மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகப் பணியாளர்கள் மூன்று பேரைப் படுகொலை செய்தும் அலுவலகத்திற்கு தீவைத்தும் மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்தும் வெறியாட்டம் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கண்டனத் தொடர் முழக்கப் போராட்டம் மே 31ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மதுரை வடக்கு மாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்றது. மனித உரிமைப் பாதுகாவலர்களின் கண்காணிப்பு மற்றும் போராட்டக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலவேறு கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொண்டன. இப்போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணியைச் சேர்ந்த தா. பாண்டியன் முன்னிலை வகித்தார். டெல்லி மூத்த பத்திரிகையாளரான பிரபுல் பித்வாய், கர்நாடக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். பேரா. கல்விமணி, பெ. மணியரசன், கா. ஜான்மோசஸ், பு. சந்திரபோசு, ச. பாலமுருகன், காமேஸ்வரி, மெல்கியோர், மகபூப் பாட்சா, கா. பரந்தாமன், சு. முருகவேல் ராசன், ஹென்றி டிபேன், கேபிரியேல், குருவிஜயன், கு. பகத்சிங், சி.சே. ராசன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைக் காண திரளான மக்களும் கூடியிருந்தனர். |
Post a Comment