உடனடிச்செய்திகள்

Monday, October 4, 2010

இராசராசன் சமாதியைக் கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் - பெ.மணியரசன்

இராசராசன் சமாதியைக் கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
தமிழக முதல்வருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை
04.10.2010, தஞ்சை

தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 03.10.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அயோத்தித் தீர்ப்பில் "17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது, ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராசராசன் மறைந்த விதத்தையோ, அவனுக்கான நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது" என்று கூறி வேதனைப் பட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரம் அற்ற ஒரு தமிழ்க் குடிமகன் ஆற்றாமையால் வேதனைப் படுவது போல் கருணாநிதி கவலை தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையைத் தம் கையில் வைத்துள்ள அவர் மாமன்னன் இராசராசன் நினைவிடம் (சமாதி) எங்குள்ளது என்பதைக் கண்டறிய அத்துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டும். இதுவரை அவர் அதைச் செய்ய வில்லை. இனிமேலாவது அதற்கான அகழ்வாராய்ச்சிக்கு முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கெனவே இந்தியத் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கையில் இராசராசன் சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையா;ரில் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கல்வெட்டாய்வாளர் குடந்தை சேதுராமன் அங்கு சென்று, குளக்கரையில் உள்ள கல்வெட்டைப் படித்து, உடையா;ரில், திரு. பக்கிரிசாமி அவர்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் லிங்கத்திற்கு அடியில் இராசராசன் சமாதி இருக்கிறது என உறுதிபடக் கூறினார்.

ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், உடையா;ரில் சேதுராமன் குறிப்பிடும் இடத்தில் இராசராசன் சமாதி இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை மேலும் உறுதி செய்து கொள்ள அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இராசராசன் காலத்தில் அரசு நிர்வாக அரண்மனை தஞ்சையிலும், அரச குடும்ப அரண்மனை கும்பகோணத்திற்கருகே உள்ள பழையாறையிலும் இருந்தன. அந்தப் பழையாறைக்குப் பக்கத்தில் உள்ள ஊர்தான் அவர் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையா;ர்.

இராசராசன் மனைவி பஞ்சவன்மாதேவியின் சமாதி உள்ள பள்ளிப்படைக்கோயில் உடையா;ருக்குப் பக்கத்தில் உள்ள பட்டீசுவரத்தில் இப்பொழுதும் உள்ளது.

தமிழக முதல்வர் உடனடியாக உடையா;ரில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆணையிட்டு இராசராசன் சமாதி இருப்பதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆணையிட வேண்டும். அடுத்து, உடையா;ரில் இராசராசன் பெயரில் மிகப் பெரிய நினைவு மாளிகை எழுப்பி, அதன் ஒரு பகுதியை சோழர் காலத்தின் அருங்காட்சியகமாக்க வேண்டும்.

சோழர் காலத்திற்குரிய எல்லாக் கருவிகளையும் செப்புத் திருமேனிகளையும் இதரப் பொருட்களையும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.

மேற்கண்ட ஆய்வுப் பணிகளையும் இராசராசன் நினைவகம் எழுப்பும் பணியையும் தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

நாள்: 04.10.2010
இடம்: தஞ்சை

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT