உடனடிச்செய்திகள்

Wednesday, December 12, 2018

“அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” புதிய தலைமுறை வார ஏட்டில்.. தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி..!

“அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” புதிய தலைமுறை வார ஏட்டில்.. தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி..!
காவிரியைத் தடுத்து கர்நாடகம் அணை கட்டுவது குறித்து, “அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” என்ற தலைப்பில், 12.12.2018 நாளிட்ட “புதிய தலைமுறை” வார ஏட்டில் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது கருத்து வெளி வந்துள்ளது. அதில், அவர் தெரிவித்துள்ளதாவது :

“காவிரி தீர்ப்பாயம் 192 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற முதலில் தீர்ப்பளித்தது. அதன் பிறகு வந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அதிலிருந்து 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த 14.75 டி.எம்.சி. தண்ணீர் என்பதே பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காக என்றுதான் சொன்னார்கள்.

இப்போது மீண்டும் குடிதண்ணீருக்காக மேகதாதுவில் 67 டி.எம்.சி. கொள்ளளவில் அணை கட்டப் போவதாக சொல்வது சட்டவிரோதம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பின்படி அந்த குழுவின் தலைவராக முழுநேர தலைவரை நியமிக்காமல் பகுதி நேர தலைவரை நியமித்துள்ளது மத்திய அரசு. இதுவும் சட்டவிரோதம். இப்போது அந்த ஆணையத்தின் ஒப்புதலை பெறாமலேயே இந்த அணையை கட்டவும் முயற்சிக்கிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவே வாய்ப்பில்லை. மேகதாது அணை 67 டி.எம்.சி. கொள்ளளவில் கட்டப்படுகிறது. இது கபினி, ஏரங்கி உள்ளிட்ட அணைகளை விடவும் பெரியது. இந்த அணை கட்டப்படும் மேகதாது என்னும் இடம் கர்நாடகாவில் இருந்துவரும் காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் சேரும் இடத்திற்கு கொஞ்சம் முன்னால் உள்ளது. இங்கு அணை கட்டப்பட்டால் காவிரியில் வரும் நீர் மற்றும் இடையில் பொழியும் மழை உள்ளிட்ட அத்தனை நீரையும் மேகதாதுவில் நிரப்புவார்கள். அதன்பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை.

தமிழகம் வீணாக தண்ணீரை கடலில் கலக்கிறது. அதனால் நாங்கள் மேகதாதுவில் தண்ணீரை சேமிக்கப் போகிறோம் என்று சொல்லித்தான் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறது.

நான்கு மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி இந்த மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக கர்நாடகம் அனுப்பிய அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே சிவசமுத்திரம் நீர் மின் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பியபோது, அதனுடன் தமிழகத்தின் அனுமதி கடிதம் இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அமைச்சகம் அனுமதி அளிக்காது என்று முன்பு உமாபாரதி கூறியிருந்தார்.

உமாபாரதியின் நிலைப்பாட்டைத்தான் தற்போதைய அமைச்சர் நிதின் கட்கரியும் எடுத்திருக்க வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட்டாத நிலையில் கர்நாடக மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT