உடனடிச்செய்திகள்

Sunday, July 20, 2014

இசுரேலே! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு : மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வான்வழித் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல்களின் மூலம், பாலஸ்தீனத் தாயகத்திற்குள் நுழைந்துள்ள இசுரேலிய ஆக்கிரமிப்புப் படைகள், இதுவரை 300க்கும் அதிகமான பாலஸ்தீன அப்பாவிக் குழந்தைகளையும், பெண்களையும் படுகொலை செய்து வெறியாட்டம் நிகழ்த்தி வருகின்றனர். வட அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் இசுரேலின் இந்த கொலை வெறியாட்டத்தைத் தடுக்காமல் ஐ.நா. நாடகமாடி வருகின்றது.

பாலஸ்தீன மக்கள் மீதான போரை நிறுத்தக் கோரி, இந்திய அரசு ஐ.நா.வை அணுக வேண்டுமெனக் கோரியும், இசுரேலுடனான அரசியல் - பொருளியல் உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டுமெனவும், இன்று (20.07.2014) மாலை 4 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில், மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

'இசுரேலே! பாலத்தீனத்தை விட்டு வெளியேறு!', 'இந்தியாவே இசுரேலுடனான உறவை துண்டித்துக் கொள்' என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை ஆர்ப்பாட்டத் தோழர்கள் எழுப்பினர். கொட்டும் மழையிலும் தோழர்கள் அனைவரும் கரம் கோத்து நின்று முழக்கங்கள் எழுப்பியதை, கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

போராட்டத்தை, இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்றன. 


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் இளங்குமரன், பல்லாவரம் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். 






போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT