மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது
சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு
சென்னை, 25.04.2010.
சிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தஞ்சம் கோரி வந்த தமிழர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழகத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இன்று(25.04.2010) காலை சென்னை நுங்கம்பாக்கம் மலேசியத் தூதரகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் இம்மனுவை மலேசியத் துணைத் தூதர் அன்வர் கஸ்மான் அவர்களிடம் நேரில் வழங்கினார். பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் சிவகாளிதாசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
மனுவைப் பெற்ற மலேசியத் துணைத் தூதர், இம்மனுவின் விபரங்களை தில்லியில் உள்ள மலேசியத் தூதரிடம் கூறுவதாகவும், தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் கூறினார்.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் வன்னி முகாம்களில் வதைபட்டு பின்னர், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளும் கிராமங்களும் தகர்க்கப்பட்டும், சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருப்பதால் வாழ வழியின்றி மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். அவ்வாறு படகில் வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேரை மலேசிய அரசின் கப்பல் படை, தடுத்து பினாங்குத் துறைமுகம் அருகில் நிறுத்தியுள்ளது.
அவர்களுக்கு அடைக்கலம் தரமறுப்பதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக மலேசிய அரசு கூறுகிறது. “திருப்பி அனுப்பினால் இலங்கை அரசு எங்களைக் கொன்று விடும். அடைக்கலம் கொடுங்கள்; திருப்பி அனுப்பினால் குழந்தைகளுடன் நாங்கள் அனைவரும் கடலில் குதித்து இங்கேயே செத்துப்போவோம்” என்று தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.
மலேசிய அரசு, மனித நேய அடிப்படையிலும், ஐ.நா. மனித உரிமை அட்டவணைப்படியும் போரினால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்துள்ள ஈழத்தமிழர்கள் மலேசியாவில் தங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பினால் 75 உயிர்களை மலேசிய அரசு ஒரு கொலைக்களத்திற்கு அனுப்பி வைத்ததாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment