உடனடிச்செய்திகள்
Showing posts with label தீர்மானங்கள். Show all posts
Showing posts with label தீர்மானங்கள். Show all posts

Thursday, April 23, 2020

உடதமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை அவரவர் மாநிலத்திற்குனே அனுப்புக! காணொலி வழியில் நடைபெற்ற.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!



 உடதமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை

அவரவர் மாநிலத்திற்குனே அனுப்புக!


காணொலி வழியில் நடைபெற்ற..
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், இன்று (22.04.2020) காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ .மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி, முழுநிலவன் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், வே.க. இலக்குவன், பூதலூர் தென்னவன், தருமபுரி விசயன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1
---------------------
இந்திய அரசே, தமிழ்நாடு அரசே! பேரிடர் துயர்
துடைப்புப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்துக!

கொரோனா நச்சுயிரி பெருந்தொற்று காரணமாக உலகையே உலுக்கிவரும் கோவிட் – 19 நோய், அன்றாடம் அதிர வைக்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக மக்கள் முற்றிலும் முடங்கியிருக்கிறார்கள். இந்த முழு முடக்கம் 2020 மே 3 வரை தொடர வேண்டிய நிலை இருக்கிறதென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நீண்டகால முடக்கம் மக்களின் சமூக – பொருளியல் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. உழைப்பாளர்கள், உழவர்கள், சிறுதொழில் முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையும் இந்த முடக்கத்திற்குப் பிறகு புது தொடக்கம் காண வேண்டிய நிலை இருக்கிறது. பெருமளவு அரசு நிதி உதவி இல்லையென்றால், இவர்களை மீட்க முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், இந்தியாவும் முடங்க நேரிடும்!

எனவே, இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கீழ்வரும் வகையில் மீட்பு செயல்பாட்டில் இறங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

1. குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10,000 ரூபாய் என்ற வகையில் ஏப்ரல், மே, சூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் வழங்க வேண்டும். இத்தொகையினை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அவரவர் நியாய விலைக் கடைகளின் வழியாக வழங்கலாம். வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் வழியே அவர்கள் இல்லத்திற்கே சென்று உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தமிழ்நாடு அரசு ஏப்ரல் - மே மாதங்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களை விலையில்லாமல் வழங்குவது பாராட்டுக்குரியது. வரும் சூன் மாதத்தில் மானிய விலையில் இன்றியமையாப் பொருட்கள் அனைத்தும் ரேசன் கடைகளின் வழியாக வழங்க வேண்டும்.

3. உழவர்கள் தங்கள் வேளாண் பணிகளைச் செய்வதற்கு ஆள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்வோரை, உழவர்களின் வேளாண் பணிகளுக்கும் ஈடுபடுத்தலாம். அவர்களுக்கு அரசு தரும் நாள் ஊதியம் 256 ரூபாயுடன், நில உரிமையாளர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேர்த்துத் தரும் ஏற்பாட்டைச் செய்யலாம். வேளாண் வேலைகளுக்கு உண்டாகும் ஆள் தட்டுப்பாட்டை இவ்வகையில் தீர்க்கலாம்.

4. வேளாண் விளை பொருட்களுக்கு இந்த நெருக்கடி காலத்தைக் கணக்கில் கொண்டு, எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி சாகுபடிச் செலவுக்கு மேல் 50 விழுக்காடு சேர்த்து, குறைந்தபட்ச இலாப விலை வழங்கவும், வேளாண் விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

5. உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் தாராளமாக வேளாண் கடன்கள் வழங்க ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.

6. இந்திய உணவுக்கழகக் கிடங்குகளில் ஏறத்தாழ 52 இலட்சம் மெட்ரிக் டன் நெல், கோதுமை ஆகிய உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. கோடை காலத்து இருப்பு போக குறைந்தது, 32 இலட்சம் டன் அரிசி, கோதுமை ஆகியவை மிகை உபரியாக தேங்கியிருக்கின்றன. இவற்றை மாநில அரசுகளுக்கு இந்த நெருக்கடி காலத்தில் தாராளமாக வழங்காமல், அவற்றைக் கொண்டு, கிருமி நீக்கம் (Sanitizer) தயாரிப்பதற்கு வேண்டிய எத்தனால் தயாரிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது கொடுமையானது!

எத்தனால் தயாரிக்க எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, இன்றைய நிலையில் உணவு தானியங்களை அதற்கு திருப்பிவிடுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மிகை உபரி தானியக் கையிருப்பு அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் விலையில்லாமல் – போக்குவரத்துக் கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, மாநிலங்களுக்கு வழங்கிவிட வேண்டும்.

7. முறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வழியே வழங்கப்படும் கொரோனா துயர்துடைப்பு நிதி, அதில் உறுப்பினர் அட்டை பெற்றிராத முறைசாராத் தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. குறு, சிறு நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பெற்றுள்ள தொழில் கடன்களுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்துவிட்டு, 4% வட்டியில் தேவையான கடன் வழங்க வேண்டும்.

9. இந்திய அரசின் நிதியமைச்சர் சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தருவதாக அறிவித்திருப்பது முற்றிலும் செயலுக்கு வர முடியாத நிபந்தனைகளுடன் இருக்கிறது. 100 தொழிலாளர்களுக்கும் கீழே பணியாற்றும் சிறு தொழில்களுக்கு ஊதியம் வழங்குவது சரிதான். ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் 90 விழுக்காட்டிற்கு மேல் எண்ணிக்கையில் 15,000 மும், அதற்குக் குறைவான மாத ஊதியம் பெறுபவர்களும் இருந்தால்தான் இந்த ஊதிய நிதி கிடைக்கும் என்ற நிபந்தனை ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் தட்டி விடும் செயலாக இருக்கிறது.

எனவே, ஜி.எஸ்.டி. கணக்கில் வரக்கூடிய அனைத்து சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றும் தொழிலாளர்களில் 15,000 ரூபாயும் அதற்குக் கீழும் மாத ஊதியம் பெறும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த ஊதிய நிதி கிடைக்க தொழிலாளர் துறையின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை அனைத்திற்கும் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி நிதி தேவைப்படக் கூடும். பன்னாட்டுச் சந்தையில் வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை வீழ்ந்துள்ள இச்சூழலில், இந்திய அரசுக்குக் குறைந்தது 3 இலட்சம் கோடி நிதி இதன் மூலம் கிடைத்திருக்கும். எனவே, இப்போதைய நிதித் தேவையை எதிர்கொள்வது இந்திய அரசுக்கு எளிதானதுதான். தேவைப்படும் 6 இலட்சம் கோடி ரூபாயில் குறைந்தது 5 இலட்சம் கோடி ரூபாயை இந்திய அரசு வழங்க வேண்டும். மீதித் தொகையை மாநில அரசுகள் வழங்கலாம்.

10. எதிர்பாராத நிலையில், வரலாறு காணாத முறையில் தமிழ்நாடு அரசுக்கும், மற்ற சில மாநில அரசுகளுக்கும் கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நலவாழ்வுத்துறை (Health) செலவினங்கள் பெரிதும் அதிகரித்துவிட்டன. இதை ஈடுகட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இச்சூழலில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 9,000 கோடி ரூபாய் இடர்நீக்க நிதியை இந்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையான 12,253 கோடி ரூபாயை தராமல் சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பது, நிதி வகையில் தமிழ்நாடு அரசை நிலைகுலையச் செய்யும் சட்டப்புறம்பான நடவடிக்கையாகும். உடனடியாக எந்தத் தாமதமும் இன்றி, தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பங்குத் தொகையை இந்திய அரசு வழங்க வேண்டும்.

11. தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் தமிழ்நாடு அரசிடமே கொரோனா துயர் துடைப்புப் பணிக்கான துயர் துடைப்பு நிதியை வழங்க வேண்டும். கொரோனா துயர் துடைப்புக்காக தமிழ்நாட்டிலுள்ள பெருநிறுவனங்கள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் நன்கொடை நிதி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibiilty - CSR) செலவினங்களில் வராது என்ற இந்திய அரசின் அறிவிப்பு, கொரோனாவுக்கு எதிரான போரில் நேரடியாகக் களமாடி வரும் மாநில அரசுகளுக்கு நிதி சேரக் கூடாது என்ற உள்நோக்கத்திலான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு நிதி அளித்து, கொரோனா துயர்துடைப்புப் பணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தீர்மானம் - 2
---------------------
சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு
சிகிச்சை அளிக்க வேண்டும்!

கொரோனா நச்சுயிரிக் கொள்ளை நோய்க்கு இதுவரை அலோபதியில் மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. நோய் எதிர்ப்பாற்றலை ஊக்கப்படுத்துவதற்காக மலேரியாக் காய்ச்சலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யூன், அசிட்ரோமைசின் மருந்துகளைக் கொடுக்குமாறு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக இம்மருந்துகளைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவங்களையும் இணைத்து கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். அலோபதியை மட்டும் நம்பியிருத்தல் கூடாது! தமிழ்நாட்டு மாற்று மருத்துவ முறை ஆய்வாளர்களும், மரபு மருத்துவர்களும் இதற்கான வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.

சீனாவில் அலோபதியை மட்டும் நம்பியிருக்காமல், அவர்களது மரபு மருத்துவத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து, கொரோனா நோயிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்துள்ளார்கள். இந்தியாவிற்குள் கேரளாவில் அதுபோலவே, மண்ணின் மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து முன்னேற்றம் கண்டுள்ளாகள். எனவே, சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம் உள்ளிட்ட மரபான மருத்துவங்களையும் இணைத்து கொரோனாவுக்கு ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு சாறு அளித்தும், டெங்குக் காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு வழங்கியும் நாம் கடந்த சில ஆண்டுகளில் வெற்றி கண்டுள்ளோம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவ முறைகளுக்கு உரிய மதிப்பளித்து, தகுதியான சித்த மருத்துவர்களின் ஆய்வுக் கருத்துகளைக் கேட்டு கொரோனாத் தொற்று நோய்க்கு முன் தடுப்பு மருந்தும், நோய் தீர்க்கும் மருந்தும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!

தீர்மானம் - 3
---------------------
தமிழ்நாடு அரசு வெளி மாநிலத் தொழிலாளர்களை
அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்!

வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக, இங்கேயே மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். நோய்த் தொற்று போன்ற பெருந்துயர் காலங்களில் அவரவரும் சொந்தக் குடும்பத்தோடு சொந்த ஊரில் இருக்க விரும்புவது இயல்பானது; அது அடிப்படையான உளவியல் தேவையும் ஆகும்.

கொரோனா பெருந்தொற்று வெளிநாட்டினர் வழியாகவும், வெளி மாநிலத்தவர் வழியாகவும் தான் அதிகம் வருகிறது என்ற இன்றைய நிலையிலாவது, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுத் தொழிலகங்களிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பணியாற்றக்கூடிய வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் பேசி தொலைதூர சிறப்புத் தொடர்வண்டிகளை ஏற்பாடு செய்து, வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து எல்லையோர மாவட்டங்களுக்கு வந்திருக்கிற வெளி மாநிலத் தொழிலாளிகளுக்கு சிறப்புப் பேருந்து வசதிகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் தொடர்வண்டி மற்றும் பேருந்து பயணங்களின்போது, கொரோனா பெருந்தொற்றைத் தவிர்ப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்படி அனுப்பலாம்.

அதேபோல், வெளி மாநிலங்களில் சிக்கியிருக்கிற தமிழ்த் தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர இதே போன்ற சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்குள்ளேயே பிற மாவட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள் அங்கங்கே சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க, அதற்குரிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தீர்மானம் - 4
---------------------
கொரோனா நோய்த்தடுப்பில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும்
உரிய மதிப்பு வழங்க வேண்டும்!

கொரோனா நச்சுயிரி நோய்த் தடுப்புப் போரில் முன் வரிசைப் படைபோல நிற்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர், அந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செய்தி வேதனையைத் தருகிறது. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது!

கொரோனா நோயால் இறந்த மருத்துவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய, சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியைத் தருகிறது. அவர்கள் வன்முறையில் இறங்கியதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இறந்தவரால் கொரோனா நச்சுயிரியைப் பரப்ப முடியாது என உலக பொதுநல நிறுவனமே (WHO) அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையாததால் இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்கின்றன.

தமிழ்நாடு அரசு, பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியதை உணர வேண்டும். மக்களிடையே உள்ள தேவையற்ற அச்சத்தைக் களையும் வகையில், கொரோனாவில் இறந்த மருத்துவர்கள் உடலை அரசே உரிய முறையில் மதிப்பளித்து தகனம் / அடக்கம் செய்ய வேண்டும். அதேபோல், அறியாமையால் விழிப்புணர்வின்றி இறந்தவர் உடலைப் புதைக்கக் கூடாதெனப் போராடும் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சரியல்ல. அப்போக்கைக் கைவிட வேண்டும்.

கொரோனா நோய்த் தடுப்பு வீரர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நமக்காகத்தான் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு பணி செய்கிறார்கள் என்ற மெய்நடப்பை உணர்ந்து கொண்டு, அவர்களையும் நம் உறவினர்களாகக் கருதி, பொது மக்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 4
---------------------
கொரோனா கெடுபிடி காலத்திலும்
மோடி அரசின் தொடரும் அடக்குமுறை!

அரசின் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பெரும் கடமை உள்ள சூழலிலும், மோடி அரசு தனது அதிகாரக்குவிப்பு அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா முழுவதுக்குமான முழு முடக்கத்தை தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 2020 மார்ச்சு 24 இரவு 8 மணிக்கு அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா நடத்திய பொறுப்பற்ற செயலை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிய “தி வயர்” (The Wire) – இணைய இதழின் ஆசிரியர் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 505 (2)இன் கீழ் சமூக மோதலை உண்டாக்க முயற்சித்தாக குற்றவியல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

விசாரணைக் கைதிகளையும், சிறு குற்றங்களுக்காக சிறையிலுள்ள கைதிகளையும் பிணையிலோ, முன் விடுதலையிலோ சிறையிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, முன் விடுதலை – பிணை விடுதலை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அரசு, பீமா கொரேகான் வழக்கில் மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கல்வியாளர் பேராசிரியர் கவுதம் நவலாக்கா ஆகியோரை கைது செய்திருக்கிறது. இதே வழக்கில் மக்கள் கவிஞர் வரவரராவ், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் ஃபரைரா, கோன்சல்வஸ் உள்ளிட்ட மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் கொடிய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பாய்ந்திருக்கிறது.

அதேபோல், ஊடகவியலாளர் என்ற வகையில் செய்தி வழங்கும் தனது கடமையைச் செய்த இந்து செய்தியாளர் அஷிக், ஒளிப்பட ஊடகவியலாளர் ஜாஸ்ரா ஆகியோர் சம்மு காசுமீர் மாநிலத்தில் இதே UAPA சட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தங்கள் வளாகத்திற்குள்ளேயே போராடிய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.

முகநூல் பதிவுகளுக்காக பல பேர் மீதும் அன்றாடம் கொடிய வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. மக்கள் கவனம் கொரோனா நெருக்கடியில் இருக்கும்போது, நாடு முழுவதும் முழு முடக்கத்தில் இருக்கும்போது, எந்த வகை சனநாயக வழிப்பட்ட எதிர்ப் போராட்டங்களையும் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த சூழலைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி அரசும், மாநில அரசுகளும் அடக்குமுறை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனது ஆரியத்துவ அடக்குமுறைப் பயணத்தில் நரேந்திர மோடி இன்னும் தீவிரமாகச் செயல்படுவார் என்பதன் அறிகுறியாகவே இந்தக் கைதுகள் உள்ளன.

இந்திய அரசு இந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட்டு, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 5
---------------------
இந்திய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை
திரும்பப் பெற வேண்டும்!

இந்திய அரசு நடப்பிலுள்ள மின்சார சட்டம் – 2003இல் திருத்தங்கள் செய்வதாகக் கூறி, முற்றிலும் புதிய சட்டமாக “மின்சாரத் திருத்தச் சட்ட வரைவு – 2020” (Electricity (Amendment) Bill, 2020) முன்வைத்திருக்கிறது.

ஏற்கெனவே, மின்சார உற்பத்தி பெருமளவு தனியார்மயமாகிவிட்டது. அதிக விலை கொடுத்தும், உற்பத்தியும் வழங்கலும் நடக்காத காலங்களிலேயே தக்க வைப்புக் கட்டணம் (Retaining Charge) என்ற பெயரில் அரசுப் பணத்தை வாரி வழங்கியும் தனியார் நிறுவனங்கள் ஊதிப் பெருக்க வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இதுவரை பெருமளவு மின்சார வழங்கல் என்பது அரசு நிறுவனங்களின் வழியாகவே நடந்து வருகிறது.

இந்தப் புதிய வரைவு இதையும் தனியாருக்கு வழங்க ஏற்பாடு செய்கிறது. வீடுகளுக்கும், தெருக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்குவதை தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விட இத்திருத்தச் சட்டம் வழி ஏற்படுத்துகிறது.

வீடுகளுக்கு மானியக் கட்டணத்திலும், வேளாண்மைக்கும் குடிசை வீடுகளுக்கும் கட்டணமின்றியும் மின்சாரம் வழங்கும் மானிய முறையை (Cross Subsidy) முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் நுகர்வோரிடம் முழுச் செலவையும் கட்டணமாக வசூலித்துவிட வேண்டுமென்றும் இத்திருத்தச் சட்டம் ஆணையிடுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக மின்சார உற்பத்தி – வழங்கல் அனைத்தையும் மாநில அதிகாரத்திலிருந்துப் பறித்து, இந்திய அரசின் கைகளுக்குக் கொண்டு செல்கிறது.

“தேசியக் கல்விக் கொள்கை” வழியாக செய்திருப்பது போலவே, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே மாநில அதிகாரத்திலுள்ள மின்சாரம் என்பதை முற்றிலும் இந்திய அரசின் அதிகாரத்திற்குப் பறித்துக் கொடுப்பதை இத்திருத்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, மாநில அதிகாரத்தைப் பறிக்கிற - மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் கிடைப்பதைத் தட்டிப் பறிக்கிற – மின்சார உற்பத்தியையும், வழங்கலையும் முற்றிலும் தனியார்மயமாக்குகிற இப்புதிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் 2020-ஐ இந்திய அரசு கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இதை முற்றிலும் எதிர்க்க வேண்டுமெனவும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!

தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் மின்சார சட்டத்திருத்தம் – 2020-ஐ எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்!

தீர்மானம் - 6
---------------------
டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுக!

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் டாஸ்மாக் கடைகளை மூடியதனால், குடிப்பழக்கத்திலிருந்த பெரும்பாலோர் குடியைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை மீண்டும் குடிகாரர்களாக மாற்றவும், இளைஞர்களை புதிய குடிகாரர்களாக உருவாக்க வாய்ப்பளிக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

அதேபோல், தமிழ்நாட்டிலுள்ள சாராய உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் இப்போது மூடியுள்ளதுபோல் நிரந்தரமாக மூடிவிட ஆணையிட வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, October 12, 2019

“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்!


“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” காவிரி உரிமை மீட்புக் குழு - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்! தொடங்குமிடம் – பூம்புகார், நிறைவடையும் இடம் – மேட்டூர் அணை

இன்று (12.10.2019) காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா திரு. க. செகதீசன், மனித நேய சனநாயகக் கட்சி பொறுப்பாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், இந்திய யூனியன் முசுலீம் லீக் திரு. செய்னுலாபுதீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி. குணசேகரன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு முன்னணிச் செயல்வீரர்கள் வெள்ளாம் பெரம்பூர் திரு. து. இரமேசு, அல்லூர் திரு. கரிகாலன், திரு. தனசேகர், திரு. பார்த்திபன், திருவாரூர் திரு. சூனா செந்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் – 1 : “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” 10 நாள் மக்கள் எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகம் திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ் மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு - “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற தலைப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வரும் 2019 நவம்பர் 11ஆம் நாள் தொடங்கி 20ஆம் நாள் வரை – பத்து நாட்கள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானித்துள்ளது.

காவிரி கடலில் கலக்கும் நாகை மாவட்டம் – பூம்புகாரில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகப் பயணித்து, சேலம் மாவட்டம் - மேட்டூர் அணையில் இப்பரப்புரைப் பயணம் நிறைவடைகிறது.

இப்பரப்புரைப் பயணத்தின்போது, வழியெங்கும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களும், உழவர் பெருமக்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் இந்த எழுச்சிப் பரப்புரைக்குப் பேராதரவு தந்து பங்கேற்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

முதல்வருக்கு வேண்டுகோள் - "மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ்நாடு அரசு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்!"

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்ததைப் போலவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் (16.02.2018) செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அதற்கான ஏற்பாடுதான் மேக்கேதாட்டு மிச்ச நீர் அணை!

மிச்ச நீர் என்பது கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் ஆகும். இந்த வெள்ள நீர் இப்போது நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து விடுகிறது. இதைத் தடுத்து முழுமையாகக் கர்நாடகம் புதிய பாசனத்திற்கும் குடிநீர், தொழிற்சாலைத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான் மேக்கேதாட்டு மிச்ச நீர் திட்டம்!

கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகளின் வெள்ள நீர் வந்து கலக்குமிடம் கர்நாடகத்தின் ராம் நகர் மாவட்டத்தின் கனகபுரம் வட்டத்தின் சங்கமம் என்ற இடமாகும். அதிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேக்கேதாட்டு (ஆடு தாண்டு காவிரி). இரு பக்கமும் 1,000 அடி உயர மலைகளுக்குக் கீழே காவிரி ஓடுகிறது. அந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு எல்லை 3.9 கிலோ மீட்டர்தான்!

இந்த மேக்கேதாட்டு அணையின் திட்டமிட்ட தண்ணீர் கொள்ளளவு 67.16 ஆ.மி.க. (T.M.C.) இப்போது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி, ஏரங்கி, அர்க்காவதி அணைகளின் மொத்தக் கொள்ளளவு நீர் 114 ஆ.மி.க. (T.M.C.). ஆனால் இவற்றிலிருந்து வெளியேறும் மிச்ச நீரைத் தேக்கும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவோ 67.16 ஆ.மி.க.!

தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தட்டுப்பாடில்லாமல், மாதாமாதம் திறந்துவிடத்தான் மேக்கேத் தாட்டு அணை கட்டுகிறோம் என்று கர்நாடகம் கூறுவது நூறு விழுக்காடுப் பொய்! கடந்த காலங்களில் இப்படிச் சொல்லித்தான் ஏமாவதி, ஏரங்கி, கபினி, அர்க்காவதி, சுவர்ணவதி அணைகளைக் கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டுத் தண்ணீரை அபகரித்துக் கொண்டது. மேக்கேத்தாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட பெரிய வெள்ளமானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது.

மிகை வெள்ளத்திலிருந்து தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக – எப்பொழுதாவது வெளியேற்றும் நீர் கூட தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்குப் போய் விடக்கூடாது என்பதற்காகவே கட்டப்படும் தடுப்பு நீர்த்தேக்கம்தான் மேக்கேதாட்டு அணை!

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு 15 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட முடியாது. அத்தீர்ப்பின் பிரிவு XI பின்வருமாறு கூறுகிறது :

“கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர் வரத்தைப் பாதிக்கும் வகையில் மேல் பாசன மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆனால், தொடர்புடைய மாநிலங்கள், தங்களுக்குள் கலந்து பேசி, ஒத்த கருத்து அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் முறைகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அனுமதி வேண்டும்”.

இதன் பொருள், புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பதல்ல! மாதவாரியாகத் திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை தங்களுக்குள் கலந்து பேசி ஒரு மாதத்தில் கூட்டியோ, குறைத்தோ திறந்துவிட்டு அடுத்த மாதங்களில் அதை ஈடுகட்டிச் சரி செய்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விதி XVIII பின்வருமாறு கூறுகிறது :
“தீர்ப்பாயத் தீர்ப்பிற்கு முரண்பாடு இல்லாமல், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு”.

இதன் பொருள் என்ன? உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை – தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள 177.25 ஆ.மி.க. தண்ணீரை, அந்தந்த மாநிலமும் தனது வசதிற்கேற்ப, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள். கர்நாடகம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை எந்தெந்த பகுதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இதன்படி முடிவு செய்து கொள்ளலாம்! ஆனால், கர்நாடகம் தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பது இதன் பொருள் அல்ல.

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கோரி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கர்நாடக அரசு மேற்கண்ட XVIII ஆவது விதியைத் தவறாக மேற்கோள் காட்டி வாதம் செய்துள்ளது.

கர்நாடகத்திடமும், இந்திய அரசிடமும் இந்த சட்ட வாதங்களைப் பேசிப் பயனில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் கடந்தகாலப் பட்டறிவு! ஏமாவதி, ஏரங்கி, கபினி அணைகளைத் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 1968லிருந்து கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியது; உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.

ஆனால் கர்நாடகம் அந்த சட்ட விரோத அணைகளைக் கட்டி முடித்திட, இந்திய அரசு கொல்லைப் புற வழியாக அனுமதித்தது. மேக்கேதாட்டு அணையும் இது போல் கட்டப்படாமல் தடுக்க வேண்டுமானால், “இந்திய ஆட்சியாளர்க்குக் கடிதம் கொடுத்தேன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன்” என்று முதலமைச்சர் பட்டியல் அடுக்கினால் போதாது. ஏமாந்து விடுவோம்.

“இந்திய அரசே, மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுத்திடு; தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்க, கர்நாடகத்திற்கு துணை போகாதே!” என்று வெளிப்படையாக இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து அரசியல் அழுத்தம் தர வேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டின் மக்கள் முழக்கமாக மாற்றிட குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரையுள்ள மக்கள் “காவிரி எழுச்சி நாள்” கடைபிடிக்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.

கர்நாடகம் ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய சட்டவிரோத அணைகள் கட்டிய போது, அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க. அன்றைய இந்திய ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுடன் கூட்டணியில்தான் இருந்தது; தி.மு.க. ஆட்சி, இந்த அணைகள் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தது என்றாலும், அணை கட்ட நடுவண் அரசு அனுமதித்தது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும். பா.ச.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணியின் வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேக்கேத்தாட்டு அணையைத் தடுத்து, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு செயல்பட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 : 21 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்க!

காவிரிப்படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பல்வேறு துன்பங்களுக்கிடையே நம் உழவர்கள் குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அந்த நெல்லை விற்பதற்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அங்கங்கே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லுக்கு சேதாரம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இப்பொழுதும் அதுபோல் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு – நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், கொள்முதல் நிலையம் திறக்கப்படாத ஊர்களில் உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 3 : பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான வேளாண் பயிர்க் காப்புத் திட்டத்தில், காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பல்வேறு கிராமங்களில் உழவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளாகி உள்ளார்கள். பல கிராமங்கள் விடுபட்டுப் போயுள்ளன. ஒரே கிராமத்தில் ஒரு பகுதி விவசாயிகள் விடுபட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் வேறுபாடு கடைபிடிக்கப்பட்டு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு பயிர்க் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் செய்து, எல்லா கிராமங்களுக்கும், எல்லா உழவர்களுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 4 : உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன்

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய இலாப விலை கொடுக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையைத்தான் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கியிருக்கிறது. இதனால், உழவர்கள் தொடர்ந்து கடனாளி ஆவதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் நடந்து வருகிறது.

இப்பின்னணியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு வங்கிகள் உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா வேளாண் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (13.03.2019) காலை முதல் மாலை வரை குடந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. அருணபாரதி, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. முருகன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை. செயபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மறைந்த நாட்டுப்புறப் பாவலர் திரு. வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 -  ஐட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக!

தமிழ்நாட்டின் கடலோரத்திலுள்ள மரக்காணம் தொடங்கி வைத்தீசுவரன் கோயில் வரையிலும், குறிஞ்சிப்பாடி தொடங்கி வேளாங்கண்ணி அருகிலுள்ள புஷ்பவனம் வரையிலும் – 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலோரக் கிராமங்களையொட்டிய ஆழமற்ற கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்திற்கும், வேளாண் விளைநிலங்கள் அமைந்துள்ள பகுதிகளை 700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ள இந்திய அரசு ஏலம் விட்டுள்ளது.

காவிரிப்படுகையையும், கடலோரத்தையும் ஒட்டுமொத்தமாக நாசாமாக்கும் இத்திட்டத்திற்கு எதிராக, திருக்காரவாசல் கிராமத்தில் அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து அறவழியில் குரல் கொடுத்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் ஐட்ரோ கார்பன் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தியும், காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் – கரியாப்பட்டிணம் கிராமத்தில் கடந்த 03.03.2019 முதல், அக்கிராம மக்களும், செட்டிபுலம், மருதூர், வேதாரணியம், வாய்மேடு, தானிக்கோட்டகம், குரவப்புலம், தென்னம்புலம், கருப்பம்புலம், தகட்டூர் உள்ளிட்ட 10 கிராமங்களின் மக்களும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 09.03.2019 நள்ளிரவில் காவல்துறையினர் அடாவடியாகப் புகுந்து போராட்டப் பந்தல்களை சிதைத்ததுடன், போலி வழக்குகள் புனைந்து, அறவழிப் போராட்ட முன்னிலையாளர்கள் 7 பேரை அவர்கள் வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டி எழுப்பிக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, அங்குள்ள பெண்கள் கழனியப்ப அய்யனார் கோவிலிலும், சந்தன மாரியம்மன் கோவிலிலும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில் சந்தன மாரியம்மன் கோயிலை காவல்துறை அடாவடியாக இழுத்து மூடியுள்ளது.

ஒருபக்கம், தனது அமைச்சர்களை அனுப்பி - மக்கள் எதிர்க்கும் திட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் எனப் பேசி வரும் தமிழ்நாடு அரசு, இன்னொருபுறத்தில் காவல்துறையை அனுப்பி போராடும் மக்களை ஒடுக்குகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?

தமிழ்நாடு அரசு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்கள் உரிமையை அனுமதிக்க வேண்டும். ஐட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

நில வளத்தையும், நீர் வளத்தையும் காப்பாற்றிட – காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இப்பகுதியில் எண்ணெய் – எரிவளி – நிலக்கரி எடுக்கும் பணிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என இத்தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை கோருகிறது!

தீர்மானம் 2 - ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

காந்தியடிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட கோபால் கோட்சேவை 14 ஆண்டுகளில் மகாராட்டிர காங்கிரசு அரசு விடுதலை செய்தது. 257 பேர் கொல்லப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைபட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் வெறும் ஆறு ஆண்டுகளே சிறையிலிருந்த நிலையில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

இராசீவ் கொலை வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி கே.டி. தாமஸ், இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் கவனிக்காமல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, எனவே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென அறிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன், பேரறிவாளன் கூறிய அசல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்யாமல், தன் விருப்பத்திற்கேற்ப வாக்கு மூலத்தைப் பதிவு செய்து தவறு செய்து விட்டதாக ஊடகத்தாரிடம் கூறினார். அத்துடன், உச்ச நீதிமன்றத்திற்கும் இது தொடர்பாக மனு அனுப்பியுள்ளார். அவர் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய இராணுவ உளவுப்பிரிவு அறிக்கை, இராசீவ் காந்தி கொலைத் திட்டம் குறித்து இவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சிறையாளிகளின் தண்டனையைக் குறைக்கவோ அல்லது அவர்களை விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்றும், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு விரும்பினால் அப்பிரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளன.

இருபத்தெட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது இந்திய ஆட்சியாளர்களின் வன்நெஞ்சத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும்தான் காட்டுகிறது. அவர்கள் சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடிக்கவில்லை என்பது வெளிக் காட்டுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவை ஓரு மனதாக ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றி ஆறு மாதங்கள் ஆன பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் கையெழுத்திடாமல் இருப்பது, தமிழ்நாடு அரசின் அதிகாரத்தைப் பறிக்கின்ற செயலாகவும், சட்டத்திற்குப் புறம்பாக தமிழர்களை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

சட்டப்படி அமைந்துள்ள மாநில அமைச்சரவை முடிவை ஆதரித்துக் கையொப்பமிட ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்ற விதியை, கெட்ட உள்நோக்கத்தோடு – பழிவாங்கும் நோக்கில் ஆளுநர் பயன்படுத்தக் கூடாது!

தமிழ்நாடு ஆளுநர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளித்து, தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு, ஏழு தமிழர்களை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 3- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் - அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை பாலியல் பணயக் கைதிகளாக வைத்திருந்து சீரழித்த கயவர்கள் குறித்து வரும் செய்திகள், நெஞ்சைப் பதற வைக்கின்றன. பிடிபட்டுள்ள நான்கு கயவர்களையும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காப்பாற்ற முயல்வதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சீரழித்து வந்துள்ள இந்த கயவர் கூட்டம் குறித்து, காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் ஒன்றுமே தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை. மக்களுக்காகப் போராடும் இயக்கங்களையும், தலைவர்களையும் சீருடை அணியாத காவலர்களை விட்டு ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வரும் தமிழ்நாடு உளவுத்துறைக்கு, இந்த கயவர் கூட்டத்தை உளவறிந்து சொல்வதில் ஏன் பின்னடைவு?

பிடிபட்ட நான்கு பேரையும் உடனடியாகக் காவலில் எடுத்து விசாரித்து, அவர்களின் பின்னுள்ள அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் யாரெனக் கண்டறிய வேண்டியதில் முனைப்பு காட்டாத காவல்துறை, “பிடிபட்டவர்களுக்கு அரசியல் பின்னணியே இல்லை” என அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. பொள்ளாட்சி புறநர் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் இந்த அறிவிப்பே, இவ்வழக்கில் அரசியல் பின்னணி உள்ளதென பலரையும் ஐயப்பட வைத்துள்ளது.

முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய நால்வரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்வது, அவர்களை யாரும் விசாரிக்க முடியாதபடி பாதுகாத்து ஆறு மாதங்கள் கழித்து விடுதலை செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறதே தவிர, உண்மைகளை வெளிக் கொணரும் முயற்சியாகத் தெரியவில்லை.

பிடிபட்ட நான்கு பேர் மட்டுமே ஏழாண்டுகளாக இக்குற்றச் செயல்களை நடத்தினார்கள் என்ற காவல்துறையின் கூற்றும் நம்பும்படியாக இல்லை. இக்குற்றம் குறித்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் குறித்து இரகசியம் காக்க வேண்டிய காவல்துறையினர், அதை வெளிப்படையாக்கியதும், புகார் அளித்த பெண்ணின் சகோதாரனைத் தாக்கிய அ.தி.மு.க. பிரமுகரை அடுத்த நாளே பிணையில் செல்ல அனுமதித்ததும் நம் ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.

ஆளுங்கட்சி பிரமுகர்களைக் காப்பாற்றி, புகார் அளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

ஆளுங்கட்சி – எதிர்கட்சி எனப் பெரும் அரசியல் புள்ளிகள் இக்குற்றக் கும்பலின் பின்னுள்ள நிலையில், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை(சி.பி.ஐ.)க்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், இதில் உண்மைகள் கண்டறியப்படுமா என்பதும் ஐயமாக உள்ளது.

எனவே, சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெறுவது போல், நீதிமன்றத்தின் நேரடி பார்வையின் கீழ் நேர்மையான அதிகாரிகள் தலைமையில் சுதந்திரமான விசாரணைக் குழு அமைத்து, இவ்வழக்கிலுள்ள உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்! பிடிபடும் கயவர்கள் மீது காலதாமதமின்றி, உடனடியாகக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தீர்மானம் 4 - தமிழ்நாடு தொடர்வண்டித் துறை தொழிலகங்களில் வடமாநிலத்தவரை சேர்க்கக் கூடாது! பொன்மலையில் நடந்த நேர்காணலை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசின் தொடர்வண்டித் துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 தொழில் பழகுநர்களில் 1,600 பேர் வடமாநிலத்தவர் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெறும் 9 விழுக்காட்டு இடங்களே தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான நேர்காணல் திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் நடந்து முடிந்துள்ளது.

இதேபோல், கடந்த வாரம் (04.03.2019) வெளியான இந்திய அரசின் குரூப் - டி தேர்வில், சென்னை மண்டலத்தில் அதிகமான அளவில் வடமாநிலத்தவர்களே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறித்த பல கேள்விகள் கேட்கப்படும் அத்தேர்வில் வடமாநிலத்தவரே அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருப்பது, அத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதையே காட்டுகிறது!

முறைகேடான வழிகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைக் குடியமர்த்தும் இந்திய அரசின் இச்சதிச் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்! உடனடியாக இவ்விரு தேர்வுகளையும் முழுவதுமாக இரத்து செய்து, இந்திய அரசுத் தொழிலகங்களிலும் அலுவலகங்களிலும் 90 விழுக்காட்டு இடங்களுக்கு மண்ணின் மக்களாகிய தமிழர்களையே தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, இவற்றை வேடிக்கைப் பார்க்காமல், இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்!

தீர்மானம் 5 - சூழலியல் மற்றும் மண்ணுரிமைப் போராளி முகிலனை உடனடியாகக் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்!

கூடங்குளம் அணு உலையைத் தடை செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், தாது மணல் - ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற சிக்கல்களில் உடனுக்குடன் எதிர்வினையாற்றி போராடி வந்த சமூகச் செயல்பாட்டாளர் தோழர் முகிலன் காணாமல் போய், 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தமிழ்நாடு காவல்துறை அவரை தேடிக் கண்டுபிடிக்காமல் அலட்சியம் காட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கருவிலிருந்து கல்லறை வரை ஒருவரின் உயிருக்கும் வாழ்வுரிமைக்கும் பொறுப்பேற்க வேண்டியது அரசின் சட்டக்கடமையாகும்.

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி வலியுறுத்தி கடந்த 2018 மே 22 அன்று, அறவழிப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது. காவல்துறையின் இச்செயல் தற்காப்புக்கானதும் இல்லை - தற்செயல் நிகழ்ச்சியும் இல்லை – நபர்களைக் குறிவைத்து திட்டமிட்டு சுட்டுக் கொல்வதாகும் என்று அம்பலப்படுத்தும் வகையில் ஒளிப்பட சான்றுகளுடன் ஆவணப்படம் தயாரித்து அதனை கடந்த 15.02.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் ஊடகத்தார் முன்னிலையில் வெளியிட்டார். அன்றிரவே, அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அக்கறையோடு செயல்பட்டிருந்தால் முகிலனின் நிலை குறித்து, இந்நேரம் உண்மை நிலையை வெளிப்படுத்தியிருக்கலாம். உயர் நீதிமன்றமும், என்றி தீபேன் அவர்கள் தொடுத்த ஆட்கொணர்வு மனுவில் தீவிரம் காட்டாமல் நீண்ட இடைவெளி கொடுத்து வாய்தா போட்டுக் கொண்டே உள்ளது. உடனடியாக காணாமல் போன முகிலனை மீட்பதிலும், அவருடைய உண்மை நிலையை அறிவிப்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி மக்களுக்கு உண்மையை நிலைநாட்ட வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, February 22, 2016

பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!



பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்  தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஐந்தாவது கூட்டம், 2016 பிப்ரவரி 20 - 21 ஆகிய இரு நாட்கள் தர்மபுரியில் நடைபெற்றது. தர்மபுரி ரோட்டரி அரங்கில், பிப்ரவரி 20 அன்று காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தர்மபுரி செயலாளர் தோழர் விசயன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கள் கோ. மாரிமுத்து, அ. ஆனந்தன், குழ. பால்ராசு, ரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் செம்பரிதி, கவித்துவன், இராசாரகுநாதன், ஈரோடு இராசையா, புளியங்குடி க. பாண்டியன், திருச்செந்தூர் தமிழ்மணி, சிதம்பரம் எல்லாளன், பெண்ணாடம் கனகசபை, மதுரை மேரி, கோவை இராசேந்திரன், குடந்தை தீந்தமிழன், தஞ்சை லெ. இராமசாமி, புதுக்குடி காமராசு, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் காலமான ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா, தமிழறிஞர் தமிழண்ணல், ஐயா. தேவாரம் மு. தனராசு, முனைவர் கரு.அழ. குணசேகரன், பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் காதாட்டிப்பட்டி கணேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் தாயார் திருவாட்டி வைரத்தம்மாள் ஆகியோர் மறைவுக்கு, கூட்டத்தின் தொடக்கத்தில் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1
============
பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் அரசியல் பிரிவான பாரதிய சனதா கட்சியும் தங்களின் அரசியலுக்கு இதுவரை முதன்மைப்படுத்தி வந்த “இந்துத்துவா” முழக்கத்தை இப்போது பின்னுக்குத் தள்ளி “இந்தியத் தேசியம்” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்துகின்றன.

இந்துத்துவா முழக்கத்தை முன்வைத்து, உ.பி. முசாபர் நகரில் முசுலிம் குடும்பங்களைத் தாக்கி அகதிகளாக வெளியேற்றினார்கள். மராட்டியத்தில் தபோல்கர், பன்சாரே, கர்நாடகத்தில் கல்புர்கி போன்ற மதச்சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைக் கொலை செய்தனர். உ.பி. தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதாகச் சொல்லி ஒரு முசுலிம் பெரியவரைக் கொன்றார்கள். அக்குடும்பத்தினரையே தாக்கினார்கள்.

இப்படிப்பட்ட இந்துத்துவா வெறியாட்டப் படுகொலைகள் மற்றும் கலவரங்களுக்குப் பிறகு, பா.ச.க.வின் செல்வாக்கு வளர்வதற்கு மாறாக சரிந்து வருவதை தில்லி, பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விகள் மூலம் உணர்ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை, இந்துத்துவா முழக்கத்தை சற்றுப் பின்னுக்குத் தள்ளி இந்தியத் தேசியம் - “தேசப்பற்று” என்ற முழக்கங்களை முன்னுக்கு வைத்து வருகிறது.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வைப் பயன்படுத்திக் கலகம் விளைவித்து, மாற்றுக் கருத்துகளை ஒடுக்கி, இந்தியாவில் தங்களின் ஒற்றை மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் விடுதலை கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. யார் எழுப்பினர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்காக சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது தேசத்துரோகம் (124A) மற்றும் அரசியல் சதிக்குற்றம் (120B) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளனர். கண்ணையா குமார், தாம் இம்முழக்கங்களை எழுப்பவில்லை என்று மறுக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் பாசி கூட கண்ணையா இம்முழக்கங்களை எழுப்பினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்கிறார்.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்ந்த அன்றே, ஏ.பி.வி.பி. மாணவர்கள் நடுவண் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில், பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதே சதி இருக்கிறது என்றார். கடும் நடவடிக்கைத் தேவை என்றார்.

ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்களே மேற்கண்ட முழக்கங்களை எழுப்பினர் என்று ஜே.என்.யு. மாணவர்களும் பேராசிரியர்களும் கூறுகிறார்கள்.

அடுத்து ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. கலகக்காரர்கள் நீதிமன்றத்தைக் கலவரக் களமாக மாற்றினர். வழக்கறிஞர்கள் - வழக்கறிஞர் சீருடையில் இருந்தோர் என ஒரு கும்பல், 15.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்குக் காவல்துறையினரால் கண்ணையா குமார் அழைத்து வரப்பட்டபோது அவரைத் தாக்கினர். அதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மறுபடி 17.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றம் அழைத்துவரப்பட்டபோது முற்பகலில் நீதிமன்றத்திற்குள் வைத்து கண்ணையாவைத் தாக்கினர். உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்தியாவின் மிகுபுகழ் பெற்ற வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி கண்காணிக்கச் சொன்னது. அதன்பின்னர் - பிற்பகலில் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் நேர் நிறுத்தப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. குற்றக் கும்பல் கண்ணையா குமாரை மீண்டும் அடித்து நொறுக்கியது.
இந்த வன்முறை வெறியாட்டம் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பேச்சாளர்கள் ஊடகங்களில் இந்தியத்தேசியம் - தேசப்பற்று என்ற சொற்களை உச்சரித்து ஞாயப்படுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் இந்த வன்முறைகளைக் கண்டிக்கவில்லை.

மேற்கண்ட நடப்புகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, நடுவண் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் இந்தியா முழுவதிலும் இந்தியத் தேசியம் - இந்துத்துவா முழக்கங்களை போதை போல் உருவாக்கிக் கிளப்பி மக்களிடையே அதனடிப்படையில் வன்முறைக் கலகங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திருப்பிக் கொள்வது என்றும் அவ்வாறு பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திரட்டிக் கொள்ள முடியவில்லை என்றால் ஓயாத கலவரங்களை நடத்தி மக்களவைத் தேர்தல் நடத்தாமல் தள்ளி வைப்பது என்றும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவர்கள் முன்வைக்கும் இந்துத்துவா - இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை - பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்வதாகும். மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமற்கிருதத்தைத் திணிப்பதிலிருந்தும் - நடுவண் அரசே சமற்கிருத வாரம் கடைபிடித்து, அதைப் பரப்புவதிலிருந்தும் அவர்களின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்துக் கோயில்கள் அனைத்திலும் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்கு மீட்டுத்தர ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அதிகார பீடங்கள் முன்வரவில்லை. முன்வரப் போவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும்.
ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் இப்போது முன்னுக்குத் தள்ளியுள்ள இந்தியத் தேசியம் - தேசபக்தி என்பவை சாரத்தில் அவர்களின் இந்துத்துவா முழக்கத்தின் அரசியல் வடிவங்களே! இந்துத்துவா மதவாதம் இல்லையெனில் இந்தியத்தேசியம் என்பதற்கான வேறு எந்தப் போலிக் காரணமும் இல்லை!

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியா ஒரு தேசம் - இந்தியன் என்ற தேசிய இனம் - இந்தியத் தேசியம் என்பனவற்றை ஏற்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 1 - “இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இந்தியா ஒரு தேசம் என்று எந்த இடத்திலும அது கூறவில்லை. அடுத்து, இந்தியக் குடியுரிமை பற்றி அது பேசுகிறதே தவிர, “இந்தியன்” என்ற தேசிய இனம் பற்றி பேசவில்லை! இந்தியன் என்றொரு தேசிய இனம்(Nationality) இருப்பதாக அது கூறவும் இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழிபடுவதாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறிக் கொள்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டம் கூறாத இந்தியத் தேசியத்தை ஒரு வெறி முழக்கமாக அவர் தலைமை உருவாக்குவது ஏன்?
“இந்தியத் தேசியம் - தேசபக்தி” என்பதை ஒரு போதைபோல் ஏற்றி, வெறி உண்டாக்குவோர், தமிழர் - தமிழ்மொழி, தெலுங்கர், கன்னடர், மலையாளி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி, காஷ்மீரி, அசாமி போன்ற பல்வேறு தேசிய இனங்களின் இருப்பையும் வரலாற்றையும் அழிக்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமையோ அல்லது வேறு எந்தத் தலைமையோ இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பக் கிளப்ப, மேலே குறிப்பிட்ட - பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் - தங்கள் இன மொழி அடையாளங்களையும் வரலாற்றுப் பெருமிதங்களையும் தக்க வைத்துக் கொள்ள வீதிக்கு வருவார்கள்!

இந்தியத்தேசியம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? தமிழினப் பாதுகாப்பிற்கு என்ன செய்தது? காவிரி உரிமையைப் பாதுகாத்ததா? கடல் உரிமையை பாதுகாத்ததா? கச்சத்தீவை பாதுகாத்ததா? முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்கலைத் தீர்த்து வைத்ததா? பாலாற்று உரிமையைப் பாதுகாத்ததா? அண்டை நாட்டில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தடுத்து நிறுத்தியதா? அந்த இனப்படுகொலையில் பங்கு கொண்டது.
கர்நாடகத்தில் கன்னட வெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது - தாக்கப்பட்ட போது (1991), கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது (2011), இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதா? பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களை இழுத்துக் கொண்டுபோய் ஆந்திராவில் கட்டிவைத்து சுட்டுக் கொன்ற போது, ஆந்திராவின் மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழ்நாட்டு பெட்ரோலியத்தை எரிவளியை நிலக்கரியை எடுத்து காலி செய்து, தனது கருவூலத்தை நிரப்பிக் கொள்கிறது இந்திய அரசு! வெள்ளைக்காரன் போட்ட வரிகளைவிட, ஆயிரம் மடங்கு கூடுதல் வரிகளைப் போட்டு, ஆண்டுக்கு 80,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டு வரிப்பணத்தை அள்ளிக் கொண்டு போகிறது இந்திய அரசு!

என்ன ஞாயத்திற்காக தமிழர்கள், வர்ணாசிரம இந்துத்துவா தேசியமான இந்தியத் தேசியத்தை ஏற்க வேண்டும்?

உலகில் முதலில் தோன்றிய செம்மொழியான தமிழ் நம் மொழி! முதலில் தோன்றிய நாகரிக இனம் தமிழினம்! அரப்பா - மொகஞ்சோதாரோ நாகரிகம் தமிழர் நாகரிகம்! இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம் இப்போது தமிழ்நாட்டிற்குள் என்று சுருங்கிப் போய் உள்ளது. தமிழ்நாட்டிற்குள்ளும் வந்து தமிழ் மொழியை - தமிழர் இன அடையாளங்களை அழித்திட, இந்துத்துவா என்ற பெயரிலும், இந்தியத் தேசியம் என்ற பெயரிலும் வரும் அதிகாரக் கருத்தியலைத் தடுத்து தமிழினம் காப்போம்.

தமிழ் மக்களிடம் இச்செய்திகளை எடுத்துச் சொல்ல, 2016 - பிப்ரவரி 25லிருந்து மார்ச் 2ஆம் நாள் வரை, ஒரு வாரம் பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் நடத்துவதென தர்மபுரியில் இன்று (21.02.2016) கூடியுள்ள இப்பொதுக்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தீர்மானம் - 2
============
கெயில் குழாய்களை விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிடுக!

இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு குழாய்கள் வழியாக எரிவளி (எரிவாயு) எடுத்துச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வேளாண் விளை நிலங்களில் குழாய் பதிக்க முனைந்துள்ளது.

இத்திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருட்டிணகிரி ஆகிய ஏழு மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஒன்றாகும். கொச்சியிலிருந்து கோவை வரை கேரளத்தில் இத்திட்டத்திற்கான கெயில் குழாய்கள் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு, நெடுஞ்சாலை ஓரங்கள், தொடர்வண்டிப் பாதை ஓரங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்கள் வழியாக இக்குழாய்களை எடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய அரசின் கெயில் நிறுவனம் பிடிவாதம் பிடிப்பது இந்திய அரசின் தமிழினப்பகைப் போக்கையே எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்த வழக்கில், கடந்த 01.02.2016இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உழவர்களின் வாழ்வுரிமையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் அமைந்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அரசாங்க அதிகாரங்களை நடுவண் அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், பொதுப் பட்டியல் என வகைப் பிரித்து வழங்கியிருக்கிறது. இதில் விளை நிலம் தொடர்பான அதிகாரம் முழுவதும் மாநில அதிகாரப் பட்டியலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மாநில அதிகாரப் பட்டியல் பிரிவு எண் 18இல், விளை நிலங்கள் குறித்த அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. வேளாண் நில உடைமையை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.

இந்நிலையில், கெயில் நிறுவனக் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்குப் போட்டத் தடையை நீக்கியும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்று, ஏழு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் எடுத்துச் செல்லும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய்களை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றி அமைக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும், ஏற்கெனவே விளை நிலங்களில் புதைக்கப்பட்டுள்ள கெயில் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு நடுவண் அரசை வலியுறுத்துகிறது.

உழவர்களின் கோரிக்கையை மதிக்காமல், கெயில் நிறுவனம் வேளாண் விளை நிலங்களில் குழாய்கள் பறிக்க முயன்றால், அதைத் தடுத்து நிறுத்த உழவர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் எச்சரிக்கிறது.

தீர்மானம் - 3
============
சனவரி 25-ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வலியுறுத்தி பரப்புரை இயக்கம் 1965ஆம் ஆண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கடந்த 2016 சனவரி 24ஆம் நாள் மதுரையில், “மொழிப்போர்-50” மாநாட்டைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தியது.

எழுச்சியோடு நடைபெற்ற அம்மாநாட்டில், மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றி சனவரி 25 அன்று நடத்தப்படும் வீரவணக்க நாளை தமிழ் மொழி நாள் என அறிவித்து கடைபிடிக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 தொடங்கி ஒரு வாரம் முழுவதும், தமிழ் மொழி வாரமாக தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும். ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமொழியாக தமிழ்மொழியை பயன்படுத்துவது குறித்து அவ்வாரம் முழுவதும் தொடர் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

சனவரி 25ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வேண்டும், மொழிப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், மொழிப்போர் ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை விளக்கி, 2016 சூன் 15லிருந்து 21ஆம் நாள் வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கங்கள் நடத்துவதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 




===================================== 






நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 




போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT