உடனடிச்செய்திகள்

Tuesday, December 23, 2014

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு தமிழ் இதழியல் துறைக்குப் பேரிழப்பு! - தோழர் பெ.மணியரசன் இரங்கல்!


விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு தமிழ் இதழியல் துறைக்குப் பேரிழப்பு!
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல்!
 

விகடன் குழுமத் தலைவர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலமானதற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இதழியல் துறையில் தடம்பதித்த நிறுவனம் விகடன் குழுமம். புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தொடங்கப்பட்ட ‘ஆனந்த விகடன்’, அவருக்குப் பிறகு திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் பொறுப்பில் காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு தமிழின் முன்னணி கிழமை ஏடாக மட்டுமின்றி, அனைத்துப் பிரிவு தமிழ் மக்களுக்கும் உரிய ஏடாகவும் வந்து கொண்டுள்ளது. கிழமை(வாரம்) இருமுறை ஏடான ‘ஜூனியர் விகடன்’, செய்திக் கட்டுரைகள் மட்டுமின்றி செய்திகளைப் பற்றிய பின்னணி, நடந்த உண்மை என்ன என்ற புலனாய்வு போன்ற நவீன இதழியல் கூறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.
அரசின் அடக்குமுறைகள் வந்தபொழுதும் அதற்காகப் பின்வாங்காமல், இதழியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஈகத்துடன் முன்னின்று முத்திரை பதித்தவர், விகடன் பாலசுப்பிரமணியன் அவர்கள்.
சமகாலத்தில், இதழியல் துறையில் தமிழை முன்னிறுத்துவதற்குப் பங்களிப்பு செய்துள்ள திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களுடைய மறைவு, தமிழ் இதழியல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், விகடன் குழும அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.


Wednesday, December 17, 2014


பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான்களின் மனித வேட்டைக்குக் கண்டனம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
 
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த 16.12.2014 அன்று திடீரென்று புகுந்து, தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் சென்று கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மாணவர்கள் 132 பேரும், ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 9 அலுவலர்களும் ஆக மொத்தம் 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 250 மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே, இறப்பு எண்ணிக்கை அதிகமாகிடும் அவலம் உள்ளது.


பாகிஸ்தான் ‘தெஹ்ரி-இ-தாலிபான்’ என்ற அமைப்பு, இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்று அறிக்கை கொடுத்துள்ளது. அவ்வமைப்பின் பேச்சாளர் முகமது கொரசானி, “வஜ்ரிஸ்தான் கைபர் பகுதியில் எங்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் பாகிஸ்தான் இராணுவம் படுகொலை செய்து வருகிறது. அதற்குப் பழி தீர்க்கவே, பள்ளி மாணவர்களைக் கொன்றோம்” என்று கூறியுள்ளார்.

இந்த வாதத்தை எந்த நடுநிலையாளரும் ஏற்க முடியாது. ஆயுதப்போர் நடத்துபவர்களின் பகை இலக்கு, எதிரியின் இராணுவமாக இருக்க வேண்டுமே தவிர குடிமக்களை கொல்லக்கூடாது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராகும்.

சிங்களப்படை எத்தனையோ தடவை குடிமக்கள் பகுதிகளைக் குறிவைத்துக் குண்டுபோட்டு, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. போரில் பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த தமிழ்க் குழந்தைகளைக் குறிவைத்து, செஞ்சோலைக் காப்பகத்தின் மீது சிங்களப்படை குண்டு போட்டு 91 குழந்தைகளைக் கொன்றது. பலரைப் படுகாயப்படுத்தியது. ஆனாலும், பழிவாங்கும் நோக்கில் சிங்களக் குழந்தைகளையோ குடிமக்களையோ விடுதலைப்புலிகள் தாக்கவில்லை என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.

பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளைக் கொன்று குவித்த ‘தெஹ்ரி-இ-தாலிபான்’ அமைப்பினரின் குருதி வெறியை, காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வது மென்மையான கண்டனமாகும். பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான் கயவர்களின் மனித வேட்டையைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதியில் மனித வேட்டையைத் தொடங்கி வைத்தது, வட அமெரிக்க இராணுவம். அதற்கான எதிர்வினையாகத்தான் தாலிபான் அட்டூழியங்கள் தொடர்கின்றன. அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அந்தந்த நாட்டின் பாதுகாப்பை அந்தந்த நாட்டின் அரசுகள் உறுதிப்படுத்திக் கொண்டு, மக்கள் நாயகம் அங்கெல்லாம் தலையெடுக்க வழிசெய்வது ஒன்றே, இந்த மனிதகுல அழிப்பு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதேபோல், பாகிஸ்தானில் தனிநாடு கேட்கும் தேசிய இனங்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி அச்சிக்கலுக்கு முடிவு காண்பதும், தாலிபான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

“கச்சத்தீவு சிக்கலில் மக்களை ஏமாற்ற பொன். இராதாகிருட்டிணனும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் பேசுகிறார்கள்” - தோழர் பெ. மணியரசன் கண்டன அறிக்கை!


“கச்சத்தீவு சிக்கலில் மக்களை ஏமாற்ற பொன். இராதாகிருட்டிணனும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் பேசுகிறார்கள்”
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
 

கச்சத்தீவு காலங்காலமாக தமிழ்நாட்டின் சொத்தாக இருந்தது என்று பா.ச.க. நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனும், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காகவே கச்சத்தீவை இந்திராகாந்தி இலங்கைக்குக் கொடுத்தார் என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பொய் ஆயுதம் ஏந்தி, போலிப் போர் நடத்துகிறார்கள்.

கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு அன்றையத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி இலங்கை அரசுக்கு கொடுத்த அநீதியைக் கண்டித்து, அன்றும் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. அதன்பிறகு நாளது வரை தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள், தென் கடலில் மீன் பிடிக்கும் உரிமை பறிபோய் இருக்கிறது. கிட்டத்தட்ட 600 தமிழக மீனவர்களை சிங்களப் படை சுட்டுக் கொன்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானத் தமிழக மீனவர்களை அடித்தும், சுட்டும் படுகாயப்படுத்தியிருக்கிறது. இப்பொழுதும் அன்றாடம் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழர்களை கடத்திக் கொண்டு போய் சிறை வைக்கிறது. படகுகளை களவாடி வைத்துள்ளது.

இந்த அளவுக்கு மீனவர் கொலைகளும் மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தி கச்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் காங்கிரசு அரசும் எடுக்கவில்லை. வாஜ்பாய் தலைமையிலிருந்த பா.ச.க. அரசும் எடுக்கவில்லை. இப்பொழுதுள்ள பா.ச.க அரசும் எடுக்கவில்லை.

கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், தமிழக பா.ச.க. தலைவர்களில் ஒருவரான நடுவண் அமைச்சர் பொன்.இராதாகிருட்டிணன் அவர்களும் இலாவணிக் கச்சேரி நடத்திக் கொண்டுள்ளனர். 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைத் தமிழர்களின் நன்மைக்காகத்தான் இந்திரா காந்தி கொடுத்தார் என்று ஒரு முழுப்பொய்யை, பொய் என்று தெரிந்தே புளுகியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அந்தப் புளுகை மறுக்கும் பொன்.இராதாகிருட்டிணன், “இந்திய நாட்டின் அசைக்க முடியாத அங்கமாகவும், தமிழர்களின் சொத்தாகவும் விளங்கிய கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கை நாட்டிற்கு இந்திரா காந்தி தாரை வார்த்துக் கொடுத்ததை ஞாயப்படுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன் வந்திருக்கிறார்” என்று கூறி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், தலைமுறை தலைமுறையாக தமிழர்களுக்குச் சொந்தமானத் தீவு கச்சத்தீவு என்று பொன்.இராதாகிருட்டிணன் கூறியுள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்து, மீட்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், கடந்த 02.07.2014 அன்று, பதில் மனு தாக்கல் செய்த பா.ச.க. நடுவண் அரசு, கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதம் வைத்தது.

இப்பொழுது பொன்.இராதாகிருட்டிண, காலம் காலமாக தமிழ்நாட்டின் சொத்து கச்சத்தீவு என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மடக்க உறுமுகிறார். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு நடுவண் அரசு கச்சத்தீவு ஒரு போதும் இந்தியாவில் இருந்தததில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தது. அதே, பதில் மனுவைத்தான் பா.ச.க. நடுவண் அரசும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பொய் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றிட போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் பொன் இராதாகிருட்டிணனுக்கும் இடையே, எள்ளளவு நேர்மையும் கிடையாது. உண்மையும் கிடையாது. இருவருமே பொய்யர்கள்.

பொன்.இராதாகிருட்டிணன் தமது அறிக்கையில் கச்சத்தீவு குறித்து பா.ச.க. அரசு எடுத்துள்ள நிலைபாட்டை மாற்றிட நான் முயல்வேன் என்று கூறியிருந்தால், அவர் உண்மை பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அப்படிப்பட்ட உறுதி எதையும் கொடுக்காமல் பொன்.இராதாகிருட்டிணன் கொடுத்திருக்கும் “கச்சத்தீவு உரிமை” அறிக்கை இரண்டு பொய்யர்கள் நடத்தும் விவாதமாகவும், இரண்டு பேரும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றுவதற்கு போட்டுக் கொள்ளும் சண்டையாகவும் மட்டுமே உள்ளது என்பதை தமிழ் மக்கள் நன்கு அடையாளம் கண்டு கொள்வார்கள். காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் தமிழின எதிர்ப்பில் பெயர் வேறுபாடு தவிர, வேறு எந்த வேறுபாடும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Monday, December 15, 2014

“யார் பிரிவினைவாதி?” ம.தி.மு.க. விழிப்புணர்வு பரப்புரைக் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் வினா!



“யார் பிரிவினைவாதி?” ம.தி.மு.க. விழிப்புணர்வு பரப்புரைக் கூட்டத்தில்
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வினா!
 

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள், காவிரியில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுத்திடல், மீத்தேன் திட்டத்தைத் திரும்பப் பெறுதல், முழு மதுவிலக்கை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 12.12.2014லிருந்து தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம் நடத்தி வருகிறார்.

14.12.2014 அன்று, தஞ்சை மாவட்டம் - ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், அன்றையப் பரப்புரையின் நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை. பாலகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. வைகோ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு திரு. அ.கணேசமூர்த்தி, ம.தி.மு.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில், ஒரத்தநாடு கோபு குழுவினர் எழுச்சிப் பாடல்கள் வழங்கினர்.

மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடக்கும் ம.தி.மு.க.வின் விழிப்புணர்வு பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு:

“காவிரி உரிமையை மீட்பதற்காக காவிரி உரிமை மீட்புக் குழு அமைத்து கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். காவிரி உரிமை மீட்புக் குழுவில், ம.தி.மு.க., மற்ற அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் ஆகியவை இருக்கின்றன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு, காவிரி உரிமை மீட்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றது. இப்போராட்டங்களில் ம.தி.மு.க. தோழர்கள் சிறப்பாக பங்கு பெற்று வருகின்றனர். குறிப்பாக, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் துரை. பாலகிருட்டிணன் அவர்களும், மாவட்டச் செயலாளர் அன்பு சகோதரர் உதயக்குமார் அவர்களும் இப்போராட்டங்களில் முன்னணியில் நிற்கின்றனர்.

கடந்த காலங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுதான் முதன்மை சக்தியாக இருந்து போராட்டங்களை நடத்தி வந்தது. ஆனால், இந்த ஆண்டு பல்வேறு விவசாயிகள் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் காவிரி உரிமையை மீட்க எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளன. இது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்த நிலையில், இன்னும் மேலே சென்று அண்ணன் வைகோ அவர்கள் டெல்டா மாவட்டங்களில் கிராமம் கிராமமாக பரப்புரை செய்து வருவது, பெரும் பாராட்டிற்குரியது; பெரும் பயனளிக்கக்கூடியது.
---------------------------------------------
யார் பிரிவினைவாதிகள்?
---------------------------------------------

தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாம் குரல் கொடுத்தால், பிரிவினைவாதிகள் என்று சிலர் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்த காவிரி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டாலும் அதை செயல்படுத்த முடியாது, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்று சொல்லும் கர்நாடகத்தினர் பிரிவினைவாதிகள் இல்லையா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக காவிரியில் புதிதாக 2 அணை கட்டி மேட்டூருக்குத் தண்ணீர் வராமல் தடுக்கப் போகும் கர்நாடக அரசு பிரிவினைவாதி இல்லையா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுகின்ற கர்நாடக அரசை கண்டித்து சரியான பாதையில் அதை செயல்பட வைக்க முன்வராத இந்திய அரசு பிரிவினைவாதத்தைத் தூண்டவில்லையா?

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள சிக்கலில் நடுநிலையாகச் செயல்படாமல் பாகுபாடு பார்த்து தமிழர்களுக்கு எதிராகவும், கன்னடர்களின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்திய அரசின் அணுகுமுறை பிரிவினைவாதம் இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம், அணை வலுவாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி தமிழகம் 142 அடி தேக்கியதும், உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக்குழு பார்வையிட்டு அணை வலுவாக இருக்கிறது என்று அண்மையில் தான் சான்றளித்தது. இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆய்வு செய்து தள்ளுபடி செய்தது. கேரள அரசு புதிதாக அணை கட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறியது. கடந்த மே மாதம் தான் இந்தத் தீர்ப்பு வந்தது.

ஆனால், இப்பொழுது பா.ச.க. அரசு நடுவண் அமைச்சர் ஜவடேக்கர் தலைமையிலுள்ள சுற்றுச்சூழல் – வனவிலங்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், கேரள அரசு புதிய அணை கட்ட முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆய்வு செய்யலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடுவண் அரசே காலில் போட்டு மிதித்து, காறித்துப்பி கேரளம் புதிய அணை கட்டலாம் என்று அனுமதி கொடுத்தால், இது பிரிவினைவாதம் இல்லையா?

நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால், அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்படாமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அச்சட்டம் செல்லும் – செல்லாது என்று அறிவிக்கும் உயர் அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து, தமிழர்களுக்கு எதிராகவும் – சட்ட விரோத மலையாளிகளுக்கு ஆதரவாகவும் நடுவண் அரசு செயல்படுவது, நடுநிலை தவறி இரண்டு இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குவது இல்லையா? இந்திய அரசின் பிரிவினை அணுகுமுறை இல்லையா?

காலம் காலமாகத் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த கச்சத்தீவை, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த இந்திய அரசு, இப்போது கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதன் பொருள், கச்சத்தீவு ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பதுதானே? சிங்களர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நிலைபாடு – பிரிவினைவாதம் இல்லையா?

தமிழ் மக்களை பகைப் போக்கோடு பார்த்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க – உயிர்களைப் பறிக்க சிங்களன் முயன்றால், இந்திய அரசு சிங்களனுக்குத் துணை செய்யும். கன்னடர்களும் மலையாளிகளும் முயன்றால் அவர்களுக்கு இந்திய அரசு துணை செய்யும். எல்லா நிலையிலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்படும். இது தானே இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிராக கடைபிடிக்கும் பிரிவினைவாதம்?

இப்படிப்பட்ட இந்திய அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசியல் இல்லை. ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவது கூட தமிழ்நாட்டிலே உள்ள அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளுக்குப் பொறுப்புணர்ச்சியோ மக்கள் மீது அக்கறையோ கிடையாது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், இக்கட்சித் தலைவர்கள் ஒருவர் குரல் வளையை ஒருவர் கடிக்கக்கூடிய அநாகரிகக் கும்பலா? மற்ற மாநிலங்களில் பதவிச் சண்டை இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் மக்களைக் கண்டு கட்சித் தலைவர்கள் பயப்படுகிறார்கள். இங்கே, தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தத் தலைவர்கள் ஆட்டு மந்தை – மாட்டு மந்தை போல், தங்களுக்கு அடிமைப்பட்ட ஓட்டு மந்தை வைத்திருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். அண்ணா தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா? தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்கு பாதிப்பில்லையா? இந்த விவசாயிகள் தங்கள் தங்கள் கட்சியை, உரிமைப் பிரச்சினைகளில் செயல்படுமாறு தூண்ட வேண்டும்.

காவிரிப் படுகை மண்ணை – பாலைவனமாக மட்டுமல்ல, நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தைத் தடுப்பதற்கு அண்ணா தி.மு.க.வும், தி.மு.க.வும் பகிரங்கமாக முன்வர வேண்டும். அவ்வாறு வருமாறு அக்கட்சிகளை, அக்கட்சிகளில் உள்ள விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்.

அண்ணன் வைகோ அவர்களின் இந்த விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் வெற்றியடைய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

கூட்டத்தில், திரளான பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

Friday, December 12, 2014

மண்ணின் மக்களுக்கே வேலை கேட்டு சென்னை சென்ட்ரலில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது!

 
மண்ணின் மக்களுக்கே வேலை கேட்டு சென்னை சென்ட்ரலில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது!
 

“வேலை கொடு! வேலை கொடு! தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடு” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, சென்னை சென்ட்ரலில் இன்று (12.12.2014) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சியுடன் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 90 விழுக்காட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும், இதைச் செயல்படுத்த கர்நாடகத்தில் உள்ள சரோஜினி மகிசி குழு போல் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கேற்ப, சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் முன்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், திரளான த.தே.பே. தோழர்கள் கூடினர். “வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”, “தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு தமிழருக்கே! தமிழருக்கே!” என்பன உள்ளிட்ட எழுச்சி முழக்கங்களை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை எழுப்ப, அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டத் தோழர்களை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தின் வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உடனே அங்கேயே சாலையில் அமர்ந்த தோழர்கள் 200க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் கொண்டு சென்றனர்.

இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையிலான இன்னொரு குழுவினர், தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்து, 11.30 மணியளவில் புறப்பட்ட மங்களுர் விரைவுத் தொடர்வண்டியைத் தடுத்து நிறுத்தி, தண்டவாளத்தில் அமர்ந்தனர். தோழர்களின் போராட்ட முழக்கம் விண்ணைப் பிளந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த தொடர்வண்டி ஓட்டுநர்கள், தொடர்வண்டி நிலையக் காவல்துறையினரையும், வெளியில் ஆர்ப்பாட்டத் தோழர்களை கைது செய்து கொண்டிருந்த காவல்துறையினரையும் உதவிக்கு அழைத்தனர். அதன்பிறகு, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்த போது, கடும் வாக்குவாதமானது.

இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், குடந்தை விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் புளியங்குடி பாண்டியன், மதுரை மேரி, விளவை இராசேந்திரன், ஈரோடு இளங்கோவன், சிதம்பரம் கு.சிவப்பிரகாசம், ஓசூர் செம்பரிதி, திருச்செந்தூர் தமிழ்த்தேசியன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம் உள்ளிட்ட முன்னணிச் செயல்பாட்டாளர்களும், தமிழகமெங்கும் திரண்டு வந்திருந்த த.தே.பே. தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டு கைதாயினர். மதுரை இளமதி, புதுமொழி, சத்யா உள்ளிட்ட திரளான பெண் தோழர்கள், தங்கள் குழந்தைகளுடன் கைதாயினர்.

இப்போராட்டத்தில், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன், தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன், சைவத்தமிழ்ப் பேரவை தலைவர் திருவாட்டி கலையரசி நடராசன், ஓவியர் வீரசந்தானம் உள்ளிட்ட தோழமை அமைப்புத் தலைவர்களும் கலந்து கொண்டு கைதாயினர்.

கைதான தோழர்கள், தற்போது, யானை கவுனி பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.





Wednesday, December 10, 2014

தமிழக ஊடகத்துறையுனரையும் உணர்வாளர்களையும் தாக்கிய ஆந்திரா காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தோழர் பெ. மணியரசன் கோரிகை!


தமிழின உணர்வாளர்களையும், தமிழக ஊடகத்துறையினரையும் தாக்கிய
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்! 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!  

தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்று குவித்த சிங்கள குடியரசுத் தலைவர் இராசபட்சே, திருப்பதிக்கு வருவதை எதிர்த்துக் கருப்புக் கொடி காட்ட தமிழின அமைப்புகளைச் சேர்ந்தோர், திருமலையில் 09.12.2014 மாலை திரண்டிருந்தனர். தமிழகத்திலிருந்து ஊடகத்துறையினரும் சென்றிருந்தனர்.

ஆந்திரக் காவல்துறையினர் தமிழின உணர்வாளர்களை மதிப்புக் குறைவாக நடத்தி, பிடித்துத் தள்ளி தளைப்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும், 10.12.2014 விடியற்காலையில் இராசபட்சே தன் குடும்பத்தினருடன் திருப்பதி கோயிலில் நுழைந்த போது தமிழின உணர்வாளர்கள் எதிர்த்து முழக்கமிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமுற்ற ஆந்திரக் காவல்துறையினர் தமிழின உணர்வாளர்களைத் தாக்கியும், செய்தி திரட்ட சென்றிருந்த சன் தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி ஆகியவற்றைச் சேர்ந்த ஊடகத்துறையினரை அடித்து, இழிவுபடுத்தியும், ஒளிப்படக் கருவிகளை நொறுக்கியும் அவர்களைத் தளைப்படுத்தியிருக்கின்றனர்.

பின்னர், ஊடகத்துறையினரை விடியற்காலை 3.30 மணியளவில் காட்டுக்குள் அழைத்துச் சென்று, அந்த இருட்டில் தனியே விட்டுவிட்டு வந்துள்ளனர் ஆந்திரக் காவல்துறையினர்.

தமிழகத்தில் அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக உள்ள ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களையும் தமிழின உணர்வாளர்களையும் பிடித்துத் தள்ளி இழிவுபடுத்தியுள்ளனர்.

ஒருவகையான வன்மத்தோடு, இனப்பாகுபாடு பார்த்து ஆந்திரக் காவல்துறையினர் தமிழர்களைத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளனர். தமிழர்கள் கேட்க நாதியற்றவர்கள் அல்லர், அவர்களது சட்டப்படியான உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு இருக்கிறது என்ற வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள், ஆந்திர அரசைத் தொடர்பு கொண்டு தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

இடம் : சென்னை-78.

Friday, December 5, 2014

"நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும்" - தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


"நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும்"

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அணையா விளக்காகஎன்றும் நின்று நிலவக்கூடிய திசைகாட்டும் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்ற வழக்கில் பதவி உயர்வுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒளிகாட்டும் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் சாதிய ஒடுக்குமுறைதீண்டாமை கொடுமை ஆகியவற்றின் சமூக இருப்புகளை விரிவாக விவாதித்து அவற்றைப் போக்குவதற்கான கருத்துகளையும் வழங்கினார்.

மரண தண்டனை கூடவே கூடாது என்று அவர் தீர்ப்புரைகளில் கூறியுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தூக்கு மரத்தில் ஒருவர் தொங்கவிடப்படும் பொழுதெல்லாம் இந்திய அரசுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். பணி ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைக் களத்தில் குறிப்பாக மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்களில் அவர் துடிப்போடு பங்கு கொண்டார். இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உயிருள்ளவரை போராடி வந்தார்.
இளம் வழக்கறிஞர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் வழிகாட்டும் நீதித்துறை வல்லுனராகவும் மனிதஉரிமைப் போராளியாகவும் என்றென்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் விளங்குவார். அவருக்கு மீண்டும் தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT