ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய
உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத சில பகுதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் இருளுக்குள் தள்ளி விட்டது!
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பு குறித்து, கடந்த 2025 ஏப்ரலில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா – ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது, குடியரசுத் தலைவர் வழியாக இந்திய அரசு எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் இன்று (20.11.2025) வழங்கிய கருத்துரை, இதுவரை இருந்த தெளிவுகளையும் குழப்பி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளிவிட்டுள்ளது.
ஏற்கெனவே, சம்சேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு, மாரூராம் எதிர் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட அரசமைப்பு ஆயங்கள் "அமைச்சரவை முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர், அவர் அமைச்சரவைக் கருத்தின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனிப்பட்ட விருப்பு அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை" என்று தீர்ப்புரைத்த பின்னும், அதே அளவுக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பி.ஆர். கவாய் ஆயம், அதற்கு நேர் எதிரான வகையில் ஆளுநருக்கு வானளாவிய மேலதிகாரத்தை மீண்டும் வழங்குகிறது.
அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆளுநர் கால வரம்பற்று கையெழுத்திடாமல் இருக்கக் கூடாது என்று கூறிக் கொண்டே, அவருக்கு ஆறு மாதம் கால வரம்பிடுவதும் கூடாது எனக் கூறுகிறது. இதன் மூலம், இந்தியா ஒரு குடியரசு என்பதையும் இது ஒரு கூட்டாட்சி என்பதையும் கேலிக் கூத்தாகுகிறது. பர்திவாலா – மகாதேவன் அமர்வு, ஆளுநர் அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆறு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பிடுவதை "நீதிமன்றத்தின் அத்துமீறல்" எனக் கண்டிப்பதன் வழியாக, ஆளுநரின் அத்துமீறலுக்கு கவாய் ஆயம், பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.
ஆறு மாதமல்ல, எந்தக் கால வரம்பையும் ஆளுநர் மீதோ, குடியரசுத் தலைவர் மீதோ விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தைத் தள்ளி வைப்பதன் வழியாக, இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறாகக் கூறப்படும் கூட்டாட்சி முறைமை கவிழ்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் அதிகம்போனால், "நியாயமான காலவரம்புக்குள் ஒப்புதல் அளிக்க முன்வர வேண்டும்" என்று ஆளுநரைக் கேட்டுக் கொள்ளலாமே தவிர, கால வரம்பைத் தீர்மானிக்க முடியாது எனக் கருத்துரைப்பதன் வழியாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கவாய் ஆயம் பெருமளவு வெட்டிச் சுருக்கிவிட்டது!
அரிதான சூழலில், "முழு நீதி வழங்குவதற்காக (For doing complete Justice)" அரசமைப்பு உறுப்பு 142இன் படி உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நிர்வாக ஆணையின் அதிகாரமுடையது என்பதையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, இந்திய அரசின் கேள்வி முறையற்ற ஆதிக்கத்திற்கு வழி திறந்துவிட்டுள்ளது.
இந்திய அரசமைப்பு செயல்படத் தொடங்கிய 1950லிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரின் மேலதிகாரம் சனநாயகத்தையே முடக்கிப் போட்டதன் விளைவாகத்தான் அவ்வப்போது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 142, 143, 200, 201, 361 போன்ற உறுப்புகள் மீது தெளிவுகள் வழங்கித் தீர்ப்புரைத்திருக்கின்றன. ஆனால், பி.ஆர். கவாய் ஆயத்தின் இந்தக் கருத்துரைத் தீர்ப்பு கடந்த 75 ஆண்டுகளின் சட்ட வளர்ச்சி நிலையையே கவிழ்த்துப் போட்டு, மீண்டும் 1950ஆம் ஆண்டின் நிலைக்கே திருப்பியிருக்கிறது.
இது உடனடியாக பர்திவாலா – மகாதேவன் தீர்ப்பை தள்ளுபடி செய்கிற மேல் முறையீட்டுத் தீர்ப்பு அல்ல என்ற போதிலும், இது கருத்துரைத் தீர்ப்புதான் என்ற நிலையிலும், இது நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்க்கர் ஆகிய ஐந்து நீதிபதிகளின் ஒத்தக் கருத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற கருத்துரை என்பதால், விரைவான எதிர்காலத்தில் தமிழ்நாடு ஆளுநர் வழக்குத் தீர்ப்பு உள்ளிட்ட இதற்கு முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் வருங்கால வழக்குகளில் இரத்து செய்வதற்கு வழிகாட்டும் வலுவுள்ளது.
"இந்தியாவை முழுக் கூட்டரசாக்குக!" என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது!
இந்தியாவை முழுக் கூட்டரசாக திருத்தியமைப்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும், கூட்டரசு முறைமையின் மீதும் தேசிய இன உரிமைகள் மீதும் அக்கறையுள்ள கட்சிகளும் இயக்கங்களும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய தேவையையே பி.ஆர். கவாய் ஆயத்தின் கருத்துரைத் தீர்ப்பு முன்னிறுத்துகிறது.
தமிழ்நாடு அரசும், இன உரிமையில் அக்கறையுள்ளோரும் கூட்டரசுக் கோரிக்கையை நோக்கி, உடனடியாக அணிதிரள வேண்டும்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================