உடனடிச்செய்திகள்

Wednesday, March 3, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கல்லூரியை உடனே திறக்க வேண்டும் - த.தே.பொ.க. வேண்டுகோள்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணியக்கூடாது!
உடனே கல்லூரியைத் திறக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள்

சிதம்பரம், 03.03.2010.

“வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகை எண்ணிக்கையில் வடநாட்டு மாணவர்களை சேர்த்து வருகிறது. இது பல்கலைக்கழகத்தின் இன சமநிலையை சீர்குலைத்து தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

வகுப்பறையில் வடநாட்டு மாணவர்கள் ஹிந்தியை வலியுறுத்துவதாலும், ஒருங்கிணைந்த முறையில் அடாவடியில் ஈடுபடுவதாலும் கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களும் எரிச்சலடைந்துள்ளனர். இவர்களின் அத்துமீறிய செயலால் மூன்று இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாகக் கொண்டு கல்லூரியை பல்கலை நிர்வாகம் காலவரையின்றி மூடியிருக்கிறது. இது தேவையற்றது.

வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணிந்து அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை பல்கலை நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். வகுப்புகள் தொடர்ந்து நடத்த வேண்டும். ஒரு சில வடநாட்டு மாணவர்கள் அடாவடிக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பு பாழாக்கப்படுவது முறையற்றது.

வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது.

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT