உடனடிச்செய்திகள்

Latest Post

Saturday, October 18, 2025

உத்திரப்பிரதேசத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை! திராவிட மாடல் அரசு திருந்துவது எப்போது? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

உத்திரப்பிரதேசத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை!

திராவிட மாடல் அரசு திருந்துவது எப்போது?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

தமிழ்நாட்டு வேலை, தொழில், வணிகம், கல்வி அனைத்தும் தமிழர்களுக்கே என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டங்களும் திட்டங்களும் இருக்கின்றன என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி விளக்கி இருக்கிறோம். அதற்கான வெளியீடுகளை வெளியிட்டு இருக்கிறோம்; கருத்தரங்கங்கள் மாநாடுகள் நடத்தி விளக்கி இருக்கிறோம். தமிழ்நாடு அரசு அதை இன்று வரையிலும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

 

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் - தனியார் வேலை வாய்ப்பு உட்பட - 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும், நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும், அவர்கள் அதைச் செயல்படுத்த முன்வரவில்லை. மாறாக, இந்திக்காரர்களுக்கும் இந்தி மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கே ஊக்குவிப்பு திட்டங்கள், குடியிருப்பு திட்டங்கள் ஏற்படுத்தி, அவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கி, அவர்களை நிலைப்படுத்தி வருகிறார்கள்.

 

ஆனால், தீவிர இந்தியத்தேசியத்தை முன்வைத்து பா.ச.க. ஆளக்கூடிய உத்தரப் பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு, பல சட்ட திட்டங்களை அங்கே நடக்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறது.

 

இந்திய அரசின் திட்டமான உலகத் திறன் மேம்பாட்டு மையம் (Global Capability Center) எல்லா மாநிலங்களிலும் மாநில அரசின் வழியாகவே செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் செயல்படுகிறது. அத்திட்டத்தை, உத்திரப்பிரதேச அரசு செயல்படுத்தும்போது, மண்ணின் மக்களுக்கான திட்டமாக மாற்றி அமைத்து, 2025 மே முதல் செயல்படுத்துகிறது. இதன்படி, திறன்வாய்ந்த உத்திரப் பிரதேச மண்ணின் மக்களைப் பணியில் அமர்த்திக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அவர்களது "நிலைமூலதனச்" (Fixed Capital) செலவில், 25 விழுக்காடு தொகை உ.பி. அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. பின் தங்கிய மாவட்டங்களில், மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க முன்வரும் நிறுவனங்களுக்குக் கூடுதல் மானியம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

 

இது தவிர, தொழில் முனைவோரும், பணியாற்றக் கூடிய தொழிலாளர்களும், உத்திரப்பிரதேச மண்ணின் மக்களாக இருந்தால், அவர்களுக்கு இதே திட்டத்தில் கூடுதல் மானியங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

 

அதேபோல் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 1 இலட்சம் வரையிலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்க திட்டங்களை அறிவித்திருக்கிறார் உ.பி. முதலமைச்சர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உள்ளூர் மக்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக இருந்தால், மாதம் தோறும் ரூ. 3000 ஊக்கத்தொகை வழங்குவது என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

அது மட்டுமின்றி, குறிப்பாக ஒவ்வொரு தொழில் சார்ந்த உள்ளூர் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்து, உத்தரபிரதேசம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

அந்த மாநிலத்தில் நூற்பாலைகள், துணி ஆலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், பின்னலாடைகள் தொழில்கள் ஆகியவற்றில் 50 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களில், முழுவதும் உள்ளூர் மக்களை வேலைக்கு வைத்துக் கொண்டால், அந்நிறுவனங்களுக்கு, தனித்த ஊக்குவிப்புத் தொகை வழங்குகிறார்கள்.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மண்ணின் மக்களுக்கான வேலை வழங்கு வாரியம் என்ற திட்டத்தை முன்மொழிந்து பரப்புரைகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

இதே திட்டத்தை உத்திரப்பிரதேச அரசு 2022இல் இருந்து அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

வேலை வாய்ப்பு தேடும் உள்ளூர் மக்கள் தங்கள் பெயர்களைத் தங்களுடைய தொழில் திறன் கல்வி தகுதி ஆகியவற்றுடன் தங்களுடைய தொடர்பு முகவரியோடு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே இணையதளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேடக்கூடிய நிறுவனங்கள், என்னென்ன கல்வித் தகுதியில் / திறன்களில் தங்களுக்கு எவ்வளவு பேர் தேவை என்பதைப் பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடுவோர் அந்த இணையத்தைப் பார்த்து தங்களுக்குப் பொருத்தமான வேலையில் சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்.

 

வேலைக்கு ஆட்களைத் தேடக்கூடிய நிறுவனங்கள் தங்களுக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்து கொள்வதற்கு அந்த இணையம் பயன்படும். இதுபோன்ற,  வேலை வழங்கு வாரியம், அதற்கான இணையம் என்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகக் கூறி வருவதை, உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

மதவாதம் பீடித்த உத்தரப்பிரதேச அரசு கூட, தனது மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கான நிதி ஒதுங்குகிறது.

 

ஆனால் எல்லோருக்கும் எல்லாம் என்ற அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சிப் பாதைக்கு நாங்கள் தான் உலகத்திற்கே வழிகாட்டி எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மாடல் தி.மு.க. அரசு, எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பார்க்கிறோம். தொடர்ந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாம் மண்ணின் மைந்தர்க்கே வேலை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதனுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் தி.மு.க.வே தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அதை அறிவித்தது. ஆனால் அதைச் செயல்படுத்தாது, அதற்கு மாறாக எதிர் திசையில் இந்திக்காரர்களை இங்கே நிலைப்படுத்துவதற்கான முயற்சியில் தான் இறங்கி கொண்டிருக்கிறது.

 

உத்தரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திராவிட மாடல் அரசு திருந்தி, இனியாவது மண்ணின் மக்களுக்கான வேலை வழங்கும் சட்டங்களையும், திட்டங்களையும், ஊக்குவிப்பு மானிய அறிவிப்புகளையும் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Sunday, October 12, 2025

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டைவழங்காதீர்! வரும் திசம்பர் 16 அன்று சென்னை தலைமைச்செயலகம் – இந்தியத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!

வெளி மாநிலத்தவர்க்கு 

வாக்காளர் அட்டை வழங்காதீர்!


வரும் திசம்பர் 16 அன்று சென்னை தலைமைச் செயலகம் – இந்தியத் 

தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!

  

 


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், இன்று (12.10.2025) காலை முதல் மாலை வரை, குடந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், ஓசூர் கோ. மாரிமுத்து, திருச்செந்தூர் மு. தமிழ்மணி, குடந்தை க. விடுதலைச்சுடர், பூதலூர் பி. தென்னவன், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த.  கவித்துவன், மதுரை கதிர்நிலவன், ஈரோடு வெ. இளங்கோவன், சென்னை வெற்றித்தமிழன், பெண்ணாடம் மா. மணிமாறன், புதுச்சேரி இரா. வேல்சாமி, க. தீந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப் பட்டன.

 

தீர்மானம் 1 :

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதீர்!

வரும் திசம்பர் 16 அன்று சென்னை தலைமைச் செயலகம் –

இந்தியத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

 

தமிழ்நாடு வெளி மாநிலத்தவரின் வேட்டைக்காடாகத் தவிக்கிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்திக்காரர்கள் பெருமளவில் தமிழ்நாட்டில் குடியேறி, தமிழர்களின் வேலை – தொழில் – வணிகம் – கல்வி என அனைத்துத் தளங்களிலும் ஆக்கிரமித்து வருகின்றனர். இப்போது இதன் அடுத்தகட்டமாக தமிழ்நாட்டின் வாக்காளர்களாக அவர்கள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளனர்.

 

பீகாரிலிருந்து மட்டும், ஏறத்தாழ 7.5 இலட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் திணிக்கப்பட உள்ளார்கள். அடுத்தடுத்து, ஒரிசா, சார்கண்ட் உள்ளிட்ட பிற மாநில வாக்காளர்கள் அதிகரிப்பார்கள். இது சட்டப்படித் தமிழர் தாயகமாக உள்ள தமிழ்நாட்டின் இனச் சமநிலையை பாதிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டின் மரபுவழி அரசியலுக்குத் தொடர்பில்லாத அயல் மாநிலத்தவரைத் திணிப்பது தமிழர்களின் தாயக உரிமையைப் பறிப்பதாக உள்ளது.

 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள வெளிமாநிலத்தவர்க்கு ஆங்காங்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற அடிப்படை ஆவணங்களை வழங்கி தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றனர்.

 

தமிழ்நாட்டை இன்னொரு இந்தி மாநிலமாக்கிட முயலும் ஆரியத்துவா பா.ச.க. – காங்கிரசு கட்சிகளின் சதித் திட்டத்திற்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் துணை போகிறது. சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக வெளி மாநிலத்தவர்கள் சேர்க்கப்படுவது, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தைக் கூட இல்லாமல் சிதைத்து, தமிழர்களை சொந்தத் தாயகத்திலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் ஒரு இனச் சிதைப்புச்  செயலாகும்!   

 

எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்குவதற்கான அடிப்படைப் பணிகள் எதனையும் தமிழ்நாடு அரசு செய்யக் கூடாது. இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் இந்த வாக்காளர் சீராய்வுத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று இந்தியத் தேதுாதல் ஆணையத்தைக் வேலியுறுத்த வுண்டும். இந்திய அரசு இந்த திசையில் அயல் மாநிலத்தவர்த் திணிப்புக்கு துணை போவதற்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கக் கூடாது; தடுத்து நிறுத்த வேண்டும்.

 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் திசம்பர் 16ஆம் நாள் – செவ்வாய் அன்று சென்னை – தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகம் - இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு தலைமை அதிகாரி அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பது எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இத்தலைமைச் செயற்குழு ஒருமனமாகத் தீர்மானிக்கிறது!

 

தமிழ் மக்கள், தங்களது தாயக உரிமையையும், சனநாயகத்தையும் காக்க, குடும்பம் குடும்பமாக அணித்திரண்டு வந்து இந்த அறப்போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்றும் அன்புரிமையுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைப்பு விடுக்கிறது!

 

தீர்மானம் 2 :

காசாவில் போர் நிறுத்தத்தை வரவேற்கிறோம்!

பாலத்தீனத்தைத் தனி நாடாக அனைத்துலகம் ஏற்க வேண்டும்!

 

பாலத்தீனத்தின் மீது யூத இனவெறி இசுரேலின் இனப்படுகொலைப் போருக்குப் பின்னர், அண்மையில் 08.10.2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் உளமார வரவேற்கிறது! உலகெங்கிலும் பாலத்தீனத்திற்கு ஆதரவாக, குறிப்பாக ஏப்ரல் 17 - 2024 முதல் இசுரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் மகத்தானவை.

 

வரலாறு காணாத வகையில், இந்த இனக்கொலைப் போரை நிறுத்த வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான படகுகளில், கிரேட்டா துன்பர்க், நெல்சன் மண்டேலாவின் பேரன் மாண்ட்லா மண்டேலா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான செயல்பாட்டாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கடல் பயணம் மேற்கொண்டு, காசா கடல் எல்லை அடைந்தது வரலாற்றில் குறிக்கத்தக்க போராட்டமாகும்.

 

ஒட்டுமொத்த காசாவே தரைமட்டமான நிலையிலும், உறுதியாக நின்று போராடி வரும் ஹமாஸ் போராளிகளின் நெஞ்சுறுதி ஒடுக்குண்ட இன மக்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகும்.

 

இவை அனைத்தின் விளைவாக, இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

 

அனைத்துலக நாடுகள் அனைத்தும் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரித்து, நிரந்தரத் தீர்வை நோக்கி நகர வேண்டும். சுதந்திரப் பாலத்தீனத்திற்கு உடனடியாக முழுமையான அங்கீகாரம் வழங்க வேண்டும்.

 

இசுரேலையும் பாலத்தீனத்தையும் அண்டை நாடுகளாக ஏற்று, அமைதியான சகவாழ்வை உருவாக்க உலக நாடுகள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மறைமுகமாக யூத இனவெறி இசுரேலுக்கு உதவும் இந்திய அரசு, தனது போக்கினைக் கைவிட்டு, பாலத்தீனத்திற்கு ஆதரவானச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், பாலத்தீன மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக ஹமாஸ் அமைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது!

 

தீர்மானம் 3 :

குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுரர் திருக்கோயில்

குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்த வேண்டும்!

 

திருக்கோயில் நகரம் என்றழைக்கப்படும் குடந்தையில் அமையப் பெற்றுள்ள அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலுக்கு, வரும் 2025 திசம்பர் 1 அன்று, திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடத்தவிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவித்துள்ளதை மனமார வரவேற்கிறோம்!

 

தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும், நாடாண்ட மன்னர்களாலும் உருவாக்கப் பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரிகமும் திருக்கோயிலை மையமாக வைத்துத் தோன்றிய நாகரீகம். கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்கள் என்று குன்றக்குடி அடிகளார் உரைப்பார்கள். ஊரின் தலைமைச் செயலகமே திருக்கோயிலாக இருந்தது.

 

காலங்காலமாக தமிழ்நாட்டில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. தேவாரம் பாடிய சுந்தரர், "அர்ச்சனைப் பாட்டும் தமிழே" என்றார். "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே" என்றார் திருமந்திரத்தில் திருமூலர்.

 

நாளடைவில் வழிபாடுகள் யாவும் வடமொழி மயமாகிவிட்டன. இந்நிலையில், பக்தர்களின் வழிபாடுகள் திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம் பெற வேண்டும் என்று அடியார்களாலும், பத்திமை உள்ளம் கொண்ட பெரியோர்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வகையில், தமிழ் நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களில் அன்றாட வழிபாட்டையும், குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் தமிழில் நடத்த வேண்டுமென்பது தமிழ் மக்களின் பெரு விருப்பமாகும். அதை நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது. 

 

கடந்த 2015 டிசம்பர் 16இல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "சமற்கிருதத்தில்தான் கருவறை அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் நிபந்தனை விதிக்கவில்லை" என்று உறுதிபடத் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு, கோயில் கருவறையில் தமிழ் மந்திரம் ஓதி பூசை (அர்ச்சனை) செய்வதற்கு சுற்றறிக்கையும் (சுற்றறிக்கை எண் : 73848/97/கே.1, நாள் 10.09.1997), அதன்பின் தனி அரசாணையும் (அரசாணை (நிலை) எண்: 520, 18.11.1997) வெளியிட்டது. கோயில்களின் கருவறையிலும், கலசத்திலும், வேள்வியிலும் ஓதுவதற்கான தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு (இந்து சமய அறநிலையத் துறை) அச்சிட்டு நூல்களாக வெளியிட்டுள்ளது. அதற்கென அர்ச்சகர் பயிற்சியும் அரசு கொடுக்கிறது.

 

தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கின் போது (05.02.2020), தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணையின்படி (மனு எண் W.P. (MD) No. 1644 of 2020), திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், சமற்கிருதத்திற்கு இணையாக கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகியவற்றில் தமிழ் மந்திரங்கள் கூறி நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு திசம்பரில் (04.12.2020), கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், பதினெண் சித்தர் பீடத்தின் தலைவருமான சித்தர் மூங்கிலடியார் அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் (WP(MD)/0017750/2020), 03.12.2020 அன்று தீர்ப்பளித்த, நீதிபதிகள் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மந்திரங்கள் கூறி குடமுழுக்கை நடத்த வேண்டுமென ஆணையிட்டனர். அவ்வாறு நடத்த முன்வராத கோயில்களுக்கு 10 இலட்ச ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

 

கடந்த 2024 செப்டம்பர் மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சத்தியபாமா அம்மையார் அவர்கள், சேலம் மாவட்டம், கஞ்சமலை - அருள்மிகு சித்தேசுவரசாமி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்திடக் கோரி தொடர்ந்த வழக்கில் (Writ Petition No: 27340 / 2024) கடந்த 12.09.2024 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி. கிருஷ்ணக்குமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழில் குடமுழுக்கு நடத்திட ஆணையிட்டது. 

 

இத்தீர்ப்புகளின்படி, திருக்குடமுழுக்கில் விழாக்களில், வேள்விச்சாலையிலும், கலச நீராட்டலிலும், கருவறை வழிபாட்டிலும் சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அர்ச்சகர்களைப் பயன்படுத்தி, தமிழ் மந்திரங்கள் ஓத  வேண்டும்.

 

எனவே, திருஞானசம்பந்தரும் அப்பரும் வந்து பாடிச் சென்று புகழ்பெற்றுள்ள அருள்மிகு ஆதிகும்பேசுரர் திருக்கோயிலின் குடமுழுக்கை - நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, கருவறை – வேள்விச்சாலை – கலசம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் - அனைத்து தெய்வச் சடங்குகளிலும் சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அர்ச்சகர்களைக் கொண்டு, தமிழில் மந்திரங்கள் ஓதி சடங்குகள் செய்து, சிறப்புற நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

 

தீர்மானம் 4 :

22 விழுக்காடு ஈரப்பத உள்ள நெல்லை

தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டும்!

 

தமிழ்நாட்டின் உழவர் பெருமக்களின் துயர் துடைக்கும் நோக்குடன், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறையில் உள்ள ஈரப்பதம் தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். பருவநிலை மாற்றங்கள், எதிர்பாராத மழைகள் போன்ற காரணங்களால், அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அரசு நிர்ணயம் செய்துள்ள 14 முதல் 17 விழுக்காடு வரையிலான வரம்புக்குள் கொண்டுவருவது உழவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உழவர்கள் தங்களது உழைப்பின் பலனை முழுமையாகப் பெற இயலாமல், அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

 

எனவே, உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், அவர்தம் பொருளியலை வலுப் படுத்துவதற்கும், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத வரம்பை 22 விழுக்காடு வரை தளர்த்தி, நெல்லை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்தத் தளர்வானது, உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதையும், கொள்முதல் நடைமுறைகள் எளிமையாவதையும் உறுதி செய்யும். இதன்மூலம், நெல் கொள்முதலில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, விவசாயிகள் கூடுதல் சிரமமின்றி அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய வழிவகை பிறக்கும்!

 

அடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களில், உழவர் பெருமக்களிடமிருந்து ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் கட்டாய இலஞ்சமாக 40 ரூபாய் வசூலிக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது, தங்கள் உழைப்பின் பலனை நம்பி வாழும் உழவர்களை மேலும் சுரண்டும் செயலாகும்.

 

டாஸ்மாக் மதுக்கடைகளில் கட்டாயமாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? உழவர்களை சுரண்டுகின்ற இதுபோன்ற சட்டவிரோதப் பணப் பறிப்பால், நெல்லை விற்க வரும் ஏழை எளிய உழவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த ஊழல் அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் நசுக்குகிறது.

 

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படும் இந்தச் சட்டவிரோத இலஞ்ச நடைமுறையை அறவே ஒழிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது!

 

 

தீர்மானம் 5 :

தமிழ்வழிக் கல்வியை ஒழிப்பதுதான்

திராவிட மாடல் அரசின் நோக்கமா?

 

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை அறவே ஒழிக்கும் மறைமுக நோக்குடன் தி.மு.க. தலைமையிலான "திராவிட" மாடல் அரசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகராட்சியில், அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கணக்கு மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படாமல் இருப்பது பெரும் அநீதியாகும்.

 

அதே வேளையில், அதே பாட நூல்கள் தமிழ்நாடு அரசின் சென்னை நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநரக வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலவழி மாணவர்களுக்கு மட்டும் அனைத்துப் பாட நூல்களும் இலவசமாக முழுமையாக வழங்கப் பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் இந்த பாகுபாடான செயல், தமிழ்வழிக் கல்வியின் மீதும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியுரிமையின் மீதும் அக்கறையில்லாத தன்மையைப் பறைசாற்றுகிறது.

 

ஆகவே, தமிழ்வழிக் கல்வி மாணவர்களைத் திட்டமிட்டு தமிழ் பாடநூல்கள் தராமல் புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசின் இந்தச் செயலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் கடமையாகும். எனவே, தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு உடனடியாக அனைத்துப் பாட நூல்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் தமிழ்வழி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! 

 

தீர்மானம் 6 :

குடந்தை மாநகராட்சி வணிக வளாகத்திற்கு

முதல் கட்ட மொழிப்போர் ஈகி தாளமுத்துவின் பெயரை சூட்டுக!

 

1938இல் நடைபெற்ற மாபெரும் தமிழ்த்தேசிய எழுச்சியான இந்தி எதிர்ப்புப் போரில் உயிரீகம் செய்தவர் குடந்தையைச் சேர்ந்த மொழிப்போர் ஈகி தாளமுத்து! அவரது நினைவைப் போற்றும் வகையில், குடந்தையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மாநகராட்சி வணிக வளாகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும், அவரது சிலையும் வைக்க வேண்டுமென்றும் கோரி, கடந்த 21.08.2024 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், கோரிக்கை மனு அளித்தோம். அதனை ஏற்று, குடந்தை மாநகராட்சியில் மேயரும், துணை மேயரும் இணைந்து, ஈகி தாளமுத்துவின் பெயரை வணிக வளாகத்திற்கு சூட்டிட அவை உறுப்பினர்களின் ஏற்பிசைவுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

 

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்ட பிறகும்கூட, இன்றுவரை குடந்தை மாநகராட்சி வணிக வளாகத்திற்கு ஈகி தாளமுத்துவின் பெயர் சூட்டப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசும், குடந்தை மாநகராட்சியும் அக்கறை காட்டி "மொழிப்போர் ஈகி தாளமுத்து வணிக வளாகம்" என மாநகராட்சி வணிக வளாகத்திற்கு பெயர் சூட்டுமாறும், குடந்தையில் அவருக்கு சிலை எழுப்ப வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இத்தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

 

Wednesday, October 8, 2025

உச்ச நீதிமன்றத் தலைமைநீதிநாயகம்பி.ஆர். கவாய் மீதுதாக்குதல் தொடுத்த நபரைக்கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம்

பி.ஆர். கவாய் மீது தாக்குதல் தொடுத்த நபரைக்

கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

 

புதுதில்லியில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிநாயகம் உயர்திரு. பி.ஆர். கவாய் அவர்கள் மீது 06.10.2025 அன்று முற்பகல், இந்துத்துவா வெறியர் ஒருவர் தனது காலணியைக் கழற்றி வீசியுள்ள இழிசெயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

 

நேற்று முன்தினம் (06.10.2025) முற்பகல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய்நீதிநாயகம் கே. வினோத் சந்திரன் அமர்வு, வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய நிலையில், தில்லியைச் சேர்ந்த 71 அகவை வழக்குரைஞரான ராகேஷ் கிஷோர் என்பவர், தலைமை நீதிபதியை நோக்கித் தனது காலணியை வீசியுள்ளார். நீதிபதிகள் தங்கள் தலையை சாய்த்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். மற்றவர்கள் அந்நபரைத் தடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை விசாரித்துவிட்டு, அந்நபரை விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

அந்த ராகேஷ் கிஷோர் என்ற நபர், மத்தியப்பிரதேசத்தில் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் கஜூராகோ கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஜவாரி கோயிலில், விஷ்ணு சாமி சிலையை நிறுவக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்துள்ளார். அதை விசாரித்த தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய் அவர்கள், அவ்வழக்கின் தன்மையை விசாரித்துப் புரிந்து கொண்டு, அதைத் தள்ளுபடி செய்துள்ளார்.

 

அவ்வழக்கின் செயற்கைத் தன்மையை உணர்ந்து கொண்ட கவாய், "இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; இச்சிக்கலைத் தீர்க்க நீங்கள் வாதாடும் கடவுளிடம் கோரிக்கை வையுங்கள்!" என்று அப்போது கூறியுள்ளார். இதற்குப் பழிவாங்க மேற்படி இந்துத்துவா வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், இழிசெயலில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்துத்துவா அரசியலுக்கு ஆத்திச்சூடி எழுதிய சாவர்க்கரைத் துதிப்போரின் ஆட்சி இந்தியாவில் நடப்பதால், ஆரியத்துவா ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவே கொண்டாட துணிந்து விட்டார்கள். இப்போது, உச்ச நீதிமன்றத்தின் தற்சார்பைவர்ணாசிரமத்திற்கு உட்பட வலியுறுத்தும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகத்தை அவமானப்படுத்திய ராகேஷ் கிஷோர் மீது உரிய வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Tuesday, October 7, 2025

புதிய தலைமுறை ஊடகத் தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

புதிய தலைமுறை ஊடகத் தடையை

தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

 

தமிழ்நாடு அரசு, தனது அரசுக் கேபிள் பட்டியலில் இருந்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சியை நீக்கியிருப்பது, சனநாயக விரோத – சர்வாதிகாரப் போக்காகும். ஒருவேளை, புதிய தலைமுறை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி செயல்பாடுகளை வெளியிட்டால், அது அந்தத் தொலைக்காட்சியின் சனநாயக உரிமையாகும்.

 

ஆளும்கட்சியான தி.மு.க.வின் செய்திகளை மிக அதிகமாக மட்டுமின்றி – ஒருதலைச் சார்பாகவும் வெளியிடும் தொலைக்காட்சிகளை அனுமதித்துள்ளீர்கள். ஆட்சியாளர்கள் விரும்பும் அளவிற்கு செய்திகள் வெளியிடவில்லை என்பது ஒரு குற்றமல்ல!

 

தமிழ்நாடு அரசு உடனடியாக மறு ஆய்வு செய்து, தனது கேபிள் பட்டியலில் மீண்டும் புதிய தலைமுறையைச் சேர்க்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக்  கேட்டுக் கொள்கிறேன்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================



Monday, September 22, 2025

மலேசியாவில் இந்தியரா? தமிழரா? நேரில் சந்தித்த நிலைமைகள்!

*மலேசியாவில் இந்தியரா? தமிழரா? நேரில் சந்தித்த நிலைமைகள்!*
=====================================
_தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா_ *பெ. மணியரசன்*
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
=====================================
*தமிழர் கண்ணோட்டம் - வலையொளி*
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
*பன்மைவெளி நூல்கள்*
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
=====================
இணையத்தில்...
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் ஏவுவது  திராவிட மாடல் பாசிசமாகும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப்பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் ஏவுவது  

திராவிட மாடல் பாசிசமாகும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!

 

கடந்த 14.09.2025 அன்று, புரட்சித் தமிழகம் – பறையர் பேரவையின் தலைவர் ஏர்போர்ட் த. மூர்த்தி அவர்களை தமிழ்நாடு அரசு, குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தி இருப்பதை,  தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

சனநாயகப் பாதையில் எப்போதும் தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருவதுடன், தி.மு.க. ஆட்சியின் தவறுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வந்தவர் தோழர் மூர்த்தி. அப்பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொன்னதே அவரது "குற்றம்" என தி.மு.க. ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

கடந்த வாரம், சென்னையில் காவல்துறை தலைமையகம் முன்பு, தோழர் ஏர்போர்ட் மூர்த்தி செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க முற்பட்டபோது, வி.சி.க.வினர் சிலர் அவர்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தினர். அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மூர்த்தி அவர்களும் திருப்பித் தாக்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும், தோழர் திருமாவளவன் மீதும், ஏர்போர்ட் மூர்த்தி விமர்சனங்கள் முன்வைத்தார் என்பதற்காகவே அத்தாக்குதலை வி.சி.க.வினர் மேற்கொண்டனர்.  

 

இந்நிகழ்வின் போது, தாக்குதல் நடத்திய வி.சி.க.வினர் "கூட்டணிக் கட்சியினர்" என்பதால் காவல்துறை அவர்களை ஒன்றுமே செய்யாமல் வேடிக்கைப் பார்த்து, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கும் உதவியது. எல்லாம் ஊடகங்களில் பதிவாகி வெளியான உண்மை. இந்நிகழ்வுக்குப் பிறகு, அத்தாக்குதலில் இலக்கான மூர்த்தியைத் தான் தமிழ்நாடு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்ததே தவிர, வலிந்து வந்து தாக்கிய வி.சி.க.வினரைக் காவல்துறைக் கைது செய்யவில்லை!

 

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து தோழர் மூர்த்தி பேசி வந்தார். பஞ்சமி நில மீட்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட நிதி எனப் பல்வேறு சிக்கல்களில் தி.மு.க.வை கேள்விக்குட்படுத்தி வந்தார். வாக்கு அரசியலுக்காக திராவிடக் கட்சியினர் தமிழ்ச் சாதிகளிடையே சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் கூறி, பல்வேறு மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருடன் பிற சாதியினர் நட்புறவு பாராட்ட வேண்டுமெனக் கூறி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். 

 

இவையெல்லாம் தான், தோழர் மூர்த்தி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவிற்கு, தி.மு.க. ஆட்சியாளர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி மீது வேறு வழக்குகள் இருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர் பேசிய கருத்துகளுக்காக அவரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது!

 

விமர்சனங்களை எதிர்கொள்ளா முடியாமல், உலகறிந்த ஊடகவியலாளர்களை – செயல்பாட்டாளர்களை பல்வேறு வழக்குகள் போட்டு சிறைப்படுத்தி வரும் ஆரியத்துவ பா.ச.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு சற்றும் குறைவில்லாமல், திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

 

ஏர்போர்ட் மூர்த்தியின் கைது, தமிழின உரிமைக்குக் குரல் கொடுப்போரை அச்சுறுத்தும் பாசிச நடவடிக்கையின் தொடக்கமாகும். தி.மு.க. அரசு, உடனடியாக அவரை விடுதலை செய்து, அவர் மீதான பொய் வழக்கைக் கைவிட வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT