ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் ஏவுவது
திராவிட மாடல் பாசிசமாகும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!
கடந்த 14.09.2025 அன்று, புரட்சித் தமிழகம் – பறையர் பேரவையின் தலைவர் ஏர்போர்ட் த. மூர்த்தி அவர்களை தமிழ்நாடு அரசு, குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தி இருப்பதை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
சனநாயகப் பாதையில் எப்போதும் தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருவதுடன், தி.மு.க. ஆட்சியின் தவறுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வந்தவர் தோழர் மூர்த்தி. அப்பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொன்னதே அவரது "குற்றம்" என தி.மு.க. ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த வாரம், சென்னையில் காவல்துறை தலைமையகம் முன்பு, தோழர் ஏர்போர்ட் மூர்த்தி செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க முற்பட்டபோது, வி.சி.க.வினர் சிலர் அவர்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தினர். அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மூர்த்தி அவர்களும் திருப்பித் தாக்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும், தோழர் திருமாவளவன் மீதும், ஏர்போர்ட் மூர்த்தி விமர்சனங்கள் முன்வைத்தார் என்பதற்காகவே அத்தாக்குதலை வி.சி.க.வினர் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, தாக்குதல் நடத்திய வி.சி.க.வினர் "கூட்டணிக் கட்சியினர்" என்பதால் காவல்துறை அவர்களை ஒன்றுமே செய்யாமல் வேடிக்கைப் பார்த்து, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கும் உதவியது. எல்லாம் ஊடகங்களில் பதிவாகி வெளியான உண்மை. இந்நிகழ்வுக்குப் பிறகு, அத்தாக்குதலில் இலக்கான மூர்த்தியைத் தான் தமிழ்நாடு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்ததே தவிர, வலிந்து வந்து தாக்கிய வி.சி.க.வினரைக் காவல்துறைக் கைது செய்யவில்லை!
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து தோழர் மூர்த்தி பேசி வந்தார். பஞ்சமி நில மீட்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட நிதி எனப் பல்வேறு சிக்கல்களில் தி.மு.க.வை கேள்விக்குட்படுத்தி வந்தார். வாக்கு அரசியலுக்காக திராவிடக் கட்சியினர் தமிழ்ச் சாதிகளிடையே சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் கூறி, பல்வேறு மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருடன் பிற சாதியினர் நட்புறவு பாராட்ட வேண்டுமெனக் கூறி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.
இவையெல்லாம் தான், தோழர் மூர்த்தி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவிற்கு, தி.மு.க. ஆட்சியாளர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி மீது வேறு வழக்குகள் இருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர் பேசிய கருத்துகளுக்காக அவரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது!
விமர்சனங்களை எதிர்கொள்ளா முடியாமல், உலகறிந்த ஊடகவியலாளர்களை – செயல்பாட்டாளர்களை பல்வேறு வழக்குகள் போட்டு சிறைப்படுத்தி வரும் ஆரியத்துவ பா.ச.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு சற்றும் குறைவில்லாமல், திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
ஏர்போர்ட் மூர்த்தியின் கைது, தமிழின உரிமைக்குக் குரல் கொடுப்போரை அச்சுறுத்தும் பாசிச நடவடிக்கையின் தொடக்கமாகும். தி.மு.க. அரசு, உடனடியாக அவரை விடுதலை செய்து, அவர் மீதான பொய் வழக்கைக் கைவிட வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment