உடனடிச்செய்திகள்

Saturday, March 8, 2008

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம் - பெ.மணியரசன்

மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத்திட்டம்
பன்னாட்டு முதலாளிகளின் கொற்றம்
பெ.மணியரசன் கண்டன அறிக்கை
 
நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்துள்ள 2008-2009 க்கான வரவு செலவுத்திட்டத்தைப் பற்றி ஒற்ற வரியில் சொல்வதென்றால் "நிகழ்காலத்தை ஒப்பேற்ற எதிர்காலத்தை எரிக்கும் திட்டம்" என்று கூறலாம். அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கு உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் அவரது திட்டம் வாய்ப்பந்தலாக உள்ளதே தவிர, அதற்காக ஒரு காசு கூட நிதி ஒதுக்கவில்லை. இது பற்றி கேட்ட போது, "இதற்கு நிதியேற்பாட்டை வரும் மூண்றாண்டுகளுக்குள் செய்து முடிப்போம்"  என்று முதலில் சொன்னார். பிறகு, "குறிப்பிட்ட காலத்திற்குள் இத்தொகையை வங்கிகளுக்கு ஈடுசெய்வோம். அதற்கான கலைத்திறன் என்னிடம் உள்ளது" என்றார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்குமா? ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருப்பாரா? அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் ஆண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ஒரு வரவு செலவுத் திட்டத்தில் சென்னைக்குக் கடல்நீரைக் குடிநீராக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். ஒரு காசு கூட அதற்காக ஒதுக்கவில்லை என்று அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, மறுக்க முடியுமா என்று அறைகூவலும் விட்டார். கடல்நீரைக் குடிநீராக்கும் சென்னைத் திட்டத்திற்கு, இந்த வரவு – செலவு முன்மொழிவில் தான் ரூபாய் முந்நூறு கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே, அவர் ஏற்கெனவே ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவில்லை என்பதற்கான சான்று.

தொகை ஒதுக்காமலேயே அறுபதாயிரம் கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போல் ஆகிவிடக்கூடாது. இரண்டு எக்டேர் (5 ஏக்கர் கூட அல்ல. அதற்கும் கீழே) வரை நிலம் கொண்டுள்ள சிறு, குறு உழவர்களின் கடன்கள் தான் தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். மெய்யான துயர் தணிப்பு, எல்லா உழவர் கடனையும் தள்ளுபடி செய்வதாகும். மராட்டியத்தில் விதர்பா பகுதியில் தான் அதிக எண்ணிக்கையில் பருத்தி உழவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்கள். விதர்பா ஜன அந்தோலன் என்ற அமைப்பின் தலைவர் கிசோர் திவாரி, உழவர் தற்கொலை மிகுந்துள்ள ஆறு விதர்பா மாவட்டங்களில் இக்கடன் தள்ளுபடி பயன் அளிக்காது. சாதாரணமாக, ஆறு அல்லது ஏழு ஏக்கர் நிலம் உள்ளவர்கள் அங்கு  மிகுதி என்கிறார். இரண்டு எக்கேருக்கு மேல் நிலம் உள்ள உழவர்கள் கடனில் அசல் வட்டி  இரண்டையும் சேர்த்து 75 விழுக்காடு செலுத்தினால் 25 விழுக்காடு தள்ளுபடி ஆகும் என்கிறார். வட்டியைக்கூட தள்ளுபடி செய்யாத இந்த ஏற்பாடு வசூல் தந்திரம் தவிர வேறு அல்ல. ஒரே நேரத்தில் கடன் தீர்க்கும் திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் ஏற்கெனவே இவ்வாறான சலுகைகள்  வழங்கி வருகின்றன. உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு இலாபவிலை கிடைக்கவும், சந்தை வாய்ப்பு பெருகவும் எந்த ஏற்பாட்டையும், இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் நம் தாயாகிய விலைநிலங்களை, பூச்சி மருந்து உரம் வேதிப்பொருட்களால் நஞ்சாக்கி, மலடாக்கிவிட்டனர். மான்சாண்டோ போன்ற உயிர் கொல்லி  நிறுவனங்கள் மரபீனி மாற்று விதைகளைக் கொண்டு வந்து, மரபுவழிப்பட்ட விதைகளை அழித்து, நீடித்து விளைச்சல் தராத புதிய விதைகளைக் கொடுத்து, உழவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிட்டனர். இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை கிடைக்கவும் துரும்பைக் கூட அசைக்கவில்லை. சோனியா –
மன்மோகன் புகழ்ந்து தள்ளும் சிதம்பரம் வரவு செலவுத் திட்டம் இது.

சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக, விளை நிலங்களை அபகரித்து, கிராமங்களைக் காலி செய்யும் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த எந்த முன்மொழிவையும் இத்திட்டம் கூறவில்லை. நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடைந்து வருவதாகப் போலித் தோற்றம் காட்டி வந்த மன்மோகன்- ப.சிதம்பரம் வாய்வீச்சு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அம்மணமாக அம்பலமாகிவிட்டது. இந்த ஆண்டு செலவில், மிக அதிக விகிதத்தைப் பெற்றிருப்பது நடுவண் அரசின் திட்டங்களோ மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரிப் பங்குத்தொகைகளோ அல்ல. நடுவண் அரசு கட்ட வேண்டிய வட்டித் தொகை தான் அது! மொத்தச் செலவில் 21 விழுக்காடு வட்டி செலுத்த மட்டுமே போகிறது. அசலைக் கட்டுவதற்கான அறிகுறி தொடுவானத்திற்கப்பால் கூட தெரியவில்லை. அத்துடன் புதுக்கடன் இவ்வாண்டு ஏராளமாகத் திரட்டப்போகிறார்கள். மொத்த வரவில் 14 விழுக்காடு கடன் வாங்குவதன் மூலம் வரும் தொகையாகும். ஆனால் உண்மையில் 14 விழுக்காட்டிற்கும் மேல் பல்லாயிரம் கோடி கடன் வாங்க உள்ளார். கடன் என்று சொல்லாமல் "சந்தை நிலை நிறுத்தல் திட்டம்" (Market stabilisation Scheme) என்று அக்கடன் வரவுக்குப்
புதுப்பெயர் சூட்டியுள்ளார்.

இந்திட்டத்தின்படி ரூ.13,958 கோடி கடன் திரட்டுகிறார். இஃதன்னியில் எண்ணெய் நிறுவனக்கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5519 கோடியும், உணவுக்கழக கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1319 கோடியும் திரட்டுவது வேறு. இவையனைத்தும் கடன் வரவில் காட்டப்படவில்லை ஓட்டு மொத்த நிதிப்பற்றாக்குறை என்று அவர் கணக்குக் காட்டியிருப்பது ரூ.1,33,287 கோடியாகும். உண்மையான பற்றாக்குறை இதைவிடக் கூடுதலாகும். வேளாண்கடன் தள்ளுபடிக்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்படாததால், அத்தொகைiயும் பற்றாக்குறையில் சேர்க்க வேண்டும். அதே போல் நடுவண் அரசு ஊழியர் 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி தரவேண்டிய ஊதிய உயர்வு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு செலவு திட்டத்தில் காட்டப்படவில்லை. இவ்விரு தொகைகளையும் சேர்த்தால் ரூ.90,0000 கோடி ரூபாய் பற்றாக்குறை வருகிறது. அதாவது கண்ணுக்குத் தெரிந்த பற்றாக்குறை ரூ.1,33,2887 + ரூ.90,000 = ரூ.2,23,287 கோடி. இவ்வளவு பற்றாக்குறையையும் எப்படி ஈடுகட்டப் போகிறார்கள். கடன்வாங்கியும், அரசுத்துறை உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியும், புதுவரிகளைக் கண்டுபிடித்தும், வரி உயர்வு செய்தும்,
கணக்கை மீறி ரூபாய்த் தாள்களை அச்சிட்டும் தான் ஈடுகட்டப் போகிறாhர்கள். விலை உயர்வு, பணவீக்கம், பொருளியல் மந்த நிலை என்பவை தான் இதனால் உண்டாகும்.

மருத்துவ நலத்திட்டங்களுக்கு கடந்த ஆண்ட விட 15 விழுக்காடு நிதி அதிகமாக
ஒதுக்கிவிட்டதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிக்கிறார். தனியார் மருத்துவமனைகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் அமைக்கப்படும் தனியார் பன்முகச்சிறப்பு மருத்துவமனைகளுக்கு (Mutlti speciality Hospitals) ஐந்தாண்டுகளுக்கு வரி ஏதும் கிடையாது. இவை உண்மையில் மையக்கிராமப் பகுதிகளில் அமையாது. மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் மருத்துவமனையை
நிறுவிக்கொண்டு, வரிவிலக்குப் பெறுவார்கள். அவ்வாறான மருத்துவமனைகள் ஏற்கனவே நோயாளிகளைக் கொள்ளையடிப்பது நாடறிந்த உண்மை.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில், நட்சத்திரவிடுதிகள் கட்டும்,  முதலாளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதே கிராமப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ள ஏழை உழவனுக்கு வட்டித் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார். கிராமப்புறங்களில் மருத்துவமனை, நட்சத்திர விடுதி என்று இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் மனைத்தொழில் இறக்கை கட்டிப்பறக்கப் போகிறது. 2007 சனவரி முதல் மனைத் தொழிலில் (Real Estate) நூற்றுக்கு நூறு வெளிநாட்டு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தில் 2003-04 இல் 4.5
விழுக்காடாக இருந்த மனைத்தொழில் மூலதனம் 2006-2007-இல் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற விவரம், அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும். தங்கள் தாய் மண்ணை இழந்து, நாடோடிகளாக நம்மக்கள் மாறுவர். மனைத்தொழிலில் ஒரு சில ஆண்டுகளில் 130 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.(செமினார் ஆங்கில இதழ், 2008 பிப்ரவரி - ஸ்ரீவத்சவா, பக்கம் 60) மார்க்கன் ஸ்டேன்லி, ப்ளாக் ஸ்டோன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை கடந்த சில
மாதங்களில் இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளன.(ASSOCHAM  அறிக்கை -2007)

இந்த வரவு – செலவுத்திட்டத்தில் சிறுகார், இருசக்கர தானியங்கி வாகனங்கள் ஆகியவற்றிகு 4% வரி குறைக்கப்பட்டுள்ளது. சிங்கூர் டாட்டா சிறுகார் உற்பத்திக்கு ஒரு விழுக்காடு வட்டியில் கடன் தருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டு வரிவதிப்பில்லை என்று விலக்கு அளித்துள்ளார்கள். உழவர்களிடம் 7 விழுக்காடு வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. படைத்துறைக்கான செலவு 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூ 1,05,600 கோடியை ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டு (2007-2008) ஒதுக்கிய ரூ. 96,000 கோடியில் ரூ.4,217 கோடி செலவு செய்யப்படாமலேயே உள்ளது.   அந்த நிலையில், இவ்வாண்டு இன்னும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானவரி, மதிப்புக் கூட்டு வரி, உற்பத்தி வரி ஆகியவற்றில் சில இனங்களில் வரியைக்
குறைத்துள்ளார். அதே வேளை கம்பெனி வருமானவரியைக் (Corporate Tax) குறைக்கவே இல்லை. காரணம், முன்னவை மாநிலங்களுக்கும் பங்கு கொடுக்கப்படவேண்டியவை. கம்பெனி வருமானவரி, அதற்கென துணை வரி ஆகியவற்றில் மாநிலஙக்ளுக்கு எந்தப் பங்குத்தொகையும் கிடையாது. மொத்த வரி வருமானத்தில் கம்பெனி வருமானவரி தான் மிக அதிக விகிதம் கொண்டது. அது 24 விழுக்காடாகும். மாநிலங்கள் மேலும்  மேலும் இந்திய அரசை நோக்கி பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே
வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு வரிப்பங்கீட்டில் கூடுதல் தொகை ஒதுக்குவதுடன், கம்பெனி வருமானவரியில் குறைந்தது 50 விழுக்காடாவது ஒதுக்க வேண்டும். நேரடியான மக்கள் நலத்திட்டங்களான, கல்வி, நலத்துறை, வேளாண்துறை, சாலை வசதி போன்றவற்றை செயல்படுத்துபவை மாநிலங்களே.

பொருளியல் வளர்ச்சி (GDP) நடப்பாண்டில் (2007-2008) 10 விழுக்காடு வரும் என்று
கூறிக்கொண்டிருந்தனர் மன்மோகனும் சிதம்பரமும். அது கடந்த ஆண்டை விடவும் குறைந்து 8.7 விழுக்காடு தான் வந்துள்ளது. இதில், வேளாண் உற்பத்தியின் பங்களிப்பு வெறும் 2.6 விழுக்காடு மட்டுமே. கடந்த ஆண்டு (2007-2008) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 9.4. சுருக்கமாகச் சொன்னால் திரு ப.சிதம்பரம் முன்வைத்துள்ளது மக்கள் விரோத – மாநில விரோத வரவு செலவுத் திட்டம். பன்னாட்டு முதலாளிகளுக்கான திட்டம் இது. இந்தியப் பெருளாதாரதத்தை மேலும் திவாலாக்கும். இந்த வரவு செலவுத் திட்டத்தை தேர்தல் கண்ணோட்டத்துடன் போடப்பட்ட திட்டம் என்று எதிர்க்கட்சிகள் திறனாய்வு செய்தது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக பாராட்டும் செயலாகவே அமையும். வாக்கு வாங்கும் நோக்கில் மக்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக பொருள் படும். ஆனால் இது முழுக்க முழுக்க மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம்.
அனைத்துக்கட்சிகளும் இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிக்க வேண்டும். புதிய மாற்றுத் திட்டத்திற்கு முன்மொழிவுகள் வைக்க வேண்டும்.
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT