உடனடிச்செய்திகள்

Saturday, January 25, 2014

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியைக் காக்க முடியாது” மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் - தோழர் பெ.மணியரசன் உரை!

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியைக் காக்க முடியாது”
மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரை!

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ் மொழியை - இனத்தைக் காக்க முடியாது” என, சென்னை மொழிப் போர் ஈகியர் நினைவிடத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.   

1938 – 1965ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தித் திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டும், தீக்குளித்தும் மடிந்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் மொழிப்போர் ஈகியர் நாளான இன்று(25.01.2014), தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடைபெற்றன.

சென்னை



தமிழகத் தலைநகர் சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் உள்ள மொழிப்போர் ஈகியர்கள் நடராசன் – தாளமுத்து – பேராசிரியர் தர்மாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் த.தே.பொ.க., தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் பேசின் பாலம் அருகிலிருந்து பேரணியாகச் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.

அங்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்கவுரையின் எழுத்து வடிவம்:

“ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்துகிற முறையில் இங்கு நடராசன் – தாளமுத்து ஆகியோரது நினைவிடத்தில் நாம் வீரவணக்கம் செலுத்தக் குழுமியிருக்கிறோம். 1965இல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஈகியருக்கும், 1964இல் முதன்முதலாக தீக்குளிப்பைத் தொடங்கி வைத்த கீழப்பழுர் சின்னச்சாமி, மயிலாடுதுறை சாரங்கபாணி வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்த ஈகியருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

இங்கு நாம் வீரவணக்கம் செலுத்துவதைப் போலவே, திருச்சியில் விராலிமலை சண்முகம் – கீழப்பழுர் சின்னச்சாமி ஆகியோரது நினைவிடங்ளில் இன உணர்வாளர்களும், பல்வேறு அமைப்பினரும் வீரவணக்கம் செலுத்துகின்றனர். மயிலாடுதுறையில் ஈகி சாரங்கபாணிக்கு நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. திருப்பூரில் மொழிப் போர் ஈகியருக்கு  நினைவுத் தூண் எழுப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இன்று பல்வேறு அமைப்பினர் வீரவணக்கம் செலுத்துகின்றனர். பல்வேறு இடங்களில் த.தே.பொ.க. தோழர்கள் மொழிப் போர் ஈகியரின் படங்களை வைத்து வீரவணக்கம் செலுத்துகின்றனர்.  

கடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழகம் முழுவதும் இன உணர்வாளர்கள், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை பெரிய அளவில் நடத்துகின்றனர். இது இன உணர்வு எழுச்சிக் காலம்! அனைத்துத் தளங்களிலும் தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டு எழுந்து வருகின்றக் காலம்.

தமிழர்களைப் போல் மொழிக்காக, இனத்திற்காக உயர்த்தியாகம் செய்தவர்கள், உலகின் எந்த நாட்டிலும் இல்லை. 1965 - மொழிப் போரின் போது,  நான் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனாக, சனவரி 25 அன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரணியில் கலந்து கொண்டேன். பெரும் எழுச்சியாக அது இருந்தது.

காங்கிரசுக்காரர்களின் அரம்பத்தனத்தாலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடுகளிலும் பல்வேறு இடங்களில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சனவரி 27 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ ஈகி இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி, தமிழகமெங்கும் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. போராட்டங்கள் பெருமளவில் பரவியது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை தாய்மொழி நாளாகக் கடைபிடிக்க வேண்டுமென ஐ.நா. மன்றம் அறிவித்துள்ளது. அது, முந்நூறுக்கும் மேற்பட்டத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அல்ல. பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழ் மொழி காக்க, தீக்குளித்தும் நஞ்சுண்டும்  மடிந்த நாள் அல்ல.

கிழக்குப் பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்த போது, மேற்கு பாகிஸ்தானில் உருது மொழித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்று, அதில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்தை நாம் மதிக்கிறோம். அந்த நாளையே, உலகெங்குமுள்ள மக்களின் தாய்மொழி நாளாக ஐ.நா. அறிவித்தள்ளது. அதை நாமும் கடைபிடிக்கிறோம்.

1938லிருந்து மொழிப்போர் நடத்தியவர்கள் நாம். மொழிக்காக நடராசன் – தாளமுத்து ஆகியோரை இழந்தவர்கள் நாம். 1965இல் 300க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கிச் சூட்டுக்கு பலிகொடுத்தவர்கள் நாம். 1965இல் தாய்மொழிக் காப்பிற்காக, முதன் முதலாக ஒரு தமிழன் கிழப்பழுர் சின்னச்சாமி தொடங்கி 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து ஈகம் செய்தனர்.

அதன்பிறகு, தழல்ஈகி முத்துக்குமார் தொடங்கி எவ்வளவு பேர் இனத்திற்காக தம் உயிரை அர்ப்பணித்துள்ளனர். இவ்வளவு ஈகங்களை மொழிக்காக, இனத்திற்காக நடத்தியவர்கள் நாமாக இருப்பினும், ஏன் இந்த ஈகங்கள் செய்யப்பட்ட நாள் உலகத் தாய்மொழி நாளாக இல்லை என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

கிழக்குப் பாகிஸ்தானில் மொழி உரிமைக்கானப் போராட்டத்தை, இனவிடுதலையோடு இணைத்தார்கள். மொழியையும் இனத்தையும் அவர்கள் ஒன்றாகப் பார்த்ததார்கள். இனம் உடல் என்றால், மொழி அதன் உயிர். ஆனால், இங்கே மொழி வேறு இனம் வேறு எனப் பிரிக்கப்பட்டது. இரண்டும் இணைக்கப்படவில்லை. இங்கிருந்த தலைவர்கள் குளறுபடிகள் செய்தார்கள். இல்லாத இந்தியன் என்று இனத்தை நம் மீது திணித்தார்கள். இந்நியன் என்று இனமும் கிடையாது. இந்தியன் என்று மொழியும் கிடையாது. அதற்கு மாற்றாக திராவிடன் என  இன்னொன்றை சொன்னார்கள். திராவிடம் என்று மொழியுமில்லை, இனமுமில்லை. நாமெல்லாம் 5000 ஆண்டுகளாகத் தமிழர்களாகத் தான் இருந்து வருகிறோம். நம்முடைய இனப்பெயரே கூட இங்கு சரியாகச் சொல்லப்படவில்லை. குழப்பப்பட்டது.

இந்தி மொழியை எதிர்த்த நம் போராட்டத்தை வெறும் மொழிப் பிரச்சினையாகவே இங்கு பார்த்தார்கள். வடக்கத்தியரின் இந்தி மொழித் திணிப்பு, வெறும் மொழிப் பிரச்சினையல்ல. இந்தி இன ஆதிக்கத் திணிப்பு அது. அதை வெறும் மொழி எதிர்ப்பாக மட்டுமே புரிந்து கொண்ட தலைவர்கள், கோளாறாக “இந்தி வேண்டாம், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் இருக்கட்டும்” என, “Never Hindi Ever English” என்றொரு முழக்கத்தை வைத்தார்கள்.

இதன் பொருள், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தட்டும் என்பது தானே? இதற்காகவா செத்தார்கள் நடராசனும், தாளமுத்துவும்? இதற்காகவா குண்டடபட்டு முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மடிந்தார்கள்? இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதற்காகத்தான் நாம் போராடினோமே தவிர, இந்திக்கு பதிலாக ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக அல்ல!

1965இல் ‘அம்மா’ “அம்மா”வாக இருந்தார். ‘அப்பா’ “அப்பா”வாக இருந்தார். இன்று, ‘அம்மா’ “மம்மி”யாகவும், ‘அப்பா’ “டாடி”யாகவும் மாறிப்போனார்களே எப்படி? ஒரு தவறான மொழிக் கொள்கையை, அன்றைய தலைவர்கள் முன்வைத்ததால் வந்த கோளாறு இது! தமிழ் மொழிக்காக உயிரீந்த ஈகியரின் ஈகம் தமிழைப் பாதுகாப்பதற்காத்தான் நடைபெற்றது. இதிலிருந்து நாம் படிப்பிணை பெற வேண்டும்.

தமிழ்நாடு விடுதலையடைவது தான் உண்மையான மொழிக் காப்காப இருக்க முடியுமே தவிர, இந்தியாவுக்கு அடிமை மாநிலமாக இருந்து கொண்டு நம் இனத்தையும் பாதுகாக்க முடியாது; மொழியையும் பாதுகாக்க முடியாது. தமிழினம் ஆளும் இனமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான், தமிழ் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதி மொழியாக தங்குதடையின்றி நீடிக்கும். வெறும் 50 - 60 இலட்சம் பேர் பேசுகின்ற மொழியின் அடிப்படையிலான நாடுகள் ஐ.நா.வில்  அங்கம் வகிக்கின்றன. ஆனால், நாமோ 7 கோடி பேர் இருந்தும் இந்தியாவில் அடிமையாக இருக்கின்றோம்.

எனவே, தமிழ்நாடு விடுதலையடைவது தான் தமிழ் மொழி அனைத்து மட்டங்களிலும் நிலைக்கவும், நீடிப்பதற்குமான பாதுகாப்பு என்பதை நாம் உணர வேண்டும். அப்பொழுது தான், தமிழன் வாழ்வு பெறுவான். தன்மான உணர்வு பெறுவான்.

இன்றைய நாளில், இன - மொழி விடுதலைக்கான அப்போராட்டத்தில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்காக உறுதியேற்போம்!   

மொழிப்போர் ஈகியர் புகழ் ஓங்குக!

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை!
இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை!
உரிமைக் கொள்கையே உரிமைக் கொள்கை!

தமிழே இங்கே ஆட்சி மொழி
தமிழே இங்கே கல்வி மொழி
தமிழே இங்கே நீதி மொழி!
இதுவே எங்கள் ஒருமொழிக் கொள்கை!

ஒருமொழிக் கொள்கை வேண்டுமெனில்
தமிழ்த் தேசக் குடியரசு அமையவேண்டும்!
மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் தோழர் உதயன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்டோரும், சென்னை – தாம்பரம் த.தே.பொ.க, த.இ.மு. தோழர்களும் பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் - சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப் போர் மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .யவனராணி தலைமையேற்றார். இந்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்தும், தமிழக அரசின் ஆங்கில திணிப்பைக் கண்டித்தும் விண்ணதிர எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா மொழிப்போர் ஈகி இராசேந்திரன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், மொழிப் போராட்ட வரலாற்றை தமிழக மாணவர்கள் இளையோர்கள் அறிவதற்கு தமிழக அரசு உறுதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், இப்போராட்ட வரலாற்றை தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன், ..மு துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தனராஜ், தமிழக உழவர் முன்னணித் தோழர் மு.முருகவேள் உள்ளிட்ட பலரும்  பங்கேற்றனர்.

திருச்சி
திருச்சியில், காலை 9.30 மணியளவில் தென்னூர் உழவர் சந்தையிலிருந்து ‘இலக்கிய விமர்சகர்’ திரு. வீ.ந.சோமசுந்தரம் அவர்களது தலைமையில் பேரணியாகப் புறப்பட்ட தமிழின உணர்வாளர்கள், மொழிப் போர் ஈகியர் கீழப்பழுர் சின்னச்சாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மாநகரச் செயலாளர் தோழர் இராசாஇரகுநாதன், த.இ.மு. அமைப்பாளர் தோழர் தியாகராஜன், தோழர் ஆத்மநாதன் (த.தே.பொ.க.), திரு. கி.ஆ.பெ. கதிரேசன், புலவர் தமிழகன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தஞ்சை
தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில், காலை 10 மணியளவில் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை, மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். நிறைவில், முனைவர் இளமுருகன் சிறப்புரை நிகழ்த்தினார்.

குடந்தை

குடந்தை தியாகி இராமசாமி தெருவிலுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகம் அருகில், மாலை 5 மணியளவில், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு, நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், த.தே.பொ.க. தோழர்களும் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சுவாமிமலை

சுவாமிமலை கடை வீதியில் மாலை 6 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையில், மொழிப் போர் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில், கட்சித் தோழர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் தானே முன்வந்து ஈகியருக்கு விளக்குகள் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.

தலைமைச் செயலகம்,

சென்னை-78.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT