உடனடிச்செய்திகள்

Friday, June 15, 2018

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
உச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில், இந்திய அரசு - குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.

2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது. 

இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலை பற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது. 

குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்! 

ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார். 

இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

கொலையுண்ட இராசீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்! 

இராசீவ் காந்தி கொலையில் பன்னாட்டு சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. 

இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! 

அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்! 

மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் - அந்த அதிகாரம் கட்டற்றது!

ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்! 

குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT