உடனடிச்செய்திகள்

Monday, March 2, 2026

செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசி நிறுத்தப்பட்டது,மக்கள் இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றி! தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுச் செயலாளர்தோழர்கி. வெங்கட்ராமன் அறிக்கை!

செறிவூட்டப்பட்ட செயற்கை அரிசி நிறுத்தப்பட்டது,

மக்கள் இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றி!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை இடைநிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது, அடித்தட்டு மக்களின் நலவாழ்வுக்காகவும், உணவு இறையாண்மைக்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த மக்கள் இயக்கங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

 

அறிவியல் ரீதியான போதிய ஆய்வுகள் இன்றியும், உள்ளூர் உணவு முறைகளைச் சிதைக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டு வரப்படுவது குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஐயங்களை எழுப்பியது.  தலசீமியா (Thalassemia) மற்றும் சிக்கிள் செல் அனீமியா (Sickle Cell Anaemia) போன்ற ரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்வது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரித்தோம்.

 

பெருங்குழும நிறுவனங்களிடம் கையூட்டுப் பணம் பெறும் நோக்கில், செயற்கை அரிசியை உற்பத்தி செய்து மக்கள் நலவாழ்வை அழிக்கத் துடித்த மோடி அரசின் இத்திட்டத்தை, அவர்களை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் "திராவிட" மாடல் அரசு அப்படியே தமிழ்நாட்டில் செயல்படுத்த முனைப்பு காட்டியது.  

 

இத்திட்டத்தை எதிர்த்து 2024 ஏப்ரல் - மே மாதங்களில், பெண்ணாடம், திருச்சி, குடந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மனு அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுத்தோம். 14.10.2023 அன்று சென்னையில் மகளிர் ஆயம் சிறப்புக் கருத்தரங்கும், மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் கருத்தரங்குகள் பேரெழுச்சியுடன் நடைபெற்றன.

 

இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயம் சார்பில், அதன் பொருளாளர் தோழர் கனிமொழி மணிமாறன் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை 2024 மே மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் உரிய மருத்துவ மதிப்பீடின்றியே தொடரப்படுகிறதா? பெரும்பாலான ஏழை எளிய மக்களிடம் பரவலாகக் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டை சரி செய்வதற்கு, அவர்களது அடிப்படை உணவான அரிசியின் வழியாகத்தான் அணுக வேண்டும் என்பதற்கு ஏதும் அறிவியல் ஆய்வறிக்கை அரசிடம் உள்ளதா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், ஐ.ஐ.டி. காரக்பூர் வல்லுநர்கள் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சேமிப்பு சூழல் போன்ற காரணிகளால் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரம் பாதிக்கப்படுவதும், எதிர்பார்த்த ஊட்டச்சத்து பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போவதையும் உறுதிசெய்துள்ளது. 

 

"கரக்பூர் ஐ.ஐ.டி. ஆய்வறிக்கையின் அடிப்படையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கல், இரும்புச்சத்துக் குறைபாடு சிக்கலைத் தீர்ப்பதற்கான சரியான வழியா என்ற வினாவை எழுப்பியுள்ளது. எனவே, மாற்றுத் திட்டங்கள் முடிவு செய்யும் வரை, பொது வழங்கல் துறையின் வழியாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்" என 27.02.2026 அன்று இந்திய அரசின் உணவு வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

மகளிர் ஆயம் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை இந்திய அரசு ஆய்வறிக்கை எதுவும் வழங்கவில்லை. மாறாக, அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழியாக செயற்கையாக இரும்புச்சத்து, B 12 வைட்டமின் போன்றவற்றைத் திணிப்பது பெரும்பாலான மக்களுக்கு புதிய நோய்களை உருவாக்கி விடும் ஆபத்து இருக்கிறது என அடுக்கடுக்கான ஆய்வறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

 

எனவே, இந்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரிலான செயற்கை அரிசியை ரேசன் கடைகள் வழியாகத் திணிப்பதை – நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

உணவு என்பது வெறும் ஊட்டச்சத்து மாத்திரையல்ல, அது பண்பாடு மற்றும் பல்லுயிர்த் தன்மையோடு தொடர்புடையது. சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் உள்ளூர் பாரம்பரிய அரிசி ரகங்கள் மூலம் இயற்கையான முறையில் ஊட்டச்சத்தை உறுதிப் படுத்துவதே சரியான தீர்வாகும்.

 

எனவே, இனிவரும் காலங்களில் இயற்கை சார்ந்த மரபு வேளாண்மையில் விளைந்த அரிசி, புஞ்சை தானியங்கள் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து மலிவு விலையில் பொது வழங்கல் கடைகள் வழியாக மக்களுக்கு வழங்க வேண்டும். அதன் வழியாக உள்ளூர் வளத்தையும், உழவர்களின் வாழ்வையும், மக்களின் நலத்தையும் பாதுகாக்க முடியும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசிடம் இதனை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.



================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================ 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT