உடனடிச்செய்திகள்

Saturday, August 28, 2010

தஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் தடை!

தஞ்சை, 28.08.2010.
ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஆபத்து உண்டாக்கும் வேலையில் இந்தியத் தொல்லியல் துறையும், இந்து அறநிலையத் துறையும் இறங்கியுள்ளன. 

தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்; கோபுரம் அருகே 400 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு தோண்டினார்கள். பெரிய கோயில் கிணறு வற்றி விட்டது என்றும், பு+சைக்குத் தேவையான தண்ணீர் எடுக்க ஆகம விதிகளின் படி அந்த இடத்தில் தோண்டுவதாகவும் சொன்னார்கள். அவ்வாறு தோண்டுவது காலப் போக்கில் பெரிய கோயில் கட்டுமானத்திற்கு ஆபத்தை உண்டாக்கும்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு ஆழ்குழாய்க்கு அடியில் குளம் போன்ற பெரிய பள்ளம் உருவாகிவிடும். அவ்வாறு வெற்றிடம் உருவானால் பாறை இல்லாத அப்பகுதியின் கீழ் அடுக்கில் உள்ள மணல் அந்தப் பள்ளத்தில் இறங்க, அதனால் அதற்கு மேலே உள்ள களிமண் அடுக்கு கீழே இறங்க அருகிலுள்ள கோபுர அடித்தளமும் கீழே இறங்கும். இதனால் கோபுரச் சுவர்களில் விரிசலும் வெடிப்பும் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறினார்கள்.

ஏற்கெனவே இதுபோன்ற பாதிப்பால்தான் திருவரங்கக் கோபரச் சுவரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டன என்றும் அவ்வல்லுநர்கள் கூறினார்கள். அண்மையில் ஆந்திரப் பரதேசம் திருக்காளத்தி கோயில் கோபுரம் சரிந்து மண்மேடானதும் கவனத்திற்குரியது.   

இச் செய்தி அறிந்ததும் 18.08.2010 முற்பகலில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு தலைவர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் பழ. இராசேந்திரன், செயற்குழு உறுப்பனர்கள் திருவாளர்கள் சாமி கரிகாலன், திருக்குறள் மாரிமுத்து, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு உறுப்பனர் தோழர் தெ. காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் செந்திரல், த.தே.பொ.க. தோழர் இராமதாசு ஆகியோர் பெரிய கோயிலுக்குச் சென்று ஆழ்குழாய் தோண்டுவதைப் பார்த்தனர்.  

உடனடியாக அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்து ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்தும்படி கோரினர்.  அவர்கள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்த மறுத்துவிட்டார்கள்.  அதன் பறகு அதைத் தடுக்கும்; படி தமிழக முதல்வரைக் கோரும் வேண்டுகோள் அடங்கிய சுவரொட்டிகள் உரிமை மீட்புக் குழு சார்பல் தஞ்சை நகரெங்கும் ஒட்டப்பட்டன. 19.08.2010 அன்று ஊடகங்களில் இச் செய்தி வந்தது.

அதன் பறகும் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிறுத்தவில்லை.  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பல் அதன் தலைவர் திரு.சி.முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கை மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் மற்றும் வழக்கறிஞர் அருணாசலம் ஆகியோர் நடத்தினர்.  வழக்கை அனுபமதிப்பது குறித்து 26.08.2010 அன்று முதல் நிலை விசாரணை நடந்தது.  வழக்கறிஞர் லஜபதி ராய் வாதத்தைக் கேட்டதும் உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் போடப்படும் ஆழ்குழாய்க் கிணறு வேலையை உடனே நிறுத்தும் படியும், வேறு பணி எதுவும் அது தொடர்பாக செய்யக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டது. 

தஞ்சைப் பெரிய கோயில் என்ற தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட உரிமை மீட்புக் குழுவைப் பலரும் பாராட்டினர். 

Friday, August 27, 2010

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு!

த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

ஈரோடு, 27.08.2010.

கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.

அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர்.

அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த மகிழுந்துகளை அடித்து நொறுக்கினர்.

இப்பிரச்சினை தொடர்பாக த.தே.பொ.க. ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மோகன்ராசு, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த புலிப்பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் இன்று(27.08.2010), தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நம் தோழர்கள் மீது குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப் படாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவரது இளம் வழக்கறிஞர்கள் கட்டணம் ஏதுமின்றி முன்னிலையாகி வலுவாக வழக்காடினர்.

Wednesday, August 11, 2010

தி.மு.க. குண்டர்களை கைது செய் - பெ.மணியரசன் கண்டன அறிக்கை!

தி.மு.க. குண்டர்களை கைது செய்!

த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!

சென்னை, 11.08.2010.

செம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை வந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் மாத இதழின் விளம்பரச் சுவரொட்டிகளை 10.08.2010 அன்று இரவு 11 மணியளவில் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் க.அருணபாரதி, கௌரி பாலா, நாகராசு ஆகியோரை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் 6 பேர் கடுமையாக தாக்கி அவர்கள் கொண்டு சென்ற மிதிவண்டியையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

மாற்று கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் ஏதேச்சாதிகார வன்முறைகளின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக இத்தாக்குதல் நடந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவா;களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க.வினரின் இந்த வன்முறையைக் கண்டித்து கண்டன இயக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!

சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!
சென்னை, 11.08.2010.

சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. நேற்றிரவு(10.08.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான திரு. பெ.மணியரசன் எழுதிய கட்டுரை, ”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.

10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் திரு. பாலா, திரு. நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, திரு. அருணபாரதி உடன் சென்றிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர். “செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க... உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா? இந்தியாவையே வெளியே போக சொல்றியா...” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.

சுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார். அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.

தி.மு.க. குண்டர்களின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Sunday, August 8, 2010

NEWS: ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!



ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!

(குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வந்த செய்தி...)

கிலோ அரிசி நூறு ரூபாயை ஓரிரு மாதங்களில் எட்டிவிடும். தமிழகத்திலும் பட்டினிச் சாவு நடக்கும்’’என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷனில் விற்கும் நிலையில்,இதை நம்ப முடியாமல், ‘எப்படி?’ என்று கேட்டோம்.

‘‘இந்தாண்டும் குறுவை சாகு படி, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும்.இப்போதைக்குத் தமிழகத்தின் நெல் பற்றாக்குறையை வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியால் சமாளித்து வருகிறோம். விரைவில் ஆந்திராவிலும் பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப் போகிறார்கள். அதையடுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி வரத்து நின்றுவிடும்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடர்ந்து,பல மாநிலங்களில் கிலோ மூன்று ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.அதையடுத்து, வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அரிசி வரத்தும் நின்றுவிடும். தமிழகத்தில் இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே ஆன்-லைன் வர்த்தகத்தால் தரமான அரிசி கிலோ 50ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமாநில அரிசி வரத்தும் குறைந்தால் அரிசி விலை இரட்டிப்பாகும். ஒரு ரூபாய் அரிசி ஒரு குடும்பத்துக்கு மாதம் முழுவதுக்கும் நிச்சயம் போதாது. அப்படியொரு நிலை வரும்போது,சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்’’என்று நமது அதிர்ச்சியைக் கூட்டினார், கி.வெ.

மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை தரவேண்டும் என காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

2007-ல் இறுதித் தீர்ப்பும் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இன்றுவரை நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலும், தமிழகத்துக்குத் தேவையான நியாயமான நீரைப் பெறுவதிலும் தமிழக அரசு முனைப்புக் காட்டாமல் உள்ளது. இதன் காரணத்தால், தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்துவிட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததால் இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



இயற்கை வேளாண் விவசாயி பாமயனிடம் பேசினோம். ‘‘தமிழகம் உணவுத் தற்சார்பை இழந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகும். மொத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழலை நோக்கிப் போகும். பிறகென்ன? பட்டினிச் சாவுகள் அரங்கேறும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார், பாமயன்.






தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ தேவராசன், ‘‘25.8 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பகுதிகளில் 14 லட்சம் ஏக்கர் மட்டும்தான் தற்போது விவசாயத்துக்குப் பயன்படுகிறது. காவிரி நீரைப் பெறாததால் குறைந்தபட்சம் 2.88 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டால் இந்தப் பாதிப்பு இரட்டிப்பாகும்.

தொடர் மின்தடையால் நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதிகளிலும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதன் காரணங்களால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் உழவர்கள் உள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை மறைமுகமாக விவசாயத் தொழிலை கடுமையாகப் பாதித்து வருகின்றன. இதுவரைக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான பெரிய கட்சிகள் எதுவுமே கர்நாடகாவிடம் தமிழகத்துக்கு நியாயமான பங்கு நீரைக் கோரவில்லை.



காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவிரி மன்ற இடைக்கால ஆணை நடைமுறையில் உள்ளதால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும். ஜூலை வரை கர்நாடகம் தரவேண்டிய 64.87 டி.எம்.சி. நீரையும், ஆகஸ்டில் 54.72 டி.எம்.சி. நீரையும், அக்டோபரில் தரவேண்டிய 30.17 டி.எம்.சி. நீரையும் இதுவரை தமிழக அரசு கோரவில்லை என்பதுதான் யதார்த்தம்!

தமிழக ஆளும்கட்சியும்,எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கைவிட்டு,இடைக்கால ஆணையின்படி நீரைப் பெற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தை மிகப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும்’’ என்றார்.

லாபம் இல்லை!

கிரியேட் அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை விவசாய நெல் குறித்த கருத்தரங்கத்தில், ‘‘பிற விளைபொருள்களோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் நெல் ஒரு லாபகரமான பயிராக இல்லை. மாற்றுப் பயிர்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நன்செய் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 1950-ம் ஆண்டுகளில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76லட்சம் ஏக்கர். தற்போது 54 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது. சராசரியாக நெல் சாகுபடி பரப்பளவில் ஏறத்தாழ 22 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஏறுமுகத்தில் அரிசி விலை!

தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபனிடம் கடந்த 5ஆண்டுகளில் அரிசி விலையேற்றம் எப்படி உள்ளது என்று கேட்டோம்.

‘‘நடுத்தர மக்கள் அதிகமாக வாங்கும் முதல் தர பொன்னி அரிசி 2006-ல் கிலோ 18ரூபாய்க்கும், 2007-ல் இரண்டு ரூபாய் விலையேறி 20 ரூபாய்க்கும், 2008-ல் 22-க்கும், 2009-ல் 28 ரூபாய்க்கும் விற்கபட்டது. இதே அரிசி இந்தாண்டு ஷனவரியில் கிலோவுக்கு பத்து ரூபாய் ஏறி(!) 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டது’’ என்றார் அவர்.

படங்கள்: ம.செந்தில்நாதன், வே.வெற்றிவேல்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் இதழ், 08.08.2010

Thursday, August 5, 2010

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம்
தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!
சிதம்பரம், 05.08.2010.

தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.




ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:

திராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள் தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணை நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசினார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.

இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT