உடனடிச்செய்திகள்

Saturday, November 1, 2025

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுக்கு எதிராகப் புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுக்கு எதிராகப்

புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

 

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தின் வழியே இந்திக்காரர்கள் திணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் இன்று (01.11.2025) தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்தியது.

 

வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவுள்ள இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்தி உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, புதுச்சேரியின் அரசியலில் செயற்கையான குறுக்கீடாக அமைந்து குழப்பம் விளைவிக்கும்! பீகாரில் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், இங்கு வெளி மாநிலத்தவரை சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்யும்.

 

ஏற்கெனவே பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் குடியேறி விட்டதால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 7 இலட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டதும் இந்த ஆபத்தை உணர்த்தும்! புதுச்சேரியில் பெருமளவில் இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் குடியேறியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது வெளி மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் குடிமக்களாக நிரந்தரப்படுத்தும் சூழ்ச்சியான ஏற்பாடாகும்!

 

எனவே, இதனைக் கண்டித்து, இன்று (01.11.2025) புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், த.தே.பே. வடக்கு கிளைச் செயலாளர் தே. சத்தியமூர்த்தி, தொரவி செயலாளர் அ. முருகன், பாகூர் கிளைச் செயலாளர் கே. அன்பு நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

"திணிக்காதே! திணிக்காதே! வெளி மாநில வாக்காளர்களைத் திணிக்காதே!", "சீராய்வு என்ற பெயரில் நாடகம் நடத்தாதே!", "புதுச்சேரி தமிழர் தாயகம் காப்போம்!" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, கண்டன முழக்கங்களை எழுப்பி இத்திட்டத்தின் ஆபத்து குறித்து உரையாற்றினார். நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. செ. ஞானப்பிரகாசம், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் திரு. கோ. அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு. வெங்கடேசன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை செயலாளர் திரு. ஆ. பாவாடைராயன், தோழர் த. இரமேசு (நா.த.க.), புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் ஐயா புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி படைப்பாளர் இயக்க நிறுவனர் ஐயா ஆறு செல்வம், புதுச்சேரி தமிழ்ச் சிறகம் செயலாளர் இரா. சுகுமாரன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா சிவ. மு. இராசாராம், ஐவேலி த.தே.பே. செயலாளர் தோழர் பா. குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 

நாம் தமிழர் கட்சி மா.செ. இளங்கோவன், வேலவன், மகளிர் ஆயம் தோழர்கள் பிரியா, உமா நந்தினி, கௌசல்யா, கற்பகம், சந்தரலேகா, சித்ரா, பேரியக்கத் தோழர்கள் ஐயா அரங்கதுரை பெருமாள், ஐயா ஆறுமுகம், மதியழகன், இராமச்சந்திரன், ஈட்டன் பாசுகர், மோகன்தாசு, செயக்குமார், அருண்மொழிச் சோழன், மனோஜ்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

இந்தியத் தேர்தல் ஆணையமே!

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு என்ற பெயரில் புதுச்சேரியில்

இந்திக்காரர்களை வாக்காளர்களாகத் திணிக்காதே!

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT