உடனடிச்செய்திகள்

Wednesday, March 2, 2011

உழவர்களை வஞ்சிக்கும் இந்திய அரசின் வரவு-செலவுத்திட்டம்

உழவர்களை வஞ்சிக்கும் இந்திய அரசின் வரவு-செலவுத்திட்டம்
தமிழக உழவர் முன்னணி கண்டனம்

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்வைத்துள்ள 2011-12 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) உழவர்களையும், நுகர்வோரையும் வஞ்சிக்கிற-விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிற திட்டமாகும்.

வேளாண்மை, உணவு, எரிஎண்ணை போன்றவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்பட்டுள்ளது.வேளாண் மானியம் சென்ற நிதியாண்டின் திருத்தப்பட்ட மதீப்பீட்டை விட ரூ4000 கோடி குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல்,டீசல் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல்-டீசல் மீதான வரிகள் குறைக்கப்படாதது மட்டுமின்றி இவற்றிற்கு அளிக்கப்பட்ட மானியம்
சென்ற ஆண்டை விட ரூ15,000 கோடி குறைக்கபட்டுள்ளது.பெட்ரோல் உற்பத்தி ஆகும் அரபு நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதை யொட்டி உலகச் சந்தையில் எண்ணெய் விலையேற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளது.இந்நிலையில் இந்திய அரசு இவற்றின் மீதான மானியத்தை குறைப்பது பெட்ரோல்,டீசல் விலையேற்றத்திற்கும்
அதனடிப்படையில் எல்லாப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

வேளாண் மானியம் வெட்டப்பட்டுள்ளதால் வேளாண் இடுபொருள்களின் விலைஉயர்ந்து உழவர்கள் கடும் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் பெரும் தொழில் நிறுவனங்கள் மீதான நேரடி வரி விதிப்பு ரூ11,500கோடி குறைக்கப்பட்டுள்ளது.இத்தோடு சேர்த்தால் கடந்த மூன்றாண்டுகளில் 4இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் மக்கள் மீதான
மறைமுக வரி ஏறத்தாழ ரூ12,000 கோடி உயர்ந்துள்ளது.இதுவும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.

வேளாண்மையை நவீனப்படுத்த கூடுதல் கடன் வசதி செய்வது என்ற பெயரால் ஒதுக்கப்படும் நிதி உழவர்களை சென்றடைவதில்லை என்பது கடந்த சில ஆண்டுகளாக கண்டுவரும் உண்மை.

எடுத்துக்காட்டாக அரசு வங்கிகள் வேளாண்மை கடன் என்ற தலைப்பில் வழங்கிவரும் கடன்களில் 70 விழுக்காடு டிராக்டர் நிறுவனங்கள், விதை கம்பெனிகள், உணவு பதப்படுத்தும் தொழிலில் உள்ள
வெளிநாட்டு மற்றும் இந்திய நாட்டு பெரு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகின்றன என்பது அரசே ஏற்றுக்கொண்ட புள்ளிவிவரம் ஆகும். இப்போது நிதியமைச்சர் ஒதுக்கியுள்ள கூடுதல் நிதியும் உழவர்களுக்கு பயன்படப்போவதில்லை.நவீனபடுத்துதல் என்ற பெயரால் தொழில் நிறுவனங்களுக்கே வழங்கப்பட இருக்கிறது..

உணவு மானியம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. உழவர்களிடம் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து நியாய விலையில் மக்களுக்கு வழங்கும் கடமையிலிருந்து அரசு நழுவி செல்வதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இந்திய அரசின் உழவர் எதிர்ப்பு , நுகர்வோர் எதிர்ப்பு வரவு செலவுத் திட்டத்தை தமிழக உழவர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

வேளாண் மற்றும் உணவு மானியத்தை உயர்த்த வேண்டும் என்றும் 4% வட்டியில் வேளாண்மை கடன் உழவர்களுக்கு வழங்க உறுதியான திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
அன்புடன்

மா.கோ.தேவராசன்
ஒருங்கிணைப்பாளர்
99423 63856

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT