உடனடிச்செய்திகள்

கொள்கை அறிக்கை
ஓசூரில் 2011 செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) 6ஆவது சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கொள்கை அறிக்கை இது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 1992 பிப்ரவரி 1, 2, 3 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் தனது முதல் மாநாட்டை நடத்தியது. அதில், த.தே.பே. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. 

பிறகு, 1998, திசம்பர் 24, 25, 26 ஆகிய நாட்களில் சிதம்பரத்தில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2005 அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 5ஆவது சிறப்புப் பொதுக்குழுவில் கொள்கை அறிக்கையிலும், அமைப்புச் சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

மேற்கண்ட கொள்கை அறிக்கையின் அடித்தளத்தில் நின்று துல்லியப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டு, ஒசூர் சிறப்புப் பொதுக்குழுவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) கொள்கை அறிக்கை புதிதாக மறுவரைவு செய்யப்பட்டது. தேவைக்கேற்ப அமைப்புச் சட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டு, புதிய அமைப்புச் சட்டமும் இச்சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
வரலாற்றில் முதன்முதலாகத் தமிழ்நாடு நேரடியாக வடஇந்திய ஆட்சித் தலைமையின் கீழ் வந்தது 1947 ஆகஸ்டு 15-ஆம் நாள் ஆகும். வெள்ளை பிரித்தானிய ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, ஆரிய இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமை நுகத்தடியில் சிக்கியது தமிழ்நாடு. இந்த அடிமை நிலையே தமிழினத்தின் அடையாளத்தை மறைக்கிறது. தமிழகத்தில் நிலவும் வர்ண-சாதி ஆதிக்கம், பொருளியல் சுரண்டல், சூழலியல் சீர்கேடு, சனநாயக மறுப்பு போன்ற அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அடிமை நிலையே ஆகும். இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுத் தனக்கான இறையாண்மையுள்ள குடியரசை நிறுவிக்கொள்வதே தமிழ்த் தேசிய இனத்தின் முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது சந்தைச் சுரண்டல் தேவைக்காக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு தேசிய இனங்களை ஒன்றிணைத்து இந்தியாஎன்ற பெயரில் புதிய ஆட்சி மண்டலம் ஒன்றை ஓர் அரசின் கீழ் 18-ஆம் நூற்றாண்டில் உருவாக்கியது. இந்தக் காலனிய வலைப்பின்னலுக்குள் தமிழ்த் தேசிய இனமும் வலுக்கட்டாயமாகத் துப்பாக்கி முனையில் இணைக்கப்பட்டிருந்தது. 

இந்தியத் துணைக்கண்டத்தில் எழுச்சி பெற்ற விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்தாலும், இரண்டாம் உலகப்போரில் வலுக¢குன்றிப் போனதாலும் தனது காலனிய நாடுகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டிய நெருக்கடி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டது. அவ்வாறு இந்தியாவை விட்டு வெளியேறும் போது பெரும்பான்மைத் தேசிய இனமான இந்தித் தேசிய இனத்தின் அரசியல் தலைமையிடம் அதிகாரத்தை ஒப்படைத்துச் சென்றது. இந்தப் பெரும்பான்மைத் தேசிய இனத் தலைமையோடு தனது பிற்கால பொருளியல் சுரண்டல் நலனுக்காக வெள்ளையர் ஆட்சி ஒப்பந்தங்களை உறுதி செய்து கொண்டது.

இவ்வாறு செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக்கொள்ள முடியாமல், விடுதலை பெற்ற இந்தியாவில் மறுபடியும் புதிய வடிவில் அடிமைத் தேசமாகத் தொடர்கிறது. ஆங்கிலேய அயல் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்டு இந்திய அண்டை ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் சிக்குண்டது தமிழ்நாடு. 

இதற்கு முன்னர் கன்னடர்களாகிய களப்பிரர் காலத்தில் தொடங்கிய தமிழர்களின் அடிமைநிலை, தெலுங்கர்களாகிய பல்லவர் காலத்தில் தொடர்ந்து, பின்னர் இடைக்காலத்தில் சோழர், பாண்டியர் ஆகியோரின் தமிழின  ஆட்சி குறிப்பிட்ட காலம்வரை நடந்தது. மீண்டும் நவாப்புகள், விசயநகர நாயக்க மன்னர்கள், மராத்தியர்கள் போன்ற அயல் இனத்தாருக்குத் தமிழினம் அடிமைப்பட்டது. இந்த அயலார் தமிழ்நாட்டிலேயே தங்கள் ஆட்சித் தலைமையை அமைத்துக் கொண்டனர். ஆனால் 1947-லிருந்து வடஇந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் தமிழ்த் தேசம் சிக்கிக் கொண்டது. 

குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு 1950 சனவரி 26-இல் இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்ததன் வழி தமிழ்த் தேசத்தின் இந்த அடிமை நிலையின் மீது ஒரு சனநாயக மூடுதிரை போர்த்தப்பட்டது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்து தமிழ்த் தேசத்தின் பகுதியான புதுச்சேரியை 1954இல் இந்தியா இணைத்துக் கொண்டது. அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் ஆளுக்கு ஒரு வாக்குஎன்ற உரிமையை வழங்குவதன் மூலம். இங்கு சனநாயகம் நிலவுவதாகத் தோற்றம் காட்டிப் பெரும்பான்மைத் தேசிய இனமான இந்தித் தேசிய இனத்தின் மேலாதிக்கம் உறுதி செய்யப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 225 பேர் இந்தி இன உறுப்பினர்கள் ஆவர். தமிழ்நாட்டிலிருந்து 39 உறுப்பினர்களே உள்ளனர். ஏனாம், மாகியை உள்ளடக்கிய புதுச்சேரிக்கு ஓர் உறுப்பினர் உள்ளார். அரசமைப்புச் சட்டத்தில் சிறு திருத்தம் செய்வதற்கும் மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு இந்திய நாடாளுமன்றத்தின் முடிவாக அமைய வாய்ப்பு உண்டு. தமிழர் நலன் சார்ந்த திருத்தங்களுக்கு இந்திக் காரர்களின் கருணையை எதிர்நோக்கி நிற்க வேண்டும். 

இவ்வாறு சனநாயகத் தோற்றத்தில் பெரும்பான்மை இன வல்லாண்மை கோலோச்சுகிறது.

ஆயினும் தமிழ்த் தேசிய இனம் போன்றோ வங்காளித் தேசிய இனம் போன்றோ வேறு பல இயற்கைத் தேசிய இனங்கள் போன்றோ இந்தித் தேசிய இனம், ஒற்றைத் தாய்மொழியைப் பொது மொழியாகக் கொண்டு, தனித்த பண்பாட்டோடு, வரலாற்றுப் போக்கில் வளர்ச்சியுற்ற ஒரு தேசிய இனம் அன்று. சமற்கிருதம், பாரசீகம், அரபி போன்ற மொழிகளின் கலப்பால் உருவான ஒன்றே இந்தி மொழி ஆகும். இது மக்கள் திரளின் தாய்மொழியும் அன்று, வடமாநிலங்களில் போஜ்புரி, மைத்திலி, கல்யாணி, அவத்தி, சந்தாலி போன்ற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்ட, மண்ணின் மக்கள் உள்ளனர். ஆயினும் இம்மொழிகள் பொதுத்தர மொழிகளாக (Standard Language) வளரவில்லை. சமற்கிருதமும் பேச்சு மொழியாக இல்லை.

இந்நிலையில் இந்தி மொழி இத்தாய்மொழிச் சமூகங்களை இணைக்கிற பொதுமொழியாக வாய்த்தது. இந்தியைக் கல்வி மொழியாக இம்மக்கள் ஏற்றனர். இவ்வாறு பல்வேறு தாய்மொழிச் சமூகங்கள் இந்தி என்ற பொதுமொழியால் இணைந்த ஒரு பல்துணுக்கு இணைப்புத் (மொசைக்) தேசிய இனமாக இந்தித் தேசிய இனம் உருவாயிற்று. ஆயினும் வேரூன்றிய, தனித்த தேசிய இன அடையாளம் ஏதும் இல்லாததால் இவர்கள்  இந்தியர்என்ற செயற்கை இன அடையாளத்தை ஏற்றுக்கொண்டனர். 

சொந்த வரிவடிவம் அற்ற கலவை மொழியான இந்தி மொழி, சமற்கிருத வரிவடிவை ஏற்றது. அதுவே அரபி வரிவடிவத்தில் எழுதப்பட்டால் உருது மொழி ஆகும். சமற்கிருத வரிவடிவமுள்ள இந்தி மொழியை  ஆட்சி மொழியாக இந்திய அரசமைப்புச் சட்டம் அறிவித்தது. மேலும் மேலும் சமற்கிருத சாரம் பெற்றதாக இந்தியை நிலைநிறுத்துவதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது.

ஆரிய வல்லாண்மைக்கு உற்ற கருவியாக சமற்கிருதம் வரலாறு நெடுகிலும் பயன்பட்டுள்ளது. சமற்கிருதமயமான இந்தி மொழியானது ஆட்சி மொழியாக்கபட்டதன் மூலம் ஆரிய மேலாண்மைக்கு அரசமைப்புச் சட்ட அரண் கிடைத்தது. ஆரியக் குறியீடுகளே இந்திய அடையாளங்களாக முன்வைக்கப்பட்டன. ஆரிய வர்த்தத்திற்கு இருந்த பாரதம்என்ற பெயர் இந்தியாவிற்கு சூட்டப்பட்டது. காவி, சக்கரம், சிங்கம் முதலிய ஆரியக் குறியீடுகள் இந்திய அடையாளங்களாக ஆக்கப்பட்டன. இந்திய அரசின் திட்டங்கள், நிறுவனங்கள், விருதுகள் போன்றவற்றிற்கு ஆரியப் பெயர்களே சூட்டப்பட்டன. 

இவ்வாறு இந்தியம்என்ற புதிய வடிவத்தை ஆரியம் பெற்றது. 

வரலாற்று ஓட்டத்தில் வெவ்வேறு அளவுகளில் ஆரியமயமாகிப் போன இந்தியத் துணைக்கண்டத்துத் தேசிய இனங்கள் இந்தியர்என்ற அடையாளத்தை வெவ்வேறு நிலைகளில் ஏற்றுக்கொண்டன. ஆரிய சாரம் கொண்ட இந்தித் தேசிய இனத்திற்கு  இதன் மூலம் துணை சக்திகள் கிடைத்தன.

குசராத்தி சேட்டுகள், மார்வாடிகள், பார்சிகள் ஆகிய சிறுபான்மை தேசிய இனங்களிலிருந்தும், இனக்குழுக்களிலிருந்தும் தோன்றிய முதலாளிகளே இந்தியப் பெருமுதலாளிகளில் பெரும்பான்மையோர் ஆவர். அனைத்திந்தியச் சந்தை ஆதிக்க வாய்ப்பு பெற்ற முற்றாதிக்க முதலாளிகள் பெரிதும் இவ்வகையினரே ஆவர். தங்களது சுரண்டல் தேவைக்காக இந்தி மொழியோடும், இந்தித் தேசிய இனத்தோடும் இப்பெரு முதலாளிகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

பிரித்தானியக் காலனியாக இந்தியா இருந்த போதே மூலதன ஏற்றுமதியில் ஈடுபட்டு வளர்ச்சி அடைந்த இப்பெருமுதலாளிகள் இன்றைய உலகமயத்தோடு இணைந்துவிட்டனர். இந்திய முற்றாதிக்க முதலாளிகள் பன்னாட்டு உலகமய முதலாளிகளோடு இணைந்து அனைத்திந்தியச் சந்தையையும், உலகச் சந்தையையும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.

ஆரியத்தின் விரிவாக்க வாதமும், இப்பெரு முதலாளிகளின் சந்தை வேட்டையும் இணைந்து இந்திய ஏகாதிபத்தியமாக உருவானது. 

ஏகாதிபத்தியம் குறித்த வரையறுப்பில் பொருளியல் கூறு மட்டும் இருக்கவில்லை. அரசியல் கூறும் அடங்கியிருக்கிறது. 

ஆரியமானது மரபினம், மொழி, மெய்யியல், பண்பியல் கூறுகளைக் கொண்ட ஒரு கருத்தியலாகச் செயல்படுகிறது. அக்கருத்தியலின் களநாயகனாக இந்தித் தேசிய இனமும், இந்தியத் தேசியமும் செயல்படுகின்றன. இந்த இந்தியத் தேசியத்தைத் தனது கருத்தியலாக ஏந்தி வருவதுதான் இந்திய ஏகாதிபத்தியம். எந்த வர்க்கமாக இருந்தாலும் அதற்கோர் இனச் சார்பு / தேசிய இனச் சார்பு இருந்தே தீரும். இந்திய ஏகாதிபத்தியத்திற்குத் தலைமை தாங்கும் இந்தியப் பெருமுதலாளிகள் ஆரிய மரபினத்தையும், இந்தித் தேசிய இனத்தையும் தங்களின் பின்பலமாகக் கொண்டுள்ளனர்.

மூலதன ஏற்றுமதி, பிரதேச ஆக்கிரமிப்பு ஆகியவை இந்திய ஏகாதிபத்தியத்தின் வளரும் போக்காக உள்ளன. உலகம் முழுவதும் இந்தியப் பெருமுதலாளிகள் மூலதன ஏற்றுமதி செய்வது, தனிநாடாக இருந்த காசுமீரின் பகுதி, சிக¢கிம் ஆகியவற்றை விழுங்கியது, ஈழத்தில்  போர் நடத்தித் தமிழினத்தை அழித்தது, நேபாளத்தில் தலையிடுவது போன்றவையும் இந்தியப் பெருமுதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகள் என்பதற்குச் சான்று கூறும். தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பிற தேசிய இனப் பகுதிகளையும் இந்திய ஏகாதிபத்தியம் கொள்ளையிடுகிறது. 

முதல் நிலை ஏகாதிபத்தியங்களான வட அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்திய முதலாளிகளின் அளவுக்குப் புதிய காலனிய ஏகபோக வலிமை இவர்களுக்கு இல்லை என்பதை வைத்து இந்தியப் பெருமுதலாளிகளை ஏகாதிபத்திய முதலாளிகள் அல்லர் என்று முடிவு செய்யக¢கூடாது. 

இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் இந்தியப் பெருமுதலாளிகள் ஏகாதிபத்திய முதலாளிகளாகவும், முதல் நிலை வல்லரசுகளின் உலகமயக் கூட்டாளிகளாகவும் உள்ளனர். 

பிறப்பால் உயர்வு தாழ்வுக் கருத்தியல் இன்றி, ஐந்திணைக் கோட்பாட்டுடன் வாழ்ந்து வந்த தமிழினத்தில், ஆரியம் வருணாசிரமக் கருத்தியலைப் புகுத்தியது. ஆரியத்தின் தலைமைச் சமூகப் பிரிவான பார்ப்பனர்களிடம்  (பிராமணர்களிடம்) ஊற்றெடுத்த நால் வருணக் கோட்பாடு மக்கள் சமூகத்தை மேல் கீழாகக் கூறு போட்டது. வர்க்கச் சுரண்டலுக்கும், சொத்து, அரசு ஆகியவற்றில் வாரிசுரிமையை நிலைப்படுத்துவதற்கும் பயன்பட்ட வர்ண-சாதிப் பிரிவி¬னை, படிநிலை ஆதிக்கத்தை உறுதி செய்ததால் வெவ்வேறு சாதியினரும் வெவ்வேறு அளவுகளில் அதற்கு அரண் சேர்த்தனர். இந்தப் படிநிலை அடுக்கில் தலைமைப் பிரிவினராகப் பார்ப்பனர்கள்(பிராமணர்கள்) இருக்கின்றனர். 

ஆரிய மொழியான சமற்கிருதம் பார்ப்பனர்களின் (பிராமணர்களின்) பேச்சு மொழியாக இன்று இல்லையென்றாலும், அதுவே தங்கள் மூலமொழி என்றும் அதுவே புனித மொழி என்றும் அவர்கள் போற்றுகின்றனர்; அக்கருத்தையே பரப்புகின்றனர். சமற்கிருத ஆதிக்கம் தமிழ்மொழியில் தொடர வேண்டும் என்று பார்ப்பனர்களில் மிகப்பெரும்பான்மையோர் விரும்புகின்றனர். அதற்காக முயல்கின்றனர்.

பார்ப்பனர்களின் (பிராமணர்களின்) வேதமதம் வர்ண_-சாதி நோயைப் பரப்பி பல்வேறு மக்களைத் தனக்குள் இணைத்து விரிவடைந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்துமதம் என்பதாகப் பெயர் பெற்றது. இந்து மதம் என்பதும், இந்தியா என்பதும் மேற்கத்திய அயல்நாட்டினர் வைத்த பெயர்களே! இசுலாமியர், கிறித்துவர் அல்லாத பல்வேறு மதப்பிரிவினர் இந்துக்கள் என்ற பெயரில் ஒரே மதமாக ஒருங்கிணைக்கப்பட இந்தியச் சட்டங்களும் துணை செய்தன. இது பெரும்பாலான மக்கள் கூட்டத்தின் மீது பார்ப்பனத் தலைமையை உறுதிசெய்தது. அனைத்திந்திய அதிகார வர்க்கத்தினராக அரசுக் கட்டமைப்பிலும், கருத்துப் பரப்புநர்களாக ஊடகங்களிலும் இருந்து தமது முதன்மையைப் பார்ப்பனர்கள் நிலைநிறுத்தினர்.

இவ்வாறு பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளிய- ஆரியப் பார்ப்பனிய- இந்தித் தேசிய இன ஆதிக்க அரசாக இந்திய அரசு உருப்பெற்றது. இது ஏகாதிபத்திய அரசாக வளர்ச்சியுற்று வலுப்பெற்றது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடித் தோற்றுபோன பல்வேறு தேசிய இன மக்களை அவ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒருங்கிணைக்க இந்துமத அடிப்படையிலான இந்தியத் தேசியம் என்ற புனைவு பயன்பட்டது. 1947க்குப் பிறகு இந்திய அரசமைப்பின் கீழ் பல்வேறு தேசிய இனமக்களை இணக்கம் காண வைக்கவும் இந்தப் புனைவு பயன்பட்டது. 

ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தனர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் தமிழர்கள் ஆண்டனர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்திற்கு வடமேற்கில் கைபர், போலன் கணவாய் வழியாக மேய்ச்சல் சமூகமாக நுழைந்த ஆரியர்கள், அங்கு நகர நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழர்களோடு நீண்ட காலம் போர் புரிந்தனர். தமிழர்களின் சிந்துவெளி நகரங்களான மொகஞ்சதாரோ, அரப்பா உள்ளிட்டவற்றை அழித்தனர். பின்னர் வட இந்தியாவில் குடியேறி ஆரியர்கள் நிலையாக வாழ்ந்தனர்.

அப்பொழுது ஏற்பட்ட தமிழர்-_ஆரியர் முரண்பாடும் பகைமையும் 5000 ஆண்டுகள் கடந்த பின் இன்றும் தொடர்கின்றன. ஆரிய-சிங்கள அரசுடன் இணைந்து ஆரிய-இந்திய அரசு ஈழத்தமிழர்களின் கிளிநொச்சித் தலைநகரை அழித்த கொடுஞ்செயல், ஆரியர் நடத்திய சிந்துவெளி அழிப்பின் தொடர்ச்சியே ஆகும். இலட்சக் கணக்கில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் இந்த இனப்பகையின் தொடர்ச்சியே.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழைத் தவிர மற்ற எல்லா பெரிய மொழிகளும் வடமொழிச் சார்பு அல்லது வடமொழிக் கலப்பு கொண்டவையே. அதேபோல் தமிழினம் தவிர மற்ற தேசிய இனங்கள் ஆரியப் பார்ப்பனியப் பண்பாட்டுடன் சமரசம் கண்டவையே.

வடமொழிச் சார்பும் துணையுமின்றி இயங்கக்கூடியது தமிழ்மொழி மட்டுமே. ஆரியப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் இணக்கம் காண முடியாத முரண்பாடுகள் கொண்டவை. எனவேதான் ஆரியர் _ -தமிழர் இனப்பகை இன்றும் தொடர்கிறது.

இந்தியத் தேசியம் என்ற ஆதிக்கப் புனைவின் வழியாகவும், இந்தித் திணிப்பின் மூலமாகவும் ஆரிய ஆக்கிரமிப்பு தொடர்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் தற்காப்புப் போராட்டமும் தொடர்கிறது.

பிரித்தானிய இந்தியாவில் தனிநாட்டு விடுதலைக் குரலை முதலில் எழுப்பியது தமிழினமே. 1938இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழறிஞர்களும், பெரியாரும் தமிழ்நாடு தமிழருக்கேஎன்று முழக்கம் கொடுத்து தனித்தமிழ்நாட்டுக்கான முதல்நிலைக் கருத்தை உருவாக்கினர். இந்தியாவிற்கு விடுதலை வழங்க ஆங்கிலேய அரசு முன்வந்தபோது சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கு 1946-இல் தனிவிடுதலை கோரினார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார்.

திராவிடர் கழகத்திலிருந்து பின்னர் பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டை உள்ளடக்கிய திராவிட நாடு விடுதலை கேட்ட போது, பெருந்திரளான தமிழர்கள் அக்கோரிக்கையை ஆதரித்தனர். சி.பா. ஆதித்தனார் ஈழத்தை உள்ளடக்கிய தமிழப் பேரரசுஅமைக்க தமிழ்நாடு விடுதலை கோரினார். ம.பொ.சி இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமை உள்ள தமிழ்க் குடியரசு கோரினார். ஆனால் தி.மு.க.வும், ஆதித்தனார், ம.பொ.சி. ஆகியோரும்  தங்கள் கோரிக்கைகளைப் பின்னர் கைவிட்டனர். பெருஞ்சித்திரனார் இறுதிவரை தனித் தமிழ்நாடு கோரினார். தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப் படை அமைத்துப் போராடினார்.

ஆரியத்திற்கும் தமிழினத்திற்கும் உள்ள வரலாற்று முரண்பாட்டின் தொடர்ச்சியே இப்போராட்டங்களாகும். இப்போராட்டம் மேலும் தொடர வேண்டியுள்ளதையே இந்திய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் வலியுறுத்துகின்றன.

மொழிவழி மாநில அமைப்பின்போது அண்டைத் தேசிய இனங்கள் வரலாற்று உண்மைகளுக்கு முரணாக, தமிழர் தாயக நிலப்பகுதிகளைத் தங்களுடையவை என்று கோரி வல்லடி வழக்குச் செய்தன. அதைச் சாட்டாகப் பயன்படுத்தி அப்பகுதிகளை  அண்டை தேசிய இனங்களுக்குச் சொந்தமாக்கியது இந்தியா. 

திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி ஆகிய தமிழர் தாயகப் பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. கோலார் தங்க வயல், கொள்ளேகாலம், நஞ்சன்கூடு உள்ளிட்ட தமிழர் பகுதிகளை கர்நாடகத்துடன் இணைத்தது இந்தியா. தேவிகுளம், பீரிமேடு, கொச்சின்சித்தூர், நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, பாலக¢காடு, செங்கோட்டை நகர் நீங்கிய செங்கோட்டை வட்டம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளைக¢ கேரளத்துடன் இணைத்தது.

பின்னர் தமிழகத்தின் ஒருபகுதியாகிய கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்தியா.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட காலில் போட்டு மிதித்து தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்திட கர்நாடகத்திற்கு இந்திய அரசு துணை செய்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் சட்டக் கடமையைக் கூட செய்ய மறுக்கிறது.

வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுக்கிறது கேரளம். புதிய அணை கட்டப் போவதாகச் சொல்லிக் கொண்டு, இருக்கிற அணையை இடிக்க அது சதி செய்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலைநிறுத்தி உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைச் செயல்படுத்த விடாமல் தடுத்தது கேரளம். அக்கேரளத்திற்குத் துணை போகிறது இந்தியா. 

பாலாற்றில் அணை கட்டி கசிவுநீர் கூட தமிழகத்திற்கு வராமல் தடுக்கும் ஆந்திர அரசுக்கு மறைமுகமாக இந்தியா துணைசெய்கிறது.

இவ்வாறு இந்தியாவின் துணையுடன் அண்டை தேசிய இனங்கள் செய்துள்ள நீர் முற்றுகையால் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்களையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளது தமிழகம்.

கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்ததால் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கொடுக்கும் துணிச்சலில் சிங்களக் கடற்படையினர் கச்சதீவு அருகே தமிழக மீனவர்களை அடிக்கடி கொல்வதும், இழிவுபடுத்துவதும், துன்புறுத்துவதும் கேள்விமுறையின்றி தொடர்கிறது. அறுநூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். 

தமிழினப் பகையைத் தனது நெஞ்சில் சுமந்துள்ள ஆரிய, இந்திய வல்லாட்சி தமிழர்களைக் கருவறுக்கிறது.

உண்மையான தேசிய இனங்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் மறுக்கும் ஒடுக்குமுறைக் கருவியாக இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளது. குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்தின் மூத்த மரபினமாகவும், தேசிய இனமாகவும் உள்ள தமிழர்களின் அடையாளம் அதில் இல்லை.

உலகத்தின் முதல் செம்மொழி தமிழ். அது உலகமொழிகள் பலவற்றின் தாய். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு தேசிய இனத்தின் தாய்மொழி தமிழ் என்ற ஏற்பிசைவைக்கூட வழங்க மறுக்கிறது. எட்டாவது அட்டவணையில் மொழிகள் என்ற மொட்டைத் தலைப்பில் தமிழையும் பட்டியலிட்டிருக்கிறது. அதேவேளை கலவை மொழியாகப் பிற்காலத்தில் தோன்றிய இந்தி மொழி இந்திய அரசின் ஆட்சி மொழியாக அரசமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியையும் இந்தியப் பண்பாட்டையும் வளப்படுத்தும் மொழியாக சமற்கிருதம், அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிறமொழிகள் வட்டார மொழிகள் என்று இழிவுபடுத்தப்படுகின்றன.

பல்தேசிய இனநாட்டில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்பது இன்றியமையாத் தேவையாகும். இது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் தேசிய இனங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் மறுக்கிறது. ஒற்றை ஆட்சித் தன்மை மேலோங்கியும் கூட்டரசுத் தன்மை மிகச் சுருங்கியும் உள்ள ஒரு போலி ஒன்றியமே இந்தியா.

இந்திய அரசமைப்பு வழங்கும் தேர்தல் சனநாயகமும், நாடாளுமன்ற முறைமையும் இந்தித் தேசிய இனத்தின் மேலாண்மையை உறுதி செய்யும் ஏற்பாடே ஆகும். 

தமிழகத்தின் இயற்கை வளங்களை 1947 ஆகஸ்டு 15க்கு முன் பிரித்தானியா அள்ளிச் சென்றது. அதற்குப்பின் இந்தியா அள்ளிச் செல்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், மாக்னசைட், பாக்சைட், பிளாட்டினம், தோரியம், மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும் இந்திய அரசே எடுத்துக்கொள்கிறது. இவற்றில் மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. வடநாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்குத் தமிழகப் பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுத்துச் செல்லும் உரிமம் வழங்கும் இந்திய அரசு, தமிழக அரசுக்கு அவ்வகை உரிமத்தை வழங்குவதில்லை.

நெய்வேலி பழுப்பு நிலக்கரியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுவதில்லை. காவிரி நீர் மறுக்கும் கர்நாடகத்திற்கும் முல்லைப் பெரியாறு உரிமையை மறுக்கும் கேரளத்திற்கும், பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கும் நெய்வேலி மின்சாரத்தை இந்திய அரசு வாரிவழங்குகிறது.

1000 கி.மீ நீளமுள்ள தமிழகத்தின் கடற்பரப்பு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களைத் தமிழகக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் இந்திய அரசு, தமிழக மீனவர்களுக்குப் பலவகைக¢ கட்டுப்பாடுகளை விதிக்கிறது. சென்னை, தூத்துக்குடி, உள்ளிட்ட வணிகத் துறைமுகங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் ஈட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இணையான அயல்நாட்டுப் பணம் முழுவதும் இந்திய அரசின் கருவூலத்திற்கே போகிறது.

உற்பத்தி வரி, அதற்கான மேல்வரி, சுங்கவரி, நிறுவன வருமான வரி, வருமான வரி, சேவை வரி, நடுவண் விற்பனைவரி ஆகிய கொழுத்த வருமானம் தரும் வரிகள் அனைத்தையும் இந்திய அரசே விதித்து வசூலித்துக் கொள்கிறது. மாநில விற்பனை வரி என்ற ஒன்று மட்டும் தமிழ்நாட்டுக்கு இருந்தது. அதையும் மதிப்புக் கூட்டு வரியாக மாற்றி இந்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. 

உற்பத்தி வரி வசூலில் மிகச்சிறு பங்குத் தொகையை மட்டும் தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு வழங்குகிறது. ஆனால் உற்பத்தி வரியின் மேல்வரிகளில் (சர்சார்ஜ்) மாநில அரசுக்குப் பங்கு கிடையாது.

தனிநபர் வருமான வரியில் மாநில அரசுக்குப் பங்கு தரும் இந்திய அரசு, அதைவிட அதிகமாகக் கிடைக்கும் நிறுவன வருமான வரியில் பங்கு தருவதில்லை.

இவ்வாறு அனைத்து வளங்களையும், வரிகளையும் தமிழ்நாட்டிலிருந்து சுரண்டிக் கொழுக்கும் இந்திய அரசு. அதிலிருந்து மிகச்சிறு தொகையை மானியம் என்ற பெயரில் தமிழகத்திற்குத் தந்து கொடுமையாக வஞ்சிக்கிறது. 
பிரித்தானிய ஏகாதிபத்தியம் அள்ளிச் சென்றதை விட இந்திய ஏகாதிபத்தியம் அடிக்கும் கொள்ளை பல மடங்கு அதிகம். 

வடஇந்தியப் பெருமுதலாளிகள், பன்னாட்டு முற்றாதிக்க நிறுவனங்கள், ஆகியவற்றின் வேட்டைக் காடாகத் தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய உலகமயக் கோட்பாடு இந்திய ஏகாதிபத்திய நலனுக்கும் இசைவாக உள்ளது. ஒப்பீட்டளவில் உயர்வான உள்கட்டுமான வசதிகள், தொழில் ஒழுங்கு, தொழில் அமைதி ஆகியவற்றின் காரணமாகப் பன்னாட்டு, வடநாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டிற்குப் படையெடுக்கின்றனர்.

உள்நாட்டுச் சந்தையை நிறைவு செய்வதை விட,  உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முதன்மை நோக்கத்திலேயே புதியபுதிய தொழிலகங்கள் தமிழ்நாட்டில் முளைக்கின்றன. இது இயல்பான தொழில் வளர்ச்சியாக இல்லாமல் செயற்கையான தொழில் வீக்கமாக அமைந்துள்ளது.

இத்தொழில் வீக்கம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக ஆசை காட்டப்பட்டாலும் குறை வேலை வாய்ப்பையே வழங்குகிறது. எந்த வகை பணி உறுதிப்பாடும் இன்றி உதிரித் தொழிலாளர்களாகவே பெரும்பாலான தொழிலாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை என்பது இயல்பாக்கப்பட்டுவிட்டது. அமர்த்து-துரத்துஎன்பது இத்தொழிலகங்களின் நடைமுறை விதியாகிவிட்டது. தொழிலுறவுச் சட்டங்கள் இந்நிறுவனங்களின் வாயிற் கதவுகளுக்கு வெளியே கைகட்டி நிற்கின்றன. சிறப்புப் பொருளியல் மண்டலங்கள்என்பவை எந்தச் சட்டதிட்டங்களுக்கும் உட்படாத, வரி விதிப்புகளுக்கும் அப்பாற்பட்ட புதிய வகை பிரம்ம தேயங்களாக”, “சர்வமானியங்களாகஉருவாக்கப்பட்டுள்ளன.

அரசின் வரிச் சலுகைகளோடும், மூலதன வலுவோடும் இயங்கும் இப்பெரு நிறுவனங்களுடன் சந்தையில் போட்டியிட முடியாமல் தமிழ்நாட்டின் சிறு தொழில் நிறுவனங்களும், குறுந்தொழில்களும் நலிவடைகின்றன. இப்பெரு நிறுவனங்களின் அரை குறை வேலை வாய்ப்பு, படிப்பறிவும் உடல்வலுவும் உள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்த்துக் கொள்வதால் இந்த மண்ணின் சிறு தொழிலகங்களும், சில்லரை வணிக நிறுவனங்களும் ஆள் பற்றாக்குறையால் அல்லல்படுகின்றன.

ஏகாதிபத்தியத் தொழில் வளர்ச்சி முறையின் தவிர்க்க முடியாத விளைவு இது. இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாகத் தமிழ்நாடு சிக்கியுள்ளதால் இவ்வகை நெருக்கடிக்குத் தமிழகம் ஆட்பட்டுள்ளது. 

உலகமய, - தாராளமயப் பொருளியலின் விளைவாகப் பன்னாட்டு, வடநாட்டுப் பெருமுதலாளிகளின் ஆக்கிரமிப்பால் தமிழகத்தின் தற்சார்புத் தொழில் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தானியங்கி ஊர்தித் தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகள், விசைத்தறிகள், சிறு, நடுத்தரப் பொறியியல் தொழிலகங்கள். என பல்லாயிரக் கணக்கான தமிழர் தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்டன. நெசவு, நகைத் தொழில்கள், பாத்திரத் தொழில் உள்ளிட்ட கைவினைத் தொழில்கள் நசுக்கப்பட்டுவிட்டன. 

ஒரு காலத்தில் இந்திய அரசில் செல்வாக்குச் செலுத்திய நிலக்கிழார்கள் காலப்போக்கில் அவ்வலுவை இழந்தனர். வேளாண்மையில் நிலக்கிழமை உறவு மறைந்து முதலாளிய உற்பத்தி உறவு முதன்மை பெற்றதும், முதலாளியச் சந்தை வேட்டையில் பலமுனைகளிலிருந்தும் வேளாண்மை நசுக்கப்பட்டதும் இந்நிலைக்குக் காரணங்களாகும்.

ஆற்றுநீர்ச் சிக்கல்கள், சந்தைப் பறிப்பு, இலாப விலை கிடைக்காமை, பன்னாட்டு விதை மற்றும் இடுபொருள் நிறுவனங்களின் ஆதிக்கம், ஆள்பற்றாக்குறை என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு வேளாண்மை கொடும் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. இந்திய அரசின் கொள்கைகள் வேளாண்மையைவிட்டு உழவர்களைத் துரத்தும் உள்நோக்கத்திலேயே உருவாக்கப்படுகின்றன. முதல் பசுமைப் புரட்சி ஏற்படுத்திய கேடுகள் போதாதென்று, இரண்டாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் உயிரித் தொழில்நுட்ப மரபீனி மாற்று விதைகள் புகுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் மரபான பயிர்களையும் மண்ணின் வீரியத்தையும் அழித்துப் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களின் தொழில் நுட்பக் காலனியாகத் தமிழகத்தை  மரபீனி மாற்றத் தொழில் நுட்பம் தாழ்த்திவிடுகிறது. வேளாண்மையையும், வேளாண் நிலத்தையும் விட்டுவிட்டு நகரங்களை நோக்கி உழவர்கள் வெளியேறுவது தீவிரப்பட்டுள்ளது. விளைநிலங்கள் மனைகளாக மாற்றமடைந்து அயலார்களுக்குக¢ கைமாறி வருகின்றன.

மனைத் தொழிலும், கட்டடத் தொழில்களும் முதன்மை பெற்று வருகின்றன. கட்டுமானத் தொழில் பெருமளவு உழைப்பாளர்களை ஈர்த்து சிறு தொழில்கள் மற்றும் வேளாண்மைக்கு ஆள் பற்றாக்குறையை அதிகப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் பெருகிவரும் தன்நிதிக் கல்வி நிலையங்கள், பெருநிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களின் வெளிப்பணி வாய்ப்புகளுக்கும் ஆட்களை அணியப்படுத்தும் கல்விப் பட்டறைகளாக உருப்பெற்றுள்ளன.

தொழில் வீக்கமும் அது உருவாக்கிவிட்ட ஆள் பற்றாக்குறையும் இணைந்து தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் நுழைவதை ஊக்கப்படுத்துகின்றன. தொழில் வீக்கம் நடைபெறும் மாவட்டங்கள் வெளியார் படையெடுப்பு மையங்களாக மாறுகின்றன.

தமிழ்நாட்டு நிலங்களை அயலார் வாங்கிக் குவிப்பதும், தமிழ் மண்ணில் மிகை எண்ணிக்கையில் அயலார் குடியேறுவதும் சேர்ந்து தமிழ்நாட்டை ஒரு கலப்பின வாழ்விடமாக மாற்றிவருகின்றன. தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் தமிழினத்தின் கையை விட்டுப் போகும் ஆபத்து தீவிரமடைந்துள்ளது. 

மிகை எண்ணிக்கையில் வெளியார் தமிழகத்தில் குடியேறுவது பண்பாட்டுப் படையெடுப்பை ஏற்படுத்துகிறது. அயல் இனத்தாரின் பண்பாடுகள் இங்கே அன்றாடம் திணிக்கப்படுகின்றன. இராக்கிக் கயிறு கட்டுதல், ஹோலி வண்ணப்பொடி தூவுதல், ஓணம் பண்டிகை என வெளியாரின் பண்பாட்டுப் படையெடுப்புகள் தங்கு தடையின்றி அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே இந்திய அரசின் பண்பாட்டு நடவடிக்கைகள் ஆரிய அடையாளங்களை இந்திய அடையாளங்களாக வரையறுக்கின்றன. ஆரியப் பண்பாட்டை இந்தியாவின் பண்பாடாகக் காட்டுகின்றன. அனைத்திந்திய ஊடகங்கள் ஆரிய அடையாளத்தை இந்தியாவின் ஒட்டுமொத்த அடையாளமாக, பண்பாடாகப் பரப்புவதில் முகாமையானப் பங்காற்றுகின்றன. அண்டை மாநிலங்களில் பொங்கலுக்கு விடுமுறை வழங்காதபோது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாடு முழுமைக்கும் தெலுங்கு ஆண்டுப் பிறப்பிற்கு விடுமுறை விடப்படுகிறது. திரைப்படங்கள் ஹோலி பண்டிகையைப்  பரப்பும் சாதனமாகச் செயல்படுகின்றன.

அயல் மூலதனத்தின் வழியாகத் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள தொழில் வீக்கம் கண்மண் தெரியாத இயற்கை வளச் சுரண்டலுக்கு வழிவகுத்துவிட்டது. தமிழ்நாட்டின் நீர் வளமும், நிலவளமும், கனிமவளமும், கடல் வளமும் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகின்றன. திணிக்கப்பட்ட தொழிலகங்களின் கழிவுகளால் தமிழர்களின் நிலமும், நீரும், காற்றும் கொடுமையாக மாசுபடுத்தப்பட்டுவிட்டன.

தேசிய இன அடையாள மறுப்பு, அரசியல் அடிமைத்தனம், பொருளியல் சுரண்டல், பண்பாட்டுப் படையெடுப்பு, தாயகப் பறிப்பு எனப் பல்வேறு நெருக்கடிகளில் தமிழ்நாடு சிக்கியுள்ளது. இவற்றை எதிர்கொண்டு முறியடித்துத் தமிழ்த் தேசிய இனம் தனது அரசியல் இறையாண்மையை மீட்டு, தற்சார்புடன் அனைத்துத் துறைகளிலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.

1930களில் இருந்து தமிழக அரசியலில் தமிழினக் கொள்கை முன்வைக்கப்பட்ட போதிலும், தெளிவான தேசிய இன வரையறுப்பு, தேச விடுதலை ஆகியவை துல்லியமாக முன்வைக்கப்படவில்லை.

1938லிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் மக்கள் போராட்டமாக நடந்துள்ள போதிலும் தெளிவான மொழிக் கொள்கை இங்கு முன்வைக்கப்படவில்லை.

காங்கிரசுக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவை ஆரிய-பார்ப்பனியத்தின் அரசியல் வடிவமான இந்தியன்என்ற புனைவுத் தேசிய இனப்பெயரை தமிழர்களுக்குச் சூட்டின. மேற்கண்ட அனைத்திந்தியக் கட்சிகளுக்கு மாற்றாக விளங்கிய திராவிட இயக்கம் தமிழர்களுக்கு திராவிடர்என்ற திரிபான இனப்பெயரைச் சூட்டியது.

வரலாற்றில் இந்தியர்என்ற பெயரில் ஓர் இனம் இல்லாததைப் போலவே திராவிடர்என்ற பெயரில் ஒரு மரபினமோ அல்லது ஒரு தேசிய இனமோ இருந்ததில்லை.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்த ஆரியர்கள், அங்கு நகர நாகரிகத்தோடு வாழ்ந்து வந்த தமிழர்களைக் குறிக்க தமிழர்என்று  உச்சரிக்கத் தெரியாமல் த்ரமிளஎன்றும், பின்னர் த்ராவிடஎன்றும் திரிபாக உச்சரித்தனர். தமிழர்களைத் தங்கள் இலக்கியங்களில் திராவிடஎன்று குறிப்பிட்டனர். 

தமிழர்கள் தங்களைத் திராவிடர்என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ளவில்லை. 

இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வாழ்ந்து வந்த தமிழர்கள் கால ஓட்டத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் மட்டும் சுருங்கி வாழ வேண்டிய வரலாற்று நிலைமைகள் உருவாயின. வடஇந்தியாவில் ஆரியர்கள் நிலைகொண்டனர். ஆரியர்களின் தலைமைப் பிரிவாகவும் அறிவுத் துறைப் பிரிவாகவும் விளங்கிய பார்ப்பனர்களில் சிலர் தெற்கே  தமிழ்நாட்டிற்கு வந்து கருத்துகளைப் பரப்பினர். 

களப்பிரர் மற்றும் பல்லவர் ஆட்சியில் வடநாட்டில் இருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் குடியேற்றப்பட்டனர். அப்பார்ப்பனர்களை அடையாளப்படுத்த வடநாட்டு ஆரியர்கள் அவர்களைத் திராவிட பிராமணர்கள்என்றும் திராவிடர்கள்என்றும் அழைத்தனர்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்த போது தமிழர்களை த்ரமிள”, “த்ராவிடஎன்று திரிபாக அழைத்த ஆரியர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர், தமிழர்கள் வாழ்ந்த தென்னகத்தைத் திராவிடம்என்று அழைத்தனர். திராவிடம் என்று அவர்கள் கருதிய பகுதியில் வாழ்ந்த ஆரியப் பார்ப்பனர்களைத் திராவிடர்என்று அழைத்தனர்.

அப்பொழுதும்கூட தென்னாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளாமல் தமிழர்என்றே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அதேபோல் தங்கள் தாயகத்தைத் தமிழ்த்தேயம், தமிழகம், தமிழ்நாடு, தென்னகம் என்றுதான் அழைத்தனரே தவிர திராவிடம் என்று எங்கும் எப்போதும் அழைக்கவில்லை.

இதனால் காலப்போக்கில் திராவிடர் என்ற இனப் பெயர் தென்னாட்டில் வாழும் ஆரியப் பார்ப்பனர்களைக் குறிக்க மட்டுமே பயன்பட்டது. பிறகு அவர்களுடன் ஏற்பட்ட கலப்பால் பிரிந்து உருவான தமிழ்நாட்டின் வடக்கே வாழ்ந்த சில பிரிவினரும் பல்லவர் காலத்தில் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். 

வரலாற்று உண்மைகள் இவ்வாறு இருக்க மேலைநாட்டு மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்கள், சமற்கிருத மொழிக் குடும்பத்தினின்றும் தனித்து இயங்கிய தமிழ் மொழிக் குடும்பத்தை அடையாளப்படுத்தத் திராவிட மொழிக் குடும்பம்என்று 1856-இல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலில் பிழையாகப் பெயர் சூட்டினார். தமிழ் மொழியின் தனித்தன்மையையும் சிறப்புகளையும் உலகறிய நிலைநாட்டிய கால்டுவெல் மூலதிராவிட மொழி என ஒன்று இருந்ததாகப் பிழையாகக் கருதினார்.

மனுதர்மம் உள்ளிட்ட சமற்கிருத நூல்களிலிருந்து திராவிடர்என்ற சொல்லை எடுத்ததாக கால்டுவெல் கூறுகிறார்.

அந்த மூல திராவிட மொழியிலிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் ஒவ்வொரு கட்டத்தில் தோன்றின என்றார். அந்த மூலமொழியே தமிழ்தான் என்பது பாவாணர் உள்ளிட்ட பிற்காலத்திய மொழியியல் அறிஞர்களின் முடிவு. 

திராவிட மொழி என்ற பெயரில் தமிழின் பெருமை கால்டுவெல்லால் நிலைநாட்டப்பட்டதால் பிற்கால தமிழறிஞர்கள் சிலரும் திராவிடம் என்ற சொல்லைப் பெருமையோடு பயன்படுத்தினர்.

குறிப்பாக சமற்கிருதத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான சொல்லாகக் கருதிக்கொண்டு திராவிடம் என்ற சொல்லை ஒருசார் தமிழறிஞர்கள் கையாண்டனர். பின்னர் திராவிடர்என்ற சொற்கோவை தமிழக அரசியலில் முதன்மை பெற்றது. திராவிடர் என்ற தலைப்பின் கீழ் இயங்கிய அமைப்புகள் வர்ண-சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தமிழர்களை உள்ளடக¢கிய திராவிடஇன உரிமைக்காகவும் ஆரியத்திற்கு எதிராகவும் இயங்கின. போராட்டங்கள் நடத்தின. இருந்தபோதிலும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று பிழையாக அடையாளப்படுத்தியமை தமிழர்களின் மனதில் இனம் பற்றிய குழப்பத்தை உண்டாக்கியது. இக்குழப்பம் தமிழின உணர்ச்சிக்கும், தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் ஊறு விளைவித்தது.

திராவிடத்தை முன்வைத்த பெரியாரின் பகுத்தறிவுவாதம் மொழி, தேசிய இனம் ஆகியவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுத்தது. அவர் தமிழைக் கொச்சையாகவும் சாடினார். இதனால், தமிழர்களிடையே தமிழின உணர்ச்சி, தமிழ் மொழி உணர்ச்சி ஆகியவை ஓரளவு குன்றின. தமிழர் தாயகம் குறித்த விழிப்புணர்ச்சி மேற்கண்ட காரணங்களால் மங்கிற்று. ஆங்கிலமே அறிவியல் மொழி என்றும் வாழ்வின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் திராவிட அரசியல் பிழையான கருத்தைப் பரப்பியதால் தமிழர்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவானது. 

தமிழினத்  தாயகம் குறித்து தெளிவான வரையறுப்பின்றி குழப்பங்களை விதைத்த திராவிட இயக்கம், தேசிய மொழி குறித்து விதைத்த குழப்பங்களும் ஏராளம். தமிழர்களின் தேசிய மொழி தமிழ் என்ற வரையறுப்பைத் திட்டவட்டமாக அது முன்வைக்கவில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்தத் திராவிடக் கட்சிகள் ஆங்கில ஆதிக்கத்தை ஆதரித்தன. 

இந்திய ஏகாதிபத்தியம் இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழி என்றது. திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை இந்தியாவின் இணைப்பு மொழி என வலியுறுத்தின. பல்தேசிய மொழிகள் பேசும் ஒரு நாட்டில் இணைப்பு மொழி என ஒரு மொழியை வைக்கக் கூடாது என்பது பல்வேறு சனநாயக நாடுகளில் கடைபிடிக்கப்படும் கொள்கையாகும். ஆனால், இந்தியாவில் ஏகாதிபத்தியக் கட்சிகளும் அவற்றிற்கெதிராக உருவெடுத்தத் திராவிடக் கட்சிகளும் இந்தியாவிற்கு ஒரு இணைப்பு மொழி தேவை என்ற தவறான நிலைப்பாட்டில் உடன்பட்டன. ஏகாதிபத்தியக் கட்சிகள் மும்மொழிக் கொள்கையைக் கூற, திராவிடக் கட்சிகள் இரு மொழிக் கொள்கையை முன்வைத்தன. 

ஒவ்வொரு தேசிய மொழியும், அதனதன் தேசிய இனத்திற்கான அலுவல் மொழியும் இணைப்பு மொழியும் ஆகும் என்ற ஒரு மொழிக் கொள்கையே சரியான, - சனநாயகமான மொழிக் கொள்கையாகும். 

திராவிடத் தேசியம், இந்தியத் தேசியத்தின் இளைய பங்காளி என்பதைத் தேர்தல் அரசியல் தோலுரித்துக் காட்டிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி கங்காணி அமைப்புகளாக உள்ள மாநில சட்டமன்றம், மாநில அமைச்சரவை ஆகியவற்றில் பங்கேற்று இந்திய ஏகாதிபத்தியத்தின் விசுவாசமிக்கக் கங்காணிகளாகத் திராவிடக் கட்சிகள் செயல்படத் தொடங்கின.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் பிற்காலத்தில் தொடங்கப்பட்ட தேர்தல் கட்சிகளும் கங்காணிக் கட்சிகளாகவே செயல்படுகின்றன. இவையும் இந்தியத் தேசியத்துடனும் திராவிடத்துடனும் கூடிக் குலாவுகின்றன; கூட்டணி வைத்துக் கொள்கின்றன.

அனைத்திந்திய இடதுசாரிக் கட்சிகள் இந்தியத் தேசியத்தை ஆதரிப்பதன் மூலம் இந்திய ஏகாதிபத்தியத்தின் தேசிய இன ஒடுக்குமுறையை ஞாயப்படுத்தி நிற்கின்றன. 

தமிழர் அடையாளத்தை மறைத்த இந்தியர்’, ’திராவிடர்என்ற இனக்குழப்பங்கள் தமிழ்த் தேசியத் தன்னுணர்வுக்கான உளவியலில் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டன.

எனவே தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க முடியவில்லை. இனவழிப்பட்ட ஒடுக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியவில்லை.

எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி, இலக்கு குறித்த தெளிவுமின்றி குழப்பமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்த இருண்ட காலத்தில் இலட்சியச் சுடர் ஏந்திப் புறப்பட்டுள்ளது புரட்சிகரத் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியம் என்பது குறிப்பான வரையறையைக் கொண்டதாகும் எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே எமது இலக்குஎன்பதே தமிழ்த் தேசியம் ஆகும். இவற்றுள் ஒன்று குறைந்தாலும் அது தமிழ்த் தேசியம் ஆகாது.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின் தேசிய இனம் குறித்த கருத்துகள் வளர்ந்தன. ஆனால் தமிழர்களிடையே சங்க காலத்திலேயே தமிழ்த் தேசியத்திற்கான மூலக் கருத்துகள் உருவாயின. தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தாற்போல் வாழும் எல்லைவரை உள்ள நிலப்பகுதியை தமிழ்த்தேயம்என்றும் பிற மொழி பேசப்படும் நிலப்பகுதியை மொழிபெயர்தேயம்என்றும் சங்ககாலத் தமிழர் குறிப்பிட்டனர்.

தமிழ் பேசும் நிலப்பகுதியில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்த போதும் அதனைத்  தமிழ்கூறும் நல்லுலகம்என்றும், “தமிழகம்என்றும், “தமிழ்நாடுஎன்றும் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் முதலிய நூல்கள் வரையறுத்தன. ஆட்சிப் பகுதிகள் வெவ்வேறாக இருந்தாலும் தமிழர் தாயகத்தை ஒற்றைத் தேசிய அலகாக இவை குறிப்பிட்டுள்ளன. அதைப்போலவே தமிழர் என்ற இனப்பெயரையும் சங்க காலத்திலிருந்து நம் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவ்வாறு தெளிவான வரையறையோடு, தனித்த பண்பாட்டோடு வாழ்ந்த தமிழினம் இன்றைக்குத் தனக்கான தேசம், அதற்கான இறையாண்மை ஏதுமில்லாமல் இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒரு பிராந்தியம்என்ற அளவில் இந்தியர்என்றும் பிராந்திய மொழிஎன்றும் கொச்சைப் படுத்தப்பட்டு, சொந்த அரசின்றி அடிமைப்பட்டிருக்கிறது.

இந்த அடிமைத் தளையிலிருந்து விடுபடுவதே தமிழ்த் தேசிய இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முதல் தேவையாகும். தமிழ்த் தேசிய இனம் தனக்கான இறையாண்மையுள்ள தமிழ்த் தேச அரசை நிறுவிக்கொள்ள வேண்டும். இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தளையை அறுத்து இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசை நிறுவிக்கொள்ளும் போராட்டம் தமிழ்த் தேசியப் புரட்சி மட்டுமல்ல அதுவே இன்றைய கட்டத்தின் சனநாயக புரட்சியாகவும் நடைபெறும்.

மொழி ஒடுக்குமுறை, வரலாற்று வழி அமைந்த தாயகத்திற்கு ஆபத்து, வருணசாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமை இழிவு,  வர்க்கச் சுரண்டல், உலகமயச் சூறை, சூழலியல் பேரழிவு, பெண் ஒடுக்குமுறை முதலிய அனைத்துக்கும் நிலைக்களமாக ஆரியப் புனைவான இந்தியத் தேசியமே உள்ளது. இந்தப் புனைவு தேசியத்தின் கொடும் கையாக இந்திய ஏகாதிபத்திய அரசு செயல்புரிகிறது. பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் துணைகொண்டுதான் இந்த ஆதிக்க வல்லரசு தொடர முடிகிறது.

எனவே தமிழ்நாட்டு மக்கள் தங்களை அழுத்துகிற எந்த வகை ஒடுக்கு முறையிலிருந்து விடுபட வேண்டுமானாலும் அதற்கு இந்தியத் தேசியத்தோடு முரண்பட்டு மோதவேண்டியது கட்டாயம் ஆகும்.

இந்திய ஆதிக்கப் புனைவு தேசியத்திலிருந்து விடுபடுவதற்குரிய ஒரே வழி தமிழ்த்தேசியப் புரட்சிதான்; இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு படைப்பதுதான். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகை  விடுதலைச் சிந்தனைகளும், முற்போக்கு நீரோட்டங்களும் தமிழ்த் தேசியம் என்ற விடுதலை நீரோட்டத்தில் இணைய வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு முன்தேவையாக இருப்பது இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவிக்கொள்வது ஆகும். அவ்வாறு விடுதலை பெற்ற தமிழ்த் தேசக்  குடியரசு நிறுவிக் கொள்ளாமல் இந்தியக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு செய்யப்படும் எந்த முற்போக்கு முயற்சியும் அரைகுறையாகவே  முடிந்து போகும்.

ஏனெனில் ஒரு தேசிய இனமே ஒட்டுமொத்தமாக அடிமைப்பட்டிருக்கிறது. அந்த அடிமைத் தளையை அறுக்காமல் வர்க்க விடுதலை, வருண - சாதி விடுதலை, பாலின விடுதலை  என்ற உட்கூறு விடுதலைகள் தனித்து நிறைவேறா. தனக்கான தேசத்தைப் படைத்துக் கொள்ளாத ஒரு தேசிய இனம் வர்க்க விடுதலையோ பிற விடுதலையோ பெற முடியாது.

அதேபோல் உட்கூறு விடுதலைக்கான போராட்டங்களுடன் இணைக்கப்படாத தேச விடுதலைப் போராட்டம் இலக்கற்றதாகவே முடியும். இந்த இரண்டின் ஒருங்கிணைவே புரட்சிகரத் தமிழ்த் தேசியமாகும்.

தமிழினத்தின் மரபான அறச்சிந்தனைகளில் ஊன்றி நின்று மார்க்சியத்தையும் பிற முற்போக்கு சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டு இன்றைய விடுதலைத் தேவைக்கு ஏற்ப முகிழ்த்துள்ளதே புரட்சிகர தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடு.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, புரட்சிகரத் தமிழ்த் தேசியம் என்ற நெறியில் நின்று, இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை அமைக்கும் தமிழ்த் தேசிய புரட்சிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளது. நிகரமை இலக்கு நோக்கிய நெடும் பயணத்தில் ஒரு சனநாயகக் குடியரசாகத் தமிழ்த் தேசக் குடியரசு விளங்கும். 

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவது என்பது சட்டப் பேரவை மூலமாகவோ, இந்திய நாடாளுமன்றத்தின் மூலமாகவோ நிறைவேற்ற வாய்ப்பில்லை. தமிழகச் சட்டப் பேரவைக்கு அவ்வாறான அதிகாரம் கிடையாது. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு எண்ணிக்கை தமிழர்களுக்குக் கிடையாது.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவும் தமிழ்த் தேசியப் புரட்சி போர்க் குணமுள்ள மக்கள் திரள் எழுச்சியின் மூலமே நடைபெற முடியும்.

தேர்தல் பாதை தமிழ்த் தேசக் குடியரசை நிறுவப் பயன்படாது. அதைப்போலவே ஆயுதக்குழுப் போராட்டமும் தமிழ்த் தேசியப் புரட்சிக்குப் பயன்படாது. போர்க் குணம் மிக்க மக்கள்திரள் எழுச்சியே தமிழ்த் தேசப் புரட்சியின் வடிவமாகும்.

கொள்கை, நேர்மை, அர்ப்பணிப்பு, ஈகம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் புரட்சியைக் கட்டி எழுப்புவதும், நமது அரசியலுக்கு புதுக் குருதி பாய்ச்சுவதும் இன்றைய வரலாற்றுத் தேவை. தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) இந்த வரலாற்றுக் கடமையில் தனது பங்கைச் செலுத்த முன்வருகிறது. தமிழக மக்கள் இந்தப் புரட்சிகர அரசியல் இயக்கத்தை அரவணைக்க வேண்டும்; அணிதிரள வேண்டும்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT