உடனடிச்செய்திகள்

Thursday, May 21, 2026

மேக்கேத்தாட்டு அணை தடுக்க களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேதாட்டு அணை தடுக்க

களத்தில் இறங்க வேண்டும் முதலமைச்சர்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், இன்று (21.05.2026) முற்பகல், தஞ்சை தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஐயா த. மணிமொழியன் அவர்கள், ஐயா சாமி. கரிகாலன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஐ.ஜே.கே. கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ப. செகதீசன், பூதராயநல்லூர் இராமலிங்கம், ஒரத்தூர் சிவப்பிரகாசம், துரை. இரமேசு, தி. செந்தில்வேலன், திருவாரூர் ச. கலைச்செல்வம் (தமிழர் தேசியக் களம்), புண்ணியமூர்த்தி (ஆழ்துளைக்குழாய்க் கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்), பூதலூர் சுந்தரவடிவேல், மன்னார்குடி இராசசேகர், தமிழ்த் தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர்  தோழர் பி. தென்னவன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், குடந்தை க. விடுதலைச்சுடர், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் – 1

தமிழ்நாடு முதலமைச்சர்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் பெற வேண்டும்!

 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018இல் அளித்த இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. 2018இல் இருந்த அ.தி.மு.க. ஆட்சியோ, அதன்பிறகு 2021இல் வந்த தி.மு.க. ஆட்சியோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாத வாரியாகக் காவிரி நீரைக் கர்நாடகத்திடம் பெற்றதில்லை! அதற்குரிய முயற்சிகளை நேர்மையாக இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

 

கடந்த சில ஆண்டுகளாகப் பருவந்தவறிக் கோடையில் கொட்டிய பெருமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி, வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மேட்டூர் அணை நிரம்பியது.

 

வரும் சூன் 12 அன்று முறைப்படி மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட வேண்டும். இவ்வாண்டு இதுவரை பருவந்தவறிய கோடை மழை பெரிதாகப் பெய்யாததால், மேட்டூர் அணைக்கு மிகை வெள்ள நீர் வரவில்லை. வெறும் 78 அடி தான் மேட்டூர் அணையில் தண்ணீர் உள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், கர்நாடக முதலமைச்சருடன் பேசி காவிரி நீர் திறக்க வலியுறுத்திப் பெற வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 27 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். 22 மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்.

 

இந்நிலையில், கடந்த 09.05.2026 அன்று கர்நாடகத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் காவிரிக் காப்புக்குழுக் கூட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 177.25 டி.எம்.சி. காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டும் என்று அளித்த தீர்ப்பை மாற்றி, மேலும் குறைத்துத் தீர்ப்பளிக்க மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் போட வேண்டுமென்று கன்னட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பயிர் காக்க மனித உயிர் காக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு, 2018 தீர்ப்பை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

 

தீர்மானம் – 2

மேக்கேதாட்டு அணை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை!

 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேலும் ஒரு எல்லைப்புற அணையாக மேக்கேதாட்டு அணை கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது. இந்திய நீர்வளத்துறை, காவிரி மேலாண்மை ஆணையம் முதலியவை மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஒன்பதாயிரம் கோடி மதிப்பீட்டிலான அந்த அணையின் தொடக்க நிலைப் பணிகளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கி, வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறப்பு வல்லுநர் குழு அமைத்து, கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக நடைபெறும் வேலைகளைக் கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மேக்கேதாட்டு அணை முயற்சிகளுக்குத் தடை ஆணை கோர வேண்டும்.

 

தீர்மானம் – 3

காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக சிப்காட் கூடாது!

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது, 2019இல் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்ற உழவர்களின் போராட்டங்களைக் கணக்கில் கொண்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது, அதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கி சட்டம் இயற்றினார். ஆனால், கடந்த மு.க. ஸ்டாலினது தி.மு.க. ஆட்சி தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி பகுதியிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை – உம்பளச்சேரி பகுதியிலும், சிப்காட் பெருந்தொழில் குவிப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்தது. உழவர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் ஆட்சி சட்டை செய்யவில்லை.

 

வெளிநாடுகள் மற்றும் வடநாடு முதலியவற்றிலிருந்து பெரும் பெரும் தொழில் நிறுவனங்களைக் காவிரி டெல்டாப் பகுதிகளுக்கு அழைத்து வரும் சட்ட விரோத வேலைகளில் முரட்டுத்தனமாக ஈடுபட்டார் மு.க. ஸ்டாலின். அவர் அண்மையில் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

 

அன்புகூர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தாங்கள், இச்சிக்கலில் தனிக் கவனம் செலுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழில் பெருக்கத் திட்டங்களைக் கைவிட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இது தொடர வழிவகை செய்யுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் – 4

நடுநிலை தவறிய ஹல்தரை நீக்குக!

 

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி – அந்த ஆணையத்தை கர்நாடகத்திற்குச் சாதகமாக நடத்தி வருகிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முடிவு செய்த ஆணைகளில் எதையும் கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அதைக் கண்டு கொள்ளவே மாட்டார் ஹல்தர். முடிவு செய்த ஆணைகளை நிறைவேற்றப் படுவதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில்லை!

 

அது மட்டுமின்றி, சட்டவிரோதமான மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கும், குறுக்கு வழியில் பெரும்பான்மை அடிப்படையில் மேலாண்மை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ஹல்தர்.

 

எனவே, தொடர்ந்து – திட்டமிட்டு நடுநிலை தவறி – கர்நாடகத்தின் துணை மன்றம் போல், காவிரி மேலாண்மை ஆணையத்தை நடத்தி வரும் ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்கி, நடுநிலை உள்ள புதிய தலைவர் ஒருவரை மேற்படி ஆணையத்திற்கு இந்திய அரசு அமர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது! 

 

========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
========================

Uploaded Image

Wednesday, May 20, 2026

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப்பேசியயாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக்கேட்க வேண்டும்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய

யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

 

இலங்கை நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக உள்ள யாழ்ப்பாணம் இராமநாதன் அருச்சுனன் என்ற நபர், நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை சுட்டுத்தள்ளுவேன் என்றும், இழிவுபடுத்தியும் பேசியதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

தமிழினப் பேரழிவு தமிழீழத்தில் 2009 – மே மாதம் நடந்த பின், அது குறித்து இரங்கல் கூட்டம் நடத்தவோ, கண்டனக் கூட்டம் நடத்தவோ தமிழ்நாட்டில் அனுமதியில்லை. ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் சிங்கள வெறியர்கள் படுகொலை செய்தபின், வெளிப்படையாக அழுவதற்குக் கூடத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! இந்திய ஏகாதிபத்தியக் காங்கிரசு – கங்காணி தி.மு.க. கூட்டணி ஆட்சி, அவ்வளவு கெடுபிடிகளைச் செய்தது.

 

ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கவோ, தலைவர் பிரபா.கரன் படத்தை வெளிப்படையாக வைக்கவோ அவர் பெயரை உச்சரிக்கவோ தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! அந்தக் கொடுமையை எதிர்த்து, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி தமிழீழப் படுகொலைகளைக் கண்டித்துக் கூட்டம் நடத்தியும், வெளிப்படையாக பிரபா.கரன் படத்தை வைத்து, அவரை எங்கள் தலைவர் என வணங்கவும் நடைமுறை அனுமதியை (Defacto permission) பெற்றுத் தந்தவர் செந்தமிழன் சீமானும், அவர்கட்சி பிள்ளைகளும் ஆவர்!

 

இலங்கையில் தமிழின அழிப்பின் தலைமைக் குடும்பமான இராசபட்சே குடும்பத்தின் கொத்தடிமைதான் இந்த இராமநாதன் அருச்சுனா என்று கேள்விப்படுகிறோம். நாமல் இராசபக்சே எனது சகோதரன் என வெளிப்படையாகச் சொன்னவர் இராமநாதன் அருச்சுனா! அப்படிப்பட்ட அந்த நபரை அழைத்து தோழர் திருமாவளவன் அவர்கள் 18.05.2026 அன்று சென்னையில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தி இருப்பது மர்மமாக உள்ளது.  இதில் மறைக்கப்பட வேண்டிய மர்மம் எதுவும் இல்லை என்றால், அந்நபரை உரையாற்ற அழைத்ததற்கான காரணத்தை தோழர் திருமா வெளிப்படையாகச் சொன்னால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்.

 

சென்னை தலைமைச் செயலகம் வந்த இராமநாதன் அருச்சுனா தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களையும் நேரில் சந்தித்துப் பேசிவிட்டு, ஊடகங்களில் பல அவதூறுக் கருத்துகளையும் அள்ளிவீசிவிட்டுச் சென்றுள்ளார். இலங்கை திரும்பிய கையோடு, மே 18 அன்று அங்கு இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களர்கள் மனம் குளிரும்படி அண்ணன் சீமான் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

 

யாழ்ப்பாணத் தமிழர்கள் உட்பட – தமிழீழத் தமிழர்கள் அனைவரும் சிங்களக் கைக்கூலியாகச் செயல்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவை மேற்படி இழிவு பேச்சுக்காக மன்னிப்புக் கேட்கும்படி கோர வேண்டும்!

 

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

Uploaded Image

Thursday, May 7, 2026

த.வெ.க. ஆட்சி அமைக்கத் தடைபோடுகிறது பா.ச.க.வின் பாசிசம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

த.வெ.க. ஆட்சி அமைக்கத்

தடைபோடுகிறது பா.ச.க.வின் பாசிசம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று – தனிப்பெரும் கட்சியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சி – தனது ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு எழுத்து வடிவில் கொடுத்துள்ளது.

 

இந்நிலையில், தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு த.வெ.க. தலைவர் திரு. விஜய், நேற்று (06.05.2026) ஆளுநர் அர்லேக்கரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 118 பேர் ஆதரவுக் கடிதத்தை விஜய் கொடுத்தால்தான், அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து விஜயின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுத்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் தற்காலிகப் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராசேந்திர விசுவநாத் அர்லேக்கர் அவர்கள், விஜயை ஆட்சி அமைக்க மறுத்த செயல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட முழு அரசமைப்பு ஆயம் வழங்கிய எஸ்.ஆர். பொம்மை வழக்குத் தீர்ப்பிற்கும் ( S.R. Bommai vs Union Of India on 11 March, 1994 -1994 AIR 1918 ) முழுக்க முழுக்க எதிரான சட்ட விரோதச் செயலாகும்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக த.வெ.க. உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த உடனேயே,  விஜயின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாட்டின் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏவியவர் இதே ஆளுநர் அர்லேக்கர்தான்! விஜய்க்கு சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவிவை அனுப்பியவரும் இதே ஆளுநர்தான்!

 

விஜய் முதலமைச்சராவதற்குக் காங்கிரசுக் கட்சி ஆதரவளித்து, அந்த அமைச்சரவையில் சேர்கிறது என்று நிலைமை உருவாகியவுடன், ஆளுநர் அர்லேக்கர் தன் நிலைபாட்டை அடியோடு மாற்றிக் கொண்டு, நேரு விளையாட்டரங்கை அழகுபடுத்திய அதிகாரிகளைத் திருப்பி அழைத்து விட்டார். விஜய்க்கு அனுப்பிய சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவை திரும்ப அழைத்துக் கொண்டார். விஜய்க்குப் பதவி ஏற்பு விழா நடத்த முடியாது என்று கூறிவிட்டார்.

 

இதிலிருந்து என்ன தெரிகிறது? பாரதிய சனதாக் கட்சி இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய ஆட்சியை நடத்தவில்லை. தனது கட்சியின் இலாபக் கணக்கு அடிப்படையில் தான் ஆட்சி நடத்துகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டுள்ளது.

 

காங்கிரசுக் கட்சி ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், 107 உறுப்பினர் ஆதரவுள்ள விஜய் கட்சியை ஆட்சி அமைக்க மேளதாளத்துடன் வரவேற்றிருப்பார் ஆளுநர் அர்லேக்கர்!

 

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் இதில் – கட்சிப் பாகுபாடின்றி – “தமிழ்நாடு” என்ற தமிழர் தாயகத்தை இந்திய பா.ச.க. ஆட்சி எப்படி தனது அடிமையாக நடத்துகிறது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

 

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம், இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்ததுடன் வாக்குக் கேட்டது. எங்கள் கட்சி எப்போதும் காங்கிரசை ஆதரிக்காது. ஆனால், இந்திய பா.ச.க. ஆட்சி – தில்லி அதிகாரத்தைக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நிலையில், தமிழ்நாட்டை அடிமையாக நடத்துவதை அனுமதிக்கக் கூடாது! பா.ச.க.வின் இச்செயலை கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் கண்டிக்க வேண்டும்.

 

எஸ்.ஆர். பொம்மை வழக்கில், உச்ச நீதிமன்ற முழு அரசமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே த.வெ.க.வை அமைச்சரவை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். த.வெ.க. தனது பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கால வரம்பு விதிக்க வேண்டும்.


================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

================================ 

Uploaded Image

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT