சிங்கள – இந்திய கூட்டுப் படைகளால், 2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை எதிர்த்து, இந்திய அரசின் அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனில், சனவரி 29 – 2009 அன்று, கொளத்தூரைச் சேர்ந்த கு. முத்துக்குமார், தீக்குளித்து உயிரீகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும், இந்நாள் தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த ஈகியரின் வீரவணக்க நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
தழல் ஈகி முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடமான சென்னை கொளத்தூரில், ஒவ்வொரு ஆண்டும் ஈகியர் நினைவுத் தூண் ஏற்படுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தும் ஏற்பாட்டை, இயக்குநர் த. புகழேந்தி ஒருங்கிணைப்பில், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு செய்து வருகின்றது. இவ் ஆண்டும், ஈகியர் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, இன்று(29.01.2016) காலை எழுச்சியுடன் நடைபெற்றது.
தழல் ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. குமரேசன், தங்கை திருமதி. தமிழரசி கருக்குவேல்ராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், நடிகர் திரு. சத்தியராஜ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி. அற்புதம் அம்மையார், ஓவியர் வீரசந்தனம், பத்திரிக்கையாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட பலரும் வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், சென்னை த.இ.மு. செயலாளர் வெற்றித்தமிழன், பொழிச்சலூர் த.இ.மு. செயலாளர் தோழர் கவியரசன், பாவலர் முழுநிலவன், தோழர்கள் ஜீவாநந்தம், பிரபாகரன், வடிவேலன், நல்லசிவம், வினோத் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள், ஈகியர் நினைவுத் தூணுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
ஏழு தமிழர் விடுதலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கப் பதாகையில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கையெழுத்திட்டதோடு, எழுவர் விடுதலை குறித்து எழுதிய புத்தகத்தை திருவாட்டி. அற்புதம் அம்மையாரிடம் வழங்கினார்.
தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது!
தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம்!
Post a Comment