மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை
அனுமதித்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் நடூரில் நேற்று (02.12.2019) கொட்டிய பெருமழையில் ஒரு மதில் சுவர் இடிந்து விழுந்ததில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நான்கு வீடுகள் தகர்ந்து அதில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் – பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களும் கொடூரமாக உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மதில் சுவர் 80 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது என்கிறார்கள். இதைக் கட்டியவர் “சக்கரவர்த்தி துகில் மாளிகை” என்ற மிகப்பெரிய துணிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன். இவருடைய வீட்டுக்கு அருகில் உழைக்கும் மக்களான அருந்ததியர் குடும்பங்கள் பல இருக்கின்றன. அவர்கள் தன் குடும்பத்தார் பார்வையில் படக் கூடாது என்பதற்காக சிறைச்சாலை சுவரைப் போல், உயரமாக நீளமாக மதில் சுவரை எழுப்பியிருக்கிறார் சிவசுப்பிரமணியன்.
ஆனால், மாளிகை கட்டி வாழும் அந்தப் பெரும் பணக்காரர், மதில் சுவருக்கு மட்டும் அத்திவாரத்தை ஆழமாகப் போடாமல் உயரமாகக் கட்டியிருக்கிறார். பெருமழை தாங்காமல் மட்டுமின்றி, மழை நீர் வெளியேறும் நீரோட்டப் போக்கினை தடுத்து அந்த மதில் சுவர் கட்டப்பட்டதால், தேங்கிய நீரினாலும் பெருமழையைத் தாங்காததாலும் அந்த மதில் சுவர் சரிந்து நொறுங்கி பக்கத்தில் உள்ள உழைப்பாளி மக்களின் ஓட்டு வீடுகளில் விழுந்து 17 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.
இந்த மதில் சுவர் நடைமுறையில் ஒரு தீண்டாமைச் சுவர்! வீட்டைச் சுற்றி இவ்வளவு உயரத்திற்கு யாரும் மதில் சுவர் எழுப்புவதில்லை. இந்தத் தீண்டாமைச் சுவர் என்பது, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே தகர்த்தெறியப்பட்டிருக்க வேண்டும். தீண்டாமைச் சுவர் என்று குற்றம்சாட்டியும், மழை நீரின் ஓட்டத்தைத் தடுப்பதால் தங்கள் குடியிருப்புகள் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக மாறி விடுகிறது என்றும் அதிகாரிகளுக்கு முறையிட்டு அந்த சுவரை அப்புறப்படுத்த அம்மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் சட்டை செய்யவில்லை.
பெரும் பணக்காரர் – சமூகத்தில் மேல் நிலையில் உள்ளவர், எனவே அவரது ஆதிக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று அதிகாரிகள் கருதினார்களா? அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தார்களா என்ற வினாக்கள் இயல்பானவை.
தமிழ்நாட்டில் அரசியல் சார்பு, சமூக ஆதிக்கவாதிகள் சார்பு அதிகாரம்தான் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்தில் கூறப்படும் நடுநிலை அரசு இல்லை என்பதற்கு நடூர் உயிர்ப்பலியும் ஒரு சான்றாகும்!
பல தடவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அகற்றப்படாத மதில் சுவரால் தங்களுடைய உறவினர்கள் 17 பேர் பலியாகிவிட்ட ஆத்திரத்தில், “மதில் சுவர் மாமன்னர் சிவசுப்பிரமணியனை” கைது செய் என்று வலியுறுத்தி சாலை மறியல் செய்த மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமரசம் பேசி, கலையச் செய்திருக்கலாம். அதைவிடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைக்கும் உத்தியை ஆட்சியாளர்கள் கடைபிடித்தது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்த உயிரிழப்புகளை அறிந்து அங்கு சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி, சனநாயக வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களைத் தாக்கி, அவரைக் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த கொடுங்கோன்மை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மேற்கண்ட தீண்டாமைச் சுவரைக் கட்டிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அச்சுவரை அகற்றிட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அகற்றாமல் போனதற்கு யார் யார் காரணம் என்று அறிந்து, அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் உடனடியாக சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
மாவட்ட வருவாய்த் துறையினர் தலையிட்டு, சமரசம் பேசினார்களா, அப்படி பேசவில்லையென்றால் கடமை தவறிய அல்லது அவர்களை கடமை தவறச் செய்த பிரமுகர்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஒவ்வொருவருக்கும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment