உடனடிச்செய்திகள்

Sunday, April 6, 2014

“இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில் தமிழினத்திற்கு ஒரு போதும் நீதிகிடைக்காது!” - தோழர் பெ.மணியரசன் உரை!


“இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில் தமிழினத்திற்கு ஒரு போதும் நீதிகிடைக்காது!” தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரை!

“ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமப்பிரதிநிதித்துவம் அளித்தால் கூட, இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில் தமிழினத்திற்கு ஒரு போதும் நீதிகிடைக்காது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தொழர் பெ.மணியரசன் பேசினார்.

இந்திய நாடாளுமன்றத்தை தேசிய இனங்களின் அவையாக மாற்றக் கோரியும், தமிழ் - தமிழர் - தமிழகம் குறித்த இந்தியாவின் உள்ளுறவு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தமிழகமே தீர்மானிக்கும் அதிகாரம் கோரியும், தமிழர் முன்னணி சார்பில் நேற்று(05.04.2014) சென்னையில், “தமிழர் மாநாடு” நடைபெற்றது.

சென்னை தியாகராயர் நகர் பனகல் பூங்கா எதிரிலுள்ள வெங்கடேசுவரா திருமண நிலையத்தில், மாலை 5 மணியளவில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.

மாநாட்டிற்கு, தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.செயப்பிரகாசு நாராயணன் தலைமையேற்று உரையாற்றினார். தமிழர் முன்னணி பொருளாளர் திரு. ஜெ.ஆனந்தன் வரவேற்புரையாற்றினார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், கூட்டாட்சியில் இனவுரிமை பன்னாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் மு.நாகநாதன், நாம் தமிழர் கட்சி அனைத்துலக தொடர்பாளர் திரு. க.அய்யநாதன், இயக்குநர் வெ.சேகர், மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சித் தலைவர் தோழர் துரைசிங்கவேல், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் பொழிலன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி – (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் சிதம்பரநாதன் உள்ளிட்டோர் கருத்துரை நிகழ்த்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் பரபரப்புகளுக்கு இடையில் தொலைநோக்கு பார்வையுடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தமிழர் முன்னணி அமைப்பின் பொறுப்பாளருக்கு முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற மாநாடுகள், நமக்குள் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளவும், விவாதங்கள் நடத்தவும், பல்வேறு கருத்துகள் குறித்து சிந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இந்தியாவின் நாடாளுமன்ற மக்களவையில் தேசிய இனங்கள் அனைத்திற்கும் சம அளவில் பிரிநிதித்துவம் கோரி இந்த மாநாடு நடைபெறுகின்றது. தமிழ்த் தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கு, இது போன்ற கோரிக்கைகள் படிக்கட்டுகளாக அமையும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கருதி இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில், இது போன்ற கோரிக்கைகள் ஏன் நம்மிடம் வருகின்றன என நாம் சிந்திக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 545 உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கென உள்ளவர்கள் 39 பேர். 545-ஐ வைத்துக் கொண்டு பார்த்தால், இது மிக மிகச் சிறுபான்மை. பூதக்கண்ணாடி சிறுபான்மை! இந்த சிறுபான்மை எண்ணிக்கையை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு, தமிழ் இனத்திற்கு வேண்டிய உரிமைகளை நம்மால் பெற முடியவில்லை. எனவே, நம்மிடம் இது போன்ற கோரிக்கைகள் அவலக்குரல்களாக எழுகின்றன.

இந்தியைத் தாய்மொழி இல்லாமல் இருந்தும் கூட, இந்தியை பொது மொழியாக, ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற மக்கள் இந்தியாவின் 10 மாநிலங்களில் இருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 225 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இது போதாதென்று, ஆரியத்துடன் சமரசம் செய்து கொண்டு, சமற்கிருத மொழி மேலாண்மையை ஏற்றுக் கொண்டு வாழும் தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் கோரினால், இவர்கள் அனைவரும் அதை ஆதரிப்பர்.

இந்தி பேசும் மக்களின் உண்மையான தாய்மொழியான போஜ்புரி, அவந்தி, கல்யாணி போன்ற மொழிகளை அவர்கள் வளர்க்க வேண்டுமென விரும்பினாலும், அதைவிட இந்தி ஒரு பொது மொழியாக இருக்கட்டுமே என்பதற்கு அவர்கள் தயக்கமின்றி ஆதரவளிக்கின்றனர்.

எனவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமபிரதிநிதித்துவம் என்று வைத்தால் கூட, இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் அதில் இடம்பிடிப்பர். ஒரு மாநிலத்திற்கு 10 பேர் பிரிதிநிதி என்றால், இந்தி பேசுகின்ற 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 100 பேர் அதில் இடம் பிடித்துவிடுவர். எனவே, நாம் மீண்டும் சிறுபான்மை ஆகிவிடுவோம். இப்பொழுது மட்டுமல்ல, சமபிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டால் கூட, இந்திய நாடாளுமன்றக் கட்டமைப்பில், தமிழினத்திற்கு ஒரு போதும் நீதி கிடைக்காது.

7 கோடியே 21 இலட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டு, இந்தியாவில் சிறுபான்மை என்கிறார்கள். நாம் ஏன் சிறுபான்மையாகிப் போனோம்? பிரான்சு நாட்டின் மக்கள் தொகை 6 இலட்சம். ஐரோப்பாவில் யாரும் பிரான்சை சிறுபான்மை எனச் சொல்லவில்லை. பிரிட்டனின் மக்கள் தொகை 6 கோடி. உலக அரங்கில் யாரும் பிரிட்டனை சிறுபான்மை எனச் சொல்லவில்லை. இத்தாலி நாட்டில் 6 கோடி பேர் இருக்கின்றனர். அவர்களை யாரும் சிறுபான்மை எனச் சொல்லவில்லை. இலங்கையில், தமிழர்களையும் சேர்த்தால் கூட வெறும் 2 கோடி பேர் தான் இருக்கின்றனர். இலங்கையை யாரும் சிறுபான்மை நாடு என சொல்லவில்லை.

ஆனால், இவர்களையெல்லாம் விட அதிகமாக, 7 கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டை ஏன் இவர்கள் சிறுபான்மை எனச் சொல்கிறார்கள்?

உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு கோடிக்குக் கீழான மக்கள் வசிக்கின்றனர். தமிழீழ சிக்கலில் சமரசப் பேச்சு நடத்த வந்த நார்வே நாட்டில், வெறும் 47 இலட்சம் பேர்தான் இருக்கின்றனர். மத்தியக் கிழக்கில், கண்களில் விரலை விட்டு ஆட்டிப் படைக்கிறானே இசுரேல் நாடு, அங்கு 77 இலட்சம் பேர்தான் வசிக்கின்றனர்.

ஆனால், 7 கோடிக்கும் அதிகமானவர்களைக் கொண்ட நாம் ஏன் சிறுபான்மையாகிப் போனோம்? நமக்கு ஏன் இந்த நிலை? இதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம், நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பல தேசிய இனங்களை நம்மோடு இணைத்து வைத்தது. எதற்கு? சேர்த்துவைத்து சுரண்டுவதற்காக. எல்லா கழுதையும் ஒன்றாகக் கிட என ஏகாதிபத்திய வெறியாக அச்செயல் நடைபெற்றது! இதன் காரணமாகவே நாம் சிறுபான்மையானோம்.

உதாரணமாக, நம் வீட்டுல 7 பேர் இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். நம் பிள்ளையின் படிப்பை நாம் தீர்மானிக்க - நாம் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த 7 பேரில் எது பெரும்பான்மையோ அதை வைத்து தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எதிர் வீட்டில் இருக்கும் 100 பேரையும் சேர்த்து வைத்துக் கொண்டு பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால், அது எப்படி வேடிக்கையானதாக இருக்குமோ, அதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலையாக இருக்கிறது.

நம்முடைய கடையின் வரவு செலவு கணக்கை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நம்மோடு சிறிதும் தொடர்பில்லாத வேறு 100 கடைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு, முடிவெடுத்தால் என்னாகும்? அந்தக் கடை திவாலாகும். அது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்திக்காரர்களுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவனுடன் என்னை இணைத்து வைத்து என்னை சிறுபான்மை என்கிறீர்கள்? நமக்கு சம்பந்தமுள்ள தெலுங்கு, மலையாள தேசிய இனங்கள் கூட நம்மை ஆதரிக்க மாட்டேன் என்கிறார்கள். நமக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இந்திக்காரர்கள் எப்படி நம் கோரிக்கைகளை ஆதரிப்பார்கள்?

சுரண்டும் நோக்கத்திற்காக தேசிய இனங்களை காலனியாக இணைத்த பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் அந்த வெறிச் செயலை, அப்படியே வைத்துக் கொண்டு தான் இந்தியா பிறந்தது. பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்ததைப் போல், 1947 ஆகத்து 15 அன்றுக்குப் பிறகு இந்தியாவின் காலனியாக தமிழ்நாடு மாறியது. நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. பிரிட்டன் ஏகாதிபத்தியம் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்து, அதையே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்திய அரசு.

எனவே, இந்த இந்தியக் கட்டமைப்பே நமக்குப் பகையானது. பள்ளிகளில் மாணவர்களுக்கு அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்தார் என சொல்லிக் கொடுக்கிறார்கள். அலெக்சாண்டர் படையெடுக்கும் போது, இந்தியா என்ற ஒன்றே உருவாகவில்லை. அலெக்சாண்டர் இன்றைக்கு பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள ஏதோவொரு இடத்தின் மீதுதான் படையெடுத்தார். அந்த நேரத்தில், தமிழ்நாட்டில் கடை ஏழு வள்ளல்களான பாரி – ஓரி- ஏரி உள்ளிட்டோர் ஆண்டு கொண்டு வந்தனர். மயிலுக்கு ஆடை போர்த்தி, கொடி வளர தேர் கொடுத்து மன்னர்களின் ஆட்சி, மக்களாட்சியாக இங்கு நடந்து கொண்டிருந்தது.

ஆனால், பொய்யாக – புனைவாக இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்தார் என மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதன் மூலம், இந்தியா பழம் பெரும் நாடு – நமது நாட்டின் மீது அலெக்சாண்டர் படையெடுத்தார் என மாணவர்கள் மனதில் பொய்யான சிந்தனைகளை விதிக்கிறார்கள். இது போன்ற பொய் – புனைவுகளின் மூலம் நடைபெறும் உளவியல் உருவாக்கத்தால்தான் இந்தியா கட்டமைக்கப்படுகிறது.

இந்த, சேட்டன் பூட்டன் செவ்வாய்கிழமையோடு, தமிழ்நாட்டைக் கட்டிப் போட்டதால்தான் நமக்கு இந்த நிலை! எனவே, இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

1938ஆம் ஆண்டு, இந்திக்கு எதிராக தமிழறிஞர்கள் கூட்டிய மாநாட்டில், தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்கள் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என முழக்கம் எழுப்ப, தந்தை பெரியார் – நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர் அதை எதிரொலித்தனர். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ‘தி.மு.க.’ என்ற தமது நூலில் இதை பதிவு செய்திருக்கிறார். பெரியார் பங்கேற்புக்குப் பின், அந்த முழக்கம் விரிவடைந்தது. அந்த மாநாட்டிற்குப் பிறகுதான், பெரியார் தனது ஏட்டில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாடு தமிழருக்கே என பச்சைக்குத்திக் கொள்ள வேண்டும் என எழுதினார்.

1946இல், வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் “விடுதலை“ கொடுக்க பேச்சுகளை நடத்திக் கொண்டிருந்த போது, தந்தை பெரியார் தமிழ்நாட்டு விடுதலை வேண்டி மனு கொடுத்தார். 1947 ஆகத்து 15, தமிழர்களுக்கு விடுதலை நாள் அல்ல என அறிவித்தார். அதை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டுமெனக் கோரினார்.

1948க்குப் பிறகு உருவான தி.மு.க. திராவிட நாடு என்ற பெயரில் கேட்டாலும், தமிழ்நாடு விடுதலையைத்தான் கேட்டார்கள். 1957இல் 15 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க., 1962இல் தமிழ்நாடு விடுதலை கோரிக்கையை வைத்துக் கொண்டு 50 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்தது. இது, தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு இது! இந்தியாவில் விடுதலைக்காக போராடும் வேறு எந்த தேசிய இனமும், இவ்வாறு மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியதில்லை. இந்தியாவை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடைபெறும் இடங்களில், மக்கள் ஆதரவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், சனநாயக முறையில் அதை வெளிப்படுத்திய முதல் இனம், தமிழினம் தான்!

1970களில் சி.பா.ஆதித்தனார் தமிழ்நாட்டுடன் தமிழீழத்தையும் இணைத்துக் கொண்டு, தமிழர் பேரரசு கேட்டார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்நாடு விடுதலை கேட்டார். இன்றைக்கு, நாம் தமிழ்நாடு விடுதலை கோரி நிற்கிறோம்!

இந்த வரலாற்றுத் தொடர்ச்சி எதைக் காட்டுகிறது? இந்தியாவுடன் சேர்ந்திருக்க எமக்கு விருப்பமில்லை என தமிழ் இனம் தொடர்ந்து உணர்த்தி வந்துள்ளதன் வரலாற்று வெளிப்பாடு இது! நம் முன்னோர்கள் இதை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இன்றைக்கு தமிழ்நாடு விடுதலை கோரி இயங்குகிறோம்.

இன்று, நான் உட்பட இந்த மேடையில் அமர்ந்துள்ள பலரும் பொதுவுடைமை இயக்கங்களிலிருந்து வந்தவர்கள். நான் சி.பி.எம். கட்சியில் 15 ஆண்டுகள் முழுநேர ஊழியராகப் பணியாற்றியவன். தோழர் சிதம்பரநாதன், தோழர் தியாகு என இங்குள்ளவர்களில் பலரும் அவ்வாறு பொதுவுடைமை இயக்கங்களிலிருந்து வந்தவர்கள் தான்.

கம்யூனிசத் தத்துவம் என்பது காலந்தோறும் வளரக்கூடிய அறிவியல் பூர்வமான தத்துவம். அதற்கான ஆற்றல் – potential அதற்கு இருக்கிறது. இத்தத்துவத்தை வைத்துக் கொண்டு இங்கு பலர் நாடாளுமன்றப் பாதைக்குச் சென்று சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாலேயே, அந்தத் தத்துவம் தவறென கருதி விட முடியாது.

தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டெனச் சொல்லி, அதை எந்த சூழல்களில் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறுகிறது மார்க்சியம். எந்த சூழலில் பயன்படுத்தக்கூடாது என்றும் அது சொல்கிறது. அது தான் சிக்கல்! மார்க்ஸ் என்ன சொன்னார் - இலெனின் என்ன சொன்னார் என புத்தகங்களைப் புரட்டிப் பார்க்காமல். அவர்கள், எதை சிந்திக்காமல் விட்டார்களோ, சொல்லாமல் விட்டார்களோ அதை உணர்ந்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் சொல்லாததையும் சிந்திக்க வேண்டும்.

தேசிய இனப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியே! அதை வெறும் முதலாளியத்தின் கைவேலைப்பாடாக மட்டும் கருதக்கூடாது. தோழர் ஸ்டாலின் கூறுவதைப் போல, முதலாளியச் சந்தையில் பிறந்ததல்ல தேசிய இனப் போராட்டங்கள்! அது இரண்டாம் பட்சக் கோரிக்கையும் அல்ல என்பதே வரலாறு!

ஏழு சமஸ்தானங்களில் இருந்த மன்னர்களின் ஆட்சிக்கெதிராக நடந்த பிரஞ்சு புரட்சி, சனநாயகத்திற்கான தேசியப் புரட்சியாக மட்டும் நடக்கவில்லை. அது பிரஞ்சு தேசிய இனத்தின் புரட்சியாகவே நடந்தது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உருவாக்கத்தின் போது, தேசிய இனம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. பிரிட்டனுக்குக் கீழே குடியேற்ற காலனி நாடாக அமெரிக்கா இருந்த போது, அமெரிக்காவிற்கான சட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இயற்றக் கூடாதென எதிர்ப்புகள் எழுந்தன. 1876இல், அமெரிக்கா விடுதலை அடைந்தது. அதன்போது நடைபெற்ற விவாதங்கள், Federalist papers என்ற பெயரில் வெளியாகியுள்ளன. அவர்கள் தேச அரசு உருவாக்கம் குறித்த ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தினர்.

1905ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நார்வே பிரிந்த போது, நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதை தோழர் லெனின் ஆதரித்தார்.

பிரிட்டனிலிருந்து பிரிந்து போக, அயர்லாந்து போராடிய போது மார்க்ஸ் முதலில் அதை எதிர்த்தார். பிரிட்டன் பாட்டாளிகளோடு இணைந்து அயர்லாந்து பாட்டாளி வர்க்கம் போராட வேண்டுமென நினைத்தார். ஆனால், பின்னர் தனது நிலைபாட்டை அவர் மாற்றிக் கொண்டார்.

தோழர் லெனின், 1869இல் மார்க்ஸ் கூறிய மேற்கோளை ஒன்றை எடுத்துக்காட்டி பேசினார். அயர்லாந்து விடுதலைக்குப் பிறகு வேண்டுமானால், பிரிட்டனுடன் அயர்லாந்து கூட்டாட்சியின் கீழ் இணைந்து கொள்ளலாம் என மார்க்ஸ் கூறியதே அது. ஏன் இவ்வாறு கூறினார்? ஏனென்றால், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கருத்துநிலை அவர்களது மனவிருப்பில் இருந்தது.

தோழர் லெனின், புரட்சிக்கு முன் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படும் என்பதை அறிவித்தால்தான் அவர்கள் வருவார்கள் எனக் கருதினார். தேசிய முதலாளிகள் அதை பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றும் அவர் கருதினார்.

வர்க்கப்புரட்சி எங்கு நடக்கும்? அறிவியலில், Time and Space என்பார்களே, காலமும் இடமும் அது என்ன? காலமும் இடமும்தான் முதற்பொருள் என்றார் தொல்காப்பியர். ஒரு தேசிய இனத்தில்தான் வர்க்கப்புரட்சி நடக்கும்! இரசியாவில் நடைபெற்றது இரசியப்புரட்சிதானே தவிர சோவியத் புரட்சியல்ல. 96 விழுக்காடு ஹன் தேசிய இனத்தவர்கள் வசிக்கும் சீனாவில், ஹன் தேசிய இனத்தில்தான் சீனப்புரட்சி நடைபெற்றது. கியூபாவில் அப்படிதான் நடைபெற்றது. வியட்நாமில் அது தான் நடைபெற்றது. எனவே, வர்க்கப்புரட்சியின் அடிப்படை இலகு (Basic Unit) என்பது தேசிய இனப்புரட்சி தான்.

கனடாவிலிருந்து பிரஞ்சு மொழி பேசும் மக்களான க்யூபெக் மக்கள் தனிநாடு கோருகின்றனர். அங்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடைபெற்று, அது 1 விழுக்காட்டில் தோல்வியடைந்தது. அங்கு மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பிரிட்டனிலிருந்து அயர்லாந்தின் ஒரு பகுதி பிரிந்துவிட்டது. தற்போது, இந்த ஆண்டு ஸ்காட்லாந்து பிரிந்து போக கருத்து வாக்கெடுப்பு நடக்க உள்ளது. முதலாளியம் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் இந்த நிலை என்றால், சோவியத் யூனியனுக்கு எந்த கதி நேர்ந்தது?

எனவே, தேசிய இனக் கோரிக்கைகள் எப்பொழுதும் இரண்டாம் பட்சக் கோரிக்கைகளாக இருப்பதில்லை. கூட்டாட்சி தத்துவங்கள் முதலாளியக் கட்டமைப்பிலும், சோசலிசக் கட்டமைப்பிலும் தோல்வி கண்டுவிட்டன என்பதுதான் உலக நிலைமை! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே பல பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இன்னமும் தேசிய இனங்களாக வளர்ச்சி பெறவில்லை. அவர்களை சுயாட்சி உரிமை கொண்ட பிரதேசங்களாக நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், வளர்ச்சியடைந்த தேசிய இனங்களை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்வது எந்தவகையிலும் சரியானதன்று. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அரசுரிமை வேண்டும். அவர்களுக்கென தேச அரசு வேண்டும். அதுதான் உலக நிலைமையாகவும் இருக்கிறது!

நமக்கு, தமிழ்த் தேச அரசு வேண்டும். எந்த நிலையிலும் நம்மால் இந்தியாவோடு இணைந்திருக்க முடியாது. இணைந்திருக்கக் கூடாது. இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் வர்க்கப் புரட்சியில் ஈடுபடுங்கள், யார் வேண்டாம் என்றது? ஆனால், எங்கோ உள்ளவனையும் இணைத்துக் கொண்டுதான் அனைத்திந்தியப் புரட்சி நடத்த வேண்டுமெனச் சொல்லி இங்கு மடைமாற்றம் செய்யாதீர்கள்! வடநாட்டில் வர்க்கப்புரட்சி நடைந்தால், அதை நாம் ஆதரித்து விட்டுப்போவோம். ஆனால், அவர்களையும் இணைத்துக் கொண்டுதான் புரட்சி எனச் சொல்லி இங்கு மடைமாற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை. நம் வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும். எங்கோ இருப்பவன் எழுதக்கூடாது.

தோழர் பிடல் காஸ்த்ரோ கூறியதைப் போல், புரட்சியாளர்கள் தம்முடைய இலட்சியத்தை நமது நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் புரியும் வகையில் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதுபோல, நாம் தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும். இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் அது தெரிய வேண்டும். நமது தோழமை சக்திகளுக்கும் அது தெரிய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட போது, பாவல்ரேறு பெருஞ்சித்திரனார் புலிகளை ஆதரிப்பதால் தம்மை கைது செய்வோர் செய்க – தன் தலை கொய்ய நினைப்போர் கொய்க என எழுதினார். அதுபோல, தமிழ்த் தேச விடுதலை இலட்சியத்தை எவ்வித தயக்கமும் அச்சமும் இன்றி நாம் வெளிப்படுத்த வேண்டும்! அது தான் தமிழினம் தலைநிமிர ஒரே வழி!“

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

மாநாட்டின் இடையில், தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை வாசிக்க, பலத்த கரவொலியுடன் அவை நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில், திரளான உணர்வாளர்களும், தோழர்களும் பங்கேற்றனர். 
Unknown said...

தமிழா்களுக்கென்று தனித் தாயகம் வேண்டும். தமிழ்த் தேசம் தமிழர்களின் தனி உரிமை. தமிழா்கள் நாடு - தமிழ்நாடு, தமிழா்கள் மொழி - தமிழ் மொழி. தமிழா்கள் இனம் - தமிழ் இனம் என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக உரக்கச் சொல்ல வேண்டும். இதை சொல்வதற்கு நாம் நாணம் கொள்ளக் கூடாது.

Unknown said...

தமிழா்களுக்கென்று தனித் தாயகம் வேண்டும். தமிழ்த் தேசம் தமிழர்களின் தனி உரிமை. தமிழா்கள் நாடு - தமிழ்நாடு, தமிழா்கள் மொழி - தமிழ் மொழி. தமிழா்கள் இனம் - தமிழ் இனம் என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக உரக்கச் சொல்ல வேண்டும். இதை சொல்வதற்கு நாம் நாணம் கொள்ளக் கூடாது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT