உடனடிச்செய்திகள்

Thursday, February 4, 2010

சிறைவாசிகளை தாக்குவதுதான் காவல்துறையின் கடமையா? பெ.மணியரசன் கேள்வி

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்களை தாக்கிய காவல்துறையினரைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பொங்குதமிழ்.காம் இணையதளத்திற்கு வழங்கிய பேட்டியின் முழு வடிவம்.

கைதிகளை தாக்குவதுதான் காவற்துறையின் கடமையா: மணியரசன்
செங்கல்பட்டில், நேற்றிரவு காவற் துறையினர் சிறப்பு தடுப்பு முகாமில் புகுந்து அடித்து நொருக்கிய சம்பவம் பற்றி அறிந்தபோது, இலங்கைச் சிறையில் சிங்களக் காடையர்கள் எப்படி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களோ அப்படியேதான் செங்கல்பட்டு முகாமிலும் நடத்துகிறார்கள் என்ற உணர்வுதான் வந்தது எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் திரு பெ. மணியரசன்.

நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் கைதிகள் மீது தமிழக பொலிசார் மேற்கொண்ட கண்மூடித்தனமாக தாக்குதல்கள் குறித்து பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே திரு மணியரசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் அவர்களில் 18 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பதும் அவர்களில் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பதுவும் சிங்கள காடையர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சிறப்பு முகாம் என்பது வண்ணம் பூசப்பட்ட ஒரு கொடிய சிறைச்சாலையாக இருக்கிறது. அவர்கள் பல தடவை காலவரம்பற்ற உண்ணாவிரதம், உள்ளிருப்பு என்று போராடி அரசு தரப்பில் அதிகாரிகள் சென்று வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

10 -15 வருடங்களுக்கு முகாமிலேயே இருப்பதா என்று கேட்கிறார்கள். வழக்கை நடத்தி குற்றம் செய்தார்களெனில் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுக்கட்டும். இல்லையென்றால் வெளியே அனுப்புங்கள். அதை விடுத்து இரண்டும் கெட்டானாக நடத்துவது ஒரு பாசிச முறை.

உலகம் முழுவதும் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதில் ஒரு கைதிக்கு என்ன உரிமை உண்டோ அத்தனையும் வழங்கியே அவரை விசாரிக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்கு விலக்காக துன்புறுத்தி சித்திரவதை செய்து காலத்தை நீடிப்பது ஒரு சட்ட நெறியையே அரசு கவிழ்த்து விடுவதாக அர்த்தம்.

எனவே அந்தக் கோரிக்கையை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தும்போது பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, காவற் துறையை ஏவி, அடித்து நொருக்கி படுகாயப்படுத்தி அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கை, அதாவது காவலர்கள் அரச ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தனர் என்பதாக, ஒரு பொய் வழக்கைப் போட்டிருக்கிறார்கள்.

ஒரு கைதியை அடிப்பதுதான காவற்துறையின் கடமையா? அந்த கடமையை செய்ய விடாது தடுப்பது குற்றமா? பாசிஸ்டுகள் ஆட்சியில்தான் அதுமாதிரி செய்ய முடியும். தமிழ்நாட்டில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

உடனடியாக இதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளையும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டு ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். தவிர தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

ஒரு கையும் காலும் இல்லாதவர்களையெல்லாம் அங்கு அடைத்து வைத்துக்கொண்டு, அவர்களை வெளியில் விட்டால் ஓடிப்போய் விடுவார்கள் என்பதெல்லாம் பொய் பிரச்சாரம். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழுரிமை அமைப்புக்கள் மட்டுமல்ல, சனநாயகத்தில் மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து இவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போராட வேண்டும்.

Yuvaraj said...

பெ.மணியரசன் நேர்காணல்...
http://www.tamilantelevision.com/eezham.php

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT