உடனடிச்செய்திகள்

Monday, September 1, 2014

ஆசிரியர் நாளை குரு உத்சவ் என மாற்றுவதற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனம்.


 இந்தியாவின்  முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர்  சர்வப்பள்ளி  இராதாகிருட்டிணன் அவர்களது பிறந்த நாளான செப்டம்பர் -5 ஆசிரியர் நாளாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. ஆனால்,  பாரதிய சனதா ஆட்சியில்  இந்த ஆண்டு முதல் ஆசிரியர் நாளை “ குரு உத்சவ்”  என்றப் பெயரால் கொண்டாட வேண்டும் என இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிப்பு மோடி அரசின்  மேலும் ஒரு சமற்கிருதத் திணிப்பு, ஆரிய மேலாண்மை முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய அமைச்சர்கள் இணைய தளத்தில் இந்தியில் செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்றும்,  மத்திய மேனிலை வாரியப் பள்ளிகளில் சமற்கிருத வாரம்  கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்த பாரதிய சனதா அரசு இப்போது அந்த வரிசையில் குரு உத்சவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 செப்டம்பர்  5 ஐ ஆசிரியர் நாளாக தமிழகப் பள்ளிகள் கடைபிடித்து வருகின்றன. ஆசிரியர் என்ற சொல்லுக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மதசார்பற்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன.  அவ்வாறே ஆசிரியர்  நாளும் அழைக்கப்பட்டு  நிகழ்ந்து வருகின்றது.  இவற்றையெல்லாம்  மாற்றி குரு உத்சவ் என்ற ஒற்றைத் தொடரால் அழைக்கச் சொல்வது அப்பட்டமான சமற்கிருத் மற்றும் ஆரிய திணிப்பு ஆகும்.

குரு, குருகுலம்  போன்ற சமற்கிருத முறைமையின் மூலம்   தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட  சாதி மக்கள் கல்வி பெறுவதிலிருந்து  தள்ளிவைக்கப்பட்டதே இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு.
இப்போது சனநாயக ஆட்சிக் காலத்தில்  குரு உற்சவ் என அழைப்பது மீண்டும் வருணாசிரம சாதி ஒடுக்கு முறையை கொண்டு வரும் மறைமுக முயற்சியாகும்.

மோடி அரசின் இந்த அநீதியான முயற்சியை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  இச் சுற்றறிக்கையை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு செப்டம்பர்-5 ஆசிரியர் நாள் என்பதை பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என்றும், இந்திய அரசின் அநீதியான இந்த சுற்றறிக்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், அந்த நாளில்  பிரதமர் மோடி நிகழ்த்த உள்ள உரையை தமிழ்நாட்டுப் பள்ளிகளில்  ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மோடி அரசின் வருணாசிரம, ஆரிய  ஆதிக்க அறிவிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிராமல் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு தமிழக மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம்  சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இன்னணம்,

கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT