உடனடிச்செய்திகள்

Tuesday, March 2, 2010

புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கு: பெ.மணியரசன் விடுதலை!

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக போடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கிலிருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் விடுதலை செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை திருவொற்றியுர் நீதிமன்றம் நேற்று(02.03.2010) பிறப்பித்தது.

கடந்த 1999ஆம் ஆண்டு திருவொற்றியுரில் ”தென்மொழி அவையம்” சார்பில் நடந்த அரங்கக்கூட்டம் ஒன்று நடந்தது. திரு. இறைக்குருவனார் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், அப்போது அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டு பேசினார்.

அக்கூட்டத்தில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மீது மட்டும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1967 -இன் கீழ் வழக்கு ஒன்றை, திருவொற்றியுர் நகரக் காவல்துறை ஆய்வாளர் பதிவு செய்தார்.அவ்வழக்கு திருவொற்றியுர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தபட்டு வந்தது. திரு. பெ.மணியரசன் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் செ.விசயகுமார், வழக்கறிஞர் துரை ஆகியோர் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் பிரிவுகளை தமது வாதங்களின் போது தெளிவுடன் நீதிமன்றத்திற்கு சுட்டிக் காட்டினார். அரசத் தரப்பில் எதிர் வாதாடப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை மார்ச் 2 அன்று ஒத்தி வைப்பதாக, கடந்த மாதம் பிப்ரவரி 23ஆம் நாள் நீதிபதி அறிவித்திருந்தார். நேற்று இவ்வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு, திரு. பெ.மணியரசன் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தும், வேண்டுமென்றெ அலைக்கழிப்பதற்காக தமிழக அரசும், இந்திய அரசின் உளவுப் பிரிவும் இணைந்து இது போன்ற வழக்குகளை தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அமைப்பின் தலைவர்கள் மீதும், இன உணர்வாளர்கள் மீதும் தொடுப்பது வழக்கமானதாக இருந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் எவரும் அச்சமுறவில்லை. மேலும் மேலும் ஆதரித்துப் பேசுவதே நடந்து வந்துள்ளது. இருந்த போதும், இன உணர்வாளர்களை அச்சமுற வைக்க முடியாவிட்டாலும் கூட, அலைக்கழிக்கவாவது வேண்டும் என்றே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT