தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி. பார்வதியம்மாள் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வீரவணக்கம்!
அம்மையாரை சிகிச்சை மேற்கொள்ளவும் அனுமதிக்காமல் அவரை திருப்பி அனுப்பிய இந்திய அரசின் தமிழின விரோத நடவடிக்கைக்கு பாடம் புகட்டுவோம் என இந்நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்ள தமிழின உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம்!
சிதம்பரத்தில்...
20.2.2011 அன்று மாலை 5.30 மணியளவில் சிதம்பரம் காந்திசிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி வீரவணக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு த.தே.பொ.க நகரச் செயலர் கு.சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.தமிழக இளைஞர் முன்னணியை சேர்ந்த ஆ.கலைச்செல்வன், தமிழக மாணவர் முன்னணியின் நகர அமைப்பாளர் தே.அரவிந்தன், தமிழக ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தை சார்ந்த விடுதலைச்செல்வன், மதிமுக அவைத்தலைவர் பெருமாள், மதிமுக நகரச்செயலர் சீனிவாசன், தமிழ்த்தேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் லோகநாதன் ஆகியோர் அம்மையாருக்கு வீரவணக்க உரையாற்றினர். மா.கோ.தேவராசன், சாக்காங்குடி ஆறுமுகம், செயபாலன், சதிசுகுமார், கார்த்தி, சுகன், மணிமாறன், காட்டுமன்னார்குடி த.தே.பொ.க உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்துக்கொண்டனர். நிறைவாக தெற்கு மாங்குடி த.தே.பொ.க தோழர் பெ.செளந்தராசன் நன்றி நல்கினார்.
மதுரையில்..
நிகழ்ச்சியில் அனைவரும் தமிழ் நாட்டில் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப் படாததைக் கண்டித்துப் பேசினர். அண்டை நாடுகளிலிருந்து-குறிப்பாக,இந்தியாவின் எதிரி நாடாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கூட மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா-தமிழகம் வந்து பலர் சிகிச்சை பெற அனுமதிக்கப்படும் வேளையில், தமிழினத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் என்பதால் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மனிதாபிமானம் இல்லாமல் நிபந்தனை விதித்த இந்திய-தமிழக அரசின் நடவடிக்கைகளையும் தமிழினத்தை கொன்றொழித்த சிங்கள இன வெறியர்கள் இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ பிரதிநிதியாக இந்தியா-தமிழகம் வந்து கோவில்களில் வழிபடவும் தடையின்றி அனுமதிக்கப்பட்டு வருவதையும் மக்கள் மறக்கவில்லை.தன் இன மக்களுடன் கடைசிவரை இருந்து தன் சொந்த மண்ணில் உயிரை விட்ட பார்வதி அம்மாள், தமிழினத்தின் தாயாக மதிக்கப்படுவதும் அன்னாரின் தியாகம் தமிழினம் வாழும் வரை நினைவில் நிற்கும் என்பதும்,விளம்பரம் இல்லாமல் குறுஞ்செய்தி மூலம் மட்டும் தகவல் தெரிந்து ஐந்து மணி நேரத்துக்குள் கூடிய நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்களின் கூட்டமே சாட்சியாக இருக்கிறது என இரங்கல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுப்பேசினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு நிமிட அமைதிக்குப் பின் கலைந்து சென்றனர்.
Post a Comment