உடனடிச்செய்திகள்

Friday, January 29, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கங்கள்!


மாவீரன் முத்துக்குமாருக்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கங்கள்!தமிழகமெங்கும் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிகள்!

ஈழத்தமிழர் மீதான இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்த மாவீரன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (29.01.2010) கடைபிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக மாணவர் முன்னணி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை

தஞ்சையில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஈகி முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவாக, தெருமுனைக் கூட்டம் - சுடரோட்டம் - கருத்தரங்கம் ஆகியவை 29.01.2010(வெள்ளி) இன்று நடத்தப்படுகின்றது. கருத்தரங்கை ஒட்டி, 29.01.2010 அன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில், பள்ளியக்கிரகாரத்திலிருந்து, முத்துக்குமார் நினைவுச் சுடரோட்டம நடத்தப்படுகின்றது.

மாலை 6 மணியளவில் ஆப்ரகாம் சாலையில், கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்குகிறார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் புலவர் கோ.நாகேந்திரன் பாவீச்சு நிகழ்த்துகிறார். ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், ”ஈகி முத்துக்குமாரின் இறுதி அறிக்கையும் தமிழ்த்தேசியமும்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

ஈரோடு

ஈரோட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெளி கருத்தரங்கம் நேற்று (28.01.2010)) மாலை நடத்தப்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில், கருங்கல்பாளையம் திருநகர் காலனி அருகே இளந்தமிழர் இயக்கக் குழுவினரின் தப்பாட்டத்துடன் இந்நிகழ்ச்சித் தொடங்குகிறது.

இக்கருத்தரங்கிற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்குகிறார். சாதி ஒழிப்புக் கூட்டியக்கத் தலைவர் இரத்தினசாமி, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்துகின்றனர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்.

பரமக்குடி

பரமக்குடியில் 29.01.2010 இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் படிப்பகம் திறப்பு நிகழ்ச்சியும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. மாலை 5.30 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கிற்கு முன்னதாக, மாவீரன் முத்துக்குமார் நினைவு சுடரோட்டம் நடக்கிறது. நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரமக்குடி நகரச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்குகிறார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பொதுக்குழு உறுப்பினர் மகிழ்நன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். முன்னதாக த.தே.பொ.க. கொடியை திரு. பெ.மணியரசன் ஏற்றி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்புண்டி

திருத்துறைப்புண்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. 31.01.2010 அன்று திருத்துறைப்புண்டி தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

திருச்செந்தூர்

மாவீரன் முத்துக்குமார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது. 01.02.2010 அன்று மாலை ஆத்தூர் கடைத்தெருவில் நடக்கும் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினது ச.தமிழ்மணி தலைமை தாங்குகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிதம்பரம் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை

சிதம்பரத்தில் தமிழக மாணவர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை அமைப்புகள் இணைந்து, 30.01.2010 அன்று மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெறி உரையரங்கம் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தன.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், இளந்தமிழர் இயக்க நெறியாளர் ம.செந்தமிழன் உள்ளிட்டோர் உரையாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்நிகழ்விற்கு திடீரென காவல்துறை தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் முடிவை ஒட்டி, வேறொரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் காவல்துறை தடை

கோவையில் தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து 02.02.2010 அன்று கோவை ராஜவீதியில் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன. தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகரச் செயலாளர் பா.தமிழரசன் ஆகியோர் உரை நிகழ்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் கொடுத்துள்ளனர். காவல்துறையின் தடைக்கு எதிராக வழக்கு நடத்திய பின், வேறொரு நாள் கூட்டம் நடத்தப்படும் என த.தே.பொ.க. கோவை மாநகரத் துணைச் செயலாளர் பா.சங்கர் அறிவித்துள்ளார்.

தாம்பரம்

சென்னை தாம்பரத்தில் 13.02.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார். உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT