புலம்பெயர் தொழிலாளர்கள் போகட்டும்
“மண்ணின் மக்கள் வேலை
வழங்கு வாரியம்” அமைத்திடுக!
முதலமைச்சருக்கு வேண்டுகோள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய் மண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவது தற்காப்பு உணர்வு சார்ந்த உளவியல் உந்துதல் ஆகும். எனவே, வெளி மாநிலங்களில் பணிபுரிந்த தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதும், தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் தாயகப் பகுதிக்கு அனுப்பி வைப்பதும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கட்டாயக் கடமையாகும்.
இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர் தொழிலாளிகள் போய் விட்டால், இங்கு திறக்கப்படவுள்ள சிறு – குறு – நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கும், பெருந்தொழிற் சாலைகளுக்கும் தேவையான தொழிலாளிகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும்.
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் மனித வளம் அதிகம். இப்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேரும் தமிழ்த் தொழிலாளிகளும் இந்த மனித வளத்தில் கூடுதலாகச் சேர்ந்து கொள்வார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் பல இலட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். வேலைக்குப் போகாமல் சோம்பேறிகளாய்த் திரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்குரிய “தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வாய்ப்பு வாரியம்” ஒன்றைப் புதிதாகத் தொடங்கி மேலே சொல்லப்பட்ட ஆண் – பெண் தொழிலாளிகள் அனைவரையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். பல துறை வேலை வாய்ப்பிற்குரிய கல்வித் திறன் பெற்றவர்களும் உடல் உழைப்பாளிகளும், கட்டுமானத் தொழிலாளிகள் உள்பட அனைவரும் இந்த வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வாரியத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தொழிலாளிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளிகளை அழைத்து வரும் பணவேட்டைத் தரகர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.
இந்தத் தொழிலாளிகளுக்கு வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம் அனைத்தையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும்போது, தொழிலாளி கிடைக்கவில்லை என்ற சிக்கல் ஏற்படாது. வெளி மாநிலத் தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்தித் தங்க வைக்கும் உரிமை மீறல் தேவை இல்லை.
மிகக் குறைந்த கூலிக்காகவும், மிகை நேர வேலைக்காகவும் தமிழ்நாட்டு குடிமக்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத் தொழிலாளிகளை வேலைக்குச் சேர்க்கும் அவலமும் இடம் பெறாது. தமிழ்நாட்டில் தனியார் துறையில் 10 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலத்தவர் வேலை செய்யக்கூடாது என்று சட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வேண்டுகோளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து செயல்படுத்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment