தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில்
தமிழுக்கு சரிபாதி இடம் - முதல் கட்ட வெற்றி!
தமிழுக்கு சரிபாதி இடம் - முதல் கட்ட வெற்றி!
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வழக்குத் தொடுத்திருந்தோம். மற்றும் சிலரும் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பிலும், வீரத்தமிழர் முன்னணி சார்பிலும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், “சிகரம்” செந்தில்நாதன் ஆகியோரும், வழக்கறிஞர் திருமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், அழகுமணி ஆகியோரும், கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களும் வாதிட்டார்கள். இளம் வழக்கறிஞர்கள் ராஜீவ் ரூபஸ், மது ஆகியோரும் இவ்வழக்குப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
இன்று (31.01.2020) காலை இவ்வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, இரவீந்திரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். கடந்த 29.01.2020 அன்று நம் மூத்த வழக்கறிஞர்கள் நடத்திய தருக்கத்தின்போது, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை கூடுதலாக ஒரு பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கலசம் ஆகிய ஐந்து இடங்களில் தமிழ் மற்றும் சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான இடம் அளிக்கப்படும் என்றும், தமிழ் மந்திரங்களும, சமற்கிருத மந்திரங்களும் சம அளவில் ஓதப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த உறுதிமொழியை ஏற்று, இந்து அறநிலையத்துறை இக்குடமுழுக்கை செயல்படுத்த வேண்டுமென்றும், இருமொழிச் சமத்துவம் உறுதியாகக் கடைபிடிக்கப்பட வேண்டுமென்றும், இத்தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தியது பற்றிய அறிக்கையை குடமுழுக்கு முடிந்த ஒரு வாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் இன்றைய தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்தத் தீர்ப்பு, தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றி; அயல் ஆதிக்க மொழியான சமற்கிருதத்திற்குக் கிடைத்த முதல் தோல்வி என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு இத்தீர்ப்பை வரவேற்கிறது!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழுக்கு உரிய இடம், குடமுழுக்கு நிகழ்ச்சி முழுவதிலும் கிடைப்பதை உறுதி செய்ய சமயச் சான்றோர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறன். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் சமயச் சான்றோர்கள் சிலரை அக்குழுவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த முதல் கட்ட வெற்றிக்குக் காரணமானவர்கள் – ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் பா.ச.க. தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கை வெளியிட்டன. தமிழ் அறிஞர்களும், தமிழ் படைப்பாளிகளும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு வடிவங்களில் தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். தமிழ் வழிபாட்டுரிமைக்கு தமிழ்நாடு உள்பட உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் குரல் கொடுத்தார்கள். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் உறுப்பு அமைப்புகளும், உணர்வாளர்களும் உறுதியாக இக்கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்கள்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென்று கடந்த 22.01.2020 அன்று தஞ்சையில் மாபெரும் மாநாடு நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் – ஆன்மிகம் சார்ந்த பெரியவர்களும், மக்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டார்கள்.
ஒட்டுமொத்தத் தமிழினமும் கொடுத்த குரலுக்கும், எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் இந்த முதல் கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்பதால், தமிழ்க் குடமுழுக்குக்காக 01.02.2020 அன்று தஞ்சையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுவது என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தமிழர் ஆன்மிகத்தில் தமிழ் மொழி உரிமையை மீட்பதற்கான நம்முடைய முயற்சிகள் மேலும் தொடர வேண்டும். தமிழ்நாடு முழுவதிலுமுள்ள இந்துக் கோயில்கள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அயல்மொழியான சமற்கிருதத்தை வெளியேற்றி நம்முடைய தாய்மொழியான தமிழை அரங்கேற்றுவதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றிட வலியுறுத்தவும், இத்திசையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் கருத்தைத் திரட்டவும் தொடர்ந்து இயங்கிட உறுதியேற்போம்!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழை நிலைநாட்டப் போராடிய, ஒத்துழைத்த, துணை நின்ற, குரல் கொடுத்த அனைவருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு, சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/ thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
Post a Comment