உடனடிச்செய்திகள்

Wednesday, February 20, 2008

சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழ்காக்கப் போராடிய தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்திய
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரை
இடைநீக்கம் செய்யக் கோரி
சென்னையில் உண்ணாப் போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
     கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
 
     தமிழக அரசு தனக்குள்ள அரசiமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் மேலாதிக்கமும் தருகிறது.
 
     தமிழக அரசின் ஆங்கில ஆதரவு-தமிழ்ப் புறக்கணிப்பு போக்கை; கண்டிக்கும் வகையில் 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.இ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு இடதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
 
     சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
 
     ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடை பெறுகிறது.
 
        விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தோழர் தியாகு(பொதுச் செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் இரா.பாவணன் (தலைவர், தமிழர் கழகம்), தோழர் நிலவன் (பொதுச் செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சியப் பெரியாரியப் பொதுசுடைமைக் கட்சி) ஆகியோர் கண்டன உடையாற்றுகின்றனர். புலவர் கி.த.பச்சையப்பனார் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
 
தஞ்சையில் போராட்ட வழக்கைத் திரும்பப் பெறக் கோருதல்

     இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து அதே நாளில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகளை த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் அழித்த 23 பேர் கைது செய்யபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், ஊழியர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறு இவ்வுண்ணாப் போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
       தமிழ் உணர்வாளர்கள் இவ்வுண்ணாப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT