உடனடிச்செய்திகள்

Monday, May 5, 2008

சென்னை மாநகரக் காவல்துறையினரை கண்டித்து உண்ணாப்போராட்டம்

அரசுப் பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்த
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய
மாநகர காவல்துறையினரைக் கண்டித்து சென்னையில் உண்ணாப்போராட்டம்
பழ.நெடுமாறன் கண்டன உரை

 

தமிழக அரசு தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்திற்கு  முதன்மை தரும் போக்கைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கடந்த சனவரி 25 மொழிப் போர் நாளில் அரசுப் பேருந்துகளில் தமிழாக்கம் கூட இல்லாமல் 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட்-டு-பாயின்ட்' என்று  எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களை கோயம்பேட்டில் கருப்பு மை பூசி அழித்தனர். அப்போது கோயம்பேடு காவல்துறை ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும் கருப்பு மை பூசி ஆங்கில எழுத்துகளை அழித்த த.தே.பொ.க.வினரை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் 22 பேரை கைது செய்த பின் பேருந்துக்குள் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் மீண்டும் மீண்டும் தடியால் அடித்து காவல்துறையினர்  படுகாயப்படுத்தினர். அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் காயம்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்றனர்.
 


    சட்டவிரோதமாக தாக்கிய தேன் தமிழ்வளவன் உள்ளிட்ட காவலது; றையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர், தமிழகக் காவல்துறைத்தலைவர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சட்டவிரோதமாக தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கைக் கோரி கடந்த 22-02-2008 அன்று உண்ணாப்போராட்டம் நடத்த அனுமதி கோரிய போது மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இத்தடையை எதிர்த்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 03-05-2008 அன்று உண்ணாப்போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்த் தேசப்  பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் 300 பேர் ஆண்களும், பெண்களும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
அருகே காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை உண்ணாப்போராட்டம் நடத்தினர். காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவலர்களை இடை நீக்கம் செய்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. உண்ணாப்போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்  திரு.த.வெள்ளையன தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழக
ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவன், தமிழக மனித உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க.குணசேகரன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி கவிஞர் தமிழேந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.நிறைவாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கண்டன உரையாற்றி  உண்ணாப்போராட்டத்தை முடித்து வைத்தார். அப்போது அவர் தமிழ் இன உரிமைகளைக் காக்கவும் மீட்கவும், தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சிமொழியாய் மிளிரவும் நாம் எடுக்கும் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து தடை செய்து வருகிறது. காவல்துறையை ஏவித் தாக்குகிறது. தமிழ் மக்கள் நலனுக்காக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அரசுக்கு
ஆத்திரமூட்டுகிறது. அவ்வாறு அரசுக்கு ஆத்திரமூட்டும் செயல்களை தமிழக நலன் கருதி நாம் மீண்டும் மீண்டும் செய்வோம் என்றார்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT