை படிப்படியாக ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. இப்போதைய முன்மொழிவுப்படி, ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பித்தால்தான் சங்கம் பதிவு செய்ய முடியும். அதுமட்டுமல்ல, நூறு தொழிலாளர்களுக்கு மேல் ஒரு தொழிலகத்தில் இருந்தால் குறைந்தது 100 தொழிலாளர்களாவது சங்கம் அமைக்க ஒப்புதல் தர வேண்டும்.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சங்கம் அமைக்க முயன்றால், பதிவுக்குப் பொறுப்பேற்று விண்ணப்பிக்கும் தொழிலாளர்களோ, சங்கம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கும் தொழிலாளர்களோ மிரட்டப்பட்டு, சங்கம் அமைக்கும் முயற்சியே நிலைகுலையும்! இந்தத் தடைகளைத் தாண்டி, சங்கம் அமைப்பது அரிதிலும் அரிதாகவே நிகழ முடியும்.

ஒழுங்கமைக்கப்படாத தொழில் பிரிவுகளில் (Unorganized Sector) தொழிற்சங்கங்களுக்கு அதிகம் போனால், இரண்டு பேர் மட்டுமே தொழிலாளர் அல்லாதவர் நிர்வாகியாக இருக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் அதுவும் இல்லை! இந்த நிபந்தனை இனி புதிதாக அமைக்கப்படும் சங்கங்களுக்குத்தான் என்று சொல்லப்பட்டாலும், அடுத்தடுத்து நடப்பிலுள்ள சங்கங்களுக்கும் இந்த நிபந்தனை விதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

தொழிற்சாலை சட்டத்தில் வந்துள்ள கொடிய திருத்தங்களை கருத்தில் கொண்டால், மேற்சொன்ன தொழிற்சங்க சட்டத்திருத்தம் சங்கம் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்றும் என்பது புரியும்.

மோடி அரசு ஏற்கெனவே தொழிற்சாலை சட்டத்தில் செய்த திருத்தத்தின் வழியாக, நாற்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள தொழிலகங்களுக்கு – தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்று கூறிவிட்டது.

இயல்பாக 10 மணி நேரமும், தேவையை ஒட்டி 12 மணி நேரம் வரையிலும் பணியாற்றக் கட்டாயப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

இதன்படி, 10 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்கள் களைப்படைந்த நிலையில் வேறு எதையும் சிந்திக்க முடியாமல், வீட்டிற்கு செல்லும் மனநிலையிலேயே இருப்பார்கள். இவ்வாறான தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே கடினமான செயலாகும்.

அதிலும், வெளியிலிருந்து முழு நேரச் செயல்பாட்டாளர் துணையின்றி அவ்வாறு அமைப்பதே இன்னும் கடினம்! அதற்குப் பிறகு, தொடர்ந்து சங்கமாக இயங்குவதும், உரிமைகளுக்கு இயக்கம் நடத்துவதும் இயலாத ஒன்று! நடைமுறையில் சங்கங்கள் அற்றவர்களாக (De Unionised) தொழிலாளர்கள் மாற்றப்படுவார்கள்.

இதனை உறுதி செய்வதுபோல், புதிய நிலையாணைச் சட்டத்தில் தொழிற்சங்கம் என்ற சொல்லே இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் பேச்சுவார்த்தை முகவர் (Negotiating Agent) என்று மட்டுமே குறிப்பிடுகிறது.

நடப்பிலுள்ள தொழிற்தகராறுச் சட்டப்படி, நூறு தொழிலாளர்களுக்கு மேலுள்ள தொழிலகங்கள், தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்தாலோ (Retrenchment), தொழிலகத்தைத் தற்காலிகமாக நிறுத்தினாலோ (லே ஆப்), கதவடைப்பு செய்தாலோ (லாக் அவுட்) தொழிலாளர் துறையின் இசைவு பெற வேண்டும். இவ்வாறு முயலும் தொழிலக நிர்வாகங்கள், தொழிலாளர் அலுவலருக்கு அல்லது சமரச அதிகாரிக்கு இசைவு கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அதன் மீது தொழிலாளர் தரப்பும் பங்கேற்பும் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் முடிவிற்கு ஏற்பவே தொழிலக நிர்வாகம் செயல்பட முடியும்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி முன்னூறு தொழிலாளர் பணியாற்றும் தொழிலகங்கள் வரை, தொழிலாளர் துறையின் இசைவு பெறாமலேயே ஒருதலைபட்சமாக ஆட்குறைப்பு செய்யலாம். லே ஆப் விடலாம். கதவடைப்பு செய்யலாம். எந்தக் கேள்வி முறையும் கிடையாது!

இன்றைய தொழில் உற்பத்தி முறையில், வெளி உற்பத்தி (அவுட்சோர்சிங்), ஒப்பந்தம் (காண்டிராக்ட்) ஆகியவை மேலோங்கியுள்ள சூழலில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் முன்னூறு தொழிலாளர்களுக்குக் குறைவான தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் இனி, எந்த சட்டதிட்டமும் கிடையாது என்றாகிறது.

போனஸ் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறைந்தபட்ச போனசைத் தாண்டி, யாரும் எதுவும் பெற முடியாது என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.
போனஸ் குறித்து, பேச்சுவார்த்தையோ விசாரணையோ நடப்பதென்றால் அதில் நிர்வாகம் முன்வைக்கும் தணிக்கை செய்யப்பட்ட வரவு – செலவுக் கணக்கு முக்கியமானது. அந்த வரவு செலவுக் கணக்கை, நடப்பிலுள்ள சட்டப்படி தொழிலாளர் தரப்பினரும் விசாரணை அதிகாரிகளும் திறனாய்வு செய்ய முடியும். கிடைக்கும் உபரி (Available Surplus) குறித்து தமது திறனாய்வின் அடிப்படையில் கூடுதல் நிதி இருப்பதை சுட்டிக்காட்டி, கூடுதல் போனசுக்காக வாதம் செய்ய முடியும்.

ஆனால், இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டப்படி நிர்வாகம் முன்வைக்கும் வரவு செலவுக் கணக்கை கேள்விகேட்க முடியாது. போனசை மறுப்பதற்கு இட்டுக்கட்டி, இழப்புக் கணக்குக் காட்டினாலோ இலாபத்தை மிகக்குறைவாகக் காட்டினாலோ யாரும் கேள்வி கேட்க முடியாது. கூடுதல் போனஸ் பெறுவதற்கு பேச முடியாது!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பீடி – கட்டடத் தொழிலாளர்களுக்கான தீர்வை உள்ளிட்ட தொழிலாளர் தொடர்பான அனைத்து நிதிகளையும் நிர்வாகம் செய்வதற்கு இந்தியத் தலைமையமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.

இந்த நிர்வாகக் குழு, இந்த நிதியத்தைக் கையாள வெவ்வேறு தனியார் முகவர்களை அமர்த்தலாம். அதேபோல், அந்நிதியத்திலிருந்து தொழிலாளர்கள் பெற வேண்டிய பணப்பயன்களை வழங்குவதற்கு தனியே நிறுவனங்களை அமர்த்தலாம்!

மோடி அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தோடு இணைத்து, இச்சட்டத்தைப் புரிந்து கொண்டால், தொழிலாளர் நிதியம் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும் என்பது புரியும். தொழிலாளர்கள் வருங்கால வைப்புத் தொகை, பணிக்கொடை, பேறு கால உதவித் தொகை, பீடி – கட்டடத் தொழிலாளர் போன்ற ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல நிதியம் போன்ற எதைப் பெறுவதாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு சேவைக் கட்டணம் (Service charge) செலுத்தியபிறகே தங்களுக்குரிய பணத்தைப் பெற முடியும்!

இப்போதைய நிலையில், மேற்சொன்ன சட்டங்களின்படி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதியம் ஏறத்தாழ 37 இலட்சம் கோடியாகும். இப்பெரு நிதியத்தை இப்போது அரசு கையாண்டு வருகிறது. இத்தொகை முழுவதையும் தனியாரிடம் கொடுத்தால், அவர்கள் அதனை பங்குச் சந்தை சூதாட்டத்தில் விட்டு நிதியைப் பெருக்குவதைத் தவிர வேறு வழியில்லை! அதில், இழப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப தொழிலாளர்களின் பணப்பயன்களிலும் வெட்டு விழும்!

ஏற்கெனவே ஓய்வூதியத் திட்டம் தனியார்மயமாகி இருப்பதைக் கவனத்தில் கொண்டால், தொழிலாளர்களின் உழைப்பு ஊதியம் முழுவதும் பாதுகாப்பற்றதாக மாற்றப்படுவதை உணர முடியும்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டங்கள்கூட செயல்படுமா என்பதற்கு உறுதியில்லை! ஏனென்றால், தொழிலாளர் தொடர்பான ஆய்வாளர்கள் (Inspectors) என்ற பதவியே துணை செய்வோர் (Facilitator) என்ற பெயர் மாற்றம் பெறுகிறது. இதன்படி, இதுவரை தொழிற்சாலை ஆய்வாளராக அல்லது தொழிலாளர் ஆய்வாளராக அல்லது தொழில் பாதுகாப்ப ஆய்வாளராக இருந்தவர்கள் துணை செய்வோராக மாற்றப்படுகின்றனர். இவர்கள் அதிகாரமற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

சட்டப்படி ஒரு நிறுவனம் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்ய முன்னறிவிப்பின்றி எந்த நிறுவனத்திற்கும் இவர்கள் செல்ல முடியாது! முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு, சென்று ஆய்வு செய்தாலும் அவர்கள் காணும் விதிமீறல்கள் குறித்து எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. தாங்கள் கண்டறியும் விதிமீறல்கள் குறித்து அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அனுப்பலாம் அவ்வளவே! சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு மட்டுமே உண்டு!

பெரும்பாலான சட்ட அமலாக்கத்தை தற்சான்றிதழ் (Self Certification) மூலம் அந்தந்தத் தொழிலக நிர்வாகமே செய்து கொள்ளலாம். இதற்கென்று இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இணையதளம் உருவாக்கப்படுகிறது. அதில், இவர்கள் அறிக்கையை பதிவேற்றம் செய்தால் போதும்!

ஏற்கெனவே, சில சட்ட மீறல்களுக்கு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றிருந்தது. புதிய சட்டத்தின்படி நிறுவன முதலாளிகள் செய்யும் சட்டமீறல்கள் மீது குற்ற நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள முடியாது. குடிமையியல் (Civil) நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடியும். சில ஆயிரம் தண்டத்தொகை செலுத்திவிட்டு, அவர்கள் விதிமீறல்களைத் தொடர முடியும்.

தொழிலுறவைப் பொறுத்து சட்டமே இல்லாத காலனிய ஆட்சிக்காலம் போல நிலைமை உருவாக்கப்படுகிறது. இக்கொடிய சட்டத்தை எதிர்த்து, தொழிலாளரிடையே போதிய விழிப்புணர்வும் இல்லை! சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ. போன்ற நடுவண் தொழிற்சங்கங்கள் தில்லியில் மூன்று நாள் விழிப்புப் போராட்டம் நடத்தினார்கள் என்றாலும், அந்த அமைப்புகளின் செயல்பாட்டாளர்களிடையே கூட இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை!

இது பெரும் கவலை அளிக்கும் சூழல் ஆகும். குறைந்தது, மாவட்ட அளவுகளிலாவது அடித்தள செயல்பாட்டாளர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடைபெறுவது மிக அவசரத் தேவையாகும். இம்முயற்சியில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, ஒழுங்கமைக்கப்படாத தொழில்களின் தொழிலாளர்களிடையே செயல்படும் தன்னார்வ அமைப்புகளும், ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.

மிகவும் ஆபத்தான இச்சட்ட வரைவுகள், சட்டமாக நிறைவேறாமல் தடுப்பதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT