இலங்கை இனவெறி இராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசைக் கண்டித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் 22-3-2008 சனிக்கிழமையன்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப் பட்டிருந்தது, ஆனால் நிகழ்வு நடப்பதற்கு முன் தினம், 21-3-2008 அன்று தமிழக காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. அதனைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்குமென ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்தே சென்னை அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் விக்டோரியா மெமோரியல் அரங்கத்தின் முன் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அமைப்புகளின் தோழர்களும் அமைப்புகளைச் சேராத தமிழ் உணர்வாளர்களும் சென்னையில் பெய்துக் கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது பெருமளவில் கூடத் தொடங்கினர். சென்னையிலிருந்து மட்டுமல்லாது விழுப்புரம், கடலூர், காஞ்சிபரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்கள் திரண்டனர். அந்த இடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அச்ச மூட்டும் வகையில் காவல்துறையை மிகப் பெரிய அளவில் குவித்திருந்தது தமிழக அரசு.
மாலை 4 மணியளவில் பழ. நெடுமாறன் தலைமையில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும், இந்திய அரசைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டும், இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பெரும் உணர்வெழுச்சியுடன் முழக்கமிட்டுக் கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கும் இந்திய அரசையும், அதைத் தடுத்து நிறுத்தாத தமிழக அரசையும் கண்டித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டன உரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் இந்திய அரசைக் கண்டித்து முழக்கமெழுப்ப அவரை பின்பற்றி கூடியிருந்தோர் உணர்வெழுச்சியுடன் முழக்கங்கள் எழுப்பினர். கொடுக்காதே கொடுக்காதே தமிழர்களைக் கொல்ல சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்காதே
இந்தய அரசே இந்திய அரசே தமிழர்கள் உன் பகைவர்களா
இந்தய அரசே இந்திய அரசே சிங்களவன் உன் பங்காளியா
போன்ற முழக்கங்கள் எழுப்பப் பட்டன. மேலும் பேசவோ, ஆர்ப்பாட்டத்தை தொடரவோ விடாமல் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட பெண்களும், சிறுவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் 7 காவல்துறை பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை கொண்டித்தோப்பு காவல் துறை திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தோழர்கள், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன் மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன் மற்றும் அக்கட்சித் தோழர்கள், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு மற்றும் அவ்வியக்கத் தோழர்கள், தமிழ்நாடு மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி யினர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தினர் மற்றும் பேராசிரியர் மருதமுத்து, ஓவியர் வீர சந்தனம், இயக்குநர் புகழேந்தி, உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலகச் செயலாளர் பத்மநாபன் ஆகியோரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். |
Post a Comment