உடனடிச்செய்திகள்

Wednesday, April 28, 2010

முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு த.தே.பொ.க. கடும் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை
புதிய ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது
தமிழக அரசு உரிமையைப் பலியிட்ட செயலாகும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தஞ்சையிலிருந்து 22.04.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதால் அதில் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் தேக்க ஆணையிடக் கோரித் தமிழக அரசும் உழவர்களும் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் தீர்ப்பளித்தது.

அணை வலுவாக உள்ளது என்று மண்ணியல் மற்றும் நீரியல் வல்லுநர் குழுக்கள் அளித்த பரிந்துரையை ஏற்று அணையில் தற்போதுள்ள 136 அடிக்குப் பதிலாக முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம்.
மண் அணையில் சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது.

உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகக் கேரளம் இயற்றிய சட்டத்தை நீக்கக் கோரியும், தீர்ப்பை செயல்படுத்தும்படி கேரள அரசுக்கு ஆணையிடக் கோரியும் தமிழக அரசு தொடுத்த வழக்கிற்கு உரிய தீர்ப்பை வழங்காமல் உச்ச நீதி மன்றம் 18.2.2010 அன்று, அணையின் வலுத்தன்மையை ஆய்வு செய்து பரிந்துரைக்க புதிய ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவில் தமிழகமும் கேரளமும் தலா ஒரு பிரதிநிதியை அமைக்கக் கோரியது.

உச்சநீதி மன்றத்தின் இம் முடிவு சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் மறுபடியும் புதிய ஆய்வுக்குழு ஒன்றை அமைக்கத் தேவையில்லை என்றும் கூறிய தமிழக அரசு, தன் சார்பில் பிரதிநிதியை நியமிக்கமாட்டோம் என்று அறிவித்து அது குறித்து உச்சநீதி மன்றத்திலும் வாதாடியது. இதே நிலைபாட்டுடன் தி.மு.க. தனது பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் உச்சநீதி மன்றம் புதிய குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழகம் தனது பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்றும் மீண்டும் கூறியது.

இப்பொழுது தி.மு.க. அரசு குட்டிக் கர்ணம் போட்டு முல்லைப் பெரியாறு வலுவைச் சோதிக்கும் புதிய குழுவிற்குத் தனது பிரதிநிதியாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்களை அமர்த்தியுள்ளது.

இம்மாற்றத்திற்கான காரணங்களை 21.4.2010 அன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழகப் பிரதிநிதியை அமைக்குமாறு வலியுறுத்தி நடுவண் அரசு 8.3.2010 அன்றும் 5.4.2010 அன்றும் இரு மடல்கள் தமிழக அரசுக்கு எழுதியிருப்பதாகக் கூறினார். அத்துடன் உச்சநீதி மன்றத் தீர்;ப்புதான் தமது அரசுக்கு முக்கியம் என்றும் அதன் அடிப்படையிலேயே பிரதிநிதியை நியமித்திருப்பதாகவும் கூறினார்.

இதே உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று அளித்த தீர்ப்பைக் கேரள அரசு துச்சமாகத் தூக்கி எறிந்து அதை நிறைவேற்ற மறுத்துவிட்டது. அத்தீர்ப்பை உச்சநீதி மன்றமும் முக்கியமானதாகக் கருதவில்லை, நடுவண் அரசும் முக்கியமானதாகக் கருதவில்லை. அத்தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு மடல் கூட கேரள அரசுக்கு நடுவண் அரசு எழுதவில்லை.

இந்தப் பின்வாங்கல், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள உரிமையை தமிழக அரசு தானே முன்வந்து கைவிடுவதற்குச் சமம் ஆகிவிட்டது. இது எங்கே போய் முடியும்? எப்படி முடியும் என்ற பெருங்கவலை அக்கறையுள்ள அனைவர்க்கும் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு உரிமைக்காக உச்ச நீதி மன்றத்தில் வாதாடிய போதே (17.2.2010) தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் பராசரன், புதிய ஆய்வுக்குழு அமைப்பதை ஏற்றுக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை வழக்கைக் கவனித்து வந்த அக்கறையுள்ளோர் புதிய ஆய்வுக்குழுவை ஏற்பதால் ஏற்படப் போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டிய பின் தமிழக அரசு தனது கருத்தை மாற்றிக் கொண்டு, புதிய ஆய்வுக் குழு அமைப்பதை எதிர்த்தது. இப்போது அந்த நிலையையும் கைவிட்டு புதிய ஆய்வுக் குழுவிற்கு பிரதிநிதியை நியமித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உறுதியற்ற சந்தர்ப்பவாத நிலைபாடுகள் கேரள அரசிற்குச் சாதகமானது. 2006 பிப்ரவரி 27 தீர்ப்பிற்கு முன்பிருந்த நிலைக்கு முல்லைப் பெரியாறு வழக்கைப் பின்தள்ளி விட்டார் கருணாநிதி.

இதே போன்று உறுதியற்ற சந்தர்ப்பவாத முடிவுகளை அவ்வப்போது எடுத்துத்தான் காவேரி உரிமையைப் பலியிட்டார் கருணாநிதி. இப்பொழுது முல்லைப் பெரியாறு உரிமையைக் காவு கொடுக்கிறார். அது மட்டுமின்றி அமராவதிக்கு வரும் நீரைத் தடுத்துப் பாம்பாற்றில் கேரளம் அணைகட்டுவதையும் ஆதரித்து இப்பொழுது சட்டப் பேரவையில் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பைத் தானே மறுதலித்து அமைத்துள்ள புதிய ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு ஏற்க மறுத்து அதில் உறுதியைக் கடைப்பிடித்தால் அரசமைப்புச் சட்ட நெருக்கடி ஏற்பட்டு விவரிவான விவாதங்கள் நடந்து, உச்சநீதி மன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ளும் படியான நெருக்குதல் உண்டாகியிருக்கும். அதைவிடுத்து, தமிழக அரசு பின்வாங்கி, கேரள அரசுக்குச் சாதகமாக நடந்து கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் திட்டமிடும் கேரளம் இனி, அத்திசையில் உறுதியாகச் செயல்படும்.

இனி முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பாற்ற வேண்டுமெனில், கேரள இந்திய அரசுகளை எதிர்த்துத் தமிழக மக்கள் கடுமையாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT