முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழக-கேரள எல்லையில் கம்பம், செங்கோட்டை, கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலம் செல்லும் பொருட்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கைதுசெய்யப்பட்டனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அதை ஏற்று செயல்பட பிடிவாதமாக மறுத்துவரும் கேரள அரசுக்கு எதிராக ஒருநாள் பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடத்தப்பெறும் என பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஏற்று 15 அரசியல் கட்சிகள் 32 விவசாயிகள் சங்கங்கள் 50க்கு மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன.
கம்பம்
தேனி மாவட்டம் கம்பம் மெட்டுச்சாலை சந்திப்பில் காலை 6.30 மணி முதல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னால் பல்லாயிரக்கணக்கானவர் திரண்டு ஊர்வலமாக மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். மறியலுக்குக் கீழ்க்கண்டவர்கள் தலைமை தாங்கினார்கள். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷிர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தலைவர் ச. மெல்கியோர், பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பொன். காட்சிக்கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைச் செயலாளர் தமிழ்வாணன், மேலூர் ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் சீமான், இருபோக சாகுபடி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புத்தி சிகாமணி, தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ், இரத்தினசாமி, குழந்தை, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த இளங்கோ, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நிலவழகன், தமிழக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த அ.குழந்தை வேலன், தமிழக மாணவர் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த புலிப்பாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஜான்மோசஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜன், பொன்னிறைவன், நகைமுகன், அபு அபுதாகிர், அரப்பா, தி. அழகிரிசாமி, எம்.ஆர். மாணிக்கம், கா. பரந்தாமன், ஜி.எஸ். வீரப்பன், பிச்சைக்கணபதி, வே.ந. கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான தோழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். காலை 10.30 மணி வரை மறியல் போராட்டம் கட்டுப்பாடாகவும் அமைதி யாகவும் நடைபெற்றது. இதன் விளைவாக சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் தமிழக கேரள எல்லையில் அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்கள் காய்கறிகள், பால் ஆகியவற்றை எடுத்துச்சென்ற சரக்குந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அரசுப் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அரசுப் பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. | மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்லும்படி காவல்துறை அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்க மறுக்கவே அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். திருமண மண்டபம் ஒன்றில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் கம்பம் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இராமகிருட்டிணன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. முதல் நாள் இரவில் கம்பம் வருகை தந்த மறியல் வீரர்கள் அனைவரும் தங்குவதற்கு தனது திருமணமண்டபத்தினையும் அவர் அளித்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோவை
கோவை கந்தே கவுண்டன் சாவடியில் பொருளாதார தடை மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கீழ்கண்டவர்கள் தலைமை தாங்கினார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் ஆர். காந்தி, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கி.த. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன், தமிழர் கழகத் தலைவர் இரா. பாவாணன், தமிழக மனித உரிமை கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மணிபாரதி, தமிழக இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வே. ஆறுச்சாமி, மா.ரெ. இராசகுமார், ந. பிரகாசு, வே. கோபால், சா. கதிரவன், கா.சு. நாகராசன், நா. பன்னீர், கராத்தே இராசேந்திரன், மணிகண்டன், தனசேகரன், பாவேந்தன், சிவசாமித் தமிழன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். | மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
செங்கோட்டை
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலை அருகில் முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழுவின் சார்பாக பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் குறிஞ்சிக் கபிலன், தமிழர் தேசிய இயக்கத் தைச் சேர்ந்த துரை. அரிமா, புலவர் தமிழ்மாறன், பசும்பொன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்மணி பாண்டியன், விடுதலை வேந்தன், அ. பரமசிவன், தமிழ்தேசியன், தேவதாசு, பொன் இளங்கோ, மாரிமுத்து உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே கேரளத்தில் இருந்து செங்கோட்டை வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. போராட்ட வீரர்களுக்குப் பாராட்டு
காவலில் வைக்கப்பட்டிருந்தபோது போராட்டக்குழுத் தலைவர் பழ. நெடுமாறனுடன் பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசி போராட்ட வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஜீவா நேரில் வந்து மாலை அணிவித்துப் போராட்ட வீரர்களைப் பாராட்டினார்.
| |