உடனடிச்செய்திகள்

Thursday, August 27, 2009

தமிழகமெங்கும் "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" போராட்டங்கள் (26.08.09)


தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும்
ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்
தமிழகமெங்கும் "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" போராட்டங்கள்


தமிழகமெங்கும், நேற்று(26.08.09) “தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த சூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியம்” சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் “தமிழ்த் தேசிய எழுச்சி” நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.


தஞ்சை




தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேரி முனையில் மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணியை த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளது இரா.சு.முனியாண்டி பேரணியை ஒருங்கிணைத்தார். பேரணி தஞ்சை மேரி முனையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஜீப்பிட்டர் திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது. திரளான பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பேரணியின் முகப்பில் சிலம்பாட்டம், சுருளாட்டம் ஆகிய வீர விளையாட்டுகள் அணிவகுத்தன. சென்ற வழி நெடுகிலும் பெருந்திரளாக மக்கள் கூடி நின்று பேரணியை பார்வையிட்டனர்.



பேரணியின் நிறைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பெருந்திரள் மக்கள் கலந்து கொண்ட எழுச்சிமிகுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, வழக்குரைஞர் நல்லதுரை, தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.



த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.

தமிழ்த் தேசிய எழுச்சி நாள் குறித்து சரபோஜி கல்லூரி, பாரத் கல்லூரி, கரந்தை கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகள், கரந்தை முதல் வடக்கு வாசல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், புதலூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்கள் என பரவலான பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளால் நடத்தப்பட்டிருந்தன.

சென்னை

சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். சென்னையில் வெளியார்களின் ஆதிக்கம் பற்றியும், தமிழகமெங்கும் வெளியார்களை திட்டமிட்டு பணிகளில் அமர்த்தி வரும் இந்திய அரசின் சூழ்ச்சியையும் அவர் விளக்கிப் பேசினார்.



சந்திரசேகரன்(உலகத் தமிழர் பேரமைப்பு), சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தமிழ் வெப்துனியா இணையத்தின் ஆசிரியர் அய்யநாதன், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் உரை வீச்சு நிகழ்த்தினர். நிறைவாக திரைப்படப்பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன், கொட்டும் மழையில் சிறப்புரை நல்கினார்.“தமிழகத்தில் வெளியாரை வெளியேற்று!முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்!” என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். திரளான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் பா.பிரபாகரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் ஏ.அரவிந்தன், அக்னிச் சிறகுகள் அமைப்பின் ஆ.குபேரன், அண்ணாமலைத் தமிழ் மன்றத்தின் தலைவர் தோழர் கு.மதியழகன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார். முன்னதாக சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் த.தே.பொ.க.வின் கொடியை தோழர் நா.வைகறை ஏற்றி வைத்தார். இவ்வார்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி 24.08.09 அன்று விருத்தாச்சலம் தொடங்கி திட்டக்குடி வரை வழிநெடுகிலும் பெண்ணாடம் பகுதி த.தே.பொ.க. தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர். சிதம்பரம் பகுதியில் 16.8.09 அன்றும் 25.08.09 அன்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஈரோடு

ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். தங்கம் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் அமைப்பாளர் ப.இரத்தினசாமி் வரவேற்புரை நிகழ்த்தினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோடு பொறுப்பாளர் மோகன்ராசு, பெரியார் திராவிடர் கழகம் பொறுப்பாளர் குமரகுருபரன், சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி புலி.பாண்டியன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் தமிழழகன், தமிழகத் தொழிலாளர் முன்னணி இரா.விசயக்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கலைவேந்தன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். ஈரோ கலைத்தாய் சிலம்பக் குழுவினரில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம், சுருள்கத்தி, மான்கொம்பு, வாள்வீச்சு, தீப்பந்தம் என சிலம்பாட்டக் குழுவினர் பெருந்திரள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். நிறைவாக, பரமேஸ் - சந்திரன் குழுவினரின் தமிழ்த் தேசியச் சிக்கல்கள் என்ற தலைப்பிலான காட்சி நாடகம் நடந்தது. நிகழ்ச்சியை தமிழக இளைஞர் முன்னணி தோழர் செயக்குமார் தொகுத்து வழங்கினார். தோழர் குமரேசன்(த.தே.பொ.க.) நன்றி கூறினார்.

மதுரை

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மாவட்டப் பொறுப்பாளர் கதிர்நிலவன், பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் மாயாண்டி, தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் செல்வம், மகளிர் ஆயும் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா, புரட்சிக்கவிஞர் பேரவை அமைப்பாளர் ஐ.செயராமன்,சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் இராசேந்திரன், பெரியார் சிந்தனை இணையம் த.செந்தில் உள்ளிட்டோர் எழுச்சி நாள் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.ஆனந்தன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஓசூர்

ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.முத்தாலு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து, பெ.தி.க. மாவட்டச் செயலாளர் தோழர் தி.குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் சி.முருகேசன், த.ம.தொ.மு. ஒப்புரவாளன், பொம்மிக்குப்பம் இராதாகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரை வீச்சு வழங்கினர். பெண்கள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பொம்மிக்குப்பம் சி.பெருமாள் வழங்கிய எழுச்சிப் பாடல்கள் பொது மக்களை வெகுவாக ஈர்த்தது. எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் குறித்து 15, 16.08.09 நாட்களில் மக்கள் குடியிருப்புகளில் த.தே.பொ.க.வினர் பரப்புரை மேற்கொண்டது.

திருச்சி

திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.தே.பொ.க. திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்தில் இளந்தமிழர் இயக்கத்தின் நெறியாளர் தோழர் ம.செந்தமிழன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, திரு. வீ.ந.சோமசுந்தரம், வழக்கறிஞர் பானுமதி, புலவர் முருகேசன்(ம.தி.மு.க.), முனைவர் சக்குபாய், பாவாணர் தமிழ் இயக்க அமைப்பாளர் பாவலர் பரணர், திருக்குறள் முருகானந்தம், தோழர் ரெ.சு.மணி, வழக்கறிஞர் பொற்கோ, தமிழர் களம் அரங்க நாடன், புலிவளம் சோழநாடன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். நிறைவில் தோழர் வே.க.லட்சுமணன் நன்றியுரையாற்றினார்.

கோவை

கோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு உணவகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் பா.சங்கர் தலைமை தாங்கினார்.




ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி வழக்கறிஞர் கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் அறிவுடைநம்பி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் இளம்பிறை உள்ளிட்டோர் உரையாற்றினர். ஈழத்தில் இன அழிப்பை நடத்தியதற்காக இந்தியக் கொடியை எரித்து கைதாகி தற்பொழுது கோவை நடுவண் சிறையில் இருக்கும் த.தே.பொ.க. தோழர் தமிழரசனின் தாயார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

திருத்துறைப்புண்டி

திருத்துறைப்புண்டி காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் இரமேசு தலைமை தாங்கினார். வழக்குரைஞர் தமிழ்மணி, தமிழக உழவர் முன்னணி இரா.கோவிந்தசாமி, க.அரசு, திரு ஆ.சு.மணியன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர். முன்னதாக மன்னார்படி மற்றும் திருவாரூர் கல்லூரிகளிலும் திருத்துறைப்புண்டி ஒன்றிய கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் குறித்த பரப்புரைகள் நிகழ்ந்தன.

புதுச்சேரி

புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் சுதேசி மில் முன்பு தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி தலைமை தாங்கினார். பத்திரிக்கையாளர் வெற்றி வேந்தன், கலைச்செல்வம் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

ஆத்தூர்

சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளந்தமிழர் இயக்கம் ஆத்தூர் பொறுப்பாளர் க.ஆனந்த் தலைமை நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக ஆத்தூர் பொறுப்பாளர் சோ.மு.சண்முகம், தமிழாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். நிறைவாக, குடந்தைத் தமிழர் கழகம் அமைப்பாளர் ச.பேகன் சிறப்புரையாற்றினார். தோழர் அச்சியப்பன் நன்றி கூறினார்.

வேலூரில் வழக்கறிஞர் ச.ந.ச.மார்த்தாண்டம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புலவர் குமர.தன்னொளியன் நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT