உடனடிச்செய்திகள்

Monday, December 7, 2015

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

நமது தலைமுறையும் இதற்கு முந்தியத் தலைமுறையும் கண்டிராத பெருமழையாலும், வெள்ளத்தாலும், சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் கடலூர் மாவட்டமும் தாக்கப்பட்டு பேரழிவைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இந்த உண்மையை இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளும் உணர வேண்டும்; மக்களாகிய நாமும் உணர வேண்டும். அனைவரும் சேர்ந்து இந்தப் பேரழிவுகளை எதிர் கொண்டு மீள வேண்டும். இன்னும் தொடர்மழையும் வெள்ளப் பெருக்கும் விட்டபாடில்லை. வானிலை எச்சரிக்கைகள் அவ்வாறு இருக்கின்றன.

வழக்கமான வெள்ளச் சேதமல்ல இப்பொழுது ஏற்பட்டிருப்பது! இந்தப் பேரழிவில் துயர் துடைப்பு நடவடிக்கைகளில் மக்கள் அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், கட்சிகள், தனி நபர்கள் ஆகியோரின் சமூக நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமெடுப்பில் நடந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றன.

தனித்தனியே, உதிரி உதிரியாகப் பிரம்மாண்டமான அளவில் துயர் நீக்கப் பணிகள் நடந்தாலும் அவற்றிடையே ஒருங்கிணைப்பு மிக மிகத் தேவை. தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக் குறைவின் காரணமாக பல இடங்களில் உதவிகள் கிடைக்காமல் இன்னும் துடிக்கின்றனர்.

வெள்ளந்தாக்கி ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் வகை வகையாகப் பல தன்மை கொண்டவை. மழை நின்ற பின் சில நாட்களில் முடிந்துவிடக் கூடிய வேலைகள் அல்ல அவை. பெருங்குளிர் மற்றும் சுகாதாரக் கேடுகளால் புதிய புதியத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தேவை.

மேற்கண்ட துயர்நீக்கப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வகைப் பிரித்து செயல்படுத்தவும் கண்காணிக்கவும் அடுக்குமுறையில் கட்டமைப்புகள் தேவை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வு நிறுவனங்கள், ஊடகத் துறையினர், தகுதிமிக்கத் தனிநபர்கள் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, மேலிருந்து கீழ்வரை மேற்கண்ட பிரிவினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட மக்கள் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவும் அந்தந்த மட்டத்தில் ஓர் அதிகாரியின் தலைமையில் இயங்க வேண்டும்.

இத்திசையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசின் உடனடிக் கடமைகள்

இந்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுகளை அனைத்திந்தியப் பெரும் பேரிடராக ஏற்று அதற்குரிய நிதி உதவி மற்றும் துயர் நீக்க உதவிகளை வழங்க வேண்டும்.

பேரழிவில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் மீது குறைகள் காண நாம் விரும்பவில்லை. ஆனால் சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டிய அவசர அவசியம் உள்ளது.

இந்திய அரசு முதல் கட்டமாக அறிவித்த ரூ 940 கோடி நிதி உதவியில் தமிழ்நாடு அரசு 
தரவேண்டிய பழைய நிலுவைத் தொகைகளைப் பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. அது உண்மையானால் – அது மனித நேயமற்ற செயல்.

2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் கங்கை ஆற்றுக் கரையோரமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு 8346 கோடி ரூபாய் அளித்தது இந்திய அரசு. அதைவிடப் பன்மடங்கு கூடுதலாகப் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவிற்கு, இதுவரை 1940 கோடி ரூபாய் தான் அறிவித்துள்ளது. குறைந்தது இருபதாயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொண்டு தொகையை உடன் அனுப்ப வேண்டும்.

நிலக்கரிக் கழகம், பி.எச்.இ.எல். போன்ற இந்திய அரசின் ஒன்பது (நவரத்னா) நிறுவனங்கள் உத்திர காண்ட் பேரழிவுக்கு நிதி உதவி செய்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே 125 கோடி ரூபாய் நிதி அளித்தது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டு பேரழிவிற்கும் நிதி அளிக்க வேண்டும்.

தலைமுறை காணாத இந்த வெள்ளப் பேரழவில் துயர் நீக்கப் பணிகளில் எளிய இயக்கமாகிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் அனைவருக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT