உடனடிச்செய்திகள்

Monday, September 7, 2009

தமிழகத்தில் 85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில்
85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

சென்னை, 06.09.09

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திலும் 1956 மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு முன்பிருந்து தமிழகத்தைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வசிப்பவர்களின் வாரிசுகளுக்கு 85 விழுக்காடு வேலை வாய்ப்பு ஒதுக்க வேண்டும்.
‘மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற முழக்கத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல ஆண்டுகளாக எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்கோரிக்கையை ஓர் அளவில் ஏற்கும் வகையில் இந்திய அரசின் ஊழியர் தேர்வு ஆணையத் தலைவர் திரு. என்.கே.இரவி அண்மையில் (03.09.09) சென்னையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அண்மைக்காலமாக மிகமிகக் குறைவாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள் என்ற உண்மையை திரு. இரவி தமது உரை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக வடநாட்டைச் சேர்ந்த இந்திக்காரர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற மற்ற அயல் மாநிலங்களைச் சேர்த்தவர்களே தமிழ்நாட்டில் செயல்படும் வருமானவரி அலுவலகங்கள், உற்பத்தி வரி அலுவலகங்கள், தொடர் வண்டித்துறை, பி.எச்.சி.எல். நிறுவனம் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கப்பட்;டுள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்தும் தமிழர்களுக்கு 85 விழுக்காடு வேலைக்கு இந்நிறுவனங்களில் ஒதுக்கீடு கோரியும் 2008 மே 20-ஆம் நாள் திருச்சி பி.எச்.இ.எல். ஆலைமுன் த.தே.பொ.க. மறியல் போராட்டம் நடத்தியது.

இப்பொழுது இந்திய அரசின் ஊழியர் தேர்வாணையத் தலைவரே உரிய விகிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் உள்;ர் மக்கள் வேலையில் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளதானது, நிலைமையின் மோசத்தை உணர்த்துகிறது. தேர்வாணையத் தலைவர் 50 முதல் 75 விழுக்காடு வரை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்;ர் மக்களுக்கான வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மண்ணின் மக்களுக்குக் குறைந்தது 85 விழுக்காடாவது வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்வது தான் நீதியாகும். அவ்வாறு ஆணையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஊழியர் தேர்வாணயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

நாள் : 06.09.09
இடம் : சென்னை

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT